எமது நாட்டில் இருந்து சென்ற நீங்கள் வேறு ஒரு நாட்டில் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மீண்டும் எமது நாட்டுக்கு திரும்பும்போது தண்டனையை பெறவேண்டியிருக்கும் என பிரிதானியாவின் பி.பி.சி ஊடகமானது பிரித்தானியாவில் இருந்து சிரியாவுக்கு போரிடச் சென்ற 40 இற்கு மேற்பட்ட பிரித்தானியா முஸ்லீம் யுவதிகளிடம் கேள்வியை எழுப்பியிருந்தது.

பி.பி.சி ஊடகவியலாளர் இந்த கேள்வியை கேட்டபோது யுவதிகளில் பலர் கலாஸ்னிகோவ் துப்பாக்கியுடன் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இந்த கேள்வியால் சற்றும் கலங்காத அவர்கள் கூறிய ஒரே பதில் “நாங்கள் திரும்பி வரமாட்டோம்” என்பது தான்.

லிபியாவில் இடம்பெற்ற சமர்களிலும், ஈராக்கில் இடம்பெற்ற சமர்களிலும் பிரித்தானியா உட்பட பல நாடுகளில் இருந்து சென்றவர்கள் பங்கெடுத்திருந்தனர். இவ்வாறு பங்கெடுத்தவர்களில் பலர் நாடு திரும்பியதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். சிலர் திரும்பவேயில்லை.

gelb-mann
தற்போது காசாவில் இடம்பெறும் தாக்குதலிலும் இஸ்ரேல் இராணுவத்திற்கு உதவியாக மேற்குல நாடுகளில் இருந்து பல யுதமக்கள் சென்று உதவிகளை மேற்கொண்டும், தாக்குதலில் நேரிடையாக பங்குகொண்டும் வருகின்றனர். இஸ்ரேல் இராணுவத்திற்கு உற்சாகம் கொடுப்பதற்காகவும் பலர் அங்கு சென்றுள்ளனர்.

பல நாடுகளில் இருந்தும் சென்ற 2500 இற்கு மேற்பட்ட யூத இன இளைஞர்களும், யுவதிகளும் இஸ்ரேல் இராணுவத்துடன் இணைந்து மோதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களில் 145 இற்கு மேற்பட்டவர்கள் கனடாவைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர்ந்து சென்று பல நாடுகளில் அவர்கள் வசிக்கின்றபோதும், தமது தாய்நாட்டுக்கும் தமது இன மக்களுக்கும் ஒரு ஆபத்து என்றவுடன் போராடுவதற்காக அங்கு சென்றுள்ளார்கள்.

ஓவ்வொரு வருடமும் Garin Tzabar என்ற செயற்திட்டத்தின் அடிப்படையில் 18 இற்கும் 23 இற்கும் இடைப்பட்ட வயதுடைய கனேடிய இளைஞர்களும், யுவதிகளும் போரில் பங்குகொள்வதற்காக இஸ்ரேல் செல்வதுண்டு. இவை தவிர தனிப்பட்டரீதியாகவும் பல யூத இனத்தவர் இஸ்ரேலுக்கு சென்று போரிடுகின்றனர். இவ்வாறு சென்றவர்களில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

எனினும் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமது நாட்டுக்காக போராடுவதை புலம்பெயர்ந்து வாழும் யூதமக்கள் கைவிடவில்லை. மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்றுவரும் இரண்டாம்வருட 19 வயது மாணவி ஒர்லி புரேவரின் காலம் முன்னர் பகலில் கல்வியும், இரவில் விடுதிகளில் ஆட்டமுமாக கழிந்தது ஆனால் தற்போது பகலில் காசாவில் போரிடுவதும் இரவில் தனது தலையணைக்கு கீழே துப்பாக்கியுடன் இஸ்ரேலின் மேற்குக் கரையில் உறங்குவதுமாக கழிகின்றது.

பொறியியல் கல்வி மாணவர்கள், கணிணித்துறை நிபுணர்கள், மருத்துவ மாணவர்கள் என பல யூத இன புலம்பெயர் மக்கள் தமது அறிவையும், ஆற்றலையும் தமது தாய்மண்ணுக்காக வழங்கிவருகின்றனர். இதில் அவர்கள் தமது சுக துக்கங்களை பார்ப்பதில்லை.

அமெரிக்காவில் இருந்து சென்ற 24 வயதான ஸ்ரென்பேர்க் வார இறுதியில் இடம்பெற்ற சமரில் தனது உயிரைத்துறந்திருந்தார். ஆனாலும் அவர்களின் பயணங்கள் ஓயப்போவதில்லை.

மறுபுறம் பலஸ்த்தீனத்தைப் பொறுத்தவரையிலும் மேற்குலகத்துடன் இணைந்து நிற்கும் சில அரபு நாடுகளைத்தவிர ஒட்டுமொத்த அரபு நாடுகளும், அரபு நாடுகள் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லீம் மக்களும் அதன் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் முஸ்லீம் என்ற தமது இனத்தின் குடையின் கீழ் அணிவகுத்து நிற்கின்றனர்.

warsi-uk
அதற்கு சிறந்த உதாரணம் பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த அமைச்சர் பரோனஸ் வர்சியின் பதவிவிலகல். தற்போது நடைபெறும் போரில் 1900 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்காக வர்சி தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டார். தனது அரசு சமத்துவமானது என்பதை காண்பிப்பதற்கும், முஸ்லீம் மக்களின் வாக்குக்களை கவர்வதற்காகவும் பிரித்தானியா பிரதமரினால் நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லீம் பெண் அமைச்சரான வர்சி பிரித்தானியாவின் முகத்திரையை உலக அரங்கில் அகற்றிவிட்டார்.

ஆனால் தற்போது காசிவில் இடம்பெறுவதைப் போல 50 மடங்கு அதிகமான அழிவுகள் 2009 ஆம் ஆண்டு சிறீலங்காவின் வடபுலத்தில் இடம்பெற்றன, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாடசாலைகள், அகதி முகாம்கள், வைத்தியசாலைகள் என்பன குண்டுவீசி அழிக்கப்பட்டன.

பெருமளவான இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டபின்னர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இருந்த அரசியல்வதிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கு ஆதரவாக போரிடுவதற்கும் புலம்பெயர் தேசங்களிலோ அல்லது தமிழகத்திலோ இருந்து வன்னிக்கு யாரும் செல்லவில்லை.

அன்று தமிழத்தை ஆட்சி செய்தவர்கள் போரைப் பயன்படுத்தி இந்திய மத்திய அரசுடன் பேரம் பேசி தமது குடும்பச் சிக்கல்களை தீர்த்துக்கொண்டனர், ஏனைய பல சிறிய கூட்டணிக் கட்சிகள் பெரிய கட்சிகளுடன் பேரம்பேசி தமது சிற்றின்ப ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டன. அதனையும் மீறி வீதியில் இறங்கிய ஒருசில தமிழின உணர்வாளர்களின் குரல்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டன. ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூட தனது பதவிகளைத்துறக்க தயாராக இருக்கவில்லை.

கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேல் அறிவித்த போர்நிறுத்தம் நேற்றுடன் (08) முடிவுக்கு வந்ததுடன் அங்கு மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகி உள்ளன. போர் நிறுத்தத்தை நீடிக்க இஸ்ரேல் விரும்பிய போதும் ஹமாஸ் அதனை விரும்பவில்லை. போர்க்களத்தின் இழப்புக்களைப் பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாக இடம்பெறும் போரில் ஏறத்தாள ஒரு இஸ்ரேலிய வீரருக்கு பதிலாக தனது ஐந்து உறுப்பினர்களை ஹமாஸ் இழந்துள்ளது. அதாவது 63 இஸ்ரேலிய படையினரும் 300 ஹமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

istral
பொதுமக்கள் தரப்பில் 1600 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். களமுனையில் இஸ்ரேலுக்கு வெற்றி எனவும், பிரச்சார முனையில் ஹமாஸ் இற்கு வெற்றி எனவும் கணிக்கப்படுகின்றது. எனினும் கடந்தகால போர்களுடன் ஒப்பிடும்போது இந்தப்போரில் இஸ்ரேலின் இழப்பு மோசமானது.

அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைத் தடுப்பு பொறிமுறைகள், உளவுவிமானங்கள், துல்லியமாக தாக்கும் குண்டுகள் போன்றவற்றை இஸ்ரேல் பயன்படுத்திய போதும் சாதாரண கலாஸ்னிகோவ் தூப்பாக்கிகளாலும், உள்ளுரில் தயாரிக்கப்படும் றொக்கட்டுக்களாலும் ஹமாஸ் அதிக சேதங்களை இஸ்ரேலியப் படையினருக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்தப்போரில் மூன்று வாரங்களில் 2500 றொக்கட்டுக்களை ஹமாஸ் ஏவியபோது 4500 இற்கு மேற்பட்ட வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டிருந்தது. 25 மைல் நீளமான இந்த குறுகிய நிலப்பரப்பில் நடைபெறும் போரில் இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்கள் மோசமானவை. ஆனாலும் போர் தொடர்கின்றது. தமது நிலப்பரப்பைச் சுற்றி இஸ்ரேலினால் போடப்பட்ட தடைகளை உடைத்து பிரகடனப்படுத்தப்படாத இஸ்ரேலின் திறந்தவெளிச் சிறையில் இருந்து மீள்வது தான் ஹமாஸ்இன் முக்கிய நோக்கம். எனவே தான் போர் நிறுத்தத்தை நீடிக்க இஸ்ரேல் விரும்பிய போதும் ஹமாஸ் அதனை விரும்பவில்லை.

ஈழத்தின் நிலையும் தற்போது அப்படித்தான் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமான ஊடகங்களோ அல்லது மனித உரிமைப் பாணியாளர்களோ அங்கு பணியாற்ற முடியாது. சத்தமின்றி இடம்பெறும் இனஅழிப்பில் தமிழ் இனத்தின் அடையாளமும், காலாச்சாரமும், நிலமும் மெல்ல மெல்ல பறிபோகின்றது. எனினும் இஸ்ரேலுடனும், பலஸ்த்தீனத்துடனும் ஒப்பிடும்போது ஈழத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும் அல்லது போராடும் புலம்பெயர் மக்களினதும், ஏனைய நாடுகளில் வாழும் மக்களினதும் எண்ணிக்கைகள் மிகவும் சொற்பமே. தமிழ் இனத்தின் அழிவுக்கான பிரதான காரணமும் அதுவே.

ஈழம்ஈநியூஸ்இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.
தொடர்புகளுக்கு: arushrp@gmail.com