உலகெங்கும் வாழும் தமிழர்கள் கருப்பு சூலையை நினைவு கூறும் இந்நாட்களில் சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் தானும் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார்.

 

கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில்:

 

“ 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில், நாம் நினைவு கூருகிறோம்.

 

அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

 

கறுப்பு ஜூலையில் தமது குடும்பங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்களை நினைவு கூரும், தமிழ் கனேடியர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்துடன், நாமும் இணைந்து கொள்கிறோம்.

 

கறுப்பு ஜூலை ஒரு அழிவு வாரமாக இருந்தது. கொடூரமான இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, பல பத்தாண்டுகளாக பதற்றம் அதிகரித்தது.

 

ஆயுத மோதல்களின் விளைவாக, பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 

சிறிலங்கா வன்முறைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், 1983 செப்ரெம்பரில், கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

 

அதன் மூலம், 1800இற்கும் அதிகமான தமிழர்களுக்கு கனடாவில், பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைத்தது. எமது நாட்டிற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குவதற்காக அவர்களுக்கு நன்றி.

 

2009இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதும், நல்லிணக்கச் செயல்முறைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.

 

நிலையான அமைதி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெற்ற அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்துடனும் சிவில் சமூகத்துடனும் கனடா நெருக்கமாக பணியாற்றுகிறது.

 

கறுப்பு ஜூலையில் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, கனேடிய அரசாங்கத்தின் சார்பில் நான் ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

 

அத்துடன், பொறுப்புக்கூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கம், நிலையான அமைதி, செழிப்பு என்பனவற்றை உள்ளடக்கிய எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, “இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாகவும், அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது! என இலங்கைக்கான தனது பயணம் தொடர்பாக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.

 
இலங்கை தனது நிலைமாறுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் எவையும் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு போதுமானவையாக காணப்படவில்லை!

 

நல்லிணக்கம் மற்றும் நீதியான நீதித்துறை குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன!

 

சித்திரவதைகளை பரவலாக பயன்படுத்துபவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் தொடர்கின்றது!

 

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக எண்ணிக்கை குறிப்பிடமுடியாத அளவிலானவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது!

 

நான் மிக மோசமான ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் குறித்து என்னுடைய பயணத்தின் போது அறிந்து கொண்டேன்!

 

தடியால் அடித்தல், பெட்ரோல் நிரம்பிய பிளாஸ்டிக் பையினால் முகத்தை மூடி மூச்சுத் திணறச் செய்தல், நகங்களை பிடுங்குதல், ஊசியால் நகத்தில் குத்துதல் போன்ற சித்திரவதைகள் நடைமுறையில் உள்ளன!”

 

என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.