தமிழ் இனத் துரோகிகளைத் தோற்கடியுங்கள்! தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு…ஓவியர் வீர சந்தானம் வேண்டுகோள்!

0
674

அன்புமிக்க தமிழக மக்களே!

எதிர்வரும் 24.04.2014ஆம் நாள் இந்தியநாடு தனது 16-ஆம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. நமது தமிழ்நாட்டில் அந்தத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து அதன் அடிப்படையில் வாக்குவேட்டைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் இந்தத் தேர்தலில், நமது தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக இருக்கும் புதுச்சேரியிலும் யார் யாருக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு, அனுப்பப் போகிறோம் என்பதில் நாம் மிக மிக கவனமாக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

snathanan-tn
யார் யார் வெற்றிபெற வேண்டும் என்பதைக் காட்டிலும் யார் யார் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக மிக மிக எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டிய நேரம் இது. இந்தத் தேர்தலில் நமது தமிழ்நாட்டிலும் புதுவையிலும் பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்ட்க கட்சிகள், காங்கிரஸ் என்று ஐந்து பிரிவாக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்தும் உங்களைச் சந்தித்து வாக்குகளை வேண்டி வேண்டிக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நீங்கள் யார் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? உங்களது வாக்குகளைப் பெறுகிற தகுதி எந்தெந்த கட்சிகளுக்கு இருக்கின்றன? நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அப்படிச் சிந்தித்துப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி என்கிற தமிழினத்திற்கு எதிரான கட்சியின் கொடூர முகம் உங்கள் கண்களுக்கு நன்றாகத் தெரியும்.

2009-ஆம் ஆண்டு இலங்கையின் தமிழீழத்தில் தமிழ் இனத்தையே துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்து ஓர் இனப்படுகொலையை அரக்கேற்றிய கொடுங்கோலன் ராஜபட்சே கும்பலுக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகம். எத்தனை யுகங்கள் ஆனாலும் மன்னிக்க முடியாது. மறக்க முடியாதது. இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரிக்கின்றன. ஆனால் இந்தியா அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டது. இது நடந்தது கடந்த மார்ச் மாதம் அதாவது 27.3.2014ஆம் நாள்.

அதாவது நேற்று மட்டுமல்ல. என்றைக்குமே காங்கிரஸ் கட்சியும் அதன் அரசும் தமிழர்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்யும் என்று அந்தக் கட்சி மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் கூட இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு வந்துள்ளனர். அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்த செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டிருப்பது இலங்கை அரசுதான். இந்திய அரசல்ல. தமிழர்களின் கழுத்தை அறுக்கிற வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து ரகசியமாகச் செய்துவருகிறது. தமிழ் ஈழத்தில் லட்சக்கணக்கில் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்தனர்.

இந்திய அரசு கொடுத்த கொலைக் கருவிகளும், இந்திய ராணுவ மூளைகளும்தான். 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலிலேயே கொலை செய்து, இன்றைக்கும் நாள்தோறும் கைது செய்து கொண்டிருக்கின்ற இலங்கையின் கடற்படையின் அட்டூழியங்களை இன்றுவரை வேடிக்கைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிற காங்கிரஸ் அரசு இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதி மீனவர்கள் மற்ற நாடுகளால் என்றைக்கோ ஒரு நாள் பாதிக்கப்படும்போது துடிதுடித்துப் போகிறது. நதி நீர் உரிமைகள், தமிழக மீனவர் பிரச்சனை, இலங்கைத் தமிழர் படுகொலைகள் என்று அனைத்து நிலையிலும் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்துவருகிறது காங்கிரஸ் கட்சி. ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்துவிட்டு, தமிழகத் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்கு வேட்டுவைத்துக்கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்டு வரும் காங்கிரஸ் கட்சியை நீங்கள் எதைக்கொண்டு விரட்டுவிர்கள்?

தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் கூட்டுச்சேராக் கட்சிகளே கிடைக்காத நிலையில் ஓர் அனாதைப் பிணம் போலத் தனித்தே போட்டியிடுகின்ற காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் கருவறுத்து ஒழித்து கட்டுகிற கடமை தமிழர்களாகப் நிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டா இல்லையா? சனிக்கிழமை செத்த பிணமாவது ஒரு கோழிக்குஞ்சை தன் பாடையில் கட்டிக்கொண்டு போகும். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதுபோன்ற ஒரு கோழிக்குஞ்சு கூட கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? இத்தகையக் கொடுங்கோல் காங்கிரஸ் கட்சியுடன் நேற்றுவரை கூடிக்குளவிக் கூட்டு வைத்துக்கொண்டு பதவி சுகத்தை அனுபவித்த சில தமிழகக் கட்சிகள் இன்றைக்கு அதைக் கழற்றிவிட்டுவிட்டு தனி அதி அமைத்துக்கொண்ட இழி செயலை எப்படிச் சகித்துக்கொள்ளப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி தமிழ் இனப்படுகொலை செய்தபோது அதனுடன் கூட்டணி, தேர்தல் வரும்போது தனி அணியா? துள்ளத்துடிக்க தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு தமிழ் இனத்துக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 25 தமிழ் தியாகிகளின் ஆன்மா மன்னிக்குமா? அல்லது நீங்கள்தான் மன்னிப்பீர்களா?

தமிழக மக்களே சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட டெப்பாசிட் வாங்கக்கூடாது என்று சபதமெடுத்து செயல்பட்டு அக்கட்சியை ஒழிப்பதில் வெற்றி காணுங்கள்.

ஏனெனில், காங்கிரஸ் வெற்றி அடைந்தால்

தமிழினமும் தமிழகமும் தோல்வியடையும்!

காங்கிரஸ் தோல்வி அடைந்தால்

தமிழினமும் தமிழகமும் வெற்றியடையும்!

மறவாதீர்கள்… மறந்தும் இருந்து விடாதீர்கள்!

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டிய நாள் – 24.4.2014.

காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்களுக்கு துணைபோன கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டிய நாள் 24.04.2014.

ஈழத் தமிழர் விடுதலைக்கும், தமிழகத் தமிழர் மேன்மைக்கும் எல்லாவகையிலும், களமிறங்கிச் செயலாற்றிய, இப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிற கட்சிகளுக்கு மறவாமல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய நாள் 24.4.2014.

தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்!