canada-2016தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கனடிய மண்ணில் கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் கனடிய தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழ் வானொலி, கனடா தமிழ் கலை தொழில்நுட்பக் கலூரி, அறிவகம் கனடா ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடா வாழ் தமிழ் மக்கள், கலைஞர்கள் கூடி தமிழ் எழுச்சியோடு சிறப்புடன் நடைபெற்றது.

 

ஊர் கூடி பொங்கல் பொங்கி கதிரவனுக்கு படைத்து மகிழ்வும் தாயக பொங்கல் காட்சியை கனடிய மண்ணில் பனி தேசத்தில் வாழும் இளையவர்களுக்கு நடைமுறைப்படுத்திக் காட்டும் வகையில் இந்த பொங்கல் விழா பெரும் திரளான குழந்தைகள் முதல் பெரியோர் வரை கூடி இடம் பெற்றது.

 

பொங்கல் பொங்கி வரும் பொழுது குழந்தைகள் “பொங்கலோ பொங்கல்” என கூவிட பெண்கள் குலவை சத்தம் ஒலித்து பொங்கலிட்ட காட்சி தாயாக பொங்கல் தித்திப்பை தந்தது.

 

பொங்கல் சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு விளக்கி கூறி, அரங்கில் தமிழர் மரபுக் கலைகளான கும்மி, கோலாட்டம், தப்பாட்டம், காவடி சிந்து போன்ற பல இயல் இசை நாடகங்களோடு கனடியத் தமிழ் வானொலிக் கலைஞர்கள் வழங்கிய “கனடிய மண்ணில் தமிழ் வாழுமா அல்லது வாழாதா” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்ற காட்சிகளுமாக திகழ்ந்தது.

 

அதே போல் மறைந்து செல்லும் தமிழர் மரபுக் கலைகளில் ஒன்றான பறை ஓசையோடு பெண்கள் ஆடிய நடனத்தையும் கனடிய தமிழ் வானொலி வழங்கி இருந்தது. இதுவும் மிகுந்த எழுச்சியை கொடுப்பதாக இருந்து.

 

ஒரு முழு நாள் பொங்கல் விழாவினை பொங்கல் பொங்குவதில் இருந்து கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கமைப்பது வரை நிகழ்த்திய மேலே குறிப்பிட்ட நான்கு அமைப்பினரும் தமிழ் தேசிய மரபுரிமை விழாவை எம் அடுத்த சந்ததிக்கு தமிழர் மரபு உரிமையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்லும் வகையில் ஒழுங்கமைத்திருந்தார்கள்.