தமிழ் மக்களிடமிருந்து உணர்வுகளை பறிக்க முடியாது: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

0
659

Jaffna-Uniதமிழ் மக்களிடமிருந்து பறிக்க முடியாதது பகுத்தறிவு மட்டுமல்ல, பட்டறிந்த உணர்வுகளும்தான், உடல் வேகும் உயிரி சாகும், எம் உணர்வுகள் வாழும் என்று குறிப்பிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பார்க்க யாழ்.பல்கலைக்கழகத்திற்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதைக் கண்டித்து நேற்று அடையாள வகுப்பு பகிஸ்கரிப்புப் போராட்டம் ஒன்றினை யாழ்.பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களும் நடாத்தியிருந்தனர்.

அப்போராட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றும் மாணவர் ஒன்றியத்தினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக அனைத்து பல்கலைகழகத்திற்கும் 9ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனால் யாழ் பல்கலைகழகத்திற்கு மட்டும் டிசம்பர் 2ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது.

ஏனைய பல்கலைக்கழகங்கள் யாவும் ஒருவார விடுமுறையைத் தொடர்ந்து வழமைக்குத் திரும்பியிருந்த நிலையில் யாழ்.பல்லைக்கழகத்திற்கு மட்டும் நீண்ட விடுமுறை எதற்காக? மாணவர்களது பரீட்சை நெருங்குவதால் உரியவகையில் தம்மைத் தயார்படுத்துவதற்காகவே இந்த விடுமுறை வழங்கப்படுகின்றது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

உண்மையில் பரீட்சை விடுமுறை என்பது ஒரு அரையாண்டுப் பருவத்திற்குரிய அனைத்துப் பாடவிதானங்களும் பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சில நாட்களே விடப்படுவது வழமையாகும்.

ஆனால் எந்தவொரு பாடவிதானத்திலும் அரைவாசிப் பகுதிகளும் நிறைவுறாத நிலையில் நீண்டவிடுமுறையை அமுலாக்கிவிட்டுப் பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் என்றும், குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றோம் என்று சொல்வது மிகவும் பம்மாத்து நடவடிக்கையாகவும கோமாளிக் கூத்தாகவுமே நாம் இதைப் பார்க்கின்றோம்.

மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பதும் பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிப்பதும் அவர்களது சுயவிருப்பத்தினைப் பொறுத்தது எனக் கூறினாலும், நவம்பர் 9 ஆம் திகதியிலிருந்தே விடுதிகள் அடிததுச் சாத்தப்பட்டு விட்டன. விடுமுறைக் காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிப்பவர்கள் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுவார் என மறைமுகமாக அச்சுறுத்தல்களையே மேற்கொண்டு வந்துள்ளனர்.

பரீட்சைத் தயார்ப்படுத்தலுக்காகவே இந்த விடுமுறை எனறு கூறிவிட்டு மாணவர்கள் விடுதிகளும் இழுந்து மூடப்பட்டமை உட்பட பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் மேற்கொள்வதுதான் பரீட்சைக்கான உண்மையான தயார்படுத்தலா?

உண்மையில் இந்த நீண்ட விடுமுறையென்பது எதற்காக என்பது அனைவரும் அறிந்த விடயம். சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திராணியற்று கடந்த மாவீரர் நாளையோட்டிய தினங்களில் பல்கலைக்கழக சூழல் முழுவதையும் ஒரு யுத்த சூனிய பிரதேசத்தினை ஆக்கிரமித்து இருப்பது போல் ஆயுதம ஏந்திய கையினர்களாய் இராணுவத்தினரும், பொலிஸாரும் சுற்றிவளைத்திருந்தனர்.

ஒரு கல்விச்சாலையையே கரைபடிந்த கண்களோடு ஆயுதப் படைகள் சுற்றிவளைத்திருப்பது உலகத்தில் இதுவாகத்தான் இருக்க முடியும், இறந்துபோன ஆன்மாக்கள் மதிக்கப்படுவது உலகப் பொதுவிதியாகும். அதே நேரம் தன்னினம் சார்ந்து யாருக்காவது அஞ்சலி செய்வது அவ்வினத்தின் அடிப்படை உரிமையாகும்.

இந்த உரிமையையே மறுப்பதை விட கேவலமான அநாகரீகச் செயல் இவ்வுலகில் வேறு எதுவும் இலலை. இந்த நீண்ட விடுமுறையானது ஏனைய பல்கலைக்கழகங்களிற்கும் விடப்பட்டிருந்தால். ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருந்திருக்கும்.

ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு மட்டும் என மட்டுப்படுத்தப்பட்ட விடயமானது எம்மை அவமானத்திற்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கும் செயலாகவே எம்மால் இதைப் பார்க்க முடியும். ஆனவே எவ்வளியிலும் ஏற்றுக் கொள்ள முடியாத இச்செயலிற்கு எமது வன்மையான கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.