குறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் மாறாமல் தமிழுக்கு ஏற்றவகையில் மொழிப்பெயர்த்து உள்ளேன். ஆக, இக்கட்டுரையின் கருத்துக்களுக்கு ஆதித்தன் ஜெயபாலன் அவர்களே உரிமையுடையவர் ஆவார். ஆங்கில வடிவத்தின் இணையச் சுட்டி: http://tamilnet.com/art.html?catid=79&artid=39156

******************************************************************************

சமீபகாலத்தில் நிகழ்ந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் மரணம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களின் மரணமும் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடத்தை அகலப்படுத்தி உள்ளது. தமிழகத்தின் திராவிட இயக்கங்களின் இறுதி அத்தியாயமாகவும் தமிழ்நாட்டு அரசின் அதிகாரம் மற்றும் மக்கள் விவகாரம் சார்ந்த தமிழ்நாட்டின் பிடிமானத்தினை தகர்த்தெறியப் போகும் அரசியல் சூழலாகவும் இதனைப் பலரும் பார்க்கின்றனர்.

 

இத்தகையச் சூழல், இந்திய மத்திய `அதிகார`வர்க்கத்தினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும், தமிழ்நாட்டில் தங்கள் பிரதிநிதிகளை நிலைநிறுத்தவும், தங்களைச் சார்ந்தவர்களை உருவாக்கவும், டெல்லியின் அதிகார மையம் நோக்கி தமிழகத்தை திசைத்திருப்புவதற்கும் அதீத பலத்தை கொடுக்கிறது.

 

தங்கள் திரைத்துறை செல்வாக்கில் தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பெரும் எண்ணிக்கையை தங்கள் பக்கம் ஈர்த்துவைத்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அரசியல் நுழைவை தமிழ்நாட்டு மக்கள் மேலே கூறிய பார்வையில் இருந்து உணர்ந்து வைத்திருப்பது அவசியமாகிறது. இவர்கள் இருவரும், தங்கள் திரைத்துறை செல்வாக்கை பயன்படுத்தி அரசியலில் அறுவடை செய்து, முதலமைச்சர் கனவை நோக்கி வரவிருக்கிறார்கள். டெல்லி அதிகார மையம் ஆட்டுவிக்கும் கைப்பாவையே இவர்கள் இருவரும் என்பதும் உறுதியாகிறது.

 

தமிழ்நாட்டு அரசியலை கட்டுப்படுத்தும் திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டே, மறுபுறம், தமிழ்நாட்டு அரசின் காவல்துறையின் அதிகாரங்களை டெல்லியின் அதிகார மையங்களுக்கு சேவை செய்வதற்கான கருவியாக மாற்றி, தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்டங்கள் நசுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிகழ்வுகளை 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காணலாம். 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடத்தப்பட்ட இனவழிப்புப் போரின் பின்னர், தமிழ்நாட்டில் உருப்பெற்று வரும் மக்கள் ஆதரவுப் பெற்ற, பலம் பொருந்திய சமூக அரசியல் இயக்கங்களை வலுவிழக்கச் செய்வதே அவர்களது குறிக்கோள்.

 

2009ற்கு பின்னரான சமூக அரசியல் என்பது, தமிழக மக்களின் தேவையையும் அவர்களது ஜனநாயக விழுமியங்களையும் உள்ளடக்கி, கடந்த காலங்களில் இந்திய ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டிருந்த இந்திய `தேசிய` நலன் சார் சித்தாந்தங்களுக்கு மாற்றாக தமிழக நலன்களை முக்கியத்துவப்படுத்தியவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோன்று, ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் தமிழர்கள் தரப்பில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்துவிட்டு, 09.08.2018 ஆம் நாள் இந்தியா திரும்பிய வேளையில், பெங்களூரு விமான நிலையத்தில் குடிவரவு துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, தமிழக சிறப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது 124A தேசத்துரோக வழக்கும் குழுக்களிடையே பகை வழக்கு விதமான பேச்சுக்கள் என்ற அடிப்படையில் 153a(1), 153(b) ஆகிய வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

 

இத்தகைய சூழல்களிலேயே, இந்திய `தேசிய` ஊடகங்களாலும் பெருவாரியான விவாதங்களிலும் நீக்கப்பட்ட வரலாற்றுப்பூர்வமான அனுகுமுறையூடாக தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடக்கும் நிகழ்வுகளையும் நடவடிக்கைகளையும் அணுக வேண்டியுள்ளது.

 

டெல்லி மேலாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பாற்றலும் உலகப் பொருளாதார பங்காளர்களும்

 

கடந்த மே 22, 2018 அன்று, 2000ற்கும் மேற்பட்ட தூத்துக்குடி பகுதி மக்கள், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் மற்றும் தமிழக பொருளாதாரத்தைச் சுரண்டும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக அமைதி வழியில் ஒன்று திரண்டிருந்த வேளையில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நிகழ்த்திய வன்முறையால் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். அன்றைய நாளிலும் அதற்கடுத்த மூன்று நாட்களிலும் தொடர்ந்த காவல்துறையின் வன்முறையால் கணக்கில் வராத எண்ணற்றோர் படுகாயமடைந்தனர். அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கி, குறைந்தது 200 இளைஞர்களை சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்தது.

 

இங்கிலாந்து நாட்டில் இருந்து இயங்கும் பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலையினை பாதுகாக்கும் பொருட்டு டெல்லியின் அனுமதியோடு நிகழ்த்தப்பட்ட இந்த அரச வன்முறையால், உயிரிழந்தவர்கள், காயமடைந்தோர், தடுத்து வைக்கப்பட்டோர் முழு விவரங்கள் மறைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி மக்கள் தமிழ்நாட்டு காவல்துறையினர் மீதான நம்பத்தன்மையை இழந்தனர் என கொள்ளலாம்.

 

அடுத்தடுத்த நாட்களில், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் (தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி) இணைய வசதியை நிறுத்தி, காவல்துறையின் வன்முறை நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை பரவாமல் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரச நிர்வாகங்கள் ஈடுபட்டது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், தூத்துக்குடியில் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதிலும் வன்முறை நிகழ்வுகள் குறித்த முறையான நீதி விசாரணை வேண்டும் என்பதிலும் உறுதியாக நின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை வாங்க காவல்துறை `கடுமை`யாக வற்புறுத்தியபொழுதும், உறவினர்கள் கையெழுத்திட மறுத்ததோடு காவல்துறைக்கும் தமிழக அரசிற்கும் தங்கள் தொடர் எதிர்ப்பினை அவர்கள் பதிவு செய்தனர்.

 

கொல்லப்பட்டவர்களின் பெரும்பாலுமானோரில் சமூக இயக்கங்களின் தலைவர்களும் பெண்களும் அடங்கும். ஸ்னோலி என்ற 17 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரது வாயில் சுடப்படப்பட்டு கொல்லப்பட்டார் என்பது வேதனைக்குறியது. இவையாவும், தமிழ்நாட்டில் கிளர்ந்தெழும் பெருந்திரள் மக்களின் சமூக போராட்டங்களை நசுக்க திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்வுகள் எனப் புரிகிறது. அதேவேளை, இத்தகைய வன்முறை தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களையும் கோபமுறச் செய்துள்ளது எனலாம்.

 

இப்படியாக, காவல்துறையினர் மூலம் தொடர் வன்முறை நிகழ்த்தப்பட்டும், தமிழ்நாடு பெருந்திரள் மக்கள், தங்கள் மண்னிற்கும் அதன் வளத்திற்கும் ஆதரவான போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள் என்பதோடு இவையாவும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் வேணவாவை எடுத்துக்காட்டுவதோடு தங்களது சுய நிர்ணய உரிமையினை நிலைநாட்டும் வண்ணமும் திகழ்கிறது எனலாம்.

 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனம்தான், தூத்துக்குடியில் 1996இல் தொடங்கப்பட்டு 2018 மே வரை இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை என்பதும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அணில் அகர்வால், ஒரு மார்வாடி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

ஸ்டெர்லை ஆலை தனது செயல்பாட்டைத் தொடங்கியது முதலே, அது ஏற்படுத்தி வந்த நீர் மற்றும் காற்று மாசு, அதன் விளைவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், உடல் நிலைக் கோளாறுகளால், சமுக ஆர்வலர்களாலும் சுற்றுச்சூழல் போராளிகளாலும் எதிர்ப்புகளை எதிர்கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால், துத்துக்குடி வட்டாரங்களில் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் விளைவுகளை போலவே, மன்னார் வளைகுடா உயிரினக்கோளம் (Biosphere) பாதிப்புக்குள்ளானது. இதன் விளைவுகளை ஈழத்தின் வடமேற்கு கடல் பகுதிகளிலும் காணலாம்.

 

2018, மே 28 ஆம் நாள் தமிழ்நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட உத்தரவிடும் அரசாணையை வெளியிட்டபொழுதும், ஸ்டெர்லை ஆலையின் முதன்மை நிறுவனத் தலைவர் ராம்நாத், தங்கள் ஆலையினை வேறு பகுதிக்கு மாற்றும் எண்ணம் இல்லை எனவும் தொடர்ந்து சட்ட வழிகளில் போராடி மீண்டும் திறப்போம் எனவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 

தமிழகத்தில் மட்டுமல்ல, கடல் கடந்தும், சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புகளுக்குள் இருக்கும் மன்னார் விரிகுடா பகுதிகளில் வேதாந்தா நிறுவனம் எண்ணை வளங்களை சுரண்டுவதற்கான வேலைப்பாடுகளை செய்துவருகிறது. இத்தகைய நிறுவனங்கள், வல்லாதிக்க சக்திகளுடன் இணைந்து ஏனைய தேசங்களின் அரச நிறுவனங்களை தங்கள் கைப்பாவையாக வைத்துக்கொண்டு, உலகமயமாக்கல், உலக கூட்டுப் பொருளாதாரம் என்ற பெயரில் அந்த தேசங்களை சுரண்டி வருகிறது. தென்னாசி பிராந்தியத்தைப் பொறுத்தவரை, வேதாந்தாவும் அதன் கிளை, துணை நிறுவனங்களும் டெல்லியையும் கொழும்பையும் தங்களுடன் இணைத்து தமிழ்நாட்டு வளத்தையும் ஈழத்தின் வளத்தையும் சுரண்டி வருகிறது.

 

வரலாற்று ரீதியில் பார்க்கும் பொழுது, இத்தகைய வல்லாதிக்க-பொருளாதார் மையங்களின் கூட்டு, நில வளத்தை சுரண்டி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைப்பதோடு, இரண்டு தமிழர் நிலங்களிலும் அவர்வருக்கான தனியான தமிழர் தேச அரசியல் நகர்வுகளுக்கும் தமிழ்த்தேசிய நலனுக்கும் எதிரானதாகவே அமையும் என்பது நன்கு புரிகிறது.

 

வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியச் சூழலில் அது எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தை ஓட்டியே தனது வலைப்பின்னலை அமைத்திருக்கும். முந்தையக் காலங்களில் காங்கிரஸோடும் 2014ற்கு பின்னரான காலங்களில் பாஜகவோடும் தனது நட்பை பேணி வருகிறது. இன்றைய சூழலில், பன்னாட்டு நிறுவன -இந்திய மத்திய அரசாங்கத்தின் கூட்டு இருதரப்பிற்குமான பல்நோக்கு புரிதலும் லாபத்தையும் கொடுப்பதெனினும், மத்திய அரசின் மாநிலத்தை கட்டுப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு பெரிதும் கைக்கொடுக்கிறது, குறிப்பாக, தமிழ்நாட்டு அரசியல் கண்ணோட்டத்தில் இது பெரிதும் பொருந்துகிறது.

 

ஜெயலலிதா அவர்கள் இறந்ததற்கு பின்னராக சூழலில், தமிழ்நாட்டு காவல்துறை, தங்கள் உரிமைக்காக போராடும் சமூக இயக்கங்கள் மற்றும் பொது மக்களின் மீது கடுமையான வன்முறைப் போக்கைக் கடைபிடித்து வருகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னர், தமிழகத்தில் சமூகப் பொருளாதார், தமிழர் நிலம்-வளம் சார்ந்த உரிமைப் போராட்டங்கள், ஈழத்தமிழர் நல, அரசியல் ஆதரவு போராட்டங்கள் பெருந்திரள் மக்கள் பங்களிப்போடு, சமூக இயக்கங்களின் கூட்டு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்து வந்தது. அத்தகைய போக்கு, இந்தியாவினை ஒற்றை அமைப்பாக மாற்றிக்கொண்டிருக்கும் இந்திய மத்திய அரசினது நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானதாக இந்திய ஆளும் வர்க்கம் கருதியது.

 

ஜல்லிக்கட்டுப் போராட்டமும் தமிழ்நாட்டு பெருந்திரள் மக்களின் திடமும்:

 

2017 தை மாதம், சங்க காலம் தொட்டு, தமிழர் நிலத்தில் நிகழ்ந்துவரும் ஏறுதழுவுதல் வீர விளையாட்டுப் போட்டிக்கு எதிரான இந்திய உச்சநீதிமன்றத்தின் தடை மற்றும் மத்திய அரசின் பாராமுகத்தினைக் கண்டு வெகுண்டெழுந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள், வீதியில் இறங்கி போராடி அறவழிப் போராட்டத்தின் வரலாற்றின் இடம்பிடித்தனர்.

 

தொடக்கத்தில் இருந்தே, இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள், இதனை ஏறுதழுவுதல் விளையாட்டினை மீட்க நடத்தும் ஒற்றை வடிவப் போராட்டமாக திசைக் காட்டினாலும், தமிழர் தேசிய உணர்ச்சியை வெளிப்படுத்திய புரட்சி வடிவம்தான் தை மாதப் போராட்டம். இப்போராட்டம் திடீரென்றோ உணர்ச்சிவசப்படும் நிலையில் இருந்தோ உருவானவை அல்ல. தென்னிந்தியாவின் இந்தியம் சார்ந்த நவீன அரசியலை முன்னகர்த்தவல்ல, வரலாற்று ரீதியிலான அரசியலை உள்வாங்கிய, ஜனநாயக வடிவம்தான் இவை.

 

ஆம்! ஏறுதழுவுதலை நடத்த உரிமை கோரிய பண்பாட்டு அரசியல் தமிழர் போராட்டம், வரலாற்றுக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம். ஓர் நாளி வடிவம் பெற்றவை அல்ல! ஏறுதழுவுதல் உரிமைப் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், இன்னும் எண்ணற்ற தமிழர் உரிமைசார் போராட்டங்கள் அனைத்தும் தொடர் வரலாற்றில் உருவாகி ஒரு மையப்புள்ளியில் இணைகின்றன.

 

நீண்டகால அரசியலை உற்று நோக்கும்பொழுது, தமிழர் தேசிய அரசியல் உரிமைக்கு எதிரான புதுடெல்லியின் போக்கும் அதனை தொடர்ந்து எதிர்த்து வரும் தமிழர் ஓர்மையும் நன்கு தெரிந்ததுதான்.

 

இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல், இந்திய மத்திய அரசின் அதிகார மையத்தின் நீண்ட கால அரசியல் வழிப் பாதையைக் கணகிட்டால், வரலாற்றீ ரீதியிலான தமிழ்நாடு-இந்திய அரசியல் போர் விளங்கும். மிகக்குறிப்பாக, இந்திய ஒன்றிய – மாநில அரசின் அதிகாரப் பகிர்வு எனக் கொள்ளலாம். இந்த வரலாற்று ரீதியிலான சமூக எதிர்ப்புணர்வு என்பது, இந்திய மத்திய அரசு, அதன் அரச நிறுவனங்கள், மும்பை, டெல்லியைச் சேர்ந்த இந்தி மேலாதிக்க வர்க்கம் (ஆங்கிலம் தெரிந்த இந்தி பேசும் மக்கள்), அவர்கள்தம் பண்பாட்டு, மொழி திணிப்பு, தேசிய இன அரசியலை உருமாற்றும் குறிக்கோள், தமிழர் நில அரசியலை கையகப்படுத்தும் நோக்கம், ஆகியவைகளின் இருந்து உருவானவை. மேற்கூறிய அனைத்து ஒருங்கிணைந்த இந்திய அதிகார மையக் கலவைகளே காஷ்மீரையும் வட-கிழக்கு மாநிலங்களையும் இந்திய ஒற்றை அதிகார்த்தில் நிலைத்திருக்க வைத்துள்ளது.

 

நிகழ்கால நிகழ்வுகளின் பார்வை:

 

நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தை ஒரு நிலையற்றத் தன்மையில் வைத்திருக்கிறது. காவிரி விவகாரத்தை கையாளும் புதுடெல்லியின் போக்கால், தமிழகத்தின் காவிரிப் படுகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், விவசாய நிலம், விவசாய தொழில்கள் ஆகியவற்றில் கேடான எதிர்விளைவுகளே உருவாக்குவதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. அதனோடு, குறுநில விவசாயிகள் மற்றும் அவர்களின் வருங்காலத்தை சிதைக்கிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலும் உருவாகி வருகிறது.

 

2017ஆம் ஆண்டு, தமிழக உழவர்கள் தங்கள் பிரச்சனையை எடுத்துரைக்கும் விதமாக, புதுடெல்லியில் ஒன்று கூடி, வாயில் எலியைக் கடித்துப் போராடினர். இந்திய ஆளும் வர்க்கம் அவர்களை சந்தித்து அவர்களது குறைகளே கேட்கவே இல்லை. தமிழகத்தில் நிலவும் நீர்ப்பற்றாக்குறை குறித்தான வேதனையை அவர்களது போராட்டங்கள் மூலம் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த அதே வேளையில், புதுடெல்லி மற்றும் இந்திய உச்சநீதிமன்றத்தின் சூழ்ச்சிகளால் கருநாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கவே வேண்டிய நீர் சார்ந்த உரிமைகளுக்கும் அநீதியே உருவானது.

 

தமிழக விவசாயத்தின் மீதான தாக்குதலால், தமிழக உணவுச் சார்ந்த இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு, குறுநில விவசாயமும் விவசாயிகளும் பாரிய பாதிப்பிற்குள்ளாகி, வறுமைக் கோட்டு வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டுத் தடையின் மூலம் தமிழக மாட்டினம் பாதிப்பிற்குள்ளாவதும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனைகள் மூலம் தமிழகத்தின் சமூக வாழ்வியல், உணவு இறையாண்மை பாதிப்பிற்குள்ளாவதும் அமெரிக்காவினாலும் உலக வர்த்தக நிறுவனத்தாலும் திணிக்கப்படும் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியே.

 

பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியப் பொருளாதாரத்தை கைப்பற்றும் சூழ்ச்சி, உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக கொள்கையினை ஏற்பது, அமெரிக்காவின் பிடிக்குள் இந்திய ஒன்றியத்தினை சிக்க வைப்பது, என இவையாவும் அமெரிக்க-புதுடெல்லி ஆளும், அதிகார வர்க்கத்தின் புவிசார் அரசியலின் கூட்டுச் சதியே. இவையாவும் தமிழகத்தை பாதிப்பதோடு, இலங்கையினை ஒற்றை ஆட்சி முறைக்குள் நிலைநிறுத்தி ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் அழித்து வருகிறது.

 

தமிழகத்தின் உணவுசார் இறையாண்மை என்பது, வெறுமனே உணவு உற்பத்தியும் விவசாயம் சார்ந்த பொருளாதாரம் மட்டுமல்ல! தமிழக குறுநில விவசாயிசகள், விவசாயப் பொருளாதார்ம், உணவின் உற்பத்தி மற்றும் அதனின் பங்கீடு, வியாபாரம், ஏற்றுமதி இவைகளின் கூட்டு கலவை என்பதோடு, இவைகளே, தமிழக சமூகப் பொருளாதாரம், நகர்ப்புற மாணவர்கள், சமூக இயக்கங்களை அனைத்தையும் தமிழின தேசிய சமத்துவம் சார்ந்த ஒருங்கிணைப்பிற்கு இட்டுச் செல்லும் வலுவான காரணியாகும். தமிழக மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தமிழக சுயநிர்ணய உரிமைகளை கையாளும் திறமையற்று நிற்பதால், தமிழகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை தமிழக ஜனநாயக விழுமியங்களின் பலத்தோடு அணுகாமல் விட்டுவிட்டார்கள், இதுவே, வேளாண்மை மற்றும் தமிழ் உழவர்களின் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு காரணம்.

 

இத்தகையச் சூழலால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து வல்லாதிக்க நாடுகளுக்கு சேவகம் செய்யும் டெல்லியும் இந்திய ஒன்றியத்தை ஆளும் இந்தியப் பெருங்குடி மக்களுக்கும் தமிழக நில, வளங்களை சூறையாடுவது எளிதாகிறது.

 

காவிரிப்படுகையில் மீத்தேன் எடுப்பதிலும், கடற்கரையோரங்களில் தாதுப் பொருட்களை எடுப்பதிலும் (ilmenite), ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயற்கை வளக் கொள்ளை, சேலம் அண்டியப் பகுதிகளில் எடுக்கப்படும் தாதுப் பொருட்கள் (bauxite and magnesite), தென் தமிழகத்தில் தாது மணல் கொள்ளைகள், கூடங்குள அணுமின் நிலையத் திட்டமிடல்கள் என அனைத்திலும் மேலே பட்டியலிட்ட வல்லாதிக்க நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், டெல்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக்கள் உள்ளன.

 

இந்திய ஒன்றியத்தினுள் பெயரளவிலேனும் உள்ள மாநில அரசினை ஆண்ட ஜெயலலிதா அம்மையார், தமிழகப் பெருந்திரள் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கும் எதிரானவராகவே தன்னை தகவமைத்துக்கொண்ட பொழுதிலும், தமிழின நலன் சார் விழுமியங்களை பாதுகாக்க நடந்த சமூக இயக்கங்களின் போராட்டங்களுக்கு அமைய, 2011 ஆம் ஆண்டிற்கு பின்பு டெல்லியோடு கடும் சவாலை எதிர்க்கொண்டார்.

 

தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட, ராஜீவ் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட எழுவர் விடுதலை, ஈழத்தில் நடந்த இனவழிப்பிற்கு எதிரான நீதி கோரல், தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்புத் தீர்மானம், கட்சத்தீவு மீட்பு கோரிக்கை, இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கும் உயிரழப்பிற்கும் உள்ளான மீனவர்கள் பாதுகாக்கும் கோரிக்கை என தொடர்ந்தும் இந்திய ஒன்றிய அரசோடு மோதி வந்தார்.

 

சமீபகால தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள் அனைத்தும் தமிழகத்தின் தெருக்களிலும் முழங்கிய தமிழக சமூக இயக்கங்களின் கோரிக்கைகள். 2009 ஈழப் போரின்பொழுதும் போருக்கும் பின்னருமான காலக்கட்டங்களில், தமிழகத் தலைவர்களும் அரசியல் அரசாங்கப் பிரதிநிதிகளும் தமிழகத் தெருக்களில் முழங்கும் சமூக இயக்கங்களின் குரலுக்கு செவிசாய்க்கவேண்டிய அரசியல் நெருக்கடிக்கு உள்ளானர்கள். தமிழக அரசியல் கட்சிகளும் அவர்கள் மூலம் உருவாக்கப்பெற்றவர்களுமே தமிழக மக்களின் உரிமைகள் பற்றி பேசி வந்ததும் போராடி வந்ததும் காலம் கடந்த நிகழ்வாக மாறியதும், சமூக இயக்கங்கள் மற்றும் சிறு சிறு அமைப்புகளின் ஒன்றுதிரண்ட போராட்டங்களும் முதன்மை பெற்றது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

 

ஆனால், இவையனைத்தும் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தலைகீழாக மாறத் தொடங்கியது எனலாம். டெல்லியின் சூழ்ச்சிக்கு இரையாகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நிற்கும் சூழலிலும் டெல்லியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இரு பிரிவும் அசைந்தாடுவது போல தெரிகிறது. தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க, அல்லது கைப்பற்ற, டெல்லியின் கண் அசைவிற்கு நடனமாட தயாராகவே உள்ளனர். 2010ற்கு பிறகு தமிழக பெருந்திரள் போரட்டங்களிலும் தமிழக மக்களின் கோரிக்கைகளிலும் எதிர்த்து நிற்க அஞ்சிய, தமிழக மக்களோடு நின்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அரசியல் பெருங்குடி அரசியல் ஆதிக்க சக்திகள் போல் அல்லாமல், இவைகளை தகர்த்தெறிய முனைகின்றனர்.

 

2009 ஈழ இனவழிப்பை நினைவு கூரும் மெரினா கடற்கரை மெழுவர்த்தி நிகழ்விற்கு 2017 ஆம் தடை வழங்கியதோடு, தமிழக காவல்துறையினர் 200ற்கும் மேற்பட்டோரை கைதும் செய்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் உட்பட தமிழகத்தின் பல உரிமைசார் போராட்டங்களிலும் முன்னின்ற, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன், தமிழ் மாறன் உள்ளிட்டவர்களை மட்டும் பின்னர் விடுவிக்காமல் குண்டாஸ் சட்டத்தின் மூலம் சிறை வைத்தது. மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் நின்ற பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேரை 2 ஜீன் 2017இல் கைது செய்தது தமிழக காவல்துறை. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பேசியதற்காக, ஜீன் 12, 2017இல் வளர்மதி என்ற மாணவி கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தின் மூலம் சிறைவைக்கப்பட்டார். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு காலத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும், இதிலிருந்து தமிழக காவல்துறையும் தமிழக ஆட்சியாளர்களும் டெல்லியின் மையத்திற்கு ஒத்திசைவாக எவ்வாறு மாறியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

 

2006ஆம் ஆண்டிற்கு பின்னர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட்டு, தமிழக மாணவ, மாணவிகளின் சமத்துவமான உயர்கல்விக்கு வித்திடப்பட்டது. `நீட்` என்னும் மருத்துவ நுழைவு மற்றும் தகுத்தித் தேர்வை திணிப்பதன் மூலம் இந்திய ஒன்றிய அரசும் தமிழக மாநில அரசும் இணைந்து படிப்படியாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என தமிழக பலத்தை சீரழிப்பதே டெல்லியின் நீண்ட காலத்திட்டம். இதன் மூலம், தமிழக கல்வித்துறையினை சீரழிக்கும் கொடும் திட்டத்தை புகுத்தியுள்ளனர். தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நீண்ட கால பலனளித்து வந்த சமூக நல அரசு நிர்வாக அமைப்பை சிதைப்பதன் மூலம், தமிழக பெருந்திரள் மக்களின் எதிர்காலத்தை தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கட்டுப்படுத்தி, தமிழகத்தின் ஜனநாயக பலத்தை துடைத்தேறிய முற்படுகிறார்கள். நீண்ட கால செயலத்திட்டதினை வகுத்து, தமிழகத்தின் அரசியல் உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் கட்டுபடுத்துவதே டெல்லியின் சூழ்ச்சித் திட்டம்.

 

வரலாற்றின் உட்பார்வை – தமிழகம் கற்க வேண்டியவை:

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசியல் வெற்றிடம் என்பது இது முதல் முறையும் அல்ல, இறுதியான நிகழ்வும் அல்ல!. 13 மற்றும் 14 ஆம் நாற்றாண்டின் காலத்தில் தமிழக மண்ணின் இறையாண்மையை செழுமைப்படுத்தி சிறப்போடு ஆண்டுவந்த பாண்டிய, சோழர்கள் வலுவிழந்த காலம்தொட்டே, அந்நியர்களின் படையெடுப்பிற்குள்ளும் ஆட்சிக்குள்ளும் சிக்கித் தவித்து தனது ஜனநாயகத் தன்மையையும் சமத்துவக் கோட்பாட்டையும் இழந்து முழுமையற்ற இறையாண்மைக்குள் சிக்குண்டது எனலாம். மண்ணின் மைந்தர்களின் அரசியல் வீழ்ச்சிக்குப் பின்னர் டெல்லி சுல்தான்களும் விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களின் ஆதிக்கமும் இம்மண்ணில் இருந்து வந்துள்ளது.

 

நாயக்கர்களின் சில கால ஆட்சிக்குப் பின், தமிழ்நாடு தன் இறையாண்மை மீட்பு அரசியலிலும் அதனை அடைய தனது போர் வலிமையை உயர்த்தவும் செய்தது. அத்தகைய போர்க்குணத்தை, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் ஏகாதிபத்தியம் இந்திய நிலப்பரப்பையும் அண்டிய கடல் வணிகப்பகுதியையும் ஒருங்கிணைந்து மேலாண்மையும் செய்ய முற்படுகையில் தமிழ்நாடு எதிர்க்குரல் மூலம் எடுத்துக்காட்டியது.

 

பிரித்தானிய ஏகாதிப்பத்திய படைகளுக்கும் அவர்களோடு இணைந்தவர்களுக்கும், தமிழகத்தில் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டி வீரன், புலித்தேவன், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, மருது சகதரர்கள் என ஆங்காங்கே குறுநில மன்னர்களும் தலைவர்களும் மண்ணிற்குரிய போர்கள் மூலம் மாபெரும் எதிர்ப்பை காட்டிவந்தனர். அத்தகைய போர் எதிர்ப்பு, தமிழக மண்ணின் பாரம்பரியத்திலும் வரலாற்றிலும் செவி வழி மரபியல் கூறுகள் மூலமும் கிடைக்கப்பெற்ற மரபுரிமை பேறுகள் மூலம் உருவானவையாகும். அன்று தீரமுடன் போராடிய வீரர்களை இன்றும் நடுகற்கள், கிராமத் திருவிழாக்கள், கோயில்களில் மக்கள் தங்கள் நிலம் காத்த தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.

 

இந்திய தேசிய காங்கிரஸாலும் இந்தி ஆதிக்க ஆதரவு சக்தியான ஆர்ய சமாஜ்களாலும் திணிக்கப்பட்ட இந்திக்கு எதிராகவும் பிராமணியத்துக்கு எதிரான சமத்துவக் கோட்ப்பாட்டை நிலைநிறுத்தியதிலும் காணப்படும் அறிவார்ந்த பெருந்திரள் மக்கள் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் இருந்து, தமிழகம் தொடர்ந்தும் அனைத்துவிதமான மேலாதிக்கத்தையும் தொடர்ந்து எதிர்த்தே வந்துள்ளது என்பதனை அறியலாம்.

 

தமிழ் மொழி அறிஞர்களும் இயக்கங்களும் சங்க கால தமிழ் இலக்கியங்களை புதிப்பித்ததிலிருந்து, தூயத் தமிழ் இயக்கங்கள் தமிழில் இருந்து சமஸ்கிருதத்தை கலைய எடுத்த நடவடிக்கை, சமத்துவம் சகோதரத்திற்கான அறிவார்ந்த கேள்விகளை எழுப்பிய அயோத்திதாசர் மற்றும் இரட்டமலை சீனிவாசன் போன்றத் தலைவர்களின் வருகை, பெருந்திரள் மக்கள் பங்களிப்போடான திராவிட இயக்க உருவாக்கத்திற்கும் தமிழ்த்தேசிய சித்தாந்தத்திற்கும் 20ஆம் நூற்றாண்டு பாதை அமைத்துக் கொடுத்தது.

 

பெரியாரின் திராவிடர் கழகமும் அதனைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா, தமிழக மக்களை பெருந்திரளாகவும் சுயமரியாதையுடன் கூடிய அறிவார்ந்தும் திரட்ட, மொழியினை காக்கவும், பண்பாடு, அரசியல் உரிமைகளை பிராமணிய மேலாதிக்கம் மற்றும் டெல்லி பெருங்குடி ஆதிக்கவர்க்கத்திடம் இருந்து மீட்கவும், அவர்கள் விதைத்து வந்த வேதக் கலாச்சாரத்தை உடைத்தெறியவும் மேற்கூறிய சூழல் எளிதாக்கியது.

 

1930, 40, 50களில் அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு என எல்லாச்சூழல்களிலும் திணிக்கப்பட்ட இந்தி மொழிக்கு எதிரான புரட்சிகள் தமிழகத்தில் வெடித்தது. 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மட்டும் 300ற்கும் மேற்பட்டோர் சுடப்பட்டும் தாக்கப்பட்டும் இறந்தனர். அதேவேளை, இத்தகைய போராட்டங்களினாலேயே, இந்திய மேலாதிக்கத்தினால் இந்திய ஒன்றியத்தினுள் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியே அலுவல் மொழி என்ற நிலை மாறி மாநில மொழிகளும் ஆங்கிலமும் என மாறியது.

 

இப்படியாக வரலாறு நெடுகிலும் தன்னைக் காக்க தமிழகம் தன் அரசியல் சக்தியை நிலைநிறுத்தி வருகிற பொழுது, பன்னாட்டு நிறுவனங்களின் துணையோடு, அமெரிக்க ஏகாதிப்பத்திய நட்போடு, தன் பிராமணிய, இந்துத்துவ மேலாண்மையை நிலைநிறுத்த, பிராமணிய பெருங்குடி மக்களின் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, டெல்லியின் வல்லாதிக்க அரசியல் சக்தியின் துணைக்கொண்டு, தமிழக மக்களுக்கு எதிராக வந்து நிற்கிறது.

 

நிகழ்காலம்– தமிழ்நாட்டுத் `தேசிய` விழிப்புநிலை மற்றும் அடித்தள இயக்கங்கள்:

 

இந்த நூற்றாண்டில், ஒன்றிய அதிகார வர்க்கம் மற்றும் இந்திய ஒன்றியத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரான கலக்குரல், முற்போக்கான சமத்துவப் புரிதலுடனான தமிழ்த்தேசிய சித்தாந்தம், ஜனநாயகத்திற்கான, சுயநிர்ணய உரிமைக்கான அறைகூவல் ஆகியவற்றில் இருந்து வெளிவருகிறது எனலாம்.

 

சமூக, சித்தாந்த சக்திகளின் துணையோடு இயங்கும் இயக்கங்களே நிகழ்காலப் போராட்டத்தை வடிவமைக்கின்றன. சமத்துவத்துவமும் சுயமரியாதையுடன் கூடிய தமிழ்த் தேசிய புரட்சிகர அணிதிரட்டல், மொழி, பண்பாடு, வரலாற்றை ஆகியவற்றிற்கு மதிப்பளிப்பதோடு, பிராமணிய–சாதிய, மதக் கோட்பாடுகளை புறந்தள்ளி, தேசியத்திற்கான கருத்தியல் விதைக்கப்பட்டு வருகிறது எனலாம்.

 

தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கான விதைகளை சமூக இயக்கங்களின் தொடர் வேலைப்பாடுகளின் வழியே வீதிகளில் பாமர, பெருந்திரள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. இத்தகைய சமூக இயக்கங்கள், பாராளுமன்ற, சட்டமன்ற அரசியல் விழுமியங்களின் வழியே தங்களுக்கு இருக்கும் குறைந்த அளவிலான ஜனநாயக உரிமைகளை அறிந்து வைத்திருப்பதோடு, அத்தகைய அரசியல் அமைப்புகளாலும் இந்திய ஒன்றியத்தின் தற்போதைய கட்டமைப்பாலும் எந்த எல்லை வரை செல்லமுடியும் என்பதனையும் விளங்கி இருக்கின்றனர். தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமையினையும் இறையாண்மையையும் மீட்கும் அரசியலை பிரச்சாரங்களில் வழியே பெருந்திரள் மக்களை சென்றடைய முடியும் என நம்புகின்றனர்.

 

ஏறுதழுவுதல் உரிமைப் போராட்டத்தின் வழியே, தமிழ் மக்கள் தங்களது மண் சார்ந்த சுயநிர்ணய உரிமைக்கான குரலை எழுப்பியதோடு வென்றும் காட்டியுள்ளனர் எனலாம்.

 

நடிகர்கள், விலங்குகள் நலவுரிமை என்ற பெயரில் பின் நின்ற பிராமணியர்கள், இந்திய வல்லாதிக்க ஆதரவாளர்கள், ஆங்கிலம்–இந்திய பேசும் டெல்லி, பாம்பே பெருங்குடி மக்கள், இந்தியாவைச் சேர்ந்த மட்டைப் பந்தாட்ட சர்வதேச வீரர்கள், இந்திய ஒன்றிய/மாநில அரசு அதிகாரிகள், அமெரிக்காவைச் சேர்ந்த அரசுசாரா நிறுவனமான `பீட்டா`, பிராமணிய உயர்குடி மக்கள், நடுநிலையாளர்கள், இந்த்துவ முகமூடி அணிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தமிழ் மக்களின் ஏறுதழுவுதலுக்கு எதிராக நின்றனர்.

 

இதே கூட்டம், எந்த சூழலிலும், தேசிய அடக்குமுறைக்கு உள்ளாகும், இனவழிப்பை எதிர்கொள்ளும், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், பசுமை வேட்டைக்கு உள்ளான பழங்குடி மக்கள், ஈழம் என எங்குமே மனிதாபிமான ஆதரவு குரல்களை கொடுத்ததே இல்லை என்பதோடு, இதே கூட்டம்தான் தமிழக மக்களின் அனைத்து வாழ்வாதாரப் போராட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கு எதிராக அணிதிரள்கின்றனர் என்பதனையும் நினைவில் கொள்க.

 

இந்திய–மாநில இயக்க ஆற்றல், அதன் வரலாற்றுப் பயணத்தடங்கள், இந்தி–பிராமணிய வல்லாதிக்கம், இவைகளின் தமிழ்நாட்டு அரசியல், பண்பாட்டு உரிமைகளின் மீதான ஆதிக்கத் திணிப்புகள் மற்றும் அரசியல், பண்பாட்டு உரிமைகளை உருமாறச் செய்யும் சதிவலைகள் என இவைகள் அனைத்தையும் ஒன்று சேரப் புரிந்துகொள்ளாதவர்களல் தமிழ்நாட்டில் நடக்கும் ஜனநாயக விழுமியங்களை காக்க நடக்கும் சுயநிர்ணய உரிமைசார் போராட்டங்களை புரிந்துகொள்ள முடியாது.

 

20, 21 ஆம் நூற்றாண்டுகளின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கையில், அல்லது அதற்கு முந்தையக் காலங்களிலும் கூட, தமிழ்நாடு தனது மண் சார்ந்த சமூக, அறிவார்ந்த இயக்கங்களின் வழியே, பிராமணிய/இந்துத்துவ, இந்திய ஒன்றிய அரசு மற்றும் ஆளும் அதிகார வர்க்கத்தின் வல்லாதிக்கத்திற்கு எதிராக தமிழ்த்தேசியக் கருத்தியலை வரலாறு நெடுகிலும் விதைத்து, நிலைநிறுத்தி, பெருந்திரள் மக்களை அணித்திரட்டியே வந்துள்ளது.

 

வரலாற்றின் உண்மைகள் மற்றும் நிகழ்கால நிகழ்வுகள் மூலமாக, தமிழ்த்தேசியக் கருத்தியல் பல்வேறு கூறுகள் வழியே தொடர்ந்தும் தமிழக பெருந்திரள் மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது என்பது, வல்லாதிக்க சக்திகளுக்கும், தமிழக நில வள, இயற்கை, மனித வளத்தைச் சூறையாடத் துடிக்கும் புறச் சக்திகளுக்கும் (உலக வர்த்தக மையம், பன்னாடு நிறுவனங்கள், அமெரிக்க பிரித்தானிய ஏகதிபத்தியங்கள்) எதிரானதாகவே பார்க்கப்படும். தமிழக பெருந்திரள் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான முழக்கங்களை நசுக்கவே அவர்கள் முனைவார்கள்.
முடிவுரை:

 

பல ஆண்டுகளாக வெளியார் ஆதிக்கத்திலும் பிராமணியத் திணிப்பின் வழியே உருவான சாதிய மேலாண்மையினாலும் தமிழர் நிலத்தில் பெரும் மாற்றங்கள் உருவாகி இருந்தாலும், தமிழ்நாட்டின் பண்டைய பண்பாட்டின் மற்றும் வரலாற்றின் வழியே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சமத்துவ சமயமற்ற கருத்தியல் வழியே, பிராமணிய ஆதிக்கத்திற்கு எதிரான சித்தாந்தம் எளிதாகிறது. திராவிட இயக்கத்தின் தோற்றம், சமூக, பண்பாட்டு, பொருளாதார கோட்பாடுகளை காக்கும் களமாக நின்று நிலம் சார்ந்த உரிமைகளுக்கு எதிரான புதுடெல்லி மற்றும் அயலக ஏகாதிபத்தியத்தை மறுதலிக்கும் அறிவுசார் தளத்தை அமைத்துக்கொடுக்கிறது.

 

வரலாறு வழங்கிய சான்றொப்பத்தின் படி, இறையாண்மை (Sovereignity) என்பது மக்களிடம் தங்கி உள்ளது, அரசிடம் (State) இல்லை. மக்கள் தங்கள் இறையாண்மை வழியே முறைப்படுத்தும் தங்கள் தேசியத்திற்கான ஜனநாயக ஆணையே அவர்களது அரசு (State) உருவாக்கப்பட வேண்டும் என்றார் ஃபிரன்சு புரட்சியாளர் ஜோசஃப் ஸ்கைஸ். மூன்றாம் உலக நாடுகளில், ஆசியாவில் இயங்கும் ஈழம் உள்ளிட்ட தேச விடுதலைக்கான புரட்சிகர இயக்கங்கள் இதனையே முதன்மைப்படுத்த வேண்டும்.

 

முகலாய ஏகாதிபத்திய மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி முறைகளால் உருவாக்கப்பட்ட, முறைப்படுத்தப்படாத கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் இந்திய ஒன்றியம், தனது பொய்யான கூட்டாட்சி அரசியல் அதிகாரம் கொண்டு, தனது மேலாண்மையின் மூலமாக, தமிழ்நாடு மற்றும் அதன் மக்களது இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைகளை திட்டமிட்ட வகையில் நசுக்கியே வருகிறது. குறியீட்டு அளவிலான அதிகாரங்கள், ஆட்சிபகுதியின் நில உரிமை தவிர்த்து, பண்பாடு, மொழி, பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கை என அனைத்தும் டெல்லியின் ஆட்டத்திற்கும் அவர்களின் வழிகாட்டல் வழியே மட்டுமே அணுக முடியும். மாநிலங்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி தேசிய நிதியாக டெல்லி தன்னகத்தே வைத்துக்கொண்டு, ஒன்றியத்தின் செலவுகளுக்கும் அதனை பயன்படுத்துவதோடு முறையாக மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பதும் இல்லை. கூட்டாட்சி அரசியல் அமைப்பு என சொல்லிக்கொண்டாலும் பாதியளவிலான நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ அமைப்பாக இந்திய ஒன்றியம் தன்னை வடிவமைத்து வைத்திருக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீடு உட்பட அனைத்து வள மேலாண்மை, மாநில வருவாய், என அனைத்தையும் ஒன்றியக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

 

இந்திய ஒன்றிய கூட்டமைப்பை உருவாக்குதலில் பங்கெடுக்காத பொழுதும் வேறு வழியின்றி அதனுள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு, இத்தகைய சமத்துவமற்ற அரசியல் அதிகாரச் சூழல், காலப்போக்கில் முரண்பாடுகளையே விதைக்கும். ஒன்றிய அரசாங்க அமைப்பு, ஜனநாயகமற்ற, பூர்வீகமற்ற அவரவர் நிலத்தோடும் மரபோடும் ஒன்றாத முறைகளில் உருவாக்கப்பட்டுள்ளதால், அதன் திறனற்ற இயங்கியல் ஓட்டம் மக்களின் ஜன நாயக வேணவாவினை பிரதிபலித்துக்கொண்டே இருப்பதோடு அவர்களது மனக்குமுறளையும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

 

டெல்லி மேலாதிக்கத்தின் எண்ணற்ற, திரட்சியான நடவடிக்கைகளாலும் இந்திய பெருங்குடி மக்களின் அடக்குமுறைகளாலும், தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமைகள் குறைந்துக்கொண்டே வருகிறது என்பதனை தமிழ்நாட்டு மக்கள் தங்களது மரபுவழி அறிவுசார் கோட்பாடின் வழியே நுண்ணுற வேண்டும்.

 

சுயமரியாதை சுயமான அணிதிரட்டல் மற்றும் மக்கள் மற்றும் அவர்களது தலைவர்களது தெளிவான அரசியல் கோட்படுகளில் இருந்து உருவாகுவதே சுய–ஆட்சியும் சுய–ஆளுகையும் ஆகும். இறையாண்மையில்லாத மக்கள், தங்கள் தேச நலனுக்கு பலனில்லாத, வெளிப்புற சக்திகளின் நலனுக்காக அனைத்தையும் இழக்க நேரிடும் பொழுது வரலாற்று நிர்பந்தங்களாலும் பெருந்திரள் மக்களின் கூட்டு உணர்வினாலுமே, அரசியல் சக்தியும் உரிமையும் சார்ந்த அத்தகைய கோட்பாடு உருவாகும்.

 

இன்றைய சூழலில், ஏறுதழுவுதல், நீட் என அனைத்திற்குமான விடை தமிழக மக்களின் சுயநிர்ணய உரிமையைக் காப்பதில் உள்ளது. தங்களது பண்டைய பண்பாட்டைக் காப்பதில் இருந்து அனைத்தையும் மீட்பது, இனி வரும் காலங்களில் எத்தகைய வழிமுறைகளில் தங்களை பொறுத்திக்கொண்டு, வருங்காலத்தை உருவாக்கப்போகிறார்கள் என்பது தமிழக மக்களே சிந்தித்து முயல வேண்டும். தங்களோடு தொடர்பில்லாத அயலக சக்திகளோடு பேரம் பேசி பெறும் முனைப்பு மட்டும் கூடாது.

 

– மொழிப்பெயர்ப்பு முனைவர் விஜய் அசோகன்