தமிழீழ விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக தம் வாழ்வு, இளமை, கல்வி, குடும்பம், இன்பம் என்றனைத்தையும் துறந்து, ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள பெளத்த இனவாத மேலாதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தும் நோக்குடன், இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழர்கள் மீது ஏவிய அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று களமாடி தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த எம் மாவீரர்களை நன்றியுடனும், பெருமையுடனும் நினைவு கூறும் தினம் இன்று.

hero988
உலக வரலாறு இதுநாள் வரை சந்தித்திராத மாபெரும் தியாக தீபங்கள் நம் மாவீரர்களும், வீராங்கனைகளும். இலங்கை இன வெறி இராணுவத்திற்கு எதிராக படைத் திரட்டி போராடிய எம் இலட்சியத் தலைவர், தமிழீழ தேசியத் தலைவர், உலகத் தமிழினத்தின் பெருமை மிக அடையாளமாகத் திகழந்த மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தமிழீழ இலட்சியத்தில் எந்த அளவிற்கு உறுதியாக நின்றாரோ, அதே உறுதியுடன், இம்மியவும் பிசாகாமல், தன்னலம் பாராத போராளிகளாய் களமாடி உயிர்த் தியாகம் செய்தவர்கள் எம் மாவீரர்கள்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற போர்வையுடன் கிடைத்த சர்வதேசத்தின் வலிமையான ஆதரவு, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் நேர்முக, மறைமுக ஆயுத உதவிகள், ஆலோசனை, பயிற்சிகள் என்றெல்லாம் பன்முக வல்லமையுடன் படையெடுத்த இலங்கையின் முப்படைகளின் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டு நின்று, பாரம்பரியமிக்க தமிழரின் வீரத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மானத்தை காத்தவர்கள் எம் மாவீரர்களும், வீராங்கனைகளுமாவர்.

வீரத்தாலும், தியாகத்தாலும் உருவாக்கப்படுவதுதான் சுதந்திரமே தவிர, அஞ்சி நடுங்கியோ அல்லது அடக்குமறையாளனிடம் யாசித்துப் பெருவதோ அல்ல சுதந்திரம் என்பதை பறைசாற்றியவர்கள் விடுதலைப் புலிகள். தன்னைப் பற்றி, தன்னலம் பற்றியெல்லாம் கவனம் செலுத்தாமல், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், எதிர்காலத்திற்காகவும் தம் வாழ்வை ஒப்புக்கொடுத்து வீரத்தை நிலைநாட்டியவர்கள் நம் புலிகள்.

பாலினத்தைச் சேர்ந்ததல்ல வீரம், நல்லியத உணர்வை சார்ந்ததே என்பதை களமிறங்கி உலகிற்கு மெய்ப்பித்தவர்கள் நம் வீராங்கனைகள். தமிழினத்தை சிதைக்கும் நோக்குடன் போர் தொடுத்த சிங்கள இராணுவத்தை அழித்தொழிக்கும் போரில் ஈடுபட்டு அவர்களை சிதறடித்தவர்கள் நம் கரும்புலி மாவீரர்கள்.

அரச பலத்தையும், ஆயுதங்களைக் கொண்டும் அநீதியை இழைத்த சிங்கள பெளத்த இனவெறி படையினரை வீரத்தை வெளிப்படுத்தி வீழ்த்தி மேன்மையை படைத்தவர்கள் நம் மாவீரர்கள். எம் மாவீரர்களுக்கு ஆயுதம் துணையே அன்றி, இணை அல்ல. ஏனெனில் ஆயுதத்தை மட்டுமே நம்பி எம் வீரர்களும் வீராங்கனைகளும் களமாடவில்லை, மாறாக, வீரத்தையும், தியாகத்தையும் கவசங்களாகக் கொண்டு போரிட்டார்கள். உலகம் வியக்கும் வீர வரலாற்றைப் படைத்தார்கள்.

ஆனால், இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் கூறி, தடை செய்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலத் தெரியாதவர்கள், அதற்காக அந்நிய முதலீடுகளுக்கு நாட்டை அடமானம் வைப்பவர்கள், ஈழத் தமிழ் வீரர்களுக்கு களங்கம் கற்பிக்க முயல்வது அவலமாகும். உலக நாடுகளின் கீழ்த்தரமான ஆட்சியாளர்கள் மேன்மையான வீரத்தினை பழிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து எதிர்ப்பது ஈழத்தின் விடுதலையையே. இந்த கூட்டணிக்கு தலைமையேற்று தமிழினத்தின் தோல்விக்கு முன்நின்றது இந்திய அரசு.

தமிழினத்தின் பாரம்பரியமிக்க வீரம் புறக்கணிக்கப்படுமானால், அது பிற நாடுகளால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். தொலைநோக்கு பார்வையின்றி ஈழத்திற்கு இந்தியா செய்த துரோகம், தனக்கே அது தேடிக்கொண்ட விரோதம் ஆகிவிட்டது. ஈழத் தமிழினத்திற்கு செய்த அந்த துரோகத்தை நீக்காமல், அந்த விரோதத்தை நீக்கிட முடியாது. இலங்கையின் ஆணவப் போக்கு ஆரம்பமாகியுள்ளது, இது தொடரும், அதன் காரணமாக ஈழத்திற்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டி, ஆயுத உதவி செய்யும் காலம் வரும். அப்போதும் தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் தமிழீழம் பிறக்கும்.

தமிழீழ விடுதலைக்கு விதையாய் விழுந்த மாவீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது.

நாளை 27-11-2014 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேனம்மாள் சின்னமணி நாடார் திருமண மாளிகையில் மாலை 5 மணிக்கு மேல் மாவீரர் தின வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்