logo-eelamenewsநடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனஅழிப்பை மறந்து விட்டு தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்துக் கொண்டு பெரும் அக்கப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.

 

சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட எந்த தீர்வும் குறிப்பாக தேர்தல்கள் எமக்கு விடுதலையை தந்துவிடப்போவதில்லை என்ற உண்மையை இவர்களது அதிகார போதை மக்களுக்கு செல்லவிடாமல் மறைத்துக்கொண்டிருக்கிறது.

 

2009 இனஅழிப்புக்கு பிறகு இந்த உண்மை இன்னும் ஆழமாக உணரப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அரசியலுக்குள் மக்களை இழுத்து சென்று நடந்த இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க முற்படுகிறது இந்த கும்பல்கள்.

 

தேர்தலை புறக்கணிப்பதற்கும், பங்கெடுப்பதற்கும் தமக்கென்று சில நியாயங்களை உருவாக்கிக் கொண்டு பதவி கதிரைகளை நோக்கி நகர முற்படுகிறார்களே ஒழிய மக்களுக்கான அரசியலை வென்றெடுக்க இங்கு யாரும் தயாராக இல்லை.

 

கட்சி அமைப்பு வேறுபாடின்றி இங்கு அனைவருமே தம்மை இதில் பங்காளியாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

மக்கள் விழிப்பாக இருக்க வேண’டிய தருணம் இது.

 

மே 18 என்பது நாம் வீழத்தப்பட்ட நாளாக இருந்தபோதும் மறுவளமாக தமிழீழம் என்ற நடைமுறை அரசிற்கான உலக அங்கீகாரத்திற்கு அடித்தளமிட்ட நாளாகவும் அது இருக்கிறது.

 

எனவே மே18 செய்தியின் கனதியை கவனமாக உள்வாங்கி தேர்தல் அரசியல் மாயைக்குள் இருந்து மக்களை மீட்டெடுத்து மக்கள் போராட்டங்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட போராட்டத்தை வடிவமைக்க வேண்டிய அரசியல்வாதிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் பதவி கதிரைகளுக்காக தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்து போராட்டத்தையும் வரலாற்றையும் மடைமாற்றுவது அதியுச்ச துரோகமாகவே வரலாற்றில் பதிவாகிறது

 

மக்களே மிக அவதானமாக இருங்கள். கட்சி வேறுபாடுகளின்றி தமிழ் அரசியல்வாதிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.

 

அவர்கள்  பொது எதிரியான சிங்களத்தை விடுத்துவிட்டு தமக்குள்ளாகவே போடும் குடுமி சண்டைகளும் அவதூறுகளுமே இதற்கு போதுமான சாட்சியங்களாகும்.

 

அவர்களது பினாமிகளும், அடிவருடி லெட்டர்பாட் அமைப்புக்களும் விடும் குழப்பகரமான – தெளிவற்ற அறிக்கைகளும் இதற்கு மேலதிக வலு சேர்க்கின்றன.

 

எனவே மக்கள் இந்த தேர்தல் மாயைக்குள் உங்களை புதைத்து கொள்ளாமல் வேறு வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

 

மே 18 இற்கு பிறகு தமிழ்த்தேசத்தை நிர்முலம் செய்யும் புலிநீக்க அரசியலை செய்ய புகுந்த மேற்குலக -பிராந்திய சதி வலையமைப்பு தற்போது மிச்சம் மீதியாகவுள்ள – செயற்திறனற்றிருந்தாலும் கொள்கையளவில் ஒரு பேசும் சக்தியாகவுள்ள ‘கூட்டமைப்பு’ அரசியலை உடைக்க தலைப்பட்டுள்ளது.

 

அதுதான் இந்த தேர்தல் கூத்து.

 

தேர்தல் அறிவிக்கபட்ட காலப்பகுதியை வைத்தே இதை சுலபமாக கணித்து கொள்ளலாம்.

 

ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நேரத்தில் இனஅழிப்புக்கு வெள்ளையடித்து ‘மலரும் சனநாயகம்’ என்ற பெயரில் சிங்களத்தை காக்கவும் ஐநாவை நோக்கிய மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும் மேற்படி கூட்டணி செய்த சதிதான் இந்த தேர்தல்.

 

இதற்கு நமது தமிழ் அரசியல்வாதிகள் உடந்தை என்பதுதான் இதன் பின்னாலுள்ள பேருண்மையாகும்.

 

ஆனால் பிராந்திய – மேற்குலக சதியை புரிந்து கொள்ளாமல் தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளேயே மோதி தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை இழப்பதென்பது “தேர்தல் அரசியலினாலும் அரசியல்வாதிகளினாலும் தமக்கு ஏதும் நடக்கப்போவதில்லை” என்ற இறுதி முடிவுக்கு மக்களை உந்தி தள்ளும். விளவாக மக்கள் போராட உந்தப்படுவார்கள். அது மக்கள் – மாணவர் புரட்சிக்கான அடித்தளமாக இருக்கும்.

 

அரசியல்வாதிகளையும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களையும் நம்பி ஆயுதங்களை மவுனித்த போராளிகள் அடுத்த கட்ட நகர்வு குறித்து சிந்திக்க வழி பிறக்கும் என்ற தெளிவு பிறக்கவும், இந்த தேர்தல் வழி செய்யப்போகிறது என்ற உண்மையையும் நாம் மறுக்கவில்லை.

 

எனவே தேர்தல் அரசியலுக்கு அப்பால் புலிகள் விட்டு சென்ற இடத்தை சரியாக நிரப்பும் மாற்று தமிழ்த்தேசிய அரசியல் இயக்கமொன்றின் தேவையை மக்களும் மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள யாப்புக்குட்பட்ட தேர்தல் அரசியலை தவிர்த்து அதை தாயகத்தில் கட்டியெழுப்ப ஒன்று திரளுமாறு மக்களுக்கும், மாணவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

 

மாவீரர்களின் தியாகங்களை மதித்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் வழியில் நின்று தாயகத்தை மீட்டெடுக்க உறுதியெடுப்போம்.

 

ஈழம்ஈநியூஸ்.