பிரித்தானிய தமிழர் பேரவையினால் தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று இன்று (ஜனவரி 29) மாலை ஏழு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் உலக நாட்டின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 60க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அல்லலுறும் நம் உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் பயணத்தின் ஒரு முயற்சியாக பிரித்தானிய தமிழர் பேரவை இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை பிரித்தானிய தமிழர் பேரவையால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரகத்தின் ஈழத்தமிழர் தொடர்பான செயற்பாடுகளை மையப்படுத்திய கந்துரையாடல் ஒன்று நேற்று (ஜனவரி 28) பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தமிழர்களுக்கான பாராளுமன்ற தலைவர் திரு.லீ ஸ்கொட் “ஸ்ரீ லங்காவில் யுத்தக் குற்றம் இடம்பெறும் போது நாமும் கவனிக்காமல் இருந்துள்ளோம் எனவே இந்தவேளையில் அங்கு வாழும் தமிழ் மக்களிடம் நாம் அனைவரும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஆரம்பித்த தனது உரையில் ஸ்ரீலங்காவில் ஏற்ப்பட்டிருப்பது ஆட்சி மாற்றம் அல்ல என்றும் ஆள் மாற்றங்களுடனான பழைய ஆட்சியே” எனத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் இதர தலைவர்கள் அனைவரும் பழைய அரசில் அங்கம் வகித்தவர்களே எனவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் யுத்தக் குற்றவாளி என குறிப்பிடப்படும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் குறித்த அரசாங்கத்தில் உள்ளடக்கப்படிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் அங்கு நடந்தது ஒரு இனப் படுகொலை என்றும், தமிழருக்கு “சுயநிர்ணய உரிமை” வழங்க வேண்டுமென்பதோடு பிரித்தானியா அரசாங்கம் தொடர்ந்து இதற்க்கான அழுந்தங்களை கொடுக்க வேண்டுமென்றார்.

பொதுநலவாய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதியின் வியயத்தில் சர்வதேச விசாரணைகளை துரிதப்படுத்துவதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய திரு.லீ ஸ்காட், இலங்கையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உடனடியாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஐ.நாவின் அறிக்கை வெளியிடுதல் விரைவு படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பிரித்தானிய அரசாங்கம் ஸ்ரீலங்காவில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நீதியான முறையில் வழங்க தொடர்ந்து தனது அழுத்தத்தை வழங்க வேண்டும் எனவும் திரு. லீ ஸ்காட் குறிப்பிட்டார்.

சந்திப்பில் கலந்து கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.ஷேபொன் கருத்து வெளியிடுகையில், ஸ்ரீ லங்காவின் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தது மட்டுமன்றி தமிழர்களுக்கான தீர்வு எதையும் குறிப்பிடாமல் இருப்பதற்கும் தனது விசனத்தை வெளியிட்டார். ஸ்ரீலங்கா அரசினால் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பிரத்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்களைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யூதரான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் கார்ல்சன் ஸ்ரீ லங்காவில் இடம்பெற்ற இனவழிப்பில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்க பிரித்தானிய அரசாங்கம் அதிக பிரயத்தனத்தை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் இலங்கையில் இடம்பெற்றது ஒரு இனவழிப்பே என்பதை சர்வதேசம் ஒத்துக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என்பதையும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு ஒன்றை வழங்க பிரித்தானியாவும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.