“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” – தோழர் பெ.மணியரசன் உரை!

0
681

india-thambi“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன!
தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் உரை!

தமிழின உணர்வாளர்களுக்கு நாமக்கல் பகுதியில் துணை நின்ற திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் – திருச்செங்கோடு சாலை – சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிலம்பொழி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, நா.ப.இராமசாமி அவர்களின் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஆற்றிய நினைவேந்தல் உரை:

“தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை – தமிழ்த்தொண்டன் பாரதி தான் செத்ததுண்டோ?” என்று கேட்டவர் பாரதிதாசன். பாரதியார், பட்டுக்கோட்டை, பாரதிதாசன் ஆகியோர் இன்றைக்கும் சாகவில்லை. அவர்களது இலக்கியங்களின் மூலம் அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

அதைப் போல, தமிழின உணர்வாளர் திரு. நா.ப.இராமசாமி அவர்களும் சாகாமல் உயிர் வாழ வேண்டுமென்றால், அவர் திரட்டியுள்ள அரிய நூல்களைக் கொண்டு, நாமக்கலில் அவர் பெயரிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே இது போல் பல அரிய நூல்களைத் திரட்டிய ரோஜா முத்தையா அவர்களது நூல்கள், அவர் பெயரால் ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்டு இன்று சென்னையில் நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டையில் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியர் திருமதி. டோரதி ஆகியோரின் முயற்சியில் ஞானாலயா நூலகம் செயல்பட்டு வருகின்றது. அது பலருக்கும் பயன்பட்டு வருகிறது.

ரோஜா முத்தையா நூலகம் போல, ஞானாலயா நூலகம் போல நா.ப.இரா. நூலகம் நாமக்கலில் திகழ ஓர் அறக்கட்டளையை உருவாக்கிட முன் வர வேண்டும். இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒருங்கிணைத்த தோழர்கள் கண.குறிஞ்சி, கி.வெ.பொன்னையன் ஆகியோரும், நா.ப.இரா. குடும்பத்தினரும் இதற்கு முன்முயற்சி எடுத்தால் நான் சார்ந்துள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இதற்கான பணியைச் செய்யும்.

நா.ப.இரா. அவர்கள் ஈழவிடுதலையை ஆதரித்தவர், தமிழ்நாடு விடுதலையைக் கோரியவர், பகுத்தறிவாளர், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் போராளி, பொதுவுடைமையாளர் என்று சிறப்பாகக் குறிப்பிட்டு துண்டறிக்கையிலேயே போட்டுள்ளார்கள். இவை அத்தனையும் உண்மை.

ஆனால், தமிழ்நாட்டில் ஈழவிடுதலையை ஆதரிக்கும் பலர் தமிழ்நாட்டு விடுதலையை ஆதரிப்பதில்லை. ஈழம் விடுதலை அடைவதற்கு நூறு காரணங்கள் இருக்கின்றன என்றால், தமிழ்நாடு விடுதலை அடைவதற்கு நூற்றி இரண்டு காரணங்கள் இருக்கின்றன (கைத்தட்டல்).

அப்படி இருந்தும், தமிழ்நாடு விடுதலையை பலர் ஆதரிக்காமல் இருப்பது ஏன்? மூன்று வகையான காரணங்கள் இதற்கு இருக்கலாம்.

ஒன்று, நாம் அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை உணராத அறியாமை. இரண்டு, அச்சம். மூன்று, அரசியல் சந்தர்ப்பவாதம்.

நா.ப.இராமசாமி அவர்கள் நேர்மையான, உண்மையான, துணிச்சலான மனிதர். அதனால் அவர் தமிழீழ விடுதலையும், தமிழ்நாட்டு விடுதலையையும் ஒருங்கே ஆதரித்தார்.

அவர் பார்ப்பன எதிர்ப்பாளர் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆரியப் பார்ப்ன எதிர்ப்பு தொன்றுதொட்டு தமிழ் இனத்தின் முக்கியமானக் கொள்கையாகும். பெரியார் அவர்கள் நம் காலத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பட்டிதொட்டியெல்லாம் பரப்புரை செய்தார்கள். அது, நமக்கு சில பலன்களையும் தந்தது. சங்ககாலத்திலிருந்து தமிழர்கள் ஆரியத்தை, பார்ப்பனியத்தை முறியடித்தால் தான் நாம் வாழ முடியும் என்ற கருத்தை உணர்ந்திருந்தார்கள். அதை வெளிப்படுத்தினார்கள்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்க்கொடியை ஏற்றும் கொடிக் கம்பமாக இமயமலை இருந்திருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் பாடல்கள் இருக்கின்றன. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இக்காலத்தில் நாம் இமயமலையில் கொடியேற்ற வேண்டும் என்பதல்ல. ஆரியத்தையும், பார்ப்பனியத்தையும் அடக்கி வைக்கவில்லையென்றால் தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாது என்பதைத் தான்.

சோழன் நலங்கிள்ளியைப் பாராட்டியை கோவூர் கிழார் ‘உன் பெயரைக் கேட்டால் வடபுலத்து அரசர்களின் நெஞ்சில் அவலம் பாயும். அவர்கள் கண்கள் தூக்கமிழந்துவிடும். அஞ்சி நடுங்குவார்கள்’ என்கிறார். இந்த வகையில் வடபுலத்தில் ஒடுக்கி வைத்தாலொழிய, நம் காலத்தில் ஒதுக்கி வைத்தாலொழிய தமிழர்களுக்கு அமைதி கிடையாது, வாழ்வுரிமை கிடையாது என்பது தான் வரலாறு.

சிந்துச்சமவெளி நகரங்களை அழித்த அதே ஆரியம் தான், கிளிநொச்சி நகரத்தையும் அழித்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம், இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களைத் தவிர நாங்கள் அனைவரும் ஒரே இனம் என்றார். அக்கூற்றை இந்திய ஆட்சியாளர்கள் யாரும் எதிர்க்கவில்லை. பா.ஜ.க. தலைவர் அத்வானி தனது இணையதளத்தில், சிங்களரும் இந்தியரும் ஆரியர்களே என்று எழுதினார். அவர்கள் வரலாற்று உண்மையைத் தான் சொல்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் ஏமாளிகளாக இருக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்த மரபுத் தொடர்ச்சியோடு தான் நா.ப.இராசாமி ஆரியத்தை முழுமூச்சோடு எதிர்த்தார்.

பகுத்தறிவுக் கருத்துகள் தமிழ் இனத்தில் நீண்ட நெடுங்காலமாக இருக்கின்றன. “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. எவ்வளவு பெரிய ஆள் சொன்னாலும், கடவுள் சொன்னதாகச் சொன்னாலும் அது உண்மையானதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய் என்றார் அவர்.

ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்த திருநாவுக்கரசர், ”சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்” என்று கேட்டார்.

திருமந்திரத்தில் திருமூலர், “பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் / போர் கொண்ட மன்னர்க்கு நோயாம் / சீர் கொண்ட நாட்டின் சிறப்பெல்லாம் மாயும்” என்று பொருள்படும்படி எழுதினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் இராமலிங்க அடிகளார், ”வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் / வேதாகமங்களின் விளைவறியீர் சூதாகச் சொன்னதலால் / உண்மை வெளி தோன்ற உரைத்தல் இல்லை” என்றார்.

நா.ப.இரா.வின் பொதுவுடைமைக் கருத்துகளை நான் அறிந்திருக்கிறேன். ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்றார் வள்ளுவர்.

ஆக, தமிழக விடுதலை, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகிய அத்தனை பண்புகளும் கொண்ட நா.ப.இரா. அவர்களை ஒரு சிறந்த தமிழர் என்று சொல்லலாம். தமிழினத்தின் பண்புகள் தான் இவை அனைத்தும்”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிகழ்வில், சமூகநீதி வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர் பொ.இரத்தினம், மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கண.குறிஞ்சி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. கி.வே.பொன்னையன், முன்னாள் நடுவண் அமைச்சர் திரு. காந்திசெல்வன் (தி.மு.க.), தோழர் நிலவன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி), எழுத்தாளர் பொ.வேலுசாமி, புலவர் கருப்பண்ணன் (பாவேந்தர் பேரவை) உள்ளிட்ட பல்வேறு இயக்கப் பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். நிறைவில், நா.ப.இராமசாமி அவர்களின் மகன் திரு. இரா.அன்பழகன் நன்றி நவின்றார்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)