தமிழ் மக்களின் அழும் உரிமையையாவது கூட்டமைப்பு பெற்றுத்தருமா?

0
641

கடந்த வருடம் நடைபெற்ற வடமாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்கு பொறுக்குவதற்காக பேசியவற்றை கூட்டமைப்பு மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்கவில்லை. நாமும் மறக்கவில்லை.

தமிழர்களின் போராட்டசக்தியும் தமிழர் சேனையுமான புலிகளின் வீரமும் தியாகமும் அரசியல் இராஜதந்திரமுமே அந்த பேச்சுக்களின் அடிநாதமாக இருந்தது.

hero098
அரிசி பருப்பு தருகிறோம், காணிநிலம் பிடித்து தருகிறோம் என்று அந்த மக்களிடம் கூட்டமைப்பு சொல்லவில்லை. மாறாக புலிகள் மாவீரர்கள், அவர்கள் துயிலுமில்லங்களை புதுப்பிக்கிறோம், மாவீரர் நாள் கொண்டாட அனுமதி வாங்கித் தருகிறோம், முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி எழுப்புகிறோம் என்றே வாக்கு சேகரித்தார்கள்.

மக்களுக்கு பிரிக்கப்பட்ட மகாணசபை தேர்தலில் உடன்பாடில்லை. ஆனால் இந்த பேச்சுக்களே மக்களை வாக்களிக்க உந்தியது. இதனூடாக தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டுடன் தாம் இருப்பதை உணர்த்த மட்டுமல்ல புலிகளே தங்களது போராட்ட சக்திகள் என்று எதிரிகளுக்கும் வெளிச்சக்திகளுக்கும் கோடுகாட்ட இந்த தேர்தலில் மக்கள் பங்களித்தார்கள்.

இவற்றை விட முக்கியமாக தம்மை புலிகள் சுட்டார்கள், பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தார்கள் என்று தம்மை சாட்சியாக வைத்து எதிரிகளும் துரோகிகளும் புலிகளுக்கு எதிராக செய்து வந்த விசமப் பிரசாரத்திற்கு ஒரு முடிவுரை எழுதவும் கூட்டமைப்பின் இந்த பேச்சுக்களை தமது வாக்குமூலமாக பதிவு செய்ய விரும்பி வாக்களித்தார்கள்.

ஆனால் கூட்டமைப்பு புலிகளை மட்டும் புகழ்பாடி வாக்குப் பொறுக்க தொடங்கியவுடனேயே புலிகளும் மக்களும் மேற்படி வரலாற்றுப் புரட்டிலிருந்து புனிதமடைந்து விட்டார்கள்.

இருந்தபோதிலும் தேர்தலில் வாக்களித்து அதை பதிவும் செய்தார்கள்.

மக்களின் இந்த உணர்வை _ உளவியலை கூட்டமைப்பு தனது வாக்கு வேட்டைக்கு பயன்படுத்தியதே வரலாறு.

ஆனால் மக்கள் மாகாணசபைக்கு வாக்களிக்கவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.

மகாணசபை தமக்கு தீர்வில்லை என்பதும் கூட்டமைப்பால் தமக்கு ஒரு எல்லைக்கு மேல் எந்த உரிமையையும் பெற்றுத்தர முடியாது என்றும் மக்களுக்கு தெரியும்.

எனவே மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தமது சிறிய உரிமைகளை கூட்டமைப்பின் மூலம் பெற்றுக்கொள்வதே..

இனி விடயத்திற்கு வருவோம்.

கூட்டமைப்பு வாக்குப் பொறுக்க முன் வைத்த மாவீரர் துயிலுமில்லங்கள், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி போன்ற வெற்றுக் கோசங்களையெல்லலாம் தற்காலிகமாக விடுவோம்.

வரும் மே 18 அன்று எமது மக்கள் இனஅழிப்பில் பலியெடுக்கப்பட்ட தமது உறவுகளை நினைந்து கூடிநின்று அழ சிங்களம் அனுமதி மறுத்திருக்கிறது.

இதற்கு இந்தக்கணம் வரை கூட்டமைப்பிடமிருந்து அதிகாரபூர்வமாக எந்த எதிர்வினையுமில்லை. இனஅழிப்பு அரசுடன் இது குறித்து எதுவும் பேசியதாகவும் இல்லை.

என்ன அயோக்கியத்தனம் இது?

உயிரிழந்த மக்களை நினைத்து அழும் உரிமையை பெற்றுத்தர முடியாதவர்கள் ஆபிரிக்கா, அந்தாண்டிக்கா என்று பறந்து திரிவதை என்னவென்று சொல்வது?

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக நினைப்பது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல் இருக்கிறது?

எமது கணிப்பின் படி 146679 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட நாள் அது. ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை 40000 மக்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது.

எனவே அந்த மக்களை நினைந்து அழும் உரிமையை மறுக்கும் ஒரு அரசுடன் கூட்டமைப்பு இனியும் பேசுவது அரசியல்ரீதியாகச் சரியானதுதானா?

இனியும் ஐக்கிய இலங்கை, இன நல்லிணக்கம் என்று கூட்டமைப்பு பேசுவதில் அர்த்தம் இருக்கிறதா?

வரும் மே 18 அன்று மக்கள் சுதந்திரமாக கூடி நின்று தமது உறவுகளை நினைந்து அழ கூட்டமைப்பு சிங்களத்திடமோ அல்லது தமது எஜமானர்களான இந்தியாவிடமோ அமெரிக்காவிடமோ கேட்டு அனுமதி பெற்றுத்தர வேண்டும்.

அது முடியாவிட்டால் கூட்டமைப்பை கலைத்து விடுவதே நல்லது..

அழவே அனுமதிக்காத ஒரு அரசிடம் எதையும் பேசி பெறலாம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

எனவே விலகுங்கள்..மீதியை மக்கள் பார்த்து கொள்வார்கள்.

ஈழம்ஈநியூஸ்.