நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

 

யாழ். பல்கலைக்கழத்தின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் உட்பட சகல பிரிவினரும் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இன, மத,ஜாதி என்பவற்றிற்கு அப்பால் எதுவித நிபந்தனையோ, கட்டுப்பாடுகளோ இன்றி விடுதலைச் செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

அத்துடன், மக்களின் மனங்களை வென்றுள்ளதுடன், நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ள இந்த நல்லாட்சி அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவித்து மக்களின் நம்பிக்கையினைக் காப்பற்ற வேண்டும் எனவும், இல்லையேல் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் அபிமானத்தை இழந்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இதன்போது ‘எம்மினத்தை சிறையில் வைப்பதுதான் நல்லாட்சியா? தமிழ் அரசியல்வாதிகளே மௌனங்களைக் களையுங்கள், தமிழர்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடு, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

 

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது ஒரு உணர்வுபூர்வமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் பல்கலைச் சமூகம், இனியும் அரசியல் கைதிகள் விடுதலைச் செய்யப்படாவிட்டால் தமது போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.