தமிழ்நாடு விடுதலையை நோக்கி முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை! – க.அருணபாரதி

0
594

tn-protest-girlsஅண்மையில், இந்திய அரசின் தொடர்வண்டித்துறையில் காலியாகவுள்ள பல்வேறு பணிகளுக்காக, தமிழகத்தில் தேர்வுகள் நடைபெற்றன. மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றத் தேர்வில் பங்கேற்பதற்காக வடநாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தொடர்வண்டி மூலம் தமிழகம் வந்தனர்.

மதுரையில் தேர்வு முடிந்தவுடன், 17.11.2013 அன்றிரவு மதுரை தொடர்வண்டி நிலையம் வந்த அவர்கள், பொதுப்பெட்டியில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை கையில் வைத்திருந்த போதிலும், எவ்வித சிறு தயக்கமும் இன்றி, அங்கு நின்று கொண்டிருந்த நெல்லை விரைவுத் தொடர்வண்டியின் குளிரூட்டப்பட்ட பெட்டி உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறினர்.

பதிவு செய்யப்பட்ட தொடர்வண்டிப் பெட்டியில் அடாவடித்தனமாக நுழைந்த வட நாட்டவர்களின் செயல், அப்பெட்டியில் முறைப்படி பதிவு செய்து வந்திருந்த மற்ற பயணிகளுக்கு நெரிசலை ஏற்படுத்தியது. அதிருப்தியுற்றப் பயணிகள், தொடர்வண்டி சோழவந்தான் அருகில் வந்த போது, சங்கிலியை இழுத்துப்பிடித்து தொடர்வண்டியை நடுவழியில் நிறுத்தினர்.

உடனே அங்கு வந்த தொடர்வண்டிக் காவல்துறையினர், அத்துமீறி பெட்டிகளில் நுழைந்திருந்த வடநாட்டவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட வடநாட்டவர்கள், அங்கேயே தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்ததுடன், ஏசி அறைப்பெட்டிகளின் கண்ணாடிகளை அடாவடித்தனமாக உடைத்து நொறுக்கினர். அத்துமீறி பயணம் செய்ததோடு மட்டுமின்றி, தொடர்வண்டிக் கண்ணாடிகளையும் உடைத்த அவர்கள் யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதன்பின் வந்த அனந்தபுரி விரைவுத் தொடர்வண்டியில் புதிதாக 3 பெட்டிகளை அவர்களுக்கென பிரத்யேகமாக இணைத்து, அவர்களை வழியனுப்பி வைத்தது.

வடநாட்டின் ஏதோவொரு நகரில், தமிழ்நாட்டு இளைஞர்கள் இவ்வாறு செய்திருந்தால், அங்கிருந்த காவல்துறை அவ்விளைஞர்களை என்ன செய்திருக்கும்? கண்ணாடிகளை உடைத்ததற்கு வழக்குப் போட்டு, அவர்களை சிறையிலடைத்திருக்கும். தமிழகத்திலிருக்கும், நாம் அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் குரலெழுப்பிப் போராடிக் கொண்டிருப்போம்.

ஆனால், வடநாட்டவர்களுக்கோ வழக்குப்பதிவு கிடையாது. நடவடிக்கை கிடையாது. காரணம், அவர்கள் என்ன செய்தாலும், இது அவர்களின் நாடு. ஆண்டைகளுக்கு இருக்கும் அத்துமீறும் உரிமைகள், அடாவடித்தன உரிமைகள், அடிமைத் தமிழர்களுக்கு எப்போதும் கிடையாது.

இந்நிகழ்வுக்கு சில நாட்களுக்குப் பின் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங், நாடாளுமன்றத்தில் அனைவரும் இந்தியில் தான் பேச வேண்டும், ஆங்கிலத்தில் பேசக்கூடாது என அறிக்கை விடுத்தார்.

தொடர்வண்டியில் வெளிப்பட்ட வடநாட்டவர்களின் அடாவடித்தன உணர்வேதான், முலாயம் சிங்கின் அறிக்கையிலும் எதிரொலிப்பதை எளிதில் உணர முடியும்.

ஆண்டையைப் போல் நடந்து கொண்ட வடநாட்டவர்களின் செயல்பாட்டையும், முலாயம் சிங் அறிக்கையையும் வெறும் தனிப்பட்டு செயல்பாடுகள் என நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவர்களால் இயக்கப்படும் இந்திய அரசு, தமிழகத்த்தை, தமிழினத்தை எந்த இலட்சணத்தில் மதிக்கிறது என்பதை நாம் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை.

தமிழீழ மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இலங்கை மண்ணில் நடைபெறுகின்ற காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென தமிழக மக்கள் கோரினர். தமிழக அரசுக் கோரியது. தமிழகக் கட்சிகள் கோரின. ஆனால், அனைத்தையும் குப்பையில் வீசிவிட்டு, தமிழினத்தை அவமரியாதை செய்து விட்டு அதில் பங்கெடுத்தது இந்தியா.

மலையாளிகளோ, இந்திக்காரர்களோ கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு மண்ணில், இதே போன்று ஒரு மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ள முற்படுமா? வடநாட்டுக் கட்சிகள் அதை அனுமதிக்குமா?

அணுஉலையை எதிர்த்து கூடங்குளத்தில் எழுச்சிமிக்கப் போராட்டங்கள் நடந்து வரும் அதே நேரத்தில், தேவாரம் பகுதியில் இந்தியாவெங்குமுள்ள அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டத்தை கையிலெடுக்கிறது இந்தியா.

தொடர்ந்து, இலங்கையே தமது நட்பு நாடு எனச் சொல்வதன் மூலம், தமிழீழத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமது எதிரிகள் என நேர்முகமாகவே பறைசாற்றுகிறது, இந்தியா.

கடந்த மார்ச் மாதம், ஐ.நா. அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான தமிழக மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள் நடைபெற்ற போது, இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க. கோரியது. காங்கிரசுடன் முறுகலில் இருக்கும் பா.ச.க.வும் சரி, முலாயம் சிங் – மாயாவதி உள்ளிட்ட வடநாட்டுக் கட்சிகளும் சரி, இதற்கு உடன்படவேயில்லை. காரணம், தமிழர்கள் எங்கு செத்தாலும், எக்கேடு கெட்டாலும் அது அவர்களுக்கு சிக்கலே அல்ல. தமிழர் சிக்கலையொட்டி ஒரு ஆட்சியைக் கவிழ்ப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை.

ஆனால், வடநாட்டவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவிலோ, வேறு நாடுகளிலோ தாக்கப்பட்டால், அது தான் அவர்களுக்கு உலக மகா சிக்கல். இலண்டனில் சீக்கியர்களுக்கு தலைப்பாகை அணிய உரிமை மறுக்கப்பட்டால், தாக்கப்பட்டால் அது தான் அவர்களுக்கு பெருஞ்சிக்கல். தினந்தோறும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு வந்தாலும், சுட்டுக் கொல்லபட்டாலும் அது அவர்களக்கு எவ்வித நெருடலையும் ஏற்படுத்தாது.

‘இந்தியா’ – ஆண்டை இந்திக்காரர்களின் நாடு, தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இதில் எப்பொழுதும் அடிமைப் பாத்திரமே என்பதை வெளிப்படையாக அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் அதை கவனிக்கத் தவறுகிறோம்!

வருமான வரி, நிறுவன வரி, சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை கணக்கிலெடுத்தால், தமிழகத்திலிருந்து சற்றொப்ப 1 இலட்சம் கோடிக்கு மேலான தொகையை, வரி வசூல் என்ற பெயரில் இந்திய அரசுக் கொள்ளையடிடுத்துக் கொண்டு போகிறது. இது பத்தாமல், சேலம் – இரும்பு, நெய்வேலி – நிலக்கரி, காவிரிப்படுகை – பெட்ரோல் என தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையெல்லாம் ஏற்றுமதி செய்து சுரண்டிக் கொழுக்கிறது இந்திய அரசு.

இவ்வளவையும் சுரண்டுகின்ற இந்திய அரசு, நமக்கு கொடுத்திருப்பதெல்லாம் என்ன தெரியுமா?

இதோ, கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதைச் சொல்லி, இந்திய அரசிடம், தமிழக அரசு சார்பில் சற்றொப்ப 19,665 கோடி நிதி கேட்கபட்டது. இது குறித்து ஆராய, ஒரு குழுவைவும் அனுப்பிய இந்திய அரசு, தற்போது ஆறு மாத கால இழுத்தடிப்பிற்குப் பிறகு, வெறும் 645 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இது தான் நம் மீது இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ள ‘அக்கறை’!

கடந்த 23.10.2013 அன்று இடிந்தகரையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டத்தின் 800ஆம் நாள் விழா நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர் சுந்தர்ராஜன், கூடங்குளம் – கல்பாக்கம் அணுஉலைகளைத் தொடர்ந்து, தேவாரத்தில் பெரிய அளவில் அணுக்கழிவுகளைக் குவிக்கும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தப் போகிறது என்றும், இந்தியாவின் மற்றப் பகுதிகளைவிட்டு விட்டு, கடுமையான எதிர்ப்புகள் வந்த போதும் தமிழகத்தில் மட்டும் இது போன்ற அழிவுத் திட்டங்களை இந்திய அரசு கொண்டு வந்து குவிப்பது எதற்காக எனத் தெரியவில்லை என்றும் பேசினார்.

இந்திய ஆட்சியாளர்களும் சரி, வடநாட்டவர்களும் சரி, தமிழர்கள் மீதும், தமிழகம் மீதும் எப்பொழுதும் தீரா இனப்பகையுடன் தான் செயல்படுகின்றனர். நாம் தான் அதனை கவனிக்கத் தவறுகிறோம்! இனியாவது கவனிப்போமா? தமிழ்நாடு விடுதலையை நோக்கி முன்னேறுவோமா?

கட்டுரையாளர் க.அருணபாரதி தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்.

http://kannotam.com