book-tnதமிழகத்தில் சிறப்பு முகாமகளுக்கு சித்திரவதைகள் அனுபவிக்கும் உறவுகள் விடும் கண்ணீர் வெளி உலகுக்கு தெரிவதில்லை. அப்படி ஒரு உறவின் கண்ணீரோடு இரகசியமாக  இன்று எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு செய்தி:

 

“நான் முள்ளிவாய்க்காலில் இறுதி நேரம் வரை நின்று மனித குலம் நினைத்துப் பார்க்கவே முடியாத கொடிய துன்பங்களை எல்லாம் அனுபவித்து விட்டு தப்பிப் பிழைத்தோம் என நினைத்து தான் தமிழகம் வந்தோம். ஆனால் இங்கு இந்த சிறப்பு முகாம்களில் அதை விட கொடிய துன்பங்களை நித்தம் நித்தம் சுமந்து வலி சுமந்து வாழ்கின்றோம். மரணத்தோடு வாழும் எங்கள் துன்பங்களை உலக தமிழர்கள் உணரச் செய்யுங்கள்!

 

அக்கா தமிழக தலைவர்கள் எவருமே எம் சிக்கல் குறித்து அக்கறை கொள்கின்றார்கள் இல்லை. தயவு செய்து அவர்களுக்கு எம் அவலங்களை எடுத்துச் சொல்லி எம்மை விடுதலை செய்யச் சொல்லுங்கள். இது வரையில் யாருமே எம் விடயத்தில் அக்கறையோடு செயல்ப்படுகின்றார்கள் இல்லை. எம்மை விடுதலை செய்ய குரல் கொடுக்காமல் தங்கள் சுயநலத்திற்காக பேசுகின்றார்கள். உண்மையான அக்கறையோடு எங்களை விடுவிக்க யாருமே தமிழகத்தில் இல்லை அக்கா. எங்களை காப்பாற்றுங்கள்…எம் தமிழக மக்களிடம் சொல்லி எம்மை விடுவிக்க சொல்லுங்கள்…” தமிழக சிறப்பு முகாம் ஒன்றில் இருந்து ஒரு உறவு இன்று அனுப்பிய நெஞ்சை பிளக்கும் செய்தி.

 

ஈழத்து தமிழ் மக்களின் மனம் குளிர வைக்கும் பிரகடனங்களை சட்ட சபையில் நிறைவேற்றி உலகத் தமிழ் மக்கள் பாராட்டும் தேவதை செயலலிதா அம்மையார் இந்த சிறப்பு வதை முகாம்களில் ஈழத்து தமிழ் உறவுகள் தமிழகத்தில் வைத்தே வதைக்கப்படும் கொடுமையை பார்த்து கொண்டு அவற்றை மூடி எம் உறவுகளை விடுதலை செய்யாதிருப்பது ஏன்?

 

கல்லும் கரையும் சிறப்பு முகாம்களில் நடக்கும் மனித வதைகளின் கொடுமைகள் கேட்டால்…

 

பாலன் தோழர் ஈழத்து போராளியாக இருந்து தமிழகத்தில் உள்ள சிறைகளிலும் சிறப்பு முகாம்களிலுமாக 8 ஆண்டுகளை வலி சுமந்து அனுபவித்தவர். வலி சுமந்த நினைவுகளை வெறும் உணர்வு கட்டுரைகளாக மட்டும் இல்லாமல் நீதி மன்ற வாக்குமூலங்கள், கொடுமைகளின் குருதி கசியும் உண்மைகள், நம்ப முடியாத கொடூரங்கள் என தனது வலிமை மிக்க எழுத்துக்களால் “சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்ற சிறப்பு முகாம் பற்றிய முதலாவது நூலும் பாலன் தோழர் எழுதிய முதலாவது நூலும் ஆன நூலில் உண்மையின் பெரும் நெருப்பெடுத்து எழுதி உள்ளார்.

 

இந்த நூலை தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையாக போராடி வரும் தமிழ் தேச மக்கள் கட்சி தமிழகத்தில் எதிர் வரும் செப்டம்பர் 21 அன்று வெளியிடுகின்றது.

 

சிறப்பு முகாம் என்றால் என்ன? அங்கே எம் உறவுகளுக்கு நடக்கும் அநீதிகள் எவை? என சிறப்பு முகாம் பற்றிய பல்வேறு உண்மைகளை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவண வாக்குமூலங்களை இணைத்து தனதும் சிறப்பு முகாம்களில் தன்னோடு வலி சுமந்த ஈழ அகதிகளின் நினைவுகளையும் ஆதாரமாக்கி எழுதி உள்ளார்.

 

இந்த நூல் ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் உறவுகள் உள்ளத்திலும் நிலைக்க வேண்டிய உண்மைகளின் தொகுப்பு.

 

இந்த நூலை அரும்பாடுபட்டு நூலுருவாக்கி வெளி கொண்டு வரும் தமிழ் தேச மக்கள் கட்சி தோழர்களுக்கும் இந்நிகழ்வில் உரையாற்றியும் கலந்து சிறப்பித்தும் ஆதரவு நல்க காத்திருக்கும் பெருமக்களுக்கும் உலகத் தமிழினத்தின் பெரும் நன்றிகளை உளமார தெரிவிக்கின்றேன்.

 

இந்த நூல் வெளியீட்டில் கட்சி பேதங்கள் கடந்து தமிழக உறவுகள் கலந்து சிறப்பித்து நூல்களை பெற்று கொள்வதோடு தமிழகத்தில் சிறப்பு முகாம்களை மூடி மனித வதை முகாம்களில் இருந்து ஈழத்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் பெரும் கடனிலும் உணர்வுள்ள தமிழினமாக அனைவரும் அணி திரண்டு பணியாற்ற அணி சேருங்கள் என அனைத்து தமிழக உறவுகளையும் அன்போடு வேண்டுகின்றேன்.

 

மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வது ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் கடமை. அதை பாலன் தோழர் செவ்வனவே இந்த நூலில் செய்துள்ளார். மக்களின் போராட்டத்தை மக்களே முன்னெடுப்பார்கள். காரணம் தமிழக மக்கள் உணர்வுள்ளவர்கள்! இதுவே என் நம்பிக்கை. இதுவே என் எதிர்பார்ப்பு! இதற்கு மேலும் ஏமாற்றங்கள் வேண்டாம்! எம் உறவுகளுக்கு சலுகைகளை கொடுக்கும் பிச்சையை தமிழக அரசிடமோ இந்திய அரசிடமோ நாம் கேட்கவில்லை.

 

அவர்களை வாழ விடுங்கள்!

 

மனித உயிரின் மகத்துவத்தை மதித்து அவர்களை விடுதலை செய்யுங்கள். சிறைகளை விட கொடிய சிறப்பு முகாம்கள் தமிழகத்தில் மூடப்பட வேண்டிய உந்து சக்தியை இந்த விழிப்புணர்வு நூல் வலிமையாக உந்தி முனைவிக்கும் என்ற நம்பிக்கையோடு அனைத்து தமிழக உறவுகளிடமும் எம் உறவுகளின் விடுதலைக்காக கையேந்தி இந்த இந்த நூலின் வெற்றிக்கும் சிறப்பு முகாம் மூடவும் மனமார வாழ்த்துகின்றேன்.

 

• நூல் வெளியீட்டு விபரம்

 

“சிறப்புமுகாம் என்னும் சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாம்”

 

அமெரிக்காவின் குவாண்டநாமோ சித்திரவதை முகாம் பற்றி அறிந்த அளவிற்கு, கிட்லரின் யூத சித்திரவதை முகாம்கள் பற்றி அறிந்த அளவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் பற்றி உலகம் இதுவரை அறியவில்லை.

 

இதில் வேதனை என்னவென்றால் தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்திரவதை முகாம் கொடுமைகள் பற்றி தமிழர்களே இன்னும் முழுமையாக அறியாமல் இருப்பதே.

 

அமெரிக்காவின் குவாண்டநாமோ சிறை கொடுமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகக் குறைந்தது அதை ஒத்துக்கொள்ளவாவது செய்கிறார். அந்த வதைமுகாமை மூடுவதற்கு தான் எவ்வளவோ முயன்றதாக பேட்டியும் கொடுக்கிறார்.

 

ஆனால் தமிழ் அகதிகளின் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை ஒத்துக் கொள்ளவுமில்லை. அது குறித்து வாய் திறப்பதும் இல்லை.

 

‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!’ என்று தமிழக மக்கள்; பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால் அது தன்னை நம்பி வந்த ஈழத் தமிழ் அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்துத் துன்புறுத்துகின்றது என்பதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள்.

 

(நூலில் இருந்து சில வரிகள்)

 

இந்நூல் எந்தளவுக்கு ஒரு ஆவணமாக எதிர்காலத்தில் பயன்படும் என எனக்கு தெரியவில்லை. ஆனால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு சிறிதளவேனும் இந்நூல் உதவுமேயாயின் அதுவே எனக்குப் போதும். ஏனெனில்; எனது நோக்கமும் அதுவே.

 

இந் நூல் வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் எனது தோழமை கலந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.

 

செந்தமிழினி பிரபாகரன்.