மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட தமிழினத்தை வேரோடு அழித்தொழிக்கும் யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த 2009 சித்திரையில் தமிழ்நாட்டிலே இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள், புலனாய்வாளர்கள்(RAW)‚ காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் நடைபெற்றது. யுத்தத்தின் முடிவில் எஞ்சும் சுமார் 70000 வரையான தமிழர்களின் எதிர்காலம் குறித்து இங்குதான் தீர்மானிக்கப்பட்டது.

யுத்தத்தில் எஞ்சும் பெண்களை விவசாயக் கூலிகளாக அடிமைகளாக உபயோகிப்பது என்று தமிழ்நாட்டிலே தான் தீர்மானித்தனர். அதேநேரம் சிங்களப் பேரினவாத புத்திஜீவிகள் பெற்றோரை இழந்த சிறுவர்களை பௌத்தப் பாடசாலைகளில் சேர்த்து பிக்குகளாக மாற்றுவது என்ற சிங்களத்தின் திட்டத்தை முன்வைத்தனர். அப்போது வன்னியில் காயமடைந்தும் மருந்தும் உணவும் இன்றி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த ஒரு தொல்குடியின் மரணஓலம் பிணங்களுக்கு மத்தியில் பெருக்கெடுத்திருந்தது. இன்று காசவில் குழந்தைகளுக்கு நிகழ்ந்த மரணத்தைக் காட்டிலும் கொடூரமான மரணம் அன்று வன்னியில் தமிழ்க் குழந்தைகளுக்கு நிகழ்ந்தது. இதை பிபிசியோ‚ அல்ஜசிராவோ காண்பிக்கவில்லை. இந்தியாவும் இலங்கையும் இந்த நூற்றாண்டின் இரகசியக் கொலைக்களத்தை திட்டமிட்டே மூடி மறைத்தன.

யுத்தத்தின் முடிவில் எஞ்சும் சுமார் 70000 வரையான தமிழர்களை விவசாய அடிமைகளாக பயன்படுத்துவது பற்றிய மாநாடு யுத்தம் தீவரமடைந்த 2009 இல் தமிழ்நாட்டிலே கூட்டப்பட்டது என்ற தகவலை ஈழத்தமிழருக்கு நீதிவேண்டி அயராது உழைத்து வரும் மே 17 இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தியும் ஒரு வருடத்திற்கு முன்னர் தீராநதியில் வெளியான தனது கட்டுரையொன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையின் சனாதிபதி மகிந்த இராசபக்ச இறுதி யுத்தம் நடைபெற்ற போது வடக்கிலே 70000 தமிழர்களே எஞ்சியிருக்கிறார்கள் என்று பகிரங்கமாக அறிவித்து வந்தார். 70000 பேருக்குத் தேவையான உணவும் மருந்துகளுமே அனுப்பப்பட்டன. ஒரு கட்டத்தில் சனாதிபதி மகிந்த பாதுகாப்புவலயத்தில் ஒரு சில ஆயிரம்பேரே சிக்கியிருப்பதாகவும் அவர்களையும் விரைவில் மீட்டு விடுவோம் என்றும் அறிவித்தார்.

கனடா தேசத்து குடியுரிமை பெற்ற அரசசார்பற்ற நிறுவன அலுவலர் (பாதுகாப்புக் காரணங்களுக்காக பெயர் குறிப்பிடவில்லை) ஒருவர் இந்திய இலங்கை கூட்டுச் சதி பற்றிக் குறிப்பிடுகையில் யுத்தத்தின் முடிவில் இலங்கையரசு 70000 பேரை மட்டுமே வன்னியில் போர் வலயத்திலிருந்து வெளியே எடுப்பதென்றும் மீதி 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரையும் முற்றாக அழித்தொழிக்கும் திட்டத்தைக் கொண்டிருந்ததாகவும் அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளின் தலையீட்டினாலேயே இந்திய அழுத்தத்தையும் மீறி பெருமளவான மக்கள் மீட்கப்பட்டதாவும் தெரிவித்தார்?

இந்திய இலங்கை இரகசியத் திட்டத்தை விளங்கிக்கொள்ள வன்னியில் இருந்து ஐ.நா. முதலான அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டு வன்னியில் இருந்து தகவல்கள் வெளியே செல்லாதவாறு அனைத்து சருவதேச தொடர்பாடல் ஊடகங்களும் கட்டுப்படுத்தப்பட்டமையை நினைவுபடுத்த வேண்டும். மேற்குலக அழுத்தமே 280000 பேர் வரை மீட்கப்படக் காரணம் என்று கூறும் தொண்டு நிறுவன அலுவலர் இந்தியா முற்றாக அழித்தொழிக்குமாறு கட்டளையிட்டிருந்தது என்றும் குறிப்பிட்டார். இதனையே சனாதிபதியும் அவரது சகோதரரும் நாம் இந்தியாவுக்காகவே யுத்தம் புரிந்தோம் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறிவந்ததையும் பொருத்திப் பார்க்கண்டும்.

இன்று 2014 இல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் இந்தியா சருவதேச விசாரணையை ஆதரிக்காது என்று கூறுவதன் சூட்சுமமும் இதற்குள் மறைந்திருக்கிறது. ஆனந்தபுரத்தில் பாவிக்கப்பட்ட இரசாயன ஆயுதங்கள் எரிகுண்டுகள் மட்டுமல்ல படைத்துறை ஆலோசனைகள் யாவுமே இந்தியாவால் வழங்கப்பட்டவையே. சரணடைந்தவர்களைக் கொல்லும் அதிகார உத்தரவும் இந்தியாவிலிருந்தே வழங்கப்பட்டது.

பயங்கரவாதம்‚ மனிதகேடயங்கள் முதலான சொற்பிரயோகங்கள் இலங்கையரசிற்கு சார்பாகவே பயன்படுத்தப்பட்டதாகவும் உண்மையில் பாதுகாப்புவலயம் 1‚ 2 ஆகியவை கொலைக்களங்களாகப் பரீட்சிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புவலயம் 3‚ 4‚ 5 ஆகியவற்றில் ஆனந்தபுரத்தில் பிரயோகிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதப் பிரயோகம் பயன்படுத்த திட்டமிடப்பட்டதாகவும் குறிப்பிட்ட தொண்டு நிறுவன நிறுவன அலுவலர் தெரிவிக்கிறார்.

last_wor47-600x397
வன்னியில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களில் குறித்த 3 வாரங்களில் 40000 பேர் கொல்லப்பட்டு 70000 பேருக்கு மேல் காயமடைந்துமிருந்தனர். இதனையே ஐ.நா. தனது முதலாவது அறிக்கையில் யுத்தத்தில் மொத்தமாக 40000 பேர் கொல்லப்பட்டதாக உண்மைக்கு மாறாக அறிவித்தது. பின்னர் 70000 – 80000 பேர் வரை கொல்லப்பட்டதாக தனது 2 வது மீளாய்வு அறிக்கையில் அறிவித்தது.

இன்றுவரை தமிழ் அரசியற் பத்தியாளர்கள் அனைவருமே மேற்குலக பத்திரிகையாளர்களைப் போல் தமது கட்டுரைகளில் 40000 என்று பாடமெடுப்பது தமிழிதழியலின் சுயமற்ற வறுமை நிலையையே காண்பிக்கிறது. தமிழர்களுக்கென்று ஒரு சருவதேச ஊடகமையமோ பிபிசி‚ சி.என்.என்.‚ அல்ஜசிரா போன்ற தொலைக்காட்சியோ இல்லாமையும் தமிழினத்தின் 2009 இற்குப் பின்னரான வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று.

பாதுகாப்புவலயம் அறிவிக்கப்பட்டமையும் பொதுமக்களை இலக்குவைத்து அழிப்பதற்காகவே அன்றி பாதுகாப்பதற்காக அல்ல என்று குறிப்பிடும் கனடா தேசத்துப் பிரயை பாதுகாப்பு வலயத்துக்குள் மக்களையும் புலிகளையும் முடக்கி அழித்தொழிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் பெருமளவு மக்கள் மீட்கப்பட்டமை அதிஷ்டவசமானது என்றும் தெரிவிக்கின்றார். அண்மையில் முல்லைத்தீவில் 5.7.14 முதல் 8.7.14 வரை சனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்த போது சாட்சியமளித்த பெண் ஒருவர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பின்னர் 4 தினங்கள் தனக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூடத் தரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் இவ்வளவு மக்கள் உயிர்பிழைத்து வருவார்கள் என்று ஒருபோதுமே எதிர்பார்த்திருக்கவில்லை. இதுவே மனிதாபிமான நெருக்கடி ஏற்படக் காரணமாயிருந்தது. சருவதேச அழுத்தம் இருந்த போதும் அரசாங்கம் வைகாசி 2 ஆம் 3 ஆம் வாரங்களில் பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதை விரும்பியிருக்கவில்லை. படையினருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

நில ஆக்கிரமிப்பின் வரலாற்றில் இவ்விடயங்களைக் குறிப்பிடக் காரணம் யாதெனில் இந்த 70000 பேரை மட்டுமே வெளியே மீட்கும் திட்டத்தின் பிரதான மூலோபாயம் வன்னிப்பெருநிலத்தை முழுமையாக சிங்களவர்களிடம் விழ்ச்சியுறச் செய்தல் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே ஆகும். நிலத்தை உரிமைகோர எவருமே குறிப்பாக ஆண்கள் எவருமே இருக்க மாட்டார்கள். இதனால் வன்னிப்பெருநிலத்தை சிங்களவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளித்தல் இலகுவானது. தேசவழமை கிழித்தெறியப்படும். மீளவும் உரிமைப் போராட்டம் எழாது என்று இலங்கையரசு கணக்கிட்டிருந்தது. இன்று படைகளுக்கு தமிழ் யுவதிகளையும் இளைஞர்களையும் கட்டாயப்படுத்தி சேர்ப்பதன் ஒரு நோக்கமும் நில ஆக்கிரமிப்புக்கு இராணுவத்துக்கு எதிராக எவருமே குரல் கொடுப்பதைத் தவிர்க்கவே.

2013 இல் தமிழ்நிலம் என்ற அடையாளம் அற்றுப்போய் தாய்வழிச் சமூகமான தமிழினத்தின் கருவறைகள் அழிக்கப்பட்டு வருவது வெளிவர ஆரம்பித்தது. தமிழினம் பேரழிவை சந்திக்கும் அபாயநிலையில் உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பலம் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்த அன்றே தமிழ்நிலம் சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டது. இன்று இனம் விளையும் கருப்பைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களைக் கொண்டே தமிழினம் அழிக்கப்படுகிறது. கிளிநொச்சி‚ முல்லைத்தீவில் தமிழ் வைத்தியர்கள்‚ பொதுச் சுகாதார மாதுக்கள் தமிழ்ப்பெண்களுக்கு கட்டாய கருத்தடையை செய்து வருகிறார்கள். வேரவிலிலும் வலைபாட்டிலும் கிராஞ்சியிலும் நடந்ததைத்தான் சமூச் சிற்பிகள் (The Social Architects) வெளிப்படுத்தினார்கள். ஆனால் வன்னியின் பல இடங்களில் இராணுவ முகாம்களில் மருத்துவ முகாம் என்ற போர்வையில் பெண்களுக்கு நிரந்தர கருத்தடை செய்யப்படுவது தொடர்கிறது. இத் தகவலைத் தெரிவித்த மருத்துவர் (MOMCH) இதுபற்றி பேசவே முடியாதுள்ளதாகத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலும் பல பெண்களுக்கு நிரந்தர கருத்தடை செய்யப்பட்டுள்ளது. போரிலே கணவனை இழந்த பெண்களுக்கு மட்டுமன்றி கணவன் வெளிநாடுகளிற்கு சென்ற பெண்களுக்கும் மருத்துவ மாதுக்கள் கருத்தடை செய்துள்ளனர். இது யாழ்ப்பாணம் வரணியில் நடந்தது.

தமிழ்ப் பெண்களக்கு கட்டாய கருத்தடை செய்ய ஆரம்பித்தமை யுத்தம் முடிவடைந்த 2009 இற்குப் பின்னரல்ல. யுத்தம் ஆரம்பிக்க முன்னரே தமிழினத்தை அழிக்கும் திட்டத்தை அரசும் சிங்கள புத்திஜீவிகளும் இணைந்து தீட்டியிருந்தனர். இங்கு துயரமான விடயம் யாதெனில் இன்றுவரை வடமாகாண முதலைமைச்சர் உள்ளிட்ட தமிழ் அரசியல் வாதிகள் கட்டாய கருத்தடை குறித்து மௌனமாக இருப்பது தான்.

யுத்தம் பொது மக்களை இலக்கு வைத்து நகர ஆரம்பித்த 2008 கார்த்திகை முதல் 2009 சித்திரை வரை பொதுமக்கள் பல்வேறு பகுதிகளூடாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சிறு சிறு குழுக்களாக வந்தனர். இவ்வாறு வந்த பலருக்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்து கருத்தடை செய்யப்பட்டதை அறிந்த தமிழ் மருத்துவர்களும் வடகிழக்கில் உயர்பதவி வகித்த சிவில்சேவை அதிகாரிகளும் அச்சம் காரணமாக மௌனமாக இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிசொல்லக் கூடியவர்களும் ஒருபுறம் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மௌனமாக இருக்கிறார்கள். இன்னோர்புறம் இவ்விடயம் தமது இனத்தை அழிக்கும் செயற்பாடென்று பாதிக்கப்பட்டவர்கள் கருதவில்லை. இதுபற்றி விழிப்புணர்வு பெரும்பாலானோரிடம் இல்லை. சருவதேச விசாரணையின் போது இவ்விடத்தைக் குறிப்பிடக் கூடிய நிலையில் தமிழ்ச் சூழல் இல்லை.

தமிழ் நிலம் பறிபோய்விட்டது. நிலத்தின் மீதான உரிமையை இழந்து விட்டோம். ஆனால் இனத்தின் விளைநிலமாகிய கருப்பைகள் அழிக்கப்படுவதையும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதையும் பார்த்திருக்கும் மிகவும் இழிநிலையில் தமிழினம் இன்று இருக்கிறது.

இப் பின்னணியுடன் தமிழ்நில ஆக்கிரமிப்பின் குடித்தொகையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

7. சம்பூர் – மூதூர் கிழக்குப் பகுதியில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமை ஒரு இனச் சுத்திகரிப்பு
trinco_sampur_muthur_435[1]
சம்பூர் கொழும்பு நகரை விடப் பெரிதான ஒரு தமிழ்க்கிராமம். 2006 புரட்டாதியில் சிங்களப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டது. சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற அப்பகுதி மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலும் விமானத் தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது. இப்பகுதியில் இருந்து 40000 தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். இராசபக்கசவால் சம்பூர் வெற்றி விழாவும் பின்னர் கிழக்கின் வெற்றி விழாவும் கொண்டாப்பட்ட போது கிழக்கு மாகாணத்திலே மனிதகுலத்துக்கு எதிராக இராசபக்கசவால் நிகழ்த்தப்பட்ட குற்றம் உலகின் கண்களில் இருந்தும் தமிழ் ஊடக அரசியல் பரப்பிலுருந்தும் மறைக்கப்பட்டது. இன்று 2009 இல் வடக்கிலே போரின் இறுதியில் நடைபெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் சருவதேச விசாரணயை எதிர்நோக்கியுள்ளன. அன்று கிழக்கிலே சிங்களப்படைகள் புரிந்த குற்றங்கள் சருவதேச ஊடகங்களில் வெளிவரவில்லை.

சிங்களப் படைகளால் சம்பூர் கைப்பற்றப் பட்டதைத் தொடர்ந்து 2007 வைசாசி 30 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமகாப் பிரகடனப்படுத்தப்பட்டன.

சம்பூரின் அயற் கிரமாமங்களான சீதனவெளி‚ சேனையூர்‚ கட்டைப்பறிச்சான்‚ வல்லிக்கேணி‚ இறால்குடி‚ கூனித்தீவு ஆகிய இடங்களில் இருந்து 2006 இல் வெளியேறிய மக்கள் 2009 இற்குப்பின்னர் மீள்குடியேற்றப்பட்டனர். ஆயினும் சம்பூர் மக்கள் மீள் குடியேறுவதை இலங்கையரசும் இந்திய அரசும் இணைந்து தடுத்தே வருகின்றன. 3500 இற்கும் அதிகமான மக்கள் கடந்த 8 வருடங்களாக சம்பூருக்குள் அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் கட்டைப்பறிச்சான்‚ கிளிவெட்டி‚ மணற்சேனை‚ பட்டித்திடல் ஆகிய 4 முகாம்களில் அகதிகளாகவே வாழ்கிறார்கள்.

Admis-Map-2
பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நுரைச்சோலையில் முதலாவது அனல் மின்னிலையம் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2003 இல் இந்திய அரசின் உதவியுடன் கிழக்கில் அனல் மின்னிலையம் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. அப்போது சீனக்குடாவை அண்மித்த கந்தளாய்ப்பகுதியில் அனல் மின்னிலையம் அமைக்கத் தீர்மானித்தனர். எனினும் அனல்மின் நிலையத்துக்கான ஆரம்பநிலை ஆய்வுகள் நடைபெற்ற போது அனல் மின்னிலையத்தில் இருந்துவெளியேறும் இரசாயனங்களால் அப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் பாதிப்புறுவர் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கந்தளாய் அனல் மின்னிலையம் தமிழர் பகுதியாகிய சம்பூருக்கு மாற்றப்பட்டது. சம்பூர் யுத்தத்தின் வெற்றி இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளபப்பட்டது. சம்பூரில் 500 MW (மெகா உவாற்) அனல் மின்னிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் 2006 இல் இந்திய இலங்கை அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது. 2011 இல் இந்திய அரச நிறுவனமான National Thermal Power Corporation (NTPC) இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இத் திட்டப் பணிகளை முன்னெடுத்துவருகிறது. இந்திய நலனுக்காக சம்பூரின் பூர்வகுடிகளான தமிழர்கள் தமது நிலத்தை இழந்து 8 வருடங்களாகி விட்டது. ஏதிலிகளாக முகாம்களில் வாழ்வாதாரத்துக்காகவும் நிலத்துக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

8. வடக்கிலே ஆரம்பகால காணி சுவீகரிப்புக்கள்

வவுனியாவிலே பாவற்குளத்திலே 1956 இல் சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட போது மன்னாரிலே தமிழர்களது திராட்சைத் தோட்டம் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அதேநேரம் புத்தளத்திலே இறால் பண்ணைகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இம் மூன்று தமிழ் மாவட்டங்களிலும் சிங்களவர்களின் எண்ணிக்கை நன்கு திட்டமிட்ட முறையில் அதிகரிக்கப்பட்டது.

வவுனியா பாவற்குளம் சிங்களக்குடியேற்றம் 1956 இல் ஆரம்பிக்கப்பட்ட போது நிலம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் மூலம் இங்கு குடியேற்றப்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

மன்னார் குடியேற்றம் – மன்னாரில் 1700 ஏக்கர் நிலம் 300 தமிழ்க் குடும்பங்களுக்கு திராட்சைச் செய்கைக்காக வழங்கப்பட்டது. சிலாவத்துறை‚ கொண்டச்சி‚ மறிச்சுக்கட்டி‚ பண்டிவிரிச்சான்‚ மடு முதலான இடங்களில் தமிழர்கள் பெருமுதலீடு செய்து திராட்சையை உண்டாக்கியிருந்தார்கள். அறுவடைக்குத் தாயாராக இருந்த நிலையில் அரசாங்கத்தால் இக்காணிகள் சுவீகரிக்கப்பட்டு ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்ப்பட்டது. இதன் போது மன்னாரில் பல்வேறு இடங்களிலும் சிங்ளவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இவர்கள் விவசாயத்தையும் மீன்பிடியையும் தமிழர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார்கள். கஜவத்தை என்ற இடத்தில் பெருமளவு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராட்சைச் செய்கையை கைப்பற்றிக் கொண்டார்கள்.

9. வலிகாமம் வடக்கு தமிழர் பூர்வக மண் பறிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

விவசாயம் கடற்றொழில் இரண்டுக்கும் பெயர்போன வலிவடக்குப் பிரதேசம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 1990 இல் இராணுவ நடவடிக்கை மூலம் வலிவடக்கிலிருந்து தமிழ்மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டார்கள். கால் நூற்றாண்டுகாலமாக தமிழர்களின் 6500 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் ஆக்கரமித்துள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்பட்ட 9968 குடும்பங்கள் மீள்குடியமர்வுக்காக தெல்லிப்பழை பிரதேச சபையினால் பதிவுசெய்யப்பட்டிருப்பினும் 10040 குடும்பங்கள் தமது காணி உறுதிகளுடன் மீள்குடியமர்வுக்காக தம்மிடம் பதிந்திருப்பதாகவும் இத்தரவுகளை இராணுவம் ஏற்க மறுப்பதாகவும் வலிவடக்கு பிரதேச சபை உதவித் தவிசாளர் சஜீவன் குறிப்பிடுகிறார். வலி வடக்கினை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி பொதுமக்கள் மீள்குடியேறுவதைத் தடுத்துவரும் அரசும் இராணுவமும் இங்கே தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் உல்லாச விடுதி‚ சனாதிபதிக்கான ஆடம்பர மாளிகை‚ கோல்வ் மைதானம் முதலானவை அமைத்து நிருவகிக்கின்றனர். தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு நிலங்களை எல்லைகளை அடையாளம் காணமுடியாதவாறு செய்துள்ளனர். இங்கு இராணுவத்தினர் விவசாயத்திலும் கால் நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வலிவடக்கின் மக்களோ வாழ்வாதாரத்ததை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

வலிவடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்தில் 112 இந்துக் கோயில்கள் 15 கிறித்தவ ஆலயங்கள் 4 பாடசாலைகள் இருக்கின்றன. இந்நான்கு பாடசாலைகளும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த கோயில்களைப் பார்க்க அனுமதித்தனர். இன்று ஆலயங்களைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை‚ மயிலிட்டி‚ தையிட்டி‚ பலாலி‚ வசாவிளான் முதலான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களைப் பார்வையிடுவதற்கு இன்றுவரை அனுமதிக்கப்படவில்லை. இக்கிராமங்கள் முற்றாகவே படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாவிட்டபுரம்‚ வறுத்தலைவிளான்‚ விளான்‚ குரும்பசிட்டி‚ கட்டுவன்‚ வீமன்காமம்‚ நகுலேஸ்வரம் முதலான அயற்கிராமங்களின் பகுதிகளும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளன. மொத்தமாக 24 கிராமசேவகர் பிரிவுகளில் இருந்த மக்கள் 25 வருடங்களுக்கும் மேலாக தமது பூர்வீக இடம் திரும்ப முடியாமல் இன்றுவரை அகதிகளாக அலைந்து திரிகின்றனர்.

Population-1
வறுத்தலைவிளான் கிராமம் வலி வடக்கிலே உள்ளது. நானூறு ஏக்கர் பரப்பளவைக் கொண்டதும் 200 வருடங்கள் பழமை வாய்ந்த விநாயகர் ஆலயம் ஒன்றை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது. இக் கிராமத்தின் மேற்கு எல்லை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்திலிருந்து 1980 கள் முதலே மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேறத் தொடங்கினர் எனினும் 1990 இல் இக்கிராமமும் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கிராம மக்கள் முற்றாக வெளியேற வேண்டி ஏற்பட்டது. இன்று யுத்தம் நிறைவைடைந்து 5 ஆண்டுகள் கடந்தும் 5 சதவீத மக்கள் மட்டுமே வறுத்தலைவிளானில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Population-2

(தொடரும்)

-ஈழம் ஈ நியூஸ் இற்காக பிஞ்ஞகன்.

பகுதி 3- பார்ப்பதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
?p=116225

பகுதி 2- பார்ப்பதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
http://www.eelamenews.com/?p=116010

பகுதி ஒன்றை பார்ப்பதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
http://http://www.eelamenews.com/?p=115421