முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்புகளும், கவனயீர்ப்பு நிகழ்வுகளும், வீதிமறிப்பு போரட்டங்களும், சர்வதேசமெங்கும் முன்னெடுக்கப்பட்டது. இன்று நான்கு ஆண்டுகள் கடந்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியோ, தமிழர்களுக்கான சுயநிர்ணய அரசியல் தீர்வையோ வழங்காத போதிலும் உகத்தமிழர்களின் பல்வேறுபட்ட போராட்டங்கள் காரணமாக சர்வதேச சமூகம் தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்றன.

இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடும் பேரெழுச்சியோடும் உலகத்தமிழினம் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கப்படவேண்டிய கால கட்டாயத்தில் நிற்கின்றது.

சிங்கள வல்லாதிக்க பிடிக்குள் இருந்துகொண்டும், முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் “எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்தக் கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள்” என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜ.நா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் முன்னால் உரிமைக்காக கண்ணீர் மல்கி கதறியழுத காட்சிகள் எம் கண்முன்னே தணலாக எரிகின்றது.

இவ்வேளையில் எதிர்வரும் 09.09.2013 முதல் ஜெனீவாவில் ஒன்றுகூட இருக்கும் ஐ.நா. மனிதவுரிமை சபை அமர்வுகள் நடைபெறுகின்ற கால கட்டத்தில் எமது நீதிக்கான உரிமைப் போராட்டத்தை வலுவோடு முன்னெடுக்க வேண்டிய தேவை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

எனவே எம்மால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பெல்ஜியம் நாட்டில் நடைபெறவிருந்த ஒன்றுகூடல் ஜெனீவா பேரணியின் முக்கியத்துவத்தை கருதி தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு 16.09.2013 திங்கட்கிழமை பிற்பகல் 14.00 மணி தொடக்கம் 17.00 மணி வரை ஐ.நா. முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவிருக்கின்றது என்பதை தொவித்துக் கொள்கின்றோம்.

எமது தேசம், வரலாற்றில் என்றுமில்லாதவாறு மறைமுகமாக நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. ஆதலால் எமது உரிமைக்கான போராட்டம் எக்கட்டத்திலும் கைவிடப்படமுடியாதது. போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து போராடுவோம்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல.

மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழ விடாமுயற்சியுடன் எழுவது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மாபெரும் மக்கள் சக்தியோடு ஐ.நா. நோக்கி அலையென எழ அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற தியாக தீபம் லெப்டினன் கேணல திலீபனின் நினைவுசுமந்த இக்காலப்பகுதியில் இன அழிப்பிற்கு நீதி கேட்டும், தனித் தமிழீழத்தினை அங்கீகரிக்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு