தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது.

அதன் பிறகு தமிழகத்தில் உள்ள தமிழ் தேசிய அமைப்புகளில் திராவிடக் கொள்கை இல்லாத அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய சிந்தனையுள்ள அமைப்புகள், ஈழத்திற்காக போராடிய மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு கடந்த 20ந் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் என்று சுமார் 650 பேருக்கு நெடுமாறன் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினார். அரசியல் தலைமையகமான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

kodi-arimugam-1
அந்த கடிதத்தில் ஜூன் 29ந் தேதி காலை தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய ஆலோசனை நடத்துவது என்றும் மாலை 2வது அமர்வில் புதிய கட்சிக்கு பெயர் வைப்பது, கட்சிக்கு கொடி உருவாக்குவது, கொள்கைள் விளக்குவது என்பது பற்றியும் ஆலோசனைகள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் தமிழ் தேசிய முன்னணி என்ற பொதுவான தமிழ் தேசிய அமைப்பின் கீழ் இயங்குவதாக ஏகமனதாக முடிவெடுக்கப் பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் கூடங்குளம் உதயகுமார், இயக்குநர் கௌதமன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்த் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் மற்றும் தமிழ்தேசிய அமைப்புகள் அந்த அமைப்பிற்கான மஞ்சள் மற்றும் நீல நிறம் கலந்த கொடியினை அறிமுகம் செய்யது வைத்தார்.

முன்னைய அறிக்கை:

அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி உதயம்!

29 06 2014

இன்று தஞ்சாவூர் முள்ளிவாய்க்கள் நினைவு முற்றத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைந்து அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இன்று காலை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கள் நினைவு முற்றத்தில் 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தமிழ்தேசிய இயக்கங்களுக்கான கலந்துரையாடலில் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து தமிழருக்கான ஒரு தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இது தொடர்பாக அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் :

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்வதற்குரிய காலம் கனிந்துள்ளது. தனித் தனியாக இயங்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ,தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழீழத் தமிழர்களுக்கு நேரிட்ட அழிவும் அவலமும் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது . தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் வலிமையாகவும் செயல்பட்டால்தான்.

உலகத் தமிழர்களை காக்க முடியும் அதற்கு தமிழ் தேசியர்கள் தம்முள் இணைந்து வலிமையான ஒரு அமைப்பாக உருவாக வேண்டும்.

தமிழ்நாட்டின் இயற்க்கை வளங்கள் வந்தேரிகளாலும் , பன்னாட்டு நிறுவனங்களாலும் சூரையாடபடுகின்றன. இந்த நிலை தொடருமானால் நமது எதிர் காலத் தலைமுறை வளங்குன்றிப்போன தமிழகத்தில் தான் வாழ நேரிடும் காவேரி , முல்லை பெரியாறு , மீனவர் பிரசனை போன்றவற்றை தமிழகத் தேசியப் பிரச்னைகளில் முக்கியமானவையாகும் . உச்சநீதிமன்றம் நமக்கு நியாயம் வழங்கியப் பிறகும் நம்மால் அதன் பயனை பெறமுடியவில்லை. மத்திய அரசு நம்மை அலட்சியம் செய்கிறது.

தமிழ் நாட்டில் கல்வி , ஆட்சி , வாழிபாடு ஆகியவற்றில் தமிழுக்கே இடமில்லை ஆங்கிலமே இன்னும் அரசால்கிறது. கோவில்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆதித் தமிழர்கள் இழிவிற்கும் வன்கொடுமைக்கும் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். ஆதித் தமிழர்களின் விடிவு இல்லாமல் தமிழ்த் தேசிய இனம் விடிவு வராது.

இன்னும் பல துறைகளில் நாம் புறக்கணிக்கபடுவது தொடர்கிறது இவற்றையெல்லாம் அகற்றி தமிழுக்கும் தமிழருக்கும் போடப்பட்டிருக்கும் விலங்கைத் தகர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியர்களுக்கே உண்டு.

எனவே தமிழ்த் தேசியர்கள் தமக்குள் நிலவும் சிறுசிறு வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அகற்றிவிட்டு ஒன்றுபடவேண்டும். இந்த உரிய நோக்கத்துடன் தஞ்சையில் கூட்டம் நடை பெற்றது.