un-ban2009 தமிழின இன அழிப்பில் ஐநாவின் கட்டமைப்பு ரீதியான தோல்வி குறித்த இறுதி அறிக்கையை INNERCITY PRESS கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஐநா செயலர்Ban ki Moon ஐநா வின் பிரதி பொது செயலாளர் Jan Eliasson கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் தமிழர் தரப்பிலிருந்து இது குறித்து எந்த கருத்துக்களையும் கண்டனங்களையும் காண முடியவில்லை. ஒரு இன அழிப்பிற்கு ஐநா சாசனத்திற்கு முரணாக உடந்தையாக இருந்து விட்டு ஐநா தப்பித்துக்கொள்ளும் இந்த அசமந்தப் போக்கிற்கு தமிழர் தரப்பு மௌனம் சாதிப்பது கவலையையும் பெரும் நம்பிக்கையீனத்தையும் தருகிறது.

“அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?” என்பது குறித்து கூட தமிழர் தரப்பில் விவாதங்களைக் காண முடியவில்லை.

ஆனால் இனஅழிப்பு நடந்து ஒரு சில மாதங்களிலிலேயே எமது ஊடகத்திற்கு இன அழிப்பு தொடர்பான மிக நீண்ட நேர்காணலை வழங்கியிருந்த பரணிகிருஸ்ணரஜனி தலைமையிலான உளவியலாளர் குழு “பான்கிமூன்தான் எமது இன அழிப்பின் பிரதான குற்றவாளி. அவருக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பிப்பதுதான் எமது நீதிக்கான முதல் அடியாக இருக்கும்” என்று தெளிவாக வரையறுத்திருந்தார்கள்.

ஆனால் துரதிஸ்டவசமாக இந்த கருத்து எந்த கவனத்தையும் பெறவில்லை. தற்போது இந்த நீண்ட நேர்காணலின் குறிப்பிட்ட பகுதியை மீளவும் தமிழர்தரப்பின் பார்வைக்கு முன்வைக்கிறோம். தமிழ் இன அழிப்பில் ஐநா வின் பங்களிப்பு குறித்து ஆரோக்கியமான திறந்த உரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக இது இருக்கும் என்று நம்புகிறோம்.

ஐநா வின் இறுதி அறிக்கையை அடுத்து ஐநா மீது வழக்கு தொடர்வது குறித்த பல்வேறு மட்டங்களில் தொடர் உரையாடல்களில் இருக்கும் மேற்படி உளவியலாளர் குழுவின் புதிய நேர்காணல் நாளை வெளிவரும்.

கீழே முன்னைய நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் குழு
ஈழம் ஈ நியூஸ்.

000000000000000000000000

கேள்வி : நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையை – குறிப்பாக அதன் செயலாளர் நாயகத்தை வன்னிப்படுகொலைகளின் பொருட்டு குற்றம் சுமத்துவதுடன், எமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக – வடிவமாக ஐநாவிற்கெதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுதான் சரியானது என்று குறிப்பிடுவது ஆச்சர்யமளிக்கிறது. இதைச் சற்று விளக்கமுடியுமா?

பதில்: இந்தக் குற்றச்சாட்டை முதன் முறையாக நாங்கள் முன்வைக்கவில்லை. இக் குற்றச்சாட்டு ஏற்கனவே உலெகெங்கிலுமுள்ள பல மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் உட்பட பல மேற்குலக ஊடகங்களினாலும் பரவலாக முன்வைக்கபட்டிருக்கிறது.

அவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மீதும் அதன் செயலாளர் நாயகத்தின் மீதும் தமது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக “இன்னர்சிற்றிபிரஸ்” இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
parani
வன்னிப்படுகொலைகள் தீpடீரென்று நடந்த நிகழ்வுகள் அல்ல. சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் என்பவற்றை முற்றாக வெளியேற்றிவிட்டு வெளி உலகத்துடனான தொடர்புகளை முற்றாகத் துண்டித்துவிட்டு பொருளாதார மருத்துவ தடைகளை போட்டுவிட்டு குறிப்பான 6 மாத காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 30,000 உயிர்களை காவு கொண்டு ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது சிறீலங்கா பேரினவாத அரசு.

இங்கு குறிப்பான விடயம் என்னவெனில் சிறீலங்கா அரசின் படிப்படியான மேற்படி நடவடிக்கைகளை அவதானித்து ஒரு இனப்படுகொலை நிகழப்போகிறது என்பது பல தரப்பாலும் உணரப்பட்டு உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அதற்கு சிறீலங்கா அரசை இணங்கச்செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் ஐக்கிய நாடுகள் சபையிடம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டது.

நாம் வீதியில் மாதக்கணக்காகக் கிடந்ததே அதற்கு சாட்சி. ஆனால் காத்திரமான எந்த நடவடிக்கையையும் ஐநா மேற்கொள்வில்லை என்பது மட்டுமல்ல இன்றுவரை இவ் இனப்படுகொலை தொடர்பாக ஒரு மைளனத்தையே கடைப்பிடித்துவருகிறது. இது ஐநாவின் சாசனத்திற்கும் தோற்றத்திற்குமே ஒருமுரணான விடயம்.

உலகப் போர்களின் விளைவாக நிகழ்ந்த அனர்த்தங்களினாலும் மனிதப் பேரழிவுகளினாலும் அதிர்ச்சியுற்ற அரசுகள் – அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இனி இப்படியான மனிதப்பேரழிவுகள் நடைபெறக்கூடாது என்ற கொள்கையுடன் முன்னெச்சரிக்கையாக தோற்றுவித்த ஒரு உலக பொது அமைப்பு இந்த நவீன யுகத்தில் ஒரு இனம் தனது சொந்த நிலத்தில் வைத்து அழித்தொழிக்கப்பட்டதை அனுமதித்ததும் அதனைத் தடுக்காததும் அந்த அமைப்பின் தோற்றத்தையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஐ.நா சாசனத்தின்படி நாடுகள் என்ற உள் வெளி எல்லைகளுக்கு அப்பால் ஒரு இனத்தின் மொழி, அடையாளம், பண்பாடு, இறைமை என்பவை பாதுகாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்களின் மீதான அழித்தொழிப்பே மனித உயிர்களாகக் காவு கொள்ளப்பட்டது. இது இந்தப் பூமிபந்தில் வாழும் ஒரு இனம் தொடர்பான ஐநாவின் சாசனத்திற்கு முரணானது.

இந்த அடிப்படையிலேயே “இன்னர்சிற்றிபிரஸ்” உட்பட பல ஊடகங்கள், மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் பான்கிமூன் மீது குற்றத்தை சுமத்துகிறார்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் தேங்கிப்போயிருந்த எமது போராட்டத்தை தொடர்ந்து நகர்த்ப்போகிற புள்ளி இதுதான். நாம் பேரழிவையும் பெரும் பி;ன்னடைவையும் சந்தித்திருப்பது உண்மைதான். ஆனால் மறுவளமாக காலம் எமக்குச் சார்பாகத் திரும்பியிருப்பதும் அதேயளவு உண்மை.

துரோகம், தோல்விகள், சறுக்கல்கள் சதிகள் மாறிவரும் உலக ஒழுங்கின் நிமித்தமான ஏகாதிபத்திய கூட்டணிகள் – அவை முன்மொழிந்த பயங்கரவாத சாயங்கள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து நேர்மையுடனும் கொள்கைப்பற்றுடனும் விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடிய ஒரு தலைவன் தனது தீர்க்கதரிசனங்களின் சாய்வுகளையும் சரிவுகளையும் சறுக்கல்களையும் மீறி இந்த இனத்திற்காக பெரும் பேரழிவினூடாக அந்த வரலாற்றுக் காலத்தை எமக்காகத் திருப்பிவிட்டிருக்கிறார்.

கண்ணுக்குத் தெரியாத அந்த வாரலற்றுக் காலம் எம்மொடு கைகோhத்து நடக்கக் காத்திருக்கிறது. இனி போராட வேண்டியவர்கள் நாம்தான். மீண்டும் வீதியில் இறங்குவோம். பான்கிமூன் மீதும் ஐநாவின் மீதும் கடும் கண்டனத்தை பதிவு செய்வோம். நடந்த இனப்படுகொலைக்கு ஐநா முழுப் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதும் அதன் நிமித்தமாக பான்கிமூன் பதவி விலக வேண்டும் என்பதும் எமது முதன்மைக் கோசமாக இருக்க வேண்டும்.

கேள்வி : இது சாத்தியமானதுதானா? பான்கிமூனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதனூடாக எப்படி நாம் எமது போராட்டத்தின் இலக்கை அடையமுடியும் என்று நம்புகிறீர்கள்?

பதில்: சாத்வீகமான முறையில் எமது கண்டனத்தை வெளியிடுவதற்கு எமக்கு உரிமை இருக்கிறது. சர்வதேச கூட்டு அரச பயங்கரவாதத்தால்- சிறீலங்கா மட்டுமல்ல – அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் இரத்த சாட்சியங்கள் நாங்கள். ஐநாவின் சாசனத்திற்கெதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறோம். இதை நாம் உலகத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையாக இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது. எனவே எமக்கு பதில் சொல்லவேண்டியவர் பான்கிமூன்தான்.

நாம் பான்கிமூனை குற்றவாளியாக்கி போராடுவதனூடாக எமது போராட்டம் பன்மைப்படுத்தபடும். உலக கவனம் அதில் குவியும். விளைவாக இனப்படுகொலை குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரிடையான சூத்திரதாரிகளான சிங்கள இராணுவ, அரச தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ஐநாவை நாம் தொடர்ந்து குற்றம் சுமத்துவது நடந்து முடிந்த இனப்படுகொலையில் பாராமுகமாக இருந்ததற்கு மட்டுமல்ல. போர் முடிந்ததாக சிறீலங்கா அரசு அறிவித்து இற்றைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. இன்னும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. முட்கம்பி வேலிக்குள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறர்கள். கொல்லப்பட்வர்கள் தவிர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் எங்கிருக்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும் சரணடைந்த ஒரு போராளியாவது இதுவரை விடுவிக்கப்படவில்லை. இன்னும் முகாம்களில் காணாமல் போதல்களும் கைதுகளும் தொடர்;ந்தபடியே உள்ளன. சுயாதீனமாக ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமையாளர்கள் மக்களை சந்திப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. தெரியாமல் கேட்கிறோம். நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம். ஐநா என்றொரு அமைப்பு தமிழர்களுக்கு மட்டும் தமது சேவையை புரிவதில்லை என்று புதிதாக ஏதாவது சாசனம் இயற்றியுள்ளதா?
Sri Lankan soldiers march during a rehea
பெரும் போர் நடந்து முடிந்த தேசங்களில் ஐநாவின் அமைதிப்படை சென்று பணியாற்றுவதும் ஏதிலிகள் முகாம்களை ஐநா பொறுப்பெடுப்பதும் வழமை. ஆனால் சிறீலங்காவில் என்ன நடக்கிறது? இதுவே பான்கிமூன் மீது கடும் கோபத்தையும் சினத்தையும் எமக்கு உருவாக்குகிறது.

நாம் வீதியில் இறங்கி இதற்கான நியாயத்தைக் கேட்பதுடன் சிறீலங்காவில் ஐநா அமைதிப்படையின் பிரசன்னம் முக்கியமானது என்பதையும் அறிவிக்க வேண்டும். ஏதிலிகள் முகாம்களையும் சரணடைந்த போராளிகளையும் ஐநா பொறுப்பெடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளினூடான எமது ஐநாவிற்கெதிரான போராட்டம் அந்த மக்களிற்கும் போராளிகளிற்குமான கவசம் என்பதுடன் எமது போராட்ட நியாயத்தை மீண்டும் உலகறியச்செய்வதுடன் எமது போராட்டத்தின் அடுத்த பாய்ச்சலாகவும் மாறும்.

எமது போராட்டங்கள் ஒரு கோர்வையுடன் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் முன்பு கேட்ட இந்தோனேசிய – கனடா அகதிகள் விவகாரத்திலும் நாங்கள் சம்பந்தபட்ட நாடுகளை விட ஐநாவிற்கே அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கேள்வி : உங்களுடைய இலக்கையும் நோக்கத்தையும் ஓரளவிற்குப் புரிய முடிகிறது. மக்களை மீண்டும் வீதியில் இறங்கும்படி அறைகூவல் விடுக்கிறீர்கள். ஆனால் ஏற்கனவே மாதக்கணக்காக வீதியில் கிடந்தும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிறுத்த முடியவில்லையே என்ற மன விரக்திக்குள்ளாகியிருக்கும் மக்கள் இப்போது ஒன்று சேர்ந்து வீதிக்கு வருவார்கள் என்று நம்புகிறீர்களா?

பதில்: நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான ஐநா மீதான மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் உட்பட பல மேற்குலக ஊடகங்களினது கண்டனம் தன்னிச்சையாக வெளிப்படவில்லை. நாம் வீதியில் இறங்கியதன் பிற்பாடே அது உலக கவனத்தைக் குவித்தது. பல விவாதங்களை வளர்த்தெடுத்தது.

எம்மால் படுகொலைகளை நிறுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எமது வீதிப் போராட்டத்தினூடாக எமது போராட்டத்தை சர்வ மயப்படுத்தியிருக்கிறோம். எமது விடுதலை தொடர்பான ஒரு முக்கியமான கூறு இது. நடந்து முடிந்த சம்பவங்களை அடுத்து நீங்கள் நாங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழினமுமே உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறது.

அதன் நிமித்தமாக மன உளைச்சல் விரக்தி என்பவை இருக்கத்தான் செய்யும். ஆனால் இதிலிருந்து மீண்டெழவேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் அடையாளங்களைத் தொலைத்தவர்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். தனிநாடு என்ற அடிப்படைக்கும் அப்பால் அடையாளம் என்ற பிரச்சினையாக எமது வாழ்வும் தேடலும் உருமாறியிருக்கிறது. எனவே மீதிக்காலத்தை சக மனிதர்களாகக் கடந்து செல்வதற்காகவாவது நாம் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நாடுகளிலும் இதுவரை காலமும் அரசியல் செயற்பாட்டிற்காக உழைத்தவர்கள் வேறுபாடுகளை களைந்து மீண்டும் மக்களுக்கு தனித்தனி பட்டறைகளை நடத்தி உளவியல் சிக்கலுக்குள்ளிருந்து அவர்களை மீட்டெடு;ப்பதுடன் நாம் மீண்டும் வீதியில் இறங்கி போராடுவதற்கு அவர்களை தயார் செய்ய வேண்டும். நாம் ஒன்று பட்டால் இதை விரைவாகச் சாதிக்கலாம்.

கேள்வி : மக்கள் போராட்டம் என்றவுடன் வேறு ஒரு சிக்கல் நினைவுக்கு வருகிறது. எமது வீதிப்போராட்டம் தொடர்பாக அண்மையில் ஒரு சர்ச்சை எழுந்ததை நீங்கள் அறிநதிருப்பீர்கள். லண்டனில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் “பர்கர்” சாப்பிட்டதாகக் குறிப்பிட்டு பிரித்தானிய ஊடகங்கள் சில எமது போராட்டத்தை கிண்டல் செய்திருந்தன. இந்த பின்னணியில் மீண்டும் ஒரு வீதிப்போராட்டம் எத்தகைய கவனத்தை பெறும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: உண்மையில் இந்த கேள்விக்கு சமூக பண்பாட்டு தளத்தில் மட்டுமல்ல வரலாற்று அடிப்படையிலும் மிக நீண்ட விளக்கத்தை பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு இது இடமல்ல. சம்பந்தப்பட்ட ஊடகங்களிற்கு நாம் எமது கண்டனத்தை அனுப்பியதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம். ஊடகங்களிற்கு என்று ஒரு அரசியல் இருக்கிறது. தாம் சார்ந்துள்ள சித்தாந்தத்தை தூக்கிபிடிப்பதற்காக ஒரு நிகழ்வை – செய்தியை தாம் வரித்துள்ள சித்தாந்த கண்ணாடியைக்கொண்டு அதை அணுகுவார்கள்.

அதை மக்களிடம் அப்படியே கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் குறியாக இருப்பார்கள். மேற்குலக ஊடகங்களிற்கு அரசியலுடன் – வியாபாரமும் சேர்ந்து இருக்கும். பல பிரித்தானிய ஊடகங்களின் பங்குதாரர்களாக பெரு முதலாளிகள் இருக்கிறார்கள். சிறீலாங்காவிற்கு எதிரான எமது பரப்புரையில் பல பிரித்தானிய முதலாளிகள் பாதிப்புக்குள்ளாகினார்கள்.

உதாரணம் “மார்க் அன்ட் ஸ்பென்சர்”. அது மட்டுமல்ல ஐரோப்பாவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பான பிரச்சினையிலும் முதலாளிகள் பாதிப்புக்குள்ளாகினார்கள். விளைவு தமது பங்குதாரர்களான முதலாளிகளை மீட்க வேண்டிய கட்டாயம் மேற்படி சில ஊடகங்களிற்கு உடனடித் தேவையாக இருந்தது. விளைவு பரமேஸ்வரன் மில்லியன் பவுண்டுக்கு “பர்கர்” சாப்பிட்டார்.

பிரித்தானிய ஊடகங்களின் மேற்படி செய்தி தொடர்பான புரிதலின் அடிப்படையே தவறானது. நாம் பரமேஸ்வரன் “பர்கா”; சாப்பிட்டார் என்று வைத்துக்கொண்டே இந்தப்பிரச்சினையை ஆராய்வோம். லண்டனில் ஒன்றுகூடிய இலட்சக்கணக்கான தமிழர்களில் பரமேஸ்வரன் ஒருவர். என்ன வித்தியாசம் என்றால் அவர் தினமும் அந்த ஆர்ப்பாட்த்தில் இருந்தார் அவ்வளவே.அவர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கம் சிறீலங்காவில் போரை நிறுத்துவதே.

ஆனால் மேற்படி ஊடகங்கள் பரமேஸ்வரனுக்காகவே மக்கள் அந்த இடத்தில் கூடியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்தியை திரித்து கோல்மால் செய்திருந்தன. இதை ஒரு வகையில் காலனித்துவ சிந்தனையிலிருந்து மீள முடியாத சில பிரித்தானியர்களின் மனநோயாகவும் நாம் பார்க்கலாம்.

நடந்து முடிந்த இனப்படுகொலையைக் கூட கவனத்தில் கொள்ளாமல் முதலாளித்துவ சிந்தனையை வெளிப்படுத்திய அந்த ஊடகங்களிற்கு எதிராக உடனடியாகவே பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் போராடியிருக்க வேண்டும். அதைச் செய்யாதது கவலைக்குரியது. எனவே நாம் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு மேற்படி நிகழ்வை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை இல்லை.