theepachchelvanமே 18 இற்கு பிறகு இலக்கியவாதிகள் பலர் இலக்கிய’வியாதி’களாக தமிழர்களுக்கும் அவர்கள் விடுதலைக்கும் எதிராக மாறிப்போன சூழலில் தீபச்செல்வனின் எழுத்துக்கள் எமது மக்களோடு மக்களாக, மக்களுக்குள்ளிருந்து மக்களின் மொழியில் பேசத்தொடங்கின. இழந்த எமது நிலமும், மண்ணும் தீபச்செல்வனின் கவிதைகளுக்குள் பேசுபொருளாகின. மே 18இற்கு பிறகான எமது அரசியலை நிலத்தை குறியீடாக்கி அறச்சீற்றத்துடன் பேசத்தெடங்கின. மண்ணின் கவிஞனாக மக்களின் கவிஞனாக தீபச்செல்வனை வரலாற்றில் நிறுத்தும் புள்ளி இதுதான். அவல, அடிபணிவு, ஒப்படைவு , சரணாகதி அரசியலின் முகவர்களாக பல படைப்பாளிகள் மாறிப்போன சூழலில் தீபச்செல்வனின் எழுத்துக்கள் எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் எமது மக்களின் – மண்ணின் நேர்மையான, உண்மையான ஒரு காலகட்ட வரலாற்றின் பதிவுகளாகவும் சாட்சிகளாகவும் மட்டுமல்ல எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் இருக்கின்றன’ என்று தீபச்சசெல்வனின் படைப்புக்கள் குறித்து ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி ஒரு தடவை கூறிய வாசகங்கள் துல்லியமானவை.

மே 18 இற்கு பிறகு பல படைப்பாளிகள் மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் வேறுபட்டு துண்டாடப்பட்ட ஒரு நிலையிலிருந்து படைப்புக்களை – எழுத்துக்களை முன்வைத்து வரும் சூழலில் தீபச்செல்வனினது படைப்புக்கள் தொடர்ந்து அந்த மண்ணினதும் மக்களினதும் உளவியலிலிருந்தே ஊற்றெடுக்கிறது. இதுவே எம்மை அவருடன் பேச தூண்டிய காரணம்.

தீபச்செல்வன் ஈழம்ஈநியூஸ் இற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இது.

கேள்வி: சிறீலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்கின்றதா? அதாவது அதில் பங்குபற்றிய பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூறியதைப் போல சிறீலங்கா அரசு அவர்கள் வழங்கிய சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றதா?

இலங்கை அரசைப் பொறுத்தவவரையில் தான் இழைத்த மிகக் கொடிய மனித உரிமை மீறல்களிலிருந்து தன்னை பாதுகாக்க பொதுநலவாய மாநாட்டைப் பயன்படுத்தும் வகையில் அரசின் பிரச்சாரங்கள் அமைந்திருந்தன. முள்ளிவாய்க்காலில் மாபெரும் இனப்படுகொலை நடந்திருந்தபோதும் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்பட்டதை ஒரு அங்கீகாரமாகவே மகிந்த அரசு கருதுகிறது. மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் விதமாகவே பொதுநலவாய மாநாட்டில் ராஜபக்ச உரையாற்றினார்.

அதைத் தவிர மதவாச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் திருப்பி அனுப்பப்பட்டது, யாழில் காணாமல் போனவர்களின் உறவுகள்மீது தாக்கியது, கலம் மக்ரே திருப்பி அனுப்பப்ட்டது வலிகாமம் மக்களின் போராட்டம்மீது தாககுதல்கள் நடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் சம்வங்கள் மாநாடு நடந்த சந்தர்ப்பத்திலிலேயே இடம்பெற்றன. அப்படியிருக்கையில் பொதுநலவாய மாநாட்டின் பின்னர் இலங்கை மனித உரிமைகளை காப்பாற்றும் என்று எதிர்பார்ப்பது எப்படி எதிர்பார்ப்பது? இன்னமும் மீறல்கள் அதிகரிக்கபட்டுள்ளதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி: 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதாவது போர் நிறைவடைந்ததற்கு பின்னர், இந்தியாவும் மேற்குலகமும் கூறியதைப்போல சிறீலங்காவில் இன இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதா அல்லது இனங்களுக்கு இடையிலான முரன்பாடுகள் அதிகரித்துள்ளதா?

இன நல்லிணக்கம் என்பது சரணாகதியடைதல் அல்ல. இனப்படுகொலை செய்யப்பட்ட நாட்டில் இன நல்லிணக்கம் எப்படி ஏற்படும்? நாங்கள் எதற்காக போராட வேண்டி நேரிட்டதோ அதைப் போன்ற எண்ணற்ற காரணங்கள் இப்பொழுது இன்னும் பெருக்கப்படுகின்றன. நிலத்தை அபகரிக்கிறார்கள். பாராளுமன்றத்தில் இனத்தை ஒடுக்கும் விதமாகப் பேசுகிறார்கள். இராணுவதத்தின் அடாவடிகள் நீளுகின்றன. சிங்கள மக்களை கொண்டு வந்து தமிழ் மக்களின் நிலங்களில் குடியேற்றுகிறார்கள். இப்படி எல்லாம் செய்யும் பொழுது இன நல்லிணக்கம் எப்படி ஏற்படும். என்றைக்கும் தமிழ் மக்கள் இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களல்ல. இதையெல்லாம் சகித்துக்கொண்டு அழிவதை இன நல்லிணக்கம் என்றால் அதை எப்படி எமது மக்கள் தாங்கிக்கொள்வார்கள்? 83இல் கறுப்பு நாட்களை, இன முரண்பாடுகளை உருவாக்கியவர்கள் இன்றும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இன முரண்பாடுகளின் பின் நோக்கமாக இருப்பது இன அழிப்பே.

கேள்வி: புதிதாக பதவி ஏற்றுள்ள வடமாகாணசபையின் ஊடாக தமிழ் மக்கள் எதனை சாதிக்க முடியும் என எண்ணுகின்றீர்கள்?

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் காட்டிய ஆர்வத்தை வடக்கு மாகாண சபையில் காட்டவில்லை. தேர்தலின் மூலம் மக்கள் ஒரு செய்தியை உலகிற்கு சொல்ல விரும்பினார்கள். அதை செய்தார்கள். வலி வடக்கைச் சென்று பார்க்கக் கூட அதிகாரம் இல்லாதவர்தான் வடக்கின் முதல்வர் என்றால் மாகாண சபை எதைச் சாதிக்கும்? தனது நல்லிணக்கத்திற்கான முயற்சியின் தோல்விகளையும் இயலாமைகளையும் வடக்கு முதல்வர் இப்பொழுதான் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். அவர் அரசியலுக்கு புதிது என்பதால் முதலிலிருந்து ஆரம்பித்து இப்போதே முடிவுக்கு வந்திருக்கிறார் போலுள்ளது.

கேள்வி: வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் நிலை மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு தொடர்பான நிலைமை தற்போது எவ்வாறு உள்ளது?
missing-09
நாளும் பொழுதும் நில அபகரிப்பு நடக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் நிலத்தை அபகரித்து சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு தமிழர் தாயகத்தை ஒடுக்குவதே சிங்கள அரசின் நோக்கம். வலி வடக்கில் மாபெரும் நில அபகரிப்பு நடக்கிறது. ஒரு பிரதேசமே அபகரிக்கப்படடுள்ளது. மன்னார் நானாட்டன், முசலி பகுதிகளிலும் வவுனியா ஒதியமலைப் பகுதிகளிலும் முல்லை – திருமலை எல்லைக் கிராமங்களிலும் நடக்கிறது. வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் விதமாகவும் வட கிழக்கு எல்லைகளை அபகரிக்கும் விதமாகவும் நில அபகரிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்புடுகின்றன.

ஒரு அரசு தனது மக்களையும் தனது இரணுவத்தையும் வைத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஈழ மக்களின் அரசு அழிக்கப்படடு அவர்களின் பாதுகாப்பு சிதைக்கப்பட்டு மாபெரும் இன அழிப்பு யுத்தத்திற்கு முகம் கொடுத்த நிலையில்தான் இந்த நடவடிக்கையையும் எதிர்கொள்கிறார்கள். இன்றைய நில அபகரிப்பின் மூலம் தாயகத்தை விழுங்கும் நடவடிக்கை என்பது மிகப் பெரிய உரிமை மீறல். இதை சர்வசே அளவில் வெளிக்கொணர வேண்டிய அவசர நிலையில் இன்றைய ஈழம் இருக்கிறது.

கேள்வி: சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் விசாரணைகளையும், அதன் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இது கொலை செய்தவனையே தீர்ப்பெழுதச் சொல்லும் கதையாக இருக்கிறது. ராஜபக்ச சர்வதேச விசாரணைகiளிலிருந்தும் பொறிமுறைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தார். தனக்கு எதிரானவர் என்பதனால் இலங்கையின் பிரதம நீதியரசரையே குற்றவாளியாக்கிய ராஜபக்சவிடம் நீதியையும் விசாரணைகனையும் நாம் எதிர்பாரக்க்லாமா? நம்முடைய இன்றைய ஆயுதம் என்பது ஈழ மக்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையும் நீதியை கோருதலும்தான். அதை முறியடிக்கவே ராஜபக்ச இவ்வாறான நாடகங்களை தொடங்குகிறார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகங்களை எல்லாம் அறிவார்கள். ராஜபக்ச மாத்திரமல்ல இலங்கையை ஆண்ட எல்லா சிங்கள ஜனாதிபதிகளும் தமது காலத்தில் எத்தனை விசாரணை குழுக்களை அமைத்து ஆட்சி நடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். நடந்த இனப்படுகொலை, போர் குற்றம் தொடர்பில் சர்சதேச விசாரணை தேவை என்பதே மக்களின் நிலைப்பாடு.

கேள்வி: என்னதான் அனைத்துலக தலையீடுகள் நிகழ்ந்தாலும், புலம் மற்றும் தமிழகத்தில் போராட்டங்கள் வீச்சு பெற்றாலும் தாயகத்திலுள்ள மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுவதுதான் இறுதி விடுதலையை பெற்றுக்கொடுக்கும். பல வடிவங்களில் அடக்கு முறைகள் தொடரும் சூழலிலும் மக்கள் போராடுவதற்கு தயாராகும் நிலையை நாம் தூரத்தில் இருந்து அவதானிக்க முடிகிறது. இருந்தாலும் அந்த மண்ணிலிருந்து உங்களது அவதானிப்பில் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

வாழ்தல்மீதான நம்பிக்கையை, யுத்த தோல்வியிலிருந்து எழுதலை ஈழ மக்கள் பல சந்தர்ப்பங்களில் உணர்தியிருக்கிறார்கள். தாயகத்தில் தொடர்ந்து நடக்கும் நில மீட்புப் போராட்டங்கள் தனி தேசத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்த்தும் போராட்டத்தின் வெளிப்பாடே ஆகும். ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக இவை அமைகின்றன. ஒரு தேர்தலைக் கூட போராட்டமாக மாற்றும் ஒற்றுமையும் திடமும் எங்கள் மக்களிடம் உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு ஈழ மக்களை முற்றாக வீழத்தி விட்;டது என்று கருதப்பட்ட சூழலில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னைய இன்றைய காலத்தில் நடந்துள்ள பல நிகழ்வுகள் எதிர்காலத்தை நமக்கு உணர்த்துகின்றது. வாழ்வதற்காக போராட வேண்டியது தவிர்க்க இயலாதது. ஈழப் போராட்டம் அவ்வாறான அடிப்படையிலேயே நீட்சி பெறுகிறது.

நம்முடைய இறுதி இலக்கு என்பது விடுதலையான வாழ்வே. சிங்கள அரசின் ஆட்சியின் கீழ் நாம்; நிம்மதியாக வாழ முடியாது. மாறாக சிங்கள அரசின் ஆட்சி ஈழ மக்களையும் அவர்கள் தாய் நிலத்தையும் அழிக்கும் நோக்கம் கொண்டது. எனவே நாம் வாழ்வுக்காகவும் நிலத்திற்காகவும் இனத்திற்காகவும் தொடர்ந்தும் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இலங்கை அரசின் தொடர் நடவடிக்கைகள்தான் பேராட வேண்டிய சூழலை நமக்கு நிர்பந்திக்கின்றன.

Theepachelvan (8)
கேள்வி : படைப்பாளிகள் என்ற போர்வையில் பலர் நடுநிலைமை, மாற்றுக்கருத்து, கறுப்பு வெள்ளை அரசியல் என்று விடுதலைப்போராட்டத்திற்கும் மக்கள்சார் அரசியலுக்கும் எதிர்நிலை எடுத்திருக்கும் வேளையில் உங்களைப்போன்ற படைப்பாளிகள் ஏன் ஒன்று சேர்ந்து எமது மக்கள்சார் படைப்புக்களை – படைப்பாளிகளை தாயகத்தில் ஒருங்கிணைக்கவில்லை. எமது போராட்டத்தை மேற்படி கறுப்பு வெள்ளை கதைகளால் பலர் திரித்துக்கொண்டிருக்கும் வேளையில் புதியதலைமுறை படைப்பாளிகளை ஒன்றிணைத்து எமது போராட்ட வரலாறுகள் ஆவணப்படுத்தும் முயற்சிகளை செய்யலாமே?

எமது காலத்தின் முயற்சியாக நான் தொகுத்த ‘மரணத்தில் துளிர்கும் கனவு’ – எட்டு ஈழக் கவிஞர்கள் தொகுதியை குறிப்பிடலாம். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய ஈழத்தின் இளம் படைப்பாளிகளின் குரலாகவே அந்த நூல் தொகுக்கப்பட்டது. தனிப்பட்ட தொகுப்புக்களைத் தவிர கூட்டு முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

இலக்கிய சந்திப்பை நடத்தக்கூடிய சூழல்தான் தமிழீழத்தில் இருக்கிறது. அதைத் தவிர்த்தால் இரகசிய சந்திப்பையே நடத்த முடியும். இன்றைய காலத்தைப் பொறுத்தே உரையாடல்கள் நடக்கின்றன. எமது போராட்டம் சார்ந்த கூர்மையான படைப்புக்களை வெளியிடக்கூடிய விவாதிக்கக்கூடிய சூழல் இன்னமும் ஏற்படவில்லை.

கேள்வி : தாயகத்திலிருந்து ‘இரத்தசாட்சி’ என்ற பெயரில் விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக சில படைப்பாளிகள் தமது கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அவர்களது உடன்பாட்டின் பேரிலும் அவர்களில் சிலருக்கு தெரியாமலும் சிறீலங்கா அரசு அதை புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியாக ஆவணப்படுத்தியிருக்கிறது. ஜெனிவா விவகாரங்களுடன் தொடர்புள்ள பலரை கேட்டால் இது தெரியும். உங்களுக்கு தெரிந்த வகையில் அவர்கள் இன்னும் அந்த நிலைப்பாட்டில் தொடர்கிறார்களா? நாளை போர்க்குற்ற விசாரணை நடக்கும்போது புலிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல அவர்கள் ஜெனிவாவிற்கு வருவார்களா? அல்லது அந்த வாக்குமூலங்களை சிங்களம் பயன்படுத்த அனுமதித்துவிட்டு மவுனமாக இருப்பார்களா? அவற்றை மீளெடுக்காமல் அவர்களுள் சிலர் மீளவும் தேசியம் பேசிக்கொண்டு வருவதையும் காண்கிறோம். இந்த போக்கை அல்லது இந்த நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

விமர்சனம் என்ற போர்வையில் புலிகளுக்கு எதிரான அவதூறுகளை முன் வைக்கும் சிலர் இன்றைய காலத்திற்கு ஏற்ப அதிகாரத்தையும் நலனையும் பெறும் நோக்கத்துடன் செயற்படுகின்றனர். ஒரு சிலர் காயங்களை ஆற்றவும் உண்மைகளைப் பேசவும் சரணடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் புகுந்திருக்கும் அரசியல் கூடாரங்களோ கொலைகளாளனவை. விமர்சனம் என்ற போர்வையில் அவதூறுகளால் புலிகளின் தியாகங்களையும் இலக்கையும் கொச்சைப்படுத்துகின்றார்கள். அதன் மூலம் அரசுக்கு உடந்தையாகின்றனர். விமர்சனம் என்பது போராட்டத்தை வலுப்படுத்துவதாகவே அமைய வேண்டும். சிலர் போராட்டத்தை நிகராரித்து விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.

நடந்த போராட்டமும் முகம் கொடுத்த இனப்படுகொலையும்தான் இன்று எமது ஆயுதம். இதற்கு முன்னால் ராஜபக்சே நல்லிணக்கம் தருவார் என்று இன்றும் நம்புபவர்களை என்ன சொல்வது? புலிகள்மீது அவதூறு செய்யும் இச் சிலர் தம்மீது விமர்சனம் வைத்தால் அதற்கு கொடுக்கும் பிரதிபலிப்பு அவர்களின் விமர்சன ஒழுக்கம் எப்படியானது என்பதை எமக்கு வெளிப்படையாக காட்டுகிறது. பன்மைத்துவம் ஜனநாயகம் எல்லாம் பேசுவார்கள். ஆனால் அவர்களிடம் அதை மருந்துக்கும் காண முடியாது. இவர்களைப்பற்றி நான் என்னதான் கூற முடியும்?

கேள்வி: ‘புலிநீக்கம்’ செய்யப்பட்ட அரசியலைத்தான் கூட்டமைப்பு செய்கிறது. ஆனால் அவர்கள் தேர்தல் மேடைகளில் புலிகளையும் புலிகளின் அரசியலையும் தாண்டி எதுவுமே பேசப்படவில்லை. இது முரண்பாடல்லலவா? இந்த முரண்பாடான அரசியல் எமது மக்களுக்கு எதைப் பெற்றுதரப்போகிறது? எனவே கூட்டமைப்புக்கு மாற்றாக மக்களின் எண்ணப்பிரதிபலிப்பாக – புலிகளின் தொடர்ச்சியான ஒரு அரசியல் தலைமை உருவாகும் வாய்ப்பு தாயகத்தில் இருக்கிறதா?
Tamil-IDP7
2009 மே மாதம் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட சூழலில் அதற்குச் சில மாதங்களின் பின்னர் 2010ஆம் ஆண்டிலேயே கூட்டமைப்பு தனது புலி நீக்க நடவடிக்கையை தொடங்கிவிட்டது. 2010 நாடாளுமன்றத் தேர்தலிலும்சரி அதற்குப் பின்னர் வந்த உள்ளுராட்சித் தேர்தலிலும் சரி, தற்போதைய வடமாகாண சபைத் தேர்தலிலும் சரி புலிகளைக் குறித்துப் பேசியே மக்களிடம் வாக்கு கேட்டார்கள். இலங்கையில் கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல் தலைவர்கள் இவ்வகையான அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். புலிகளை எதிர்ப்பவர்களும் நிராகரிப்பவர்களும்கூட புலிகளை வைத்தே தமது அரசியலையும் வியாபாரத்தையும் செய்கின்றனர். இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சிங்கள அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்படுகிறார்கள். சில புலி எதிர்ப்புப் படைப்பாளிகளும் இவ்வறே செய்கின்றனர்.

தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாக்கு கேட்கும் ஒரு கட்சி தேவையில்லை. இன்றைய சூழலைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் இயக்கமே தேவை. அது மக்களின் பிரச்சினைகளை மக்களின் குரலில் பேசக் கூடியவாறும் வரலாற்று அடிப்படையில் ஈழப் போராட்டத்தை முன்னெடுக்க கூடியதுதுமாக இருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் மாத்திரம் ஊர் முகப்பில் பிரசாரக் கூட்டம் போடுவபவர்கள் எமக்குத் தேவையில்லை. மக்களுடன் மக்களாக செயற்படுபவர்கள் உழைப்பவர்களே எமக்குத் தேவை. புலிகள் இயக்கத்திற்குப் பிறகு அவ்வகையான இயக்கம் ஒன்று எமக்குத் தேவைப்படுகிறது. தொடர் இன அழிப்பு தொடர் நில அபகரிப்பு என்பன நாம் மீண்டும் போராட வேண்டிய சூழலை எமக்குள் திணிக்கிறது. இவ்வகையான சூழல் புதிய அரசியலை உருவாக்கக் கூடியவையாக உள்ளன.

ஈழம்ஈநியூஸ்.