பெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய  சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி  கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த நிலையில்தான் மருத்துவர் மனோஜ் சோமரத்தன கவனம்பெறுகின்றார்.

 

இலங்கை சுகாதாரத்துறையின் முக்கியபொறுப்பில் உள்ள தமிழ்பேசும் உயர் அலுவலர் ஒருவரால் ‘வில்லங்கமான’ஒரு அறிவுரை மருத்துவர் மனோஜ் சோமரத்தனவுக்கு வழங்கப்பட்டது.

 

ஆதாவது

 

“மனோச் நீங்கள் பிரமந்தனாறு வைத்தியசாலையில் கடமைக்குச் செல்வதிலிருந்து விலக விரும்பினால் அதனை எழுத்து மூலம் தாருங்கள். அவ் வைத்தியசாலையை மூடுவது குறித்து நான் கவனத்தில் எடுக்கிறேன். அவ் வைத்தியசாலை மூடப்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்புக் கூறவேண்டியதில்லை ஏனெனில் நீங்கள் அங்கு தொண்டு அடிப்படையில்தான் கடமைக்குச் செல்கிறீர்கள். அதேவேளை அவ்வாறு வைத்தியசாலை மூடப்படும் போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அப்;போது நாங்கள் எமக்குப் அந்த வைத்தியசாலைக்கு வைத்தியர் அவசியம் என்ற விடயத்தை உயர் மட்டத்தினருக்கு இலகுவாக எடுத்துச் சொல்லலாம்”.என்பதே அந்த ஆலோசனை.

 

ஆனால் மருத்துவர் மனோஜ் அந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளவில்லை, பொது மக்களின் நலன்களில் கவனம் செலுத்திய அவர் தனக்கான பதிலீட்டு வைத்தியர் நியமிக்கப்படும் வரை பிரமந்தானாறு வைத்தியசாலையினையும் பொறுப்பேற்று அதனோடு தான் கடமையாற்றிய கண்டாவளை, தர்மபுரம் வைத்தியசாலைகளையும் கவனித்து வந்தார். அத்தோடு தனது மனைவியான மருத்துவர்  கிரிசாந்தி பிரியதர்சினி  பணியாற்றிய  உருத்திரபுரம் வைத்தியசாலையினையும் கவனித்து வந்தார்.

 

கண்டியிலிருந்து வந்து கிளிநொச்சியில் இவ்வாறு பணியாற்றிய ஒரு மருத்துவர் தற்போது இடமாற்றம் பெற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்கின்றார். எனவேதான் அவரிடம் நாம் அவர் பற்றிய விபரங்களை கேட்ட போது

 

உங்களைப் பற்றிய சிறு அறிமுகம் செய்யமுடியுமா?

 

கண்டி வெலிகல்லவில் 1986 இல் பிறந்து, கிங்ஸ்வூட் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை முடித்து ரஸ்சியாவில் மருத்துக் கல்வியை நிறைவு செய்து பின்னர்  யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் உள்ளக பயிற்சியை நிறைவு செய்து 2016 ஓக்ஸ்ட் கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் மற்றும் கண்டாவளை வைத்தியசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்றேன்.

 

பின்னர் எனது மனைவிக்கு முதல் நியமனமாக கிளிநொச்சி உருத்திரபுரம் வைத்தியசாலை கிடைக்கப்பெற்றது. எனவே அவரும் இங்கு வந்தவுடன்  நான் மனைவி  குழந்தை என குடும்பமாக உருத்திரபுரம் வைத்தியசாலையின் மருத்துவர் விடுத்தியில் தங்கிநின்று பணிகளை ஆரம்பித்தோம்.

 

கிளிநொச்சிக்கு வரும்போது எவ்வாறான உணர்வு உங்களுக்கு இருந்தது?

 

ஆரம்பத்தில் பயமாக இருந்தது அதுவும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொலைவில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு  நியமனம் கிடைத்த போதும் பாதுகாப்பு விடயத்தில் அச்சம் இருந்தது.  எனக்கு மட்டுமல்ல எனது குடும்பத்தினர் உறவினர்கள் என  பலருக்கும் இந்த உணர்வு காணப்பட்டது. ஆனால் இங்கு வந்து சில மாதங்களில் எமது எண்ணம் முற்றுமுழுதாக நீங்கியது. எமது பெற்றோர்கள் உறவினர்களுக்கும் கூட எமது விடயத்தில் திருப்தி அடைந்தனர். பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

 

இங்கு மக்களுடன் பழகும் போது மக்கள் எங்களுடன் பழகும் போது மொழி மாத்திரமே ஒரு தடையாக இருந்தது மற்றும் படி எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. எங்களுக்கு இந்தப் பிரதேச மக்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். அடிக்கடி எங்களிடம் வந்து டொக்ரர் என்ன செய்யவேண்டும்? என்ன உதவி தேவை என்று கேட்பார்கள் சந்தைக்கு சென்றால்  அங்கு  ஏனையவர்களுக்கு வழங்கும் விலையைவிட குறைவான விலையில் எங்களுக்கு பொருட்களை தருவார்கள்.

 

நான் தர்மபுரம் கண்டாவளை பிரமந்தனாறு வைத்தியசாலைகளுக்கு செல்கின்ற போது மனைவி உருத்திரபுரம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் இச் சந்தர்ப்பங்களில் குழந்தையை வைத்தியசாலை பெண் பணியாளர்கள் கவனிப்பதில் உதவி செய்வார்கள். எங்களை இங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு அழைப்பார்கள் எனவே இவையெல்லாம் மனதை தொட்ட விடயங்கள்.

 

கிளிநொச்சியைவிட்டுச் செல்லும் போது இன்று எவ்வாறு உணருகிறீர்கள்?

 

ஒருபுறம் சின்ன கவலை  மறுபுறம் பிள்ளையின் எதிர்காலம்  மகன் அடுத்த வருடம் முதல் பாடசாலைக்கு செல்ல வேண்டும். எனவே இங்கிருந்தால் மகனின் கல்வியை தொடர முடியாது.  அத்தோடு கிளிநொச்சியே எனக்கு தமிழை கற்றுத்தந்தது தமிழ் ஓரளவுக்கு தமிழ் பேசுவதற்கு கிளிநொச்சியும், இங்குள்ள மக்களுமே காரணம் அதற்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன. கிளிநொச்சியிலிருந்து எடுத்துச்செல்வது எந்த மக்களுடைய அன்பையும் மொழியையும்தான்.

 

கிளிநொச்சி என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாது பிரதேசம் ஒன்று முதல் நியமனம், இரண்டாவது ஒரு மொழியை கற்றுக்கொண்டது.

 

கிளிநொச்சியில் நீங்கள் செலவிட்டகாலம் குறித்து உங்களது மனப்பதி வுகள் என்ன?

 

யுத்த காலத்தில் தமிழ்  சிங்கள மக்கள் மத்தியில் பரஸ்பரம் இருந்த மனப் பதிவுகள் இங்கு நான் செலவிட்ட காலத்தில் எனக்கு இல்லாது போனது. அன்பான மக்கள் எங்களை வரவேற்று உதவிய  உள்ளங்கள், எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வுகள். பணியாற்றிய காலத்தில் முழுiயான ஒத்துழைப்பு வழங்கிய பணியாளர்கள், திணைக்கள அதிகாரிகள்  என  அனைவரும்  எமது மனப்பதிவுகளில் நீங்காத இடம்பிடித்தவர்கள்.

 

மூன்று சுற்றயல் வைத்தியசாலைகளைப் பொறுப்பெடுக்கும் எண்ணம் ஏன் உங்களுக்கு வந்தது?

 

தர்மபுரம். பிரதேச வைத்தியசாயில் கடமையாற்றிய போது  அங்கு பிரமந்தனாறு மற்றும் கண்டாவளை பிரதேசங்களிலிருந்து அதிக பொது மக்கள்  நீண்ட தூரம் பயணம் செய்து சிகிசைக்காக வருவார்கள். இந்தப் பிரதேசங்களில்  போக்குவரத்தும் சீராக இருப்பதில்லை இந்த நிலையில் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு  தர்மபுரம் வைத்தியசாலைக்கு வருவதனை அவதானித்திருக்கிறேன். பலரிடம்  பஸ் காசு மட்டுமே காணப்படும். எனவேதான் அந்தந்த பிரதேச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவை  இயங்கச் செய்தால் இங்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதோடு பொது மக்களுக்கும் இலகுவாக இருக்கும் என நினைத்தேன். அதற்காகவே பொறுப்பெடுத்து கடமையாற்றினேன். எங்களிடம் போக்குவரத்துக்கு வாகனம் இருக்கிறது. அரசு  அதற்காக கொடுப்பனவையும் தருகிறது எனவே எனது பணியை தொடர்ந்தேன்.

 

கிளிநொச்சிக்கு நீங்கள் எதையாவது கூற விரும்புகிறீர்களா?

 

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை அறிய முடிகிறது. நாங்கள் பணியாற்றிய காலத்திலும் கூட பதில் கடமைக்கு ஒருவரை பெற்றுக்கொள்வதிலும் நெருக்கடி இருந்தது. நாம் இடமாற்றம் பெற்று செல்வதற்கு முன் இங்கு ஒரு வைத்தியரை நியமிக்க வேண்டும் அதற்கு   ஒருவரை நியமிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டது. இறுதியாக வரக்காபொல எனும் இடத்தில் இருந்து முஸ்லிம் சகோதரி ஒருவர் வந்திருக்கின்றார்.

 

எனவே நான்  கூற விரும்புவது நான் அறிந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வருடந்தோனும் ஐந்து பேர் பல்கலைகழகத்திற்கு மருத்துவ துறைக்கு செல்கின்றார்கள். அவ்வாறே வருடந்தோறும் ஐந்து பேர் இந்த மாவட்டத்திற்குரியவர்கள் மருத்துவ கற்கை நெறியை முடித்து வெளியேறுகின்றனர். ஆனால் அவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தவிர வேறு  எவரும் சொந்த மாவட்டத்திற்கு வருவதில்லை அது ஏன்?  தங்களுடைய முதல் நியமனக் காலத்தையாவது இந்த மாவட்டத்தில்  பணியாற்ற வேண்டும் என்று இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும்  நினைத்தால் இங்கு வைத்தியர்களின் பற்றாக்குறையே  ஏற்படாது.

 

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பணியாற்ற கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் என்பதுவே எனது கோரிக்கை. என்றார்.

 

நன்றி: இலக்கு (07-04-2019)