சிலர் பார்க்க கரடுமுரடாக இருப்பார்கள்.. ஆனால் மனது குழந்தை போன்றதாக இருக்கும். முகுந்தன் அண்ணனும் அப்படிதான். வயது 50 இருக்கும். தம்பி சுதாகரருடன் இணைந்து நெல்லையில் சொந்தமாக தொழில் செய்கிறார்.

 

மெரினா மாணவர் போராட்டம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டதையும் பின்னர் மீனவர்கள் தாக்கப்பட்டும் அவர்களின் வாழ்வாதாரம் ஏவல்துறையால் சூறையாடப்பட்டதையும் தொலைக்காட்சிகளில் மனப்பதபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு தொடர்ந்து வீட்டில் இருக்க முடியவில்லை. வீட்டில் சொல்லிவிட்டு சேமிப்பாக இருந்த பணத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டு தனியாளாக இரவு கிளம்பி வந்துவிட்டார்.

 

இந்த தகவலை இயக்குனர் தாமிரா அண்ணன்தான் என்னிடம் சொன்னார். “முகுந்தன் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். அதனால் அவர் கூட இருந்து முறையா எதாவது செய்ய முடியுமா பாருங்கள்..” என்று சொன்னார். சரி என்று நான் முகுந்தன் அண்ணாச்சியை பார்க்க சென்றேன்.

 

பார்த்தவுடன் இந்த பதிவில் முதல்வரியில் எழுதியிருப்பதுபோல் முறுக்கிய மீசையுடன் சற்றே முரட்டுத்தனமாக இருந்தார். ஆனால் பேச்சுக்கொடுத்த சில நிமிடங்களிலே வெகுளியானவர் என்பது புரிந்தது.

 

“என்னணே.. இப்படி கிளம்பி வந்துட்டீங்க..” என்று கேட்டேன்.

 

“அமைதியா போராடிட்டு இருந்த நம்ம பிள்ளையல அடிச்சு விரட்டுனதுமில்லாம.. அவங்களை காப்பாத்த ஓடிப்போன மீனவர்களையும் அடிச்சு சந்தையை எரிச்சு வண்டியை எரிச்சுனு போலீஸ்காரங்க பண்ணதை டிவியில பார்த்தேன். ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு..

 

நம்ம பிள்ளையள காப்பாத்த ஓடிப்போனவங்களுக்கு ஒரு கஷ்டம்னா நாம எப்படி சும்மா வேடிக்கைப்பார்த்துட்டு இருக்க முடியும்.. அதான் என்னால என்ன முடியுமோ அதை அவங்களுக்கு செய்யணும்னு கிளம்பிவந்துட்டேன்..” என்று கிராமத்து வெள்ளந்திதனம் மாறாமல் சொன்னார்.

 

“கையில் கொஞ்சம் பணம் இருக்கு. என்ன செய்யலாம்னு சொல்லுங்க..” என்றார்.
“சரி வாங்க நேர்ல போய் பார்த்துட்டு முடிவு பண்ணுவோம்..” என்று அவரையும் என் வண்டியில் பின்னாடி ஏற்றிக்கொண்டு நடுகுப்பத்துக்கு கிளம்பினோம்.

 

அங்கு காவல்துறை செய்த காவாலித்தனம் மீடியாக்களில் வெளியாகி அரசின் மானம் கப்பலேறியதால், உடனடியாக அதை மறைக்க எரித்த இடங்களையெல்லாம் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகள் மீண்டும் புதிதாக மீன் சந்தையை கட்டிக்கொடுப்பதற்கான அளவுப்பணிகளை செய்து கொண்டிருந்தார்கள்.

 

அண்ணாச்சியை ஓரமாக இருக்க சொல்லிவிட்டு அதிகாரிகளிடம் பேச்சுக்கொடுக்க போனேன். மீடியா என்றதும் நைசாக நகர்ந்துவிட்டார்கள்.

 

மீண்டும் முகுந்தன் அண்ணனும் நானும் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குள் சுற்றிவந்தோம்.

 

அங்கு நின்ற மீன்வர்களிடம், மாணவர்களை காப்பாற்ற அவர்கள் ஓடிப்போனதற்கு முகுந்தன் நன்றி தெரிவிக்க,

 

“அட.. அவங்க நம்ம பிள்ளைங்கதானே.. எப்படி விடுவோம்.. போலீஸ் எப்படி எங்களை அடிச்சாலும் நாங்க திரும்பவும் இப்படி தான் ஓடி போய் பாதுகாப்பா நிற்போம்” என்று பதிலுக்கு மீனவர்கள் சொன்னது நெகிழ்வாக இருந்தது.

 

இயக்குனர் செந்தமிழன் குழுவினர் தமிழர் அறம் என்ற பெயரில் மீன் பிடி வலைகள் உட்பட அத்தியாவசியமான உதவிகளை செய்திருந்தார்கள். நடுகுப்பம் மீனவர் சங்க தலைவர் அசோக்கிடம் ஆலோசித்தப்பின் வீட்டு சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

 

இன்று அந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாங்கி கொடுத்துவிட்டு முகுந்தன் அண்ணன் கிளம்பிவிட்டார்.

 

போலீஸ் அடித்தாலும் சரி.. நம்ம பிள்ளைகளுக்கு ஒரு பிரச்னைனா மீண்டும் காப்பாற்ற ஓடிவருமோம் என்ற மீனவ மக்களின் அன்பும்.. தங்களுக்காக வந்தவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றதும் ஓடி வரும் முகுந்தன் போன்றோரின் அன்பும்தான் தமிழ் இனத்தின் ஆன்மா..

 

எத்தனை வீழ்ச்சி வந்தாலும் தமிழர்களை மீண்டும் மீண்டும் அந்த ஆன்மா எழ வைக்கும்..!

 

-கார்ட்டூனிஸ்ட் பாலா
31-1-17