ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் ஆணைக்குழு அமைத்துள்ள விசாரணைக்குழுவானது சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் குறித்த சாட்சியங்களை கோரியுள்ள நிலையில் அதனை சிதைக்கும் முயற்சிகளில் சிறீலங்கா அரசும் அதற்கு அனுசரணையாக இயங்கும் ஊடகங்களும், அமைப்புக்களும் பல நடைவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை, சாட்சியமளிக்க முயற்சிப்பவர்களை மிரட்டுவது, மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்களை தருவதாக கூறுவது, விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களை கைது செய்ததாக செய்திகளை வெளியிடுவது என்ற செயற்பாடுகளை சிறீலங்கா அரசும் அதற்கு துணைபோகும் அமைப்புக்களும் முன்னெடுத்துவருவது ஒருபுறம் இருக்க, ஐ.நாவின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது என்ற கருத்தின் மூலம் மேற்குலகத்தை கட்டுப்படுத்த முனையும் சிறீலங்கா அரசு அதற்கு ஆதரவாக தற்போது யப்பாளையும் துணைக்கு அழைத்துள்ளது.

ltte-east
அண்மையில் யப்பானுக்கு சென்ற இந்தியப் பிரதமருக்கு அதிகளவான நிதிகளை வழங்கி, சீனாவுக்கு எதிரான கூட்டணிக்குள் இந்தியாவை இழுத்துவிடும் முயற்சிகளை யப்பான் மேற்கொண்டுள்ள நிலையில் சிறீலங்காவில் இடம்பெற்ற அமைதி முயற்சிக்கான யப்பானின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி அகாசியின் சிறீலங்கா வருகை முக்கியமானது.

யப்பானும், இந்தியாவும் இணைந்து நின்றால் ஐ.நாவின் விசாரணைக்குழு வலுவிழந்துவிடும் என்பது சிறீலங்காவின் கருத்து.

ஆனால் ஐனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் திரு மனோ கணேசன் இந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது கூறிய கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதாவது “தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த முக்கிய நகர்வுக்கு விடுதலைப்புலிகளே காரணம்” என தெரிவித்திருந்தார்.

அது தான் யதார்த்தமானது, இரண்டு மில்லியன் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தது மட்டுமல்லாது, சிறீலங்கா அரசு மீது ஒரு அனைத்துலக அழுத்தத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தையும் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களுக்கு வழங்கிச் சென்றுள்ளனர்.

இது அவர்களின் உயிர்த்தியாகத்தின் மூலம் எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம், அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டியது எமது கரங்களில் தான் உள்ளது. ஐ.நா விசாரணைக்குழு முன் நாங்கள் முன்வைக்கும் சாட்சியங்களின் அளவு மற்றும் வலு என்பவற்றைப் பொறுத்தே சிறீலங்கா மீதான அழுத்தத்தின் தன்மையும் அதிகாரிக்கும்.

அதுவே தமிழீழத்திற்கான அடுத்த கட்ட காய்நகர்த்தலே தவிர இந்தியாவும், சிறீலங்காவும், தமிழத்தேசியக் கூட்டமைப்பும் நடத்தும் பேச்சுவார்த்தையல்ல என்பதை நாம் தெளிவாகப்புரிந்துகொள்ளவேண்டும்.

ஏனெனில் பண்டா செல்வா ஒப்பந்தத்தில் ஆரம்பித்து திம்பு பேச்சுவார்த்தை என தொடர்ந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் பின்னர் இணைத்தலைமை நாடுகளின் அமைதி முயற்சி என பல நாடகங்களை கண்டவர்கள் நாங்கள்.

தனக்கு ஆபத்துவரும்போதெல்லாம் தமிழ் மக்களை மிரட்டுவதும், பேச்சுக்கு அழைப்பதும் சிறீலங்கா அரசின் வழமையான நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று.

ஈழம்ஈநியூஸ்.