திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிமீழத்தைக் கட்டியெழுப்பத் தமிழர்கள் – தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதே தமிழீழ அரசின் நோக்காக இருந்தது. நெடுந்தீவு கடல்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான ஆராய்ச்சி மையமாக இருந்தது.

நாட்டின் நிருவாகத்தை பொதுநலன் கொண்டு நிருவகிக்கக் கூடிய சிற்பிகள் செஞ்சோலையில் வளர்ந்து வந்தனர்.

வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது மாங்குளம் தமிழர்களின் பாதுகாப்பு மையமாக விளங்கியது. மாங்குளத்தின் நில அமைப்பும் பரந்துவிரிந்த காட்டுப் பிரதேசமும் குறைவான மக்கள் குடியிருப்பும் ஒரு தொழில் துறை நகரை கட்டியெழுப்ப வாய்ப்பாக இருந்தது. மாங்குளத்தை பெருநகராகக் கட்டியெழுப்ப விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

LTTE-kilino
கிளிநொச்சிப் பெருநகருக்கும் தொழிற்றுறை நகராக வளர்ந்து வரும் மாங்குளத்துக்குமிடையில் எ-9 வீதியின் மேற்குப் பகுதியில் உள்ள பெருவெளியில் – காட்டுப் பகுதியில் அறிவியல் நகரைக் கட்டியெழுப்ப விடுதலைப்புலிகள் விரும்பினர். இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைக்கும் அளவுக்கு யுத்தப் பேரழிவையும் தாங்கியாவாறு அறிவியல் நகர் விளங்குகிறது.

கிளிநொச்சி மற்றும் மாங்குளம் ஆகிய பெருநகர்களுக்கிடையில் ஒரு அறிவியல் நகரை உருவாக்கும் செயற்திட்டம் தமிழீழத் தனியரசு நிறுவிய விடுதலைப் புலிகள் அமைப்பின் திட்டமிடல் ஆலோசகர்களால் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் முன்வைக்கப்பட்டது. தாயகத்தில் இருந்த புலமையாளர்களுடன் தமிழக மற்றும் புலம்பெயர் அறிஞர்களும் இத்திட்டத்தைத் தயாரிப்பதில் பங்குகொண்டனர். அறிவியல் நகரானது ஏறத்தாழ 5000 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட இருந்தது. இதற்காக எ-9 வீதிக்கு சமாந்தரமாக வீதி ஒன்றும் அமைக்கப்பட்டது.

அறிவியல் நகர் 1 இல் ஊடகவியற் கல்லுாரி (ஐயன் குளம் ஊடகவியில் கல்லுாரி)‚ மாவீரர் குடியிருப்பு‚ எழுத்தாளர் குடியிருப்பு‚ மருத்துவப் பயிற்சி நிலையம்‚ விண்வெளி ஆய்வு மையம்‚ நவம் அறிவுக்கூடம்‚ அன்பு இல்லம்‚ அன்பு மூதாளர் பேணகம்‚ செஞ்சோலை‚ காந்தரூபன் அறிவுச்சோலை முதலானவை அமைந்திருந்தன.

அறிவியல் நகர் 2 இல் விளையாட்டுத் துறைக்கான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு ஆரம்பநிலையில் இருந்தது. இங்கிலாந்து கிறிக்கற் அணியின் முன்னாள் தலைவர் இயன்பொத்தம் இந்நகரைப் பார்வையிட வருகை தந்திருந்தார்.

அறிவியல் நகர் 3 இல் தமிழ்மொழி ஆய்வுப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. தமிழ் மொழியியற் பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பில் தமிழ்மொழி‚ கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையினர் பன்னாட்டு தமிழ்ப் பேரறிஞர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர். இம் மொழியியற் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி‚ தமிழர் நாகரிகம், சிந்துவெளியில் தமிழ் ஆய்வுகள், தமிழின் தொன்மை‚ தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான தொடர்பு‚ தமிழர் கலைகள்‚ பண்பாடு‚ கலாசாரம் முதலான தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் எந்த ஒரு மொழியியலாளரும்‚ ஆய்வாளரும் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புடன் கூடிய உயர் தரத்திலான வளாகச் சூழல் ஏற்படுத்தப்பட இருந்தது.

இயற்கையுடன் – வனத்தின் வனப்புடன் இணைந்த கட்டுமானமாக ஆய்வுப் பல்கலைக் கழகம் அமைக்கப்படவிருந்தது. எந்தவித குளிரூட்டி வசதிகளும் இல்லாமலே குளிர்ச்சியான காற்று உள்வரத்தக்க முறையில் இந்நகரின் ஆரம்பக் கட்டுமானத்தினை விடுதலைப் புலிகள் செய்திருந்தனர். இவ்வாரம்பக் கட்டுமானத்திற்காக பெருமரங்கள் தறிக்கப்படவில்லை.

நாமக்கல்லைச் சேர்ந்த தமிழபிமானியும் தமிழறிஞருமாகிய இராமசாமி என்பவர் தனது வாழ்நாள் சேமிப்புக்களை இந்த மொழியியற் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இவர் வழங்கிய நூல்களில் ஒரு தொகுதி மொழியியற் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தது. மீதி நூல்கள் தற்போதும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

இவ்வாறே அறிவியல் நகர் 3‚ 4‚ 5 ஆகியவற்றில் விஞ்ஞான தொழிநுட்ப ஆய்வுகளுக்கான வளாகங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

இன்று அறிவியல் நகரில் அமையவுள்ள பொறியியல்‚ விவசாய பீடங்கள் ஒரு மறைமுகமான சிங்களக் குடியிருப்புக்கான திட்டத்தைக் கொண்டுள்ளன. 2012-2013 காலப்பகுதியில் 2000 சிங்களக் குடும்பங்களுக்கு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் வீதம் அறிவியல்நகர் மற்றும் மாங்குளத்திலிருந்த காணிகள் பகிர்ந்தளிக்ப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டையில் இருந்து புகையிரதத்தில் தங்கள் காணியை – வயல் நிலத்தைப் பார்க்க சிங்களவர்கள் வந்து போகின்றனர். வன்னியில் நிலம் விற்பனைக்கு உண்டு என்ற விளம்பரங்கள் மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல் நடந்த 2014 பங்குனி மாதத்தில் தென்னிலங்கையில் ஒட்டப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 2 இலட்சம் சிங்களவர்களைக் குடியேற்றும் நோக்கில் படையினருக்கான குடியிருப்புத் தொகுதிகள் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டு முடிவுறும் நிலையிலுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து எ-32 வீதியூடாக மன்னாரிற்கு செல்லும் ஒருவர் பூநகரியூடாகச் செல்கையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் படையினருக்கான பிறிதொரு குடியிருப்புத் தொகுதியைக் காணலாம். இவ்வாறு வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் பல இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

thenmaravadi_village_004
வடக்கில் உள்ள படையினரின் – சிங்களவர்களின் தொகையை வாராந்த விடுமுறையுடன் அடுத்து வரும் பொதுவிடுமுறை நாள்களில் கிளிநொச்சியில் இருந்து தென்பகுதிக்கு செல்வதற்காக புகையிரத முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை ஓதுக்கச் செல்லும்போது அறிந்து கொள்ளலாம். மூன்று தினங்களுக்கு முன்னரே 90 சத வீத ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்நாள்களில் புகையிரதத்தில் பழையில் இருந்து தென்பகுதிக்கு யார் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதை பழையில்‚ கிளிநொச்சியில் புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் போது கண்டு கொள்ளலாம்.

இன்னும் சில மாதங்களில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவை ஆரம்பமாகவுள்ளது. எல்லாத் தெருக்களும் ரோம் நகர் நோக்கி இருப்பதைப் போல வடக்கின் அனைத்துப் பயணமார்க்கங்களும் வடக்கின் வசந்தமும் சிங்களவர்களுக்காகவும் முப்படையினருக்காகவும் இருப்பதை உணரக்கூடிய நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள். தமிழர்களின் 2009 வைகாசி மாதத்திற்குப் பின்னரான பேரழிவுக்கும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கும் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாரளுமன்ற உறுப்பினர்களும் ஒருவிதத்தில் உடந்தையாக இருக்கின்றனர்.

வேரவில்‚ கிராஞ்சி‚ வலைப்பாடு‚ கோப்பாய்‚ உரும்பிராய்‚ வரணி முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடைக்கும்‚ தமிழ்ப்பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இராணுத்தில் இணைக்கப்பட்டு பாலியல் அடிமைகளாக்கப்படுவதற்கும் இவை தொடர்பில் அரசைப் பாதுகாக்கும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டும் பல்வேறு சந்தர்பங்களில் மௌனமாகவும் பொருத்தமான வேலைத்திட்டங்கள் இன்றியும் இருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளே காரணமாவர். இந்நிலையில் தமிழர்களுக்கு இவ்வாறான ஒரு அரசியல் தலைமை தேவையா என்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய நிலையில் தமிழினம் உள்ளது.

தமிழ்நிலம் ஆக்கிரமிக்கப்படுவது போல் வன்னிப் பகுதியில் தமிழின ஆண்கள் அகற்றப்பட்டு தமிழ்ப்பெண்கள் படையினரால் பாலியல் அடிமைகளாக்கப்பட்டு தமிழினத்தின் விளைநிலம் அழிக்கப்பட்டு வருகிறது.

இப்பின்னணியுடன் தமிழ்நில ஆக்கிரமிப்பு வரலாற்றின் 3 வது பகுதியை நோக்குவோம்.

6. திருகோணமலையின் குடிப்பரம்பல் வரலாறு

தமிழர் தாயகத்தின் நிருவாகத் தலைநகராக கருதப்படும் திருகோணமலை தமிழர் பூர்வீக நிலத்தின் வடக்குத் தெற்குப் பகுதிகளை இணைக்கும் பாலமாகும். 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயகுரவரான திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற தலமாக விளங்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் திருப்புகழ் ஒன்றில் இவ்வாலயத்தின் கோபுரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார்.

map
உலகின் 2வது பெரிய இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ளமையானது திருகோணமலை மீது சருவதேச இராணுவ வல்லாதிக்க சக்திகளின் கவனத்தை 15 ஆம் நூற்றாண்டு முதல் ஈர்த்து வைத்துள்ளது. படம் 3 ஆனது 1948 முதல் 2006 வரை திருகோணமலையில் நிறுவப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் காட்டுகின்றது.

இலங்கை சுதந்திரமடைய முன்னரும் 1940 களின் ஆரம்பத்தில் சிங்களவர்கள் திருகோணமலையில் குடியேற்றப்பட்டனர். 1948 இன் பின்னர் திருகோணமலையில் சிங்களவர்களைக் குடியேற்ற பல்வேறு தந்திரோபாயங்கள் வகுக்கப்பட்டன. நீர்ப்பாசனத் திட்டங்கள் (Irrigation Schemes) இதில் பிரதானமானவை. இவற்றில் அல்லை‚ கந்தளாய் மற்றும் பதவியா‚ நீர்ப்பாசனத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. நீர்ப்பாசனத் திட்டங்களை விட மீனவ சமூகத்தைக் குடியேற்றல்‚ நிலச் செயலர் (Land Secretariat) என்ற பதவியை உருவாக்கி காணி உரிமைப்பத்திரங்களை சிங்களவர்களுக்கு வழங்குதல்‚ தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் நோக்கில் தமிழர்களை அச்சுறுத்தி தமது காணிகளை விற்கவைத்தல் முதலான பல வழிகளில் திருகோணமலையில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

6.1 நீர்ப்பாசனத் திட்டங்கள்

அல்லை நீர்ப்பாசனத் திட்டம்

1949 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்தி்ட்டத்தின் கீழ் சங்குவேலி‚ கிளிவெட்டி‚ மேன்காமம்‚ பாலத்தடிச்சேனை‚ பேருவெளி‚ மல்லிகைத்தீவு‚ பச்சைநூல் மற்றும் நிலாப்பழை ஆகிய 8 தமிழ்க் கிராமங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இப்பிரதேசங்களின் நிலவுரிமையைக் கொண்டிருந்த தமிழர்களை இங்கிருந்து வெளியேற்ற திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் சிங்களப் படையினரைக் கொண்டு 1980 முதல் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன. உதாரணத்துக்கு சில.

01.01.1985 இல் சிங்களப் படையினரின் தலைமையில் ஊர்காவல் படையினரும் சிங்களக் காடைகளும் இணைந்து கிளிவெட்டி கிராமத்தை சுற்றி வளைத்து 125 வீடுகளை எரித்து அழித்தனர். இதன்போது 4 பெண்கள் உட்பட 10 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் 13 தமிழர்களை கைதுசெய்து அருகில் உள்ள சிங்களக் கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களில் 8 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர். ஆண்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் ஐவரும் பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை டெய்லி மிரர் பத்திரிகைக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தங்கத்துரையை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தங்கத்துரை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். (1985 இல் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மறைந்த லலித் அத்துலத்முதலி மற்றும் இதற்கு காரணமானவர்களையும் தமிழர்கள் பட்டியற்படுத்தி இனப்படுகொலைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.)

18.07.1986 இல் ஸ்ரீலங்காப் படைகள் திருகோணமலை பேருவெளியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 45 தமிழர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று அனைவரையும் சுட்டுக் கொன்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மல்லிகைத்தீவு‚ மேன்காமம் ஆகிய இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.

15.07.1986 இல் ஊர்காவல் படையினரும் ஸ்ரீலங்காப் படைகளும் பேருவெளியில் அமைந்திருந்த அகதிமுகாமை நள்ளிரவில் சுற்றி வளைத்து காத்திருந்தனர். பேருவெளிக்கு அருகில் இருந்த அகதிமுகாமை ஏற்கனவே அழித்துவிட்டு இம்முகாமினுள் நுழைய வெளிச்சத்துக்காகக் காத்திருந்தனர். அகதிமுகாமிற்கு அருகே அசம்பாவிதம் நடந்தும் இரவுவேளை அச்சம் காரணமாக முகாமைவிட்டு எவருமே வெளியேற முன்வரவில்லை. முகாமில் இருந்தவர்கள் சிங்களப்படைகளாலும் ஊர்காவல் படையினராலும் தமது முகாம் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதை அறியாதிருந்தனர். அதிகாலை வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் சிங்களப்படைகளும் ஊர்காவல் படையினரும் முகாமிற்குள் நுளைந்து எவ்வித இலக்குமற்று சுட ஆரம்பித்தனர். 48 பேர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை முதல் நண்பகல் வரை தொடர்ந்த இந்த மிலேச்சத்தனமான தமிழனப் படுகொலையின்போது முகாமிலிருந்த பெண்கள் பாலியல் வன்புணர்க் குள்ளாக்ப்பட்டனர்.

மானிடத்தால் இதனை நினைத்துப் பார்க்க முடிகிறதா? இக்கொலைகளைப் புரிந்தவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா? தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறும் உலகம் இக்கொலைகளைப் புரிந்த அரசையும் அதன் படைகளையும் பாராட்டுகிறது. ஐ.நா. வில் உயர்பதவி வழங்கி கௌரவிக்கிறது. 2009 சித்திரை (ஏப்பிரல்) முதல் வைகாசி(மே) 19 வரை முள்ளிவாய்க்கால் கொலைக்களமும் இப்படித்தான் இருந்தது. முள்ளிவாய்க்கால் இந்த நூற்றாண்டின் மறைக்கப்பட்ட கொலைக்களம். கடந்த நூற்றாண்டில் – 1980 களில் எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நடந்த படுகொலைகளும் மறைக்கப்பட்ட கொலைக்களங்களே.

6.2 கந்தளாய் நீர்ப்பாசனத் திட்டம்

கந்தளாய் நீர்த்தேக்கம் தமிழர் தாயகத்தில் உள்ள புராதனமான குளமாகும். இந்நீர்த்தேக்கம் மூலம் 25‚000 ஏக்கர் விவசாய நிலம் செழிப்படைகின்றது. இந் நீர்ப்பாசனம் மூலம் 80 சதவீதம் சிங்களவர்களும் மீதி 20 சதவீதம் தமிழர்களும் முஸ்லிம்களும் பயன்பெறுகின்றனர். அல்லையில் எவ்வாறு தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்களோ அவ்வாறே கந்தளாயிலும் தமிழர்களை வெளியேற்ற கலவரங்கள் என்ற பெயரில் தமிழினப் படுகொலைகள் நிகழ்ந்தன.

1986 யூன் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் கந்தளாய் 4 ஆவது மைல் போஸ்ற்றில் ஸ்ரீலங்கா விமானப் படையினரும் ஆயுதம் தாங்கிய ஊர்காவல் படையினரும் இணைந்து பேருந்துகளை மறித்து அவற்றில் பயணம் செய்த தமிழர்களை இறக்கி சுட்டுக் கொன்றனர். இதன் போது பலர் கொல்லப்பட்டும் காணாமலும் போயினர். அத்துடன் பலர் காயமடைந்தனர். இரு தினங்களாக நடைபெற்ற இத் தமிழின வேட்டையில் 50 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 35 பேர் காணாமற் போயினர்.

6.3 பதவியா நீர்ப்பாசனத் திட்டம்

பதவில்க்குளம் என்ற தமிழ்ப்பெயருடைய இக்குளம் பதவியா என சிங்களப் பெயராக மாற்றப்பட்டது. அனுராதபுரம் மாவட்டத்தில் திருகோணமலை எல்லையில் பதவில்க் குளமானது அமைந்துள்ளது. இக்குளத்தின் நீரானது திருகோணமலையில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்த பாவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இத்திட்டத்தின் மூலம் தமிழர்களையும் குடியேற்றுவதாக அறிவிக்கப்பட்ட தெனினும் இப்பிரதேசத்தில் பூர்விகமாய் இருந்த தமிழர்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையே நிகழ்ந்தது. இதன்மூலம் பதவியா 100 சதவீதம் சிங்களவர்கள் வாழும் பிரதேசமாக மாற்றப்பட்டது. புதிதாக சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட கிராமத்திற்கு பதவி சிறிபுர என பெயரிடப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் கீழ் இருந்த இப்பகுதி குடியேற்றக் காலத்தின்போது அனுராதபுரத்தின் நிருவாகத்தின் கீழ் கொண்ட வரப்பட்டது. பின்னர் 1980 களின் இறுதியில் திருகோணமலையுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.

6.4 திருகோணமலை நகரும் சந்தையும்

திருகோணமலை நகர் மற்றும் சந்தைப் பகுதி தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசமாகும். இது சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர்களிடம் இருந்து படிப்படியாகக் கைப்பற்றப்பட்டது. ஆரம்பத்தில் திருகோணமலை நகரின் கரையோரப் பகுதியில் சிங்கள மீனவர்களைக் குடியேற்றினர். 1957 இல் திருகோணமலை நகரில் அரசின் சிங்களக் குடியேற்றங்களைக் கண்டு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பிய தமிழ் இளைஞன் ஒருவன் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் கறுப்புக் கொடியொன்றை ஏற்ற முற்பட்டான். இவ்விளைஞன் பின்னர் சிங்களக் குடியேற்ற வாசிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். திருகோணமலை நகரில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணமிருந்தன. பழைய நகரப் பகுதியில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கருதிய திருகோணமலை நகரசபை புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியினை நிருமாணித்தது. இதுவும் அரசு மற்றும் படையினருடன் ஆதரவுடன் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

6.5 காணிகளைத் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்தல்

திருகோணமலை சந்தைத் தொகுதியில் சிங்களவர்களின் பெரும்பான்மையை அதிகரிப்பதற்காக தமிழர்கள் நெருக்கமாக வாழ்ந்த சந்தைப் பகுதியில் அத்துமீறி சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். காணி ஆணையாளரின் சிபாரிசிற்கமைய நிலச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு இவருக்கூடாக தனியார் காணிகள்‚ கோவில்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய பொதுக் காணிகள் சிங்களக் குடியேற்ற வாசிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதன்போது திருகோணமலை சின்னத் தொடுவாய் சித்திவிநாயகர் கோவில்‚ தம்பலகாமம் ஆதிகணேசர் கோவில்‚ சிவானந்தா தபோவனம்‚ சண்முகா சிறுவர் இல்லம் ஆகிய நிறுவனங்கள் தங்கள் காணிகள் மீதான உரிமையை இழந்தன . இக் காணிகளில் வலிந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவர்களுக்குரிய காணி உரிமைப்பத்திரங்கள் நிலச் செயலாளரினால் வழங்கப்பட்டது.

தம்பலகாமத்தில் பெருந்தொகையான வயற் காணிகள் கோவில்களுக்குச் சொந்தமாக இருந்தன . இக்காணிகளில் தமிழர்களே விவசாயம் செய்து வந்தனர். இக்காணிகள் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்ற வாசிகளுக்கு வழங்கப்பட்டது. தம்பலகாமத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்ற காலத்துக் காலம் தமிழனப் படுகொலைகள் நிகழ்ந்தன.

12.11.1985 இல் சிங்களப் படையினரால் தம்பலகாமம் சுற்றிவளைக்கப்பட்டது. இதன் போது 9 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 26.11.1985 அன்று 3 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். இதே நாள் இன்னொரு சம்பவத்தில் 5 தமிழர்கள் கடையொன்றினுள் வைத்துப் பூட்டப்பட்டு எரிக்கப்பட்டனர் . இவர்களில் ஒருவர் எரிந்து இறந்து போனார். 3 பேர் கடும் எரிகாயங்களுடன் உயிர்தப்பினர். 25.05.1986 அன்று அகதிகளாக இடம்பெயர்ந்திருந்த தாயும் 2 பிள்ளைகளும் தம்பலகாமத்தில் தமது வீட்டினைப் பார்க்கச் சென்ற வேளை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 30.05.1986 இல் கறுப்பு நிற உடையணிந்திருந்த பாதுகாப்புப் படையினர் தம்பலகாமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் நுழைந்து அங்கிருந்த தாய்‚ தந்தை மற்றும் இரு பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றனர்.

17.06.1986 அன்று புதுக்குடியிருப்பு தம்பலகாமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 8 விவசாயிகள் காணமற் போயினர். 20.06.1986 அன்று ஸ்ரீலங்கா விமானப்படையினருடன் தரைப் படையினரும் இணைந்து தம்பலகாமம் சந்தியில் முகாமிட்டு பொது மக்களை வெளியேறுமாறு கூறி தம்பலகாமம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலைத் தொடர்ந்து வெளியேறிய தமிழர்களில் 25 பேர் தம்பலகாமம் பொற்கேணியில் அமைந்துள்ள அரிசி ஆலையில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்தனர். அரிசி ஆலைக்கு வந்த படையினர் அங்கிருந்த அகதிகள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அரிசியாலை உரிமையாளர் மட்டும் விடுவிக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர்களின் உடல்கள் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ன. இச் சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர். 01.02.1998 அதிகாலை சிங்களப்படைகள் 8 பொது மக்களைக் கைது செய்து தமது முகாமைச் சுற்றி நிற்குமாறு கூறிச் சுட்டுக் கொன்றனர். இவர்களில் 4 பேர் பாடசாலை செல்லும் சிறுவர்கள்.

இவ்வாறு தொடர்ச்சியான தமிழினப் படுகொலைகள் மூலம் கிழக்கில் தமிழ் நிலம் பறிக்கப்பட்டு தமிழர்கள் சிறுபான்மை யாக்கப்பட்டுள்ளனர். சருவதேசமும் இந்தியாவும் இணைந்து நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் படுகொலை வன்னியையும் வடக்கையும் சிங்களவர்களிடம் முழுமையாகக் கையளித்தது.

(தொடரும்)

-ஈழம் ஈ நியூஸ் இற்காக பிஞ்ஞகன்.

பகுதி 2- பார்ப்பதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
http://www.eelamenews.com/?p=116010