தமிழின அழிப்பின் அங்கமாகவே 1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ம் திகதி ஒன்றுமறியாத அப்பாவி விவசாயிகளை அன்றைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கொன்றழிக்கப்பட்ட செயற்பாடே இப்படுகொலையாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் 28வது ஆண்டு நினைவு தின நாளை அனுட்டிக்கும் இந்நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலே தங்கவேலாயுதபுரம் உடும்பன் குளப் படுகொலையானது ஒன்றும் தெரியாத அப்பாவி விவசாயிகள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டிருந்தபோது 104 அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் எந்த ஈவிரக்கமும் இன்றி இந்நாளில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த நாளில் அப்பாவிகளாக படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பின்னர் இந்த நாட்டு அரசாங்கத்தினால் பயங்கரவாதிகள் எனும் பட்டம் சூட்டப்பட்டது மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.

இவ்வாறுதான் இவர்கள் காலாகாலமாக அப்பாவித் தமிழ் மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்த விட்டு பயங்கரவாதிகள் என்று நாமம்சூட்டி இறந்த உடல்களையே உறவினர்களிடம் கொடுக்காததுதான் இந்த நாட்டின் வரலாறும்கூட என்பதனை சர்வதேசம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களது உறவுகள் தற்போதும் நிம்மதியாக இருந்து வாழ்வதற்கு உரிய இடம் இல்லாமல் இருப்பதுதான் இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடாகும்.

இவர்களின் இந்த நாளைக்கூட நினைவுகூற முடியாத அளவிலேயே இன்றைய நிலையிருப்பதனை அனைவரும் உணரவேண்டும். இதுதான் தமிழினத்தின் நிலையுமாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.