தமிழீழ விடுதலை போராட்ட நெருப்புக்கு தன் உடலைக் கொடுத்த செந்தில் குமரன்!

0
651

swiss-senthilஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றலில் 05.09.2013 அதிகாலை ஒரு ஈழத் தமிழர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த சுவிற்சலாந்து காவல்துறையினர் அவர்மேல் பற்றிய தீயை அணைத்து, அருகில் உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார்கள்.

அத்துடன் அவர் அருகே பல துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டதாகவும், அவை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான படமும், மற்றும் திபெத் தொடர்பான புகைப்படங்கள் என்பதும் காவல்துறையினரால் உறுதிசெய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன,மேலும் பலத்த தீகாயங்களுடன் இருந்த அன்நபர் மேலதிக சிகிச்சைகாக லவுசான் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.ஆயினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 4.30 மணியளவில் உயிர்நீத்தார்.

நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள தமிழர் கிருஷ்ணா வெளியிட்ட செய்தியில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

சற்று முன் சில நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஐநா முன்றலில் அந்த தோழர் தீக்குளித்த இடத்தில் அவர் யார், இன்னார் என்ற அடையாளங்கள் ஏதும் அறியாமலே மலரஞ்சலி செலுத்தி விட்டு நின்றிருந்தோம். அருகே 24X7 தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த, தாங்கள் கண்ட, அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பனிரெண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு பாட்டிலில் இருந்து அடர்த்தியான ஜெல்லி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!

கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமேண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான். பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும், காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!

இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது. இவ்வாறு குழம்பிய நிலையில், அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை என்று மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்தில் நின்றிருந்த போது, ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி, மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்!

காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34, அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்!

நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால், காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் , குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே, அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. ஆம், தமிழீழ விடுதலை போராட்ட தீக்கு தன்னுடலையும் தின்ன கொடுத்து விட்டான், செந்தில் குமரன்!!! —

தமிழினவழிப்பிற்கு நீதிகேட்டு ஈகம் செய்த ஈகைப்பேரொளிக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

நெதர்லாந்து வாழ் மக்களுக்கு 05.09.2013 அன்று, தமிழினவழிப்பிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் அவை முன்பாக ஒருவர் தன்னையே ஈகம் செய்துள்ளார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் முகமாக ஐரோப்பா எங்கும் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் 07.09.2013 அன்று நெதர்லாந்தில் Sport Park, Galecop-6,3438HX NIEUWEGEIN என்னும் முகவரியில் நடைபெறவிருந்த ‘தமிழர் விளையாட்டுத் திருவிழா 2013’ இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

ஈகைப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் நினைவுகளைச் சுமந்துகொண்டு, 16.09.2013 அன்று ஐக்கிய நாடுகள் அவை முன்னிலையில் பிற்பகல் 14.00 மணியிலிருந்து மாலை 17.00 மணி வரை நடைபெறவுள்ள நிகழ்வில் நாமும் திரண்டெழுந்து அனைத்துலகத்திடம் நீதி கேட்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஈழத் தமிழ் இளைஞன் தீக்குளித்து உயிர்த் தியாகம்! வைகோ இரங்கல்

அனைத்துலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவைத் தட்டுவதற்காக, ஈழத் தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார். தமிழினத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.

இதே ஜெனீவாவில்தான் 2009 தொடக்கத்தில் முருகதாஸ் என்னும் ஈழத் தமிழ் இளைஞரும் ஈழத் தமிழினப் படுகொலையைத் தடுக்க ஐ.நா. மன்றத்தையும் மனித உரிமை ஆணையத்தையும் ஈழத் தமிழருக்கு நீதி வழங்குங்கள் என்று தனது நெஞ்சில் வடிந்த இரத்தக் கண்ணீரை உருக்கமான வேண்டுகோளாக ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து மாண்டார். இன்று வரையிலும் ஈழத் தமிழருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. உலகத்தின் மனச்சாட்சியும் விழிக்கவில்லை.

தன் உயிரை அழித்துக் கொள்வதன் மூலமாகவாவது உலகத்தின் கவனம் நீதியின் பக்கம் திரும்பாதா? கொடியவன் இராஜபக்சேவின் கொட்டம் ஒடுங்காதா? என்று தன்னைத் தானே செந்தில்குமரன் அழித்துக் கொண்டான். உலகிலேயே நாதியற்றுப் போன இனம் தமிழினம் தானா? இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தான் பலியாவதோ? என்று தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்கள்இ குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க வேண்டுகிறேன்.

தமிழீழத்தில் பிறந்து எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஜெனீவாவிலே தன் உயிரைப் பலியிட்டுக் கொண்ட செந்தில்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
06.09.2013 மறுமலர்ச்சி தி.மு.க.,