தமிழ் நிலம் மீட்கப்படாதவரை தமிழ்ப்பெண்கள் அவலம் தொடரவே செய்யும்..

0
768

நேற்று அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு நம்மில் சிலர் பெண்போராளிகளின் தியாகத்தையும் வீரத்தையும் பட்டியலிட்டு மீண்டும் மக்களை போராட அழைப்பு விடுத்தவுடன், இதற்கென்றே காத்திருந்தது போல் ஒரு கும்பல் “வாங்கின அடி காணாதா? போராட்டம் ஒரு கேடா? பெண்போராளிகள் பிச்சை எடுக்கிறார்கள், பாலியல் தொழில் செய்கிறார்கள், எல்லோராலும் கைவிப்பட்டுவிட்டார்கள்” என்று கிளம்பி விட்டது.

landcrab
இதற்கெல்லாம் பதில் எழுதி சலித்து விட்டது.. திரும்பவும் முதல்ல இருந்தா? பரவாயில்லை என்ன செய்வது குதர்க்கம் கதைப்பவர்கள் இருக்கும்வரை எழுதுவதை நாமும் விட முடியாதுதானே!

மனித இனத்தின் மிகப்பெரிய வரம் மறதி..உளவளத்துணை ஆலோசனைகளின் மையமாக மனித மனத்தின் இந்த நிலைதான் சரிபார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவும் அதன் பின்னான அவலங்களிலிருந்தும் ஒரு இனம் தன்னை மீட்க பெரும்பாடுபடுகிறது. எதிரிகள் “நினைவு அழிப்பு” அரசியலை மையமாக வைத்து எமது கடந்த காலத்தை மன அடுக்குகளிலிருந்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மாறாக மே 18 இற்கு பின்னான நினைவுகளை மட்டும் தொடர்ந்து எங்களுக்கு இருக்குமாறும் ஞாகபப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஆனால் மறுவளமாக நாம் மே 18 இற்கு முன்னான நினைவுகளை மீட்டெடுக்கவும் மே 18 இற்கு பிறகான அவலங்களை மறந்துவிடவும் முயன்று கொண்டிருக்கிறோம்.

ஒரு தீவில் வாழும் இரு இனங்களின் உளவியல் முரண்படும் புள்ளி இது. இதுவே அந்த இரு இனத்தினதும் அரசியலாகவும் இருக்கிறது. இது இப்போது தேவையில்லை.

நாம் மேற்படி குதர்க்கவாதிகளின் “நுண் அரசியலுக்கு” வருவோம்..

நந்திக்கடலோரம் கிடந்த பெண்போராளிகளின் நிர்வாண உடல்கள் அங்கு நடந்தவற்றையும் இனி எமது இனப்பெண்களுக்கு நடக்க இருப்பதையும் வெளிப்படையாக சொல்லிவிட்டன.. இதில் எந்த புலனாய்வும் கண்டுபிடிப்பும் தேவையில்லை. மே 18 ஐயும் தடுப்பு முகாம் வாழ்வையும் தாண்டி எமது பெண்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல ஒரு இனமே மறக்க விரும்புகிற கதைகள் அவை.

அவற்றை ஞாபகப்படுத்துவதன் அரசியல்தான் என்ன? தொடரும் அவலத்திற்கு எம்மையை குற்றவாளிகளாக்கும் தந்திரம்தான் என்ன.?

நடந்த இன அழிப்பை உறுதிப்படுத்த – போர்க்குற்ற விசாரணைக்காக ஐநா விற்கு அனுப்புவதற்காகக்கூட நாம் பெரும்பாலான பெண்போராளிகளிடம் அதை கேட்டு பதிவு செய்யவில்லை. காரணம் அவர்களை அந்த நினைவுகளிலிருந்து மீட்டுவிட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணம்தான் அது.

ஏனெனில் ஒரு இனத்தின் ஆதாரமும் இருப்பும் பெண்கள்தான். அவர்களின் ஆரோக்கியமே அந்த இனத்தின் ஆரோக்கியத்தை குறிக்கும். அவர்களின் உளவியலை சீர்படுத்துவதனூடாக நாம் மீண்டும் ஒரு உறுதியான நிலையை அடையலாம். அதுதான் இன அழிப்பு அரசு மே 18 இற்கு முன்பும் பின்பும் அவர்களையே குறிவைக்கிறது. இது அன அழிப்பின் நுண்வடிவம்.

இங்கு பெண் போராளிகளை கற்பிழந்தவர்களாக(அது சரி கற்பு என்றால் என்னவென்று விளக்கம் செய்தால் நாமும் தெரிந்து கொள்ளலாம்) பாலியல் தொழிலாளிகளாகவும் முன்னிறுத்தி அவர்களின் சீரமைக்கப்பட்ட உளவியலை குறிவைக்கும் நோக்கம்தான் என்ன.?

தமிழனுக்கு எதையாவது உதாரணம் காட்டி சொன்னால்தான் இங்கு புரியும் நிலை. “சோளகர் தொட்டி ” என்று ஒரு நாவல். வீரப்பனை தேடுகிறோம் என்ற போர்வையில் பழங்குடி பெண்களை தமிழக -கர்நாடக காவல்துறையினர் சீரழித்த கதை. அங்கு பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தபட்ட போதும் வீட்டிற்கு வந்து குளித்து முடிந்த பின்னர் தாம் புனிதமடைந்ததாக உணர்வார்கள். அவர்களை அந்த இன ஆண்களும் இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

நாமும் எமது பெண்களை அந்த நிலைக்கு கொண்டு வர கஸ்டப்பட்டு முயன்று வெற்றிபெற்றிருக்கிறோம். ஆண்களும் சமூகமும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் நிலையையும் படிப்படியாக கொண்டு வந்துவிட்டோம்.

மாறிவரும் ஈழத்து ஆண்களின் இயல்பான மனநிலைக்கு இன்னொரு உதாரணம். அண்மையில் பிபிசி ஊடகவியலாளர் பிரான்சேஸ் கரிசன் எழுதிய நூலில் ஒரு சம்பவம் வருகிறது. ஒரு பெண் போராளி தனக்கு நடந்த பாலியல் வல்லுறவு கொடுமையை அவரிடம் விபரிக்கவிட்டு விட்டு நாசூக்காக அந்த இடத்திலிருந்து நகரும் அவரது கணவனை பற்றிய சித்திரிப்பு..

இது நாம் தோல்வியிலும் அழிவிலும் ஒரு சமூகம் தொடர்பாக அடைந்த முற்போக்கு வெற்றி.. இதையெல்லாம் இங்கு பலர் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவதன் பின்னணி என்ன?

இந்த மாதிரியான எழுத்துக்கள் நுட்பமாக மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியப்படுத்துவதுடன் போராளிகளின் அவலத்திற்கான பழியை மக்கள் மீதே திருப்பி போடும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி.

அதிகமாக வேண்டாம். ஒரு கேள்வி.. பாலியல் கவர்ச்சி அல்லது பாலியல் தூண்டுதல் என்பது பாலியல் தொழிலின் அடிப்படை மையம். போரில் பதிக்கப்பட்ட ஊனமுற்ற ஒரு பெண்ணை ஒருத்தன் தனது பாலியல் தேவைக்கு எப்படி தோர்ந்தெடுப்பான்? என்ற தர்க்கம் இங்கு விளக்கப்படவில்லை. இன சுத்திகரிப்பு நோக்குடன் சிங்கள பாலியல் தொழிலாளர்கள் பரவலாக களமிறக்கி விடப்பட்ட புறச்சூழலில் இந்த தேர்வு எத்தகையது.? மனமிரங்கி அந்த பேண்ணை தேர்வு செய்பவன் அந்த பணத்தை சும்மாவே கொடுப்பான். பாலியல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு கொடுக்க மாட்டான்.

இதற்காக அங்கு பாலியல் தொழிலாளிகளாக நமது பெண்கள் மாற்றப்படவில்லை என்று சொல்ல வரவில்லை. இன அழிப்பு நோக்குடன் பல பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்டுள்ளதும் உண்மைதான். ஆனால் அதற்கு யார் காரணம் என்ற தெளிவான பார்வை அவசியம். எழுந்தமானமாக செய்திகளை காவக்கூடாது.. இந்த அவலத்தின் சூழச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

war-crime
மிகவும் கஸ்டப்பட்டு நாம் மீட்டெடுத்த எமது இனத்து பெண்களின் உளவியலுடன் விளையாடும் கபடம் நிறைந்த தந்திரம் இது.

எமது பெண் போராளிகள் தற்போது எதிர்பார்ப்பது தாமும் சகமனுசி என்ற எமது சுமூகத்தின் தோழமையைத்தான். ஆனால் அந்த தோழமை அவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்று இன அழிப்பு அரசு தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும் நமது சமூகம் அந்த தடையை உடைத்து அவர்களை அரவணைத்துவரும் சூழலை திட்டமிட்டு திசைமாற்றும் போக்கு இது

ஒரு பெண் போராளி குறிப்பிட்டார்..” நான் போராளி. எனக்கும் எனது குழந்தைகளுக்கும் ஏன் யாரும் உதவி செய்ய வேண்டும்? எனக்கு மன உறுதி மட்டுமல்ல உடல் உறுதியும் இருக்கிறது. ஆனால் என்னை எனது ஊரில் குடியேற்ற வேண்டும்.நான் எனது மண்ணில் எனக்கு தெரிந்த கடற்தொழிலை செய்து நானும் குழந்தைகளும் பிழைத்துக்கொள்வோம். ஆனால் திட்டமிட்டே என்னை இந்த காட்டுக்குள் விட்டிருக்கிறார்கள். இங்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார்.

இது தான் இன அழிப்பு உத்தி.. கடலில் இருந்த மீனை பிடித்து எல்லாம் தண்ணீர்தானே என்று குளத்தில் விட்டால் என்ன நடக்கும்? எமது மக்களுக்கும் நடப்பது அதுதான்..

அவர்கள் தமது பரம்பரை தொழிலை இழந்து ஊர் என்ற அடிப்படையில் ஒன்றுபடும் தோழமையை இழந்து குடும்ப நட்புக்களில் இருந்து துண்டாகி வேறாக்கப்பட்டு வாழ்வை மட்டுமல்ல அதற்கான உறுதியையும் உளவியலையும் இழந்து நிற்கிறார்கள்..

இது திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இனப்படுகொலை அரசின் நுண்மையான இன அழிப்பு உத்தி. இதுகூட தெரியாமலா நாங்கள் போராட வெளிக்கிட்டனாங்கள்.. ?

எல்லாவற்றையும் தாண்டியது போல் இதையும் கடந்து போவோம்..அதுவே எமது இனத்தின் சிறப்பாகவும் எதிரிகளின் கலக்கமாகவும் இருக்கிறது.

இனி பிச்சைஎடுக்கிறார்கள் என்ற கதைக்கு வருவோம்

எமது ஈழத்து பெண்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. மே 18 இற்கு முன்பும் அதற்கு முந்திய போருக்கு முற்பட்ட காலங்களிலும் சரி வீட்டு செலவுக்கு கணவர்மாரின் கைகளை பெரும்பாலும் நம்பியிருந்தவர்கள் இல்லை.

வெளியில் ஒரு தொழிலை புரிந்த பெண்கள்கூட வீட்டில் தமது நிலத்தில் குடிசைத்தொழில் என்று கூறப்படும் சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டவர்களே..

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பாற் பண்ணை, சிறு விவசாயம், புகையிலை உற்பத்தி, மீன் பதனிடுதல், கருவாடு தயாரித்தல், பனைவள உற்பத்தி என்று அதன் பட்டியல் நீளம்..

எனவே எமது பெண்கள் போருக்கு பின் பிச்சை எடுக்கிறார்கள், பாலியல் தொழில் செய்கிறார்கள், மற்றவர்களின் கையை பார்த்து கொண்டு நிற்கிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.

நிலைமை ஓரளவிற்கு சிக்கலானதுதான். ஆனால் அதற்கு காரணம் இன அழிப்பு அரசே தவிர வேறு யாருமல்ல. அவர்களை அவர்கள் நிலத்தில் வாழ விட்டாலே போதும் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

அந்த நிலத்தில் தமக்கு தெரிந்த சிறு தொழில்களை – பரம்பரையாக செய்து வரும் தொழில் முயற்சிகளை செய்து தம்மை பாதுகாத்து கொள்வார்கள். ஆயதம் தூக்கி போராடியவர்களுக்கு தொழில் செய்யத் தெரியாதா என்ன?

ஆனால் என்ன அதற்கு அவர்களுக்கு அவர்களது சொந்த நிலம் வேண்டும்.

எனவே அனைத்து அவலத்திற்கும் முற்றுப்புள்ளியாக எமது பெண்கள் வாழ்வதென்றால் அவர்கள் நிலம் அவர்களுக்கு வேண்டும். இதைக்கேட்டால் பிரச்சினையைக் கிளப்புறம் என்கிறார்கள். பிறகு பாலியல் கற்பனை கதையும் அவிழ்த்து விடுறாங்கள். எனவே நாம் தெளிவாக இருப்போம். தொடர்ந்து போராடுவோம்.

எனவே எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்கு பிறகு அந்த மக்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டாம். அவர்களே உழைத்து உண்பார்கள்…

ஈழம் ஈ நியூஸ்ற்காக பரணி கிருஸ்ணரஜனி