Jaffna_03_96286_200வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் எவ்வாறு தனது அரசியல் மரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளது என்பதை ஸ்பெய்னில் பிரபல்யம் வாய்ந்த எருமைச் சண்டையை உவமையாகக் கொண்டு கடந்த தொடரில் பார்த்திருந்தோம்.

ஆனாலும் இதனையிட்டும், இது போன்ற விமர்சனங்களையிட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி அதன் ஊதுகுழல்களாக விளங்கும் தாயக – புலம்பெயர் ஊடகங்களோ அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஒரு வகையில் இவ்வாறான விமர்சனங்களை எருமை மீது மழை பொழிவதைப் போன்ற கண்ணோட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் அணுகுகின்றனவோ தெரியவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது. எதிர்ப்பு அரசியலை ஆட்சேபிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கும், ‘யதார்த்தம்’ பேசுபவர்களுக்கும் இது ஒரு தவறான முடிவாகத் தென்படக்கூடும்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இந்த முடிவை உற்று நோக்கும் பொழுது அதில் ஆழப் பொதிந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையின் அர்த்தபரிமாணத்தை நாம் கண்டுகொள்ள முடியும். தலைவர் பிரபாகரன் அவர்களிடம் பூகோள அரசியல் பாடம் கற்ற மாணாக்கன் என்ற வகையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதற்கு கஜேந்திரகுமார் எடுத்துள்ள முடிவு தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஓர் நகர்வாக அமைந்துள்ளது எனக்கூறின் மிகையில்லை. இதனை நாம் புரிந்து கொள்வதற்கு சுயாட்சித் தீர்வு முறைமை பற்றிய தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களை இங்கு பதிவு செய்வது பொருத்தமானது.

தலைவரின் சுதுமலைப் பிரகடனம், தலைவரின் 1994ஆம், 2002ஆம் ஆண்டுகளுக்கான மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளிலும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘விடுதலை’, ‘போரும் சமாதானமும்’ போன்ற நூல்களிலும், அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலிலும் சுயாட்சித் தீர்வு முறைமை பற்றிய தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகள் பொதிந்து காணப்படுகின்றன.

இலங்கையின் மாகாண சபை முறைமைக்கு அடிப்படையாக விளங்குவது 1987ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும், ரஜீவ் காந்திக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமாகும். தமிழீழ மக்களின் வரலாற்று வாழ்விடமாக வடக்குக் கிழக்கு மாநிலங்களை அங்கீகரித்ததைத் தவிர தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதில் எவ்விதமான உருப்படியான அம்சங்களையும் இவ் ஒப்பந்தம் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒப்பந்தத்தின் நகலை தன்னிடம் ராஜீவ் காந்தி முன்வைத்த பொழுது, அதனை உடனடியாகவே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நிராகரித்து விட்டார். இவ்வாறானதொரு பின்புலத்தில் தலைவர் அவர்களுடன் ஓர் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை ராஜீவ் காந்தி ஏற்படுத்திக் கொண்டார். இவ் ஒப்பந்தத்தை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி இப்பொழுது உயிருடன் இல்லையென்றாலும், அத்தருணத்தில் ராஜீவ் காந்தியின் அருகில் இருந்த முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், விஜயகாந்தின் தற்போதைய ஆலோசகராக விளங்கும் பண்டுருட்டி இராமச்சந்திரன் போன்றவர்கள் இப்பொழுதும் உயிருடனேயே உள்ளனர்.

தலைவர் பிரபாகரன் அவர்களுடன் ராஜீவ் காந்தி ஏற்படுத்திய இரகசிய ஒப்பந்தம் குறித்தும், அது பற்றி தலைவருக்கு ராஜீவ் காந்தி அளித்த வாக்குறுதி பற்றியும் பின்வருமாறு ‘போரும் சமாதானமும்’ நூலில் அத்தருணத்தில் தலைவருடன் இருந்த பாலா அண்ணை விபரிக்கின்றார்:

“உங்களது இயக்கத்திற்கும், உங்களது மக்களுக்கும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா மீது நம்பிக்கையில்லை என்பது எமக்கு நன்கு தெரியும். எனக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர் மீது கடுமையான அழுத்தம் பிரயோகித்து, முக்கியமான சலுகைகளைப் பெற்று இந்த ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். மாகாண சபைத் திட்டத்தில் குறைகள் இருக்கலாம். எனினும் நாம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி, பிரதேச சுயாட்சி அதிகாரத்தைக் கூட்டலாம். இந்த மாகாண சபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். ஆதலால் அந்தக் கால இடைவெளியில் வடகிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவ முடியும். அந்த இடைக்கால அரசில் உங்களது அமைப்பு பிரதான பங்கை வகிக்கலாம். தமிழர் மாநிலத்தில் ஒரு இடைக்கால அரசு நிறுவுவது பற்றி நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியுடன் ஏற்படுத்தப்பட்ட இரகசிய உடன்படிக்கையின் அடிப்படையிலும், அவரது வாக்குறுதிக்கு மதிப்பளித்துமே தனது சுதுமலைப் பிரகடனத்தில் ஆயுத ஒப்படைப்புப் பற்றிய அறிவிப்பையும், இடைக்கால அரசுக்கான தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் பங்கேற்கக்கூடிய சூழல் பற்றிய விளக்கத்தையும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அளித்தார். ஆனாலும் அத்தருணத்தில் ஒரு விடயத்தை தலைவர் அவர்கள் உறுதியாகக் குறிப்பிட்டார்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு என்பதுதான் அது:

“தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. எமது இலட்சியம் வெற்றி பெறுவதானால் மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.

தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை.”

அதாவது தமிழீழத் தனியரசுக்கான பாதையில் ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றீடான அரசியல் நகர்வாக வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தையும், அதற்கான தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் பங்கேற்பதற்கான இணக்கத்தையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டாரே தவிர, தமிழீழ சுதந்திரக் கோரிக்கையை நீர்த்துப் போக வைக்கும் கருவியாக மாநில சுயாட்சி (அதிலும் இடைக்கால சுயாட்சித் தீர்வு) அமைவதற்கு எந்தவொரு தருணத்திலும் தலைவர் அவர்கள் இடமளிக்கவில்லை.

ரணசிங்க பிரேமதாசாவின் வேண்டுகையை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து வடக்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது இயக்கத்தின் பங்கேற்பை உறுதி செய்த பொழுதும் இதே உறுதியான நிலைப்பாட்டையே தலைவர் அவர்கள் எடுத்தார். அதாவது தமிழீழ மக்களின் தனியரசு உரிமையை மறுதலிக்கும் ஆறாவது திருத்தச் சட்டத்தை பிரேமதாசா நீக்கினால் மட்டுமே மக்கள் முன்னணி ஊடாக வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பங்கேற்கும் என்பதை தனது தூதுக்குழு ஊடாக பிரேமதாசாவிற்கு தலைவர் தெரிவித்தார். இது பற்றி ‘சுதந்திர வேட்கை’ நூலில் பின்வருமாறு அடேல் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்:

‘ஒற்றையாட்சி அரசுக்கு தாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் விசுவாசப் பிரமாணம் செய்ய முடியாது என்று பிரேமதாசாவிடமும், ஹமீதிடமும் விடுதலைப் புலி அணியினர் தெரிவித்தார்கள். இந்தச் சட்டவாக்கம் (ஆறாவது திருத்தச் சட்டம்) ஒடுக்குமுறையானது எனவும், அரசியல் தெரிவு, பேச்சுரிமை ஆகிய அடிப்படைச் சுதந்திரங்களை நசுக்குவதாகவும் இருப்பதாகப் புலிகள் வாதிட்டார்கள். சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தில் புலிகள் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், இந்தச் சட்டபூர்வமான உரிமை தமிழ் மக்களுக்கு உரித்தானது என்றும் அவர்கள் அடித்துக் கூறினார்கள். சுயநிர்ணய உரிமையானது, மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் தெரிவுச் சுதந்திரத்தை தெளிவாக அறிவிப்பது என்றும், இது பிரிவினையை முன்னெடுப்பது அல்ல என்றும் புலி அணியினர் குறிப்பிட்டார்கள்.

ஒருவர் தமது அரசியல் எதிர்காலத்தை தெரிவு செய்யும் உரிமையைத் தடை செய்யும் ஆறாவது சட்டத் திருத்தம் ஒழிக்கப்படாவிட்டால், விடுதலைப் புலிகள் மக்களாட்சி நீரோட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தேர்தலில் பங்கெடுக்க மாட்டார்கள் என்றும் பிரேமதாசாவிடம் புலிகள் தெரிவித்தார்கள்.’

தமிழீழ மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை மறுதலிக்கும் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு பிரேமதாசா மறுத்தமையே இறுதியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடிப்பதற்கு வழி வகுத்தது. இதே நிலைப்பாட்டையே சந்திரிகா குமாரதுங்கவுடனான பேச்சுவார்த்தைகளில் சுயாட்சித் தீர்வுக்கான சமிக்ஞைகளை வெளியிட்ட பொழுதும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எடுத்தார்.

அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு வடதமிழீழத்தின் பெரும்பாலான பகுதிகளையும், தென்தமிழீழத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய தமிழீழ நடைமுறை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்டிருந்தது. இந்நடைமுறை அரசை ஏற்கும் சுயாட்சித் தீர்வைப் பரிசீலிப்பது பற்றி 1994ஆம் ஆண்டு தனது மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரையில் பின்வருமாறு தலைவர் குறிப்பிட்டார்:

“தமிழரின் தேசியப் போராட்டம் நாற்பது ஆண்டு காலத்திற்கு மேலான நீண்ட, சிக்கலான வரலாற்றுச் சூழ்நிலைகளால் உருவாக்கம் பெற்றுப் பெருவளர்ச்சி கண்டிருக்கிறது. இன்று அதன் பரிமாணம் வேறு: வடிவம் வேறு. நீண்ட காலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம், இன்று தமிழ்ப் பகுதிகளில் தன்னாட்சிக் கட்டமைப்புக்களை நிறுவும் அளவிற்குப் போராட்டத்தை உயர்ந்த படிநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று நாம் மிகவும் பலமான, உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். இந்த வலுவான அத்திவாரத்தை இட்டுத் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் ஒரு பலமான சக்தியாக வலுவான தளத்தில் நிற்பதால்தான், சிங்கள அரசு எம்முடன் பேச்சுக்களை நடத்த விரும்புகிறது.

சமாதான வழியில், தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண சந்திரிகா அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம். தமிழரின் தேசியப் போராட்டத்தினது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்திற் கொண்டு உருப்படியான சுயாட்சித் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படுமானால், நாம் அதனைப் பரிசீலனை செய்யத் தயாராக இருக்கின்றோம்.”

அதாவது சாராம்சத்தில் தமிழீழ தேசத்தின் பலத்தையும், தமிழீழ நடைமுறை அரசின் இருப்பையும் ஏற்றுத் தமிழீழ தேசத்தை தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய சுயாட்சித் திட்டத்தைப் பரிசீலிப்பதற்கான சமிக்ஞையையே சந்திரிகாவின் அரசாங்கத்திற்கு தனது மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை வாயிலாகத் தலைவர் அவர்கள் விடுத்தார்.

இதுதான் 2002ஆம் ஆண்டு ரணிலுடனான பேச்சுவார்த்தைகளின் பொழுதும் நடந்தது. இதுபற்றி 2002ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரையில் தலைவர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகிறார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை. உள்ளக சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது.

சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்தை சாதமாகப் பரிசீலனை செய்வோம். ஆனால் அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளக சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’

பிரிந்து சென்று தனியரசை நிறுவும் உரிமையை உள்ளடக்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் இவ் அறிவித்தலே ஒஸ்லோ பேச்சுக்களில் இணைப்பாட்சித் திட்டத்தின் (சமக்ஷ்டி) அடிப்படையிலான தீர்வுக்கான வாய்ப்புக்களைப் பற்றி ஆராய்ந்து பார்ப்பது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவும், சிறீலங்கா அரசாங்கத்தின் தூதுக் குழுவும் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு (ஒஸ்லோ பிரகடனம் என்று தவறாக மிகைப்படுத்தப்படும்) அடிப்படையாக அமைந்தது. இது பற்றி ‘போரும் சமாதானமும்’ நூலில் பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிடுகின்றார்:

‘தமிழ் மக்கள், தமது வரலாற்றுத் தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி அதிகாரத்தை, அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையை வேண்டினார் பிரபாகரன். ஆயினும் அவர் உள்ளக சுயநிர்ணய உரிமையின் எல்லை வரம்புடன் நின்றுவிடவில்லை. ஐ.நா. பிரகடனத்தில் அரசுகளின் கடப்பாட்டு விதியாக நெறிக்கப்பட்டிருக்கும் ‘சம உரிமைகளையும் சுயநிர்ணயத்தையும்’ பௌத்த – சிங்கள பேரினவாதச் சகதிக்குள் புதைந்து கிடக்கும் சிங்கள அரசு தமிழர்களுக்கு வழங்கிவிடப் போவதில்லை என்பது பிரபாகரனுக்கு நன்கு தெரியும். ஆகவேதான் அவர் வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரகடனம் செய்வது பற்றி ஒரு கண்டிப்பான எச்சரிக்கையை விடுக்கிறார்.’

தனது மாவீரர் நாள் உரையில் தலைவர் அவர்கள் எச்சரித்தது போன்றே நடந்தது. இணைப்பாட்சித் தீர்வுக்குள் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முடக்கி, தமிழீழ தேசிய எழுச்சியை நீர்த்துச் செய்வதற்கான சதி நடவடிக்கைகளில் ரணிலின் அரசாங்கம் இறங்கியது. விளைவு, இணைப்பாட்சித் தீர்வின் அடிப்படையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்களை ஆராயும் முயற்சிகளைக் கைவிட்டு இடைக்கால நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலை 2003 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வகுத்தார்கள்.

இவ்வாறு தனியரசை நிறுவும் உரிமையை உள்ளடக்கிய சுயாட்சித் தீர்வின் ஊடாக அரசியல் வழியில் தமிழீழ தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் கைகூடாத நிலையிலேயே ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான இறுதி முடிவை 2006ஆம் ஆண்டு தனது மாவீரர் நாள் உரையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெளியிட்டார்:

“போரை நிறுத்தி, வன்முறைகளைத் துறந்து, எம்மால் முடிந்தளவிற்கு நாம் சமாதான முன்னெடுப்புக்களைச் செய்திருக்கிறோம். சமாதானச் சூழ்நிலைக்கும் சமரசத் தீர்விற்கும் எம்மால் இயன்றளவு முயற்சித்திருக்கிறோம். சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறோம். போதுமான அளவுவிற்குமேல் பொறுமையை காத்திருக்கிறோம். அமைதி வழித் தீர்விற்கு எண்ணற்ற வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம்…

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனிய
ரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்.”

இப்பிரடகனத்தின் ஊடாக சுயாட்சித் தீர்வின் அடிப்படையிலான அரசியல் நகர்வுகளின் மூலம் தமிழீழ தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியாது என்ற செய்தியை தலைவர் அவர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கினார்.

தமது அரசியல் சுதந்திரத்தை தமிழ் மக்கள் வென்றெடுப்பதாயினும் அதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதே
ஒரேயரு வழி என்பதையும் இப்பிரகடனம் ஊடாக தலைவர் அவர்கள் நிறுவினார். இவ்வாறானதொரு பின்புலத்தில் இனியும் சுயாட்சி பற்றியோ மாகாண சபை பற்றியோ தமிழர்கள் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அதிலும் தமிழீழ தாயகத்தை முழுமையான படையாட்சிக்குள் வைத்திருந்தவாறு, ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவது பற்றிய பேச்சுக்கே இடமளிக்காது, தமிழீழ மக்களை தன்னாட்சி உரிமைக்கு உரித்தான தேசிய இனமாகவும், வடக்குக் கிழக்கு மாநிலத்தை தமிழீழ தாயகமாகவும் ஏற்க மறுத்தவாறு, மாகாண சபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை நீக்குவதற்கான முன்னெடுப்புகளில் மகிந்தரின் அரசாங்கம் ஈடுபட்டிருக்கும் இன்றைய சூழலில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பானதொரு செய்கையே அன்றி வேறேதுமல்ல.

இதுவிடயத்தில் கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ள நிலைப்பாட்டைத் தழுவி வடக்கு மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணிப்பதே தமிழீழ மக்கள் எடுக்கக்கூடிய சரியான முடிவாக இருக்கும். தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வாகும் என்ற செய்தியை டில்லிக்கும், வோசிங்டனுக்கும் இதன் மூலமே நாம் இடித்துரைக்க முடியும்.

சேரமான் – பதிவு