இலங்கைத் தீவின் தென்பகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் வாழும் தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் ஒருங்கிணைப்புத் தாக்குதலில் பெருந்தொகையான தமிழ் மக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். கிறித்தவத்தை பின்பற்றும் சகோதர இனமான பல சிங்களவர்களும் அதில் பலியாகியுள்ளார்கள். அதேவேளை வெளிநாட்டவர்களும் இந்தத் தாக்குதலில் இலக்குவைக்கப் பட்டுள்ளார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் 500ஐ தாண்டியுள்ளது. பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளை வழங்கி எனது பதிவைத் தொடர்கிறேன்!

 

பத்து வருடங்களுக்கு முன்பு சிங்கள அரசாலும் பல வெளியுலக சக்திகளாலும் ஒருங்கிணைந்து தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தை நசுக்கியது மட்டுமல்ல, 200 000 வரையான எமது மக்களை இனஅழிப்புச் செய்யப்பட்ட நிகழ்வை உலகெங்கும் நினைவுகூரத் தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில் எமது மக்களுக்கு மீண்டும் ஒரு பெருந் துன்பத்தையும் அதிர்ச்சியையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது!

 

பல சர்வதே ஊடகங்களும் தென்னிலங்கையிலுள்ள சில சிங்கள கருத்தியலாளர்களும், இவ்வாறான தாக்குதல்கள் 10வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்ற விசமப் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தன!

விடுதலைப் புலிகள் தமிழர்களுடைய உரிமைகளை மீட்பதற்காக, தமிழர்களை இனஅழிப்புச் செய்துகொண்டிருந்த சிங்கள இராணுவப் படைகளையும் அரச இயந்திரங்களையும் மட்டுமே குறிவைத்து தாக்குல்களை மேற்கொண்டிருந்தார்கள்.

 

பொதுமக்களைக் குறிவைத்து ஒருபோதும் விடுதலைப் புலிகள் எந்த தாக்குதல் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. ஏன், இலங்கை வரலாற்றிலே அப்பாவித் தமிழ் மக்களை இலக்குவைத்து சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தவிர, இதுபோன்று இலங்கை வரலாற்றில் பொதுமக்களைக் குறிவைத்து ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட எந்த தாக்குதல் சம்வங்களும் இதுவரை பதிவாகியதில்லை.

 

இந்த நிலையில், இன்று முசுலிம் தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசும், சில சர்வதே ஊடகங்களும் இதே முசுலிம் தீவிரவாதிகளோடு கூட்டிணைந்து தமிழர்களை அழித்த பல நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவதில்லை.

 

இன்று இலக்குவைக்கப்பட்டவர்களும் தமிழர்கள்தான்! ஆனால், பன்னாட்டு ஊடகங்களும் சிங்கள அரச ஊடகங்களும் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டவர்கள் “கிறிஸ்ரியன்ஸ்” என்று பரப்புரை செய்கின்றார்கள். தமிழர்கள் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் வாழும் மரபைக் கொண்டவர்கள். தமிழர்களே இலங்கையில் ”கிறிஸ்ரியன்” மதத்தை பின்பற்றினார்கள். தமிழர்களே இலங்கையில் “முஸ்லிம்” மதத்தைப் பின்பற்றினார்கள். தமிழர்களே இலங்கையில் “புத்தம்” மதத்தைப் பின்பற்றினார்கள். இறுதியில், எல்லோராலும் தாக்கப்படுவது, அழிக்கப்படுவது தமிழர்களே!!

 

இன்றும் தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஒரு நாடும் முன்வராத நிலைமைதான் உள்ளது. தமிழர்களை ஒடுக்குவது மட்டுமன்றி, தமிழர்களை அழிப்பதோடு மட்டுமன்றி, தமிழர்களை அழிப்பதில் கிடைக்கின்ற பன்னாட்டு அனுதாபங்களையும் உதவிகளையும் பரப்புரைத் தந்திரத்தால் மடைமாற்றி இறுதியில் நன்மை பெறுவது சிங்கள அரசுதான்! இந்த நிலை தமிழர்களுக்கு எதிரான எல்லா அவலங்களிலும் தொடர்கிறது.

 

இந்தப் பதிவு எழுதிக்கொண்டிருந்த இந்தத் தருணத்தில் ஒரு உண்மையை சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ள செய்தியை உதயன் செய்தியில் வெளியாகியுள்ளது: “இலங்கையில் நேற்று நடந்த தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இறுதிப்போர் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தவிலை என்று அரசதரப்பு தெரிவித்துள்ளது.”

 

இந்த விடயம் பன்னாட்டு அரசுகளுக்கே நன்கு தெரியும். ஆனாலும், பன்னாட்டுப் பாமர மக்களுக்கு ஊடகங்களின் பரப்புரையில்தான் தங்கியுள்ளது.

 

இங்கே சில முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுவிட்டு இந்தப் பதிவை நிறுத்துகிறேன்.

 

  1. இவ்வாறான தாக்குதல்கள் சாதாராண சிறு அமைப்புகளால் செய்ய முடியாது.

 

  1. சக்திவாய்ந்த வெடிபொருட்களைக் கையாள்வதற்கு சிறந்த பயிற்சி இன்றி இவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டிருக்க முடியாது.

 

  1. இந்த தாக்குதலுக்காக ஒரு புலனாய்வுக் கட்டமைப்பு நீண்டகாலம் செயற்பட்டிருக்க வேண்டும்.

 

  1. ஒரு சக்திவாய்ந்த இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்போ அல்லது நாட்டினதோ தொடர்பு இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இராணுவ மற்றும் புலனாய்வுப் பயிற்சி இல்லாத சாதாரண ஆட்களால் இப்படியான ஒருங்கிணைந்த தாக்குதல்களைச் செய்யமுடியாது.

 

  1. இந்தத் தாக்குதலின் தன்மையைப் பொறுத்தவரை, இந்தத் தாக்குதலோடு எந்த அமைப்போ அல்லது நாடோ தொடர்புபட்டிருப்பதை வெளிப்படாத வகையில் தடயம் மறைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

 

  1. இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுவதற்குப் பல்வேறு காரணங்கள் ஊகிகக்கப்படகின்றன: நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு கோத்தா – மகிந்த தரப்பு ஈடுபட்டிருக்கலாம் என்று ஒருபக்க சந்தேகம். கிறித்தவர்களைக் குறிவைத்து முசுலிம் தீவிரவாதிகள் என்று ஒருப்பக்க சந்தேகம். பன்னாட்டுப் பூகோளப் போட்டியில் சிறிலங்காவில் தமது செல்வாக்கை ஆழ நிலைநிறுத்துவதற்காக சில வெளிநாட்டு சக்திகள் இதை மேற்கொண்டிருக்கலாம் என்று ஒரு பக்க சந்தேகம். விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற விசமப் பரப்புரைக்கு விடுதலைப் புலிகளின் கொள்கையும் அவர்களது ஒழுக்கமான வரலாறும் இலங்கை உட்பட பன்னாடுகளுக்கு நன்கு தெரிந்திருந்ததால் இந்த சந்ததேகம் இப்போது அறவே இல்லை.

 

என்னதான் சந்தேகங்கள் நிலவினாலும் எனது கணிப்புப்படி தென்னிலங்கையில் உள்ள சில சிங்களக் கடும்போக்கு அரசியல் – மத சக்திகளின் கையாடல்கள் இல்லாமல் இவ்வாறு திட்டமிட்ட, மிகவும் சக்திவாய்ந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களை அதுவும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க முடியாது என்பதுதான் அந்த முக்கியமாக விடயமாக உள்ளது.

 

நன்றி – த.ஞா.கதிர்ச்செல்வன்