தமிழ்க்கவி அம்மா சிறிய வயதில் தெருக்களிலும் கூடட்டங்களிலும் வரிச்சீருடையுடன் சிவப்பு எம்.ரி.நையின்டி மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். நான் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலங்களில் அன்றைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாதாந்தம் நடக்கும் கூட்டங்களில் அடிக்கடி குறுக்கிட்டு பேசிக் கொண்டிருப்பார். அவர் அங்கு பேசிய விடயங்கள் பல இன்னமும் எனக்கு நினைவிருக்கின்றன. விபத்தில் இறந்தவர்களின் படங்களை விபத்து விழிப்புணர்வு படமாக போடக்கூடாது. அது அவர்களின் குடும்பத்தினரின் மனதைப் பாதிக்கும் என்றார் ஒருநாள்.

இயக்கத்தை வளர்ப்பது பற்றிய ஆலோசனைகளை நெடுகச் சொல்வார். விதவிதமான சாப்பாடுகள் செய்வது, பழைய கதைகள் என்று தமிழ்க்கவி அம்மா என்ன பேசினாலும் அதை முழுவதுமாக சிரித்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் தமிழ்ச்செல்வன். “நான் அமைப்பில் விரும்பித்தான் சேர்ந்தேன். மறுபடியும் கழற்றிக்கொள்ள முடியாமல் நன்கு மாட்டிக்கொண்டேன்.” என்று இன்றைக்குச் சொல்பவர் அன்று விரும்பி முழுக்க முழுக்க உடன்பட்டு இயக்கத்துடன் வாழ்ந்தவராகவே பேசுவதைப் பார்த்திருக்கிறன். தமிழ்க்கவி அம்மா பேசுவதில் பெரும்பாலானவை இயக்கம்மீதான பாராட்டுக்கள். இயக்கத்தை விட்டு கழற முடியாது தவித்தவர் போல அன்றைக்குத் தெரியவில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஒருநாள் சுடரொளியில் தமிழ்க்கவி அம்மா எழுதிய கதை ஒன்றைப் படித்தேன். தன்னுடைய நிலையை, போராட்டத்தை, நியாயத்தை, இயக்கத்தைப் பற்றிய தன் அபிப்பராயங்களை அந்தக் கதையில் எழுதியிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசின் தடுப்புமுகாங்களுக்குள் இருந்து கொண்டே இப்படி எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன். பம்பமடுமுகாம் தடுப்பிலிருந்து விடுதலை பெற்ற ஒரு போராளியை வவுனியாவில் சந்தித்போது தமிழ்கவி அம்மா எங்கே என்று கேடடேன். அவரின் அந்த சிறுகதை பற்றியும் சொன்னேன்.

Tamilkavi
முன்னாள் போராளிக்கு தமிழ்கவி அம்மாவின் பெயரைக் கேட்டவுடன் முகம் மாறியது. அவர் இராணுவத்தினருடன் நல்ல மாதிரி. சிங்களமும் தெரியும்தானே. அவரால் எங்களில் சிலருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டன என்றார். வெற்றிச்செல்வி அக்காவைச் சந்தித்போதும்கூட இதை அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஏதும் நிர்பந்தம் காரணமாக அவர் அவ்வாறு இயங்கினாரா என்றும் அவர்களிடம் கேட்டேன்?

தமிழ்நாடு வந்தபோது அவரது தொலைபேசி எண் வாங்கி பேசினேன். மண் ஈழத் திரைப்பட நாயகன் தேவர் அண்ணாவின் வீட்டில் வைத்து சந்தித்தோம். அன்றைக்கு தமிழ்கவி அம்மாவுடன் நிறைய விடயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைய ஷோபாசக்தியின் உரையாடலில் பேசிய விதத்திற்கும் அன்று தேவர் அண்ணாவின் வீட்டில் பேசியதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருந்தது. தலைவர் இருக்கிறார். அவரை ஒன்றும் செய்ய இயலாது. அவர் வருவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

புலி எதிர்ப்பு அரசியல் குறித்து பேசினோம். எங்கள் பல்லை குத்தி நாங்கள் மணக்ககூடாது என்றார். இயக்கம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பலவற்றை நிராகரித்தார். இறுதி யுத்த நாட்களில் நடந்த பல கதைகளை சம்பவங்களை சொல்லிக் கொண்டிருந்தார். இன்றைக்கு வேறொரு தமிழ்கவி அம்மாவைப் பார்க்கிறோம். இயக்கமாக இருந்து எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு புலிகளுக்கு வெளியில் நின்று பேசுகிறார். அன்றைக்கு புலிகளின் குரலிலும் தேசியத் தொலைக்காட்சிகளிலும் பார்த்த தமிழ்கவி அம்மாவை தேவர் அண்ணாவின் வீட்டில் நான் சந்தித்தேன்.

அன்றைக்கு தமிழ்க்கவி அம்மா மீண்டும் புலிகளின் குரலில் பணியாற்றவும் இந்தியாவுக்கு நிரந்தரமாக வரவும் விரும்பினார். புலிகளின் குரலில் மீண்டும் வேலை கிடைத்திருந்தால் தொடர்ந்தும் அந்தத் தமிழ்கவி அம்மாவைப் பார்த்திருக்க முடியும். இந்த நேர்காணலில் பதில்கள் வேறு மாதிரி அமைந்திருக்கும். இப்படித்தான் கர்ணனும் தடுப்பை விட்டு வெளியில் வந்தபோது என்னை ஷோபாசக்தி எடுத்த நேர்காணலை பாராட்டி பேஸ்புக்கில் கடிதம் எழுதினார். வெளியில் வந்து சில மாதங்கள் ஆக மெல்ல மெல்ல சிலரால் புலி எதிர்ப்பாளராக மாற்றப்பட்டார். அவ்வாறுதான் தமிழ்கவி அம்மாவும் மாற்றப்பட்டிருக்கிறார். முள்ளிவாய்க்காலை கடந்து முள்வேலி முகாமை கடந்தும் வந்தவர்கள் ஷோபாசக்தி போன்றவர்களை கடந்து வர முடியாமல் போகிறது.

முடிந்தவரை புலி எதிர்பாளர்களை உருவாக்குவதுதான் ஷோபாசக்தி போன்றவர்களின் கடமை. புலிகள் இயக்கத்திற்கு எதிரான அவதூறுகளை எழுதுவதும் மற்றவர்களை சொல்லத் தூண்டுவதும்தான் அவர்களது தொழில். அதற்காக அவர்கள் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கேட்ட சில கேள்விகளும் தமிழ்கவி அம்மாவிடம் கேட்ட சில கேள்விகளும் ஷோபாசக்தியின் குரூரத்தின் வெளிப்பாடுகளே. சில கேள்விகள் ஷோபாசக்திக்கு புலிகள் தொடர்பாக எந்த அறிவு இருந்திருக்கிறது என்ன பார்வை இருந்திருக்கிறது என்பதை எல்லாம் தெளிவாகக் காட்டுகிறது.

புலிகளையும் ஈழத்தையும் காலத்தையும் அறியாத – உணராத ஒருவர் வேறு எப்படிக் கேட்பார்? தமிழ்கவி அம்மாவின் ஊழிக்காலத்தில் புலிகள் பற்றி சொல்லப்பட்டவை குறித்து என்னிடம் “சொல்லு சொல்லு” என்று சீண்டிக்கொண்டிருந்தார் ஷோபாசக்தி. தமிழ்கவி அம்மாவையும் துரோகி என்று சொல்ல வேண்டும் என்றே அவர் எதிர்பார்த்தார். அதன்மூலம் தமிழ்கவி அம்மா புலிகளை எதிர்க்கும் தீவிர புலி எதிர்பப்பாளராக மாறுவார் என்பதும் அவர் கணக்கு.

ஒரு காலை இழந்ததாலும், இரண்டு பிள்ளைகளை இழந்ததாலும், நான்கூட என் சகோதரனை களப்பலி கொடுத்ததினாலும், இன்றைய இலங்கை அரசாங்கத்தின் அமைச்சராக உள்ள கருணா அம்மான் போராளியாக பல போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் இன்று பொய்களை சொல்ல – அவதூறுகளைச் சொல்ல முடியாது.

தமிழ்க்கவி அம்மா இயக்கத்தில் இணைந்திருந்தபோதும் நேரடியாக அரசியல் செயற்பாடுகளிலோ போர் நடவடிக்கைகளிலோ ஈடுபட்டவர் இல்லை. கலைத்துறைச் செயற்பாட்டிலேயே ஈடுபட்டார். அன்றைக்கு சீருடை அணியாமல் தமிழ்க்கவி அம்மா செய்த வேலைகளைச் செய்த பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் இன்னமும் ஈழ மண்ணில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்க்கவி அம்மா இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி சற்று அதிகமாகவே பேசுவார். அதைப் போல சில விடயங்களை உண்மைக்கு புறம்பாக சொல்லியிருக்கிறார்.

தமிழ்கவி அம்மா ஏதும் நிர்பந்தங்கள் காரணமாக நாட்டு சூழ்நிலை காரணமாக இவ்வாறெல்லாம் எழுதுகிறார் பேசுகிறார் என்றே நான் நினைத்தேன். யுத்தம் முடிந்து சில மாதங்களில் என் வாயிலிருந்து புலி எதிர்ப்பை எதிர்பார்த்த ஷோபாசக்தி இப்போது சூழ்நிலைக் கைதியாக வாழும் தமிழ்கவி அம்மாவையும் இவ்வாறு பேச வைத்திருப்பது பெரும் அரசியல் நோக்கம் கொண்டது. இதன் மூலம் ஷோபாசக்திக்கு ஒரு புலியெதிர்ப்பாளரும் இந்த வார சர்ச்சைக்கான விடயமும் கிடைக்கும்.

தமிழ்க்கவி அம்மா தனது புதிய நாவலை ஊழிக்காலத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்குக் கொடுத்திருக்கிறார். அந்தப் பதிப்பகம் அந்த நாவலை வெளியிட மறுத்துள்ளது. தடுப்பில் இருந்தபோது இராணுவம் பாலும் தேனும் கொடுத்தது என்ற ரேஞ்சில் அந்த நாவல் எழுத்தப்பட்டிருந்ததாம். அந்த நாவலை வெளியட்டு இராணுவத்தால் இறுதியுத்த களத்தில் துப்பாக்கிகளால் பிடரிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை என்று அந்த பதிப்பாளர் நாவலை வெளியிட மறுத்திருக்கிறார். தடுப்புமுகாம் பற்றிய அம்மாவின் வெளிவராத அந்த நாவல் குறித்து அறிந்தபோது பம்பைமடுவிலிருந்து வெளியில் வந்த போராளிகள் தமிழ்க்கவி அம்மா பற்றி சொல்லியது நினைவுக்கு வந்தது.

ஊழிக்காலத்தை வெளியிடுவதாக சொல்லி வாங்கிய இன்னொரு பதிப்பகம் வெளியிட மறுத்தபோது எனது நாவலை மகிந்த ராஜபக்ச வெளியிடுவார் என்று தமிழ்க்கவி அம்மா சொன்னராம் என்பதை நான் அப்போது நம்பவில்லை. ஆனந்தவிகடன் பேட்டி வந்த அன்று இரவு அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு பொறுப்பதாக இருந்த இராணுவ அதிகாரியே இந்த நாவலை இஞ்ச வெளியிடுவம் என்று கேட்டவர் என்று சொன்னார். பிரச்சினை வராதா என்று நான் கேட்டபோது இராணுவத்திற்கு சொன்ன கதையைத்தான் நாவலாக எழுதியதாகவும் சொன்னார்.

முதன் முதலில் தமிழகத்திற்கு வந்தபோது ஆனந்தவிடகனுக்கு கொடுத்த பேட்டியும் (எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்!http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14894) ஊழிக்காலம் நாவலுக்குப் பிறகு இந்த வருடம் ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியும் (“இப்படித்தானே வாழமுடியும்?” http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91472) தமிழ்க்கவி அம்மாவின் மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது.

தமிழ்க்கவி அம்மாவின் இந்தச் சடுதி மாற்றங்களும் தக்கெணப் பிழைத்தல்களும் எதற்கானவை? அன்றைக்குப் பேசியவை உண்மையா? இன்றைக்குப் பேசுபவை உண்மையா? இந்த புனைவுகளின் நோக்கம் என்ன? தமிழ்க்கவி அம்மா அனுபவித்தவை, எதிர்கொண்டவை, இழந்தவை கொஞ்சமல்ல. பெரும்பாலான ஈழச்சனங்களும் அதை சந்திருக்கின்றன. அவர் இந்த நேர்காணலில் ஷோபாசக்தியின் அரசியலுக்கு பலியாக்கப்பட்டிருப்பதும் சாதாரணமான விடயமல்ல. அதைப்போல புலிகள் இல்லை. உதவிகள் இல்லை. வருவாய் இல்லை. பணம் இல்லை என்பதற்காக மாற்றிப் பேசுவர்களும் மிக மிக ஆபத்தானவர்கள். அவர்களின் நிலைப்பாடுகளும் அதிகாரத்துடனும் லாபங்களுடனும் சம்பந்தப்பட்டது.

“தலையையும் வாலையும் காட்டிக் கொண்டுதான் வழலாம் – இப்பிடித்தானே வாழ முடியும்” என்று நீங்கள் சொன்னது நீங்கள் வாழும் நிலையைத்தான் சொல்லியிருக்கிறியள் என்று அப்போது தமிழ்க்கவி அம்மாவுக்குச் சொன்னேன். வேற என்ன தம்பி செய்யிறது? என்றார். ஷோபாசக்தி உரையாடலில் எந்தளவுக்கு தலையையும் வாலையையும் காட்டியிருக்கிறார் என்பது தமிழ்க்கவி அம்மாவுக்குத்தான் தெரியும்.

தீபச்செல்வன்