தமிழினம் தனது தலைவரின் பிறந்த தினத்தை மிகவும் உணர்வு பூர்வமாக உலகம் எங்கும் கொண்டாடி வருகின்றது. யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை, யாரும் இலவசங்கள் வழங்கவில்லை ஆனாலும் தமக்குள் இருந்து எழும் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாக இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வயது வேறுபாடின்றி தம் தலைவனை கொண்டாடுகின்றனர்.

 
தலைவரின் புகைப்படத்தை கைகளில் ஏந்துவதில் பெருமை கொள்கின்றனர். யாரை பயங்கரவாதி என சிங்கள தேசமும், இந்தியாவும், மேற்குலகமும் முத்திரை குத்தியதோ இன்று அந்த தலைவரின் பிள்ளைகள் கொண்டுள்ள எழுச்சியை கண்டு அனைத்துலகமும் ஆச்சரியமடைந்துள்ளது.

 
பிரபாகரன் என்ற நாமத்தை அழிக்க வேண்டும் என்பது சிங்கள இந்திய ஆதிக்க சக்திகளின் திட்டம் ஆனால் இன்று அந்த நாமம் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உயிர் மூச்சாக பரிணமித்துள்ளது.

 
உலகை ஆண்ட மூத்த இனம் ஒன்று அடிமைப்பட்டுக் கிடப்பதையும், தனது கண்முன்னால் தனது மக்கள் அடிமைகளாக வாழ்வதையும் கண்டு பொறுக்கமுடியாத பலகனாக களம் புகுந்த எமது தலைவரிடம் அன்று ஆயுதங்களும் இல்லை அவருக்கு ஆதரவுகளும் இல்லை.

 
ஆனாலும் தனி ஒருவராக இயக்கத்தை கட்டி எழுப்பி ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை தமிழ் இனத்துக்கு என ஒரு தேசத்தையும், அதற்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும், படைக்கட்டமைப்புக்களையும் கொண்டதாக மாற்றம் பெற வைத்தது என்பது அவரின் தலைமைத்துவத்தின் சிறப்பாகும்.

 
உலகத்தின் நான்காவது மிகப்பெரும் இராணுவத்தையும் உலக நாடுகளின் ஆதரவுடன் பல இலட்சம் படைகளைக் கொண்ட சிங்கள இராணுவத்தையும் கதிகலங்க வைத்த வீரமும், விவேகமும் தமிழ் இனத்தின் சரித்திரத்தை மீண்டும் எழுதிச் சென்றுள்ளது.

 
தமிழீழமும், தமிழகமும் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது, அதற்கு ஆதரவாக அனைத்துலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் களமிறங்கியுள்ளனர். மக்களின் எழுச்சியை அடக்கமுடியாத நிலையில் சிங்களமும், இந்தியாவும் உள்ளன.

 
தமிழனை ஆளவேண்டும் என்ற வேற்று இனத்தவனின் கனவுக்கு இந்த எழுச்சியானது சாவு மணியடித்துள்ளது. பிரபாகரன் என்ற நாமத்தை நாம் உச்சரிப்போமேயானால் எம்மை ஆள்வதற்கோ அல்லது எம்மை அணுகுவதற்கோ எதிரியும், துரோகியும் அச்சப்படுவான்.

 
தமிழகத்தில் தமிழ் மக்களின் ஆட்சி மலரும் போது தமிழ் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த தினம் அரச தினமாக அறிவிக்கப்படும் என்ற கருத்துக்களும் உண்டு. அவ்வாறு நாம் அறிவித்தால் அன்று எமது இனத்தின் விடுதலைக்கான கதவானது திறக்கப்படும் என்பதே யதார்த்தமானது.

 
எதிரிகளால் அழிக்க நினைத்த தமிழ் இனத்தின் வரலாற்றை மீண்டும் எழுதிய பெருமை மட்டும் எமது தலைவருக்கு உரியதல்ல, உலகம் எங்கும் சிதறிக்கிடந்த தமிழ் இனத்தை ஒரு அணியில் இணைத்த பெருமையும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கே உரித்தானது.

 
சாவதற்கு துணிந்துவிட்டால் சாதாரதண மனிதன் கூட சரித்திரம் படைக்க முடியும் என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்தியதும் அவர் தான். இன்று தமிழ் மக்கள் உலகத்தின் சரித்திர நாயகர்களை நினைவில் கொள்வதில்லை, அவர்களின் ஒரே நாயகன் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

 
எம் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடுவதுடன், அவரின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு அகண்ட தமிழ் இராட்சியத்தை அமைப்பதற்காக நாம் அனைவரும் ஒருங்கியைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

 
ஈழம் ஈ நியூஸ்