இலங்கைக்கு ஒரு வார கால பயணம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் நிலைமை குறித்து ஆராய்வதற்காக நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

அவர்கள் நேற்று தலைநகர் கொழும்பில் முகாமிட்டு தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

தலைநகர் கொழும்பில் மட்டுமல்லாது தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலும் நவநீதம் பிள்ளை குழு ஆய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நவநீதம்பிள்ளையின் வரவு தொடர்பில் விடுக்கப்பட்ட அறிக்கைகள் வருமாறு:

தமிழ் மக்கள் நவநீதம் பிள்ளை அவர்களிடம் இரு விடையங்களை முக்கியமாக தெரிவிக்க வேண்டும் – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.
obama-tamil
நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியான இரு விடையங்களே தமிழ் மக்களின் அடிப்படைத் தேவை என்பதனை தெரிவிக்க வேண்டும்.

1.இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை குறிப்பாக இறுதியுத்தத்தில் நடைபெற்ற பாரிய இனவழிப்பு பற்றி நேரடியாக போரால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏனைய தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சர்வதேச நீதிவிசாரணை தேவை என்பதை தெரிவிக்க வேண்டும்.

2. தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வாக தென்சூடானில் நடைபெற்றது போன்ற பொதுவாக்கெடுப்பே சரியான தீர்வாக இருக்கும் என்ற விடையத்தினை நவநீதம் பிள்ளை அவர்களிடம் முன்வைக்கவேண்டும்.

மேற்கூறப்பட்ட விடையங்களை நவநீதம் பிள்ளை அவர்களிடம் கொண்டு செல்லவதோடு இறுதிப்போரில் பாதிக்கப்பட்டும், காணாமல் போன தனது கணவர், மற்றும் காணாமல்போன ஏனையோரின் பிரதிநிதியாகவும் தற்போதைய மாகாணசபை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆனந்தி அவர்கள் நவநீதம் பிள்ளை அவர்கள் சந்திப்பதற்கு ஏனையவர்கள் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். ஏனெனில் அவர் இறுதிப்போரின் இனவழிப்பின் முக்கிய சாட்சியாக உள்ளார்.

நவநீதம் பிள்ளை அவர்களை ஒரு குறிப்பிட்டோரே சந்திப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதால், அதற்கு ஏற்ற முக்கியமானவர் ஆனந்தி அவர்களே ஆகும். எனவே அதற்கு அனைவரும் ஒத்துழைத்து சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

நம்பிக்கை தருகிறது நவி பிள்ளையின் பயணம்- சீமான்

ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் இலங்கை பயணம் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை
seeman1-300
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன வெறி அமைப்பின் பின்னால் இருப்பது மகிந்த ராஜபக்சாவின் இனவெறி அரசுதான் என்பது இலங்கை அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்திற்குள் இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகளும் சிங்கள இன வெறியர்களும் உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்த முயன்றுள்ளனர்.

எப்போதெல்லாம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலை உருவாகிறதோ அப்போதெல்லாம் இப்படிப்பட்ட பெளத்த சிங்கள இனவெறி சக்திகள்தான் அதற்கு எதிரான போராட்டத்தையும் வன்முறையையும் கட்டவி்ழ்த்து வந்துள்ளன என்பதே இலங்கையின் அரசியல் வரலாறாகும்.

இப்போது இப்படிப்பட்ட போராட்டத்தை புத்த பிக்குகள் நடத்துவதற்குக் காரணம், நவி பிள்ளையின் பயணம் இவர்கள் இதுவரை சர்வதேசத்திற்கு காட்டாமல் மறைத்துவரும் தமிழின அழித்தல் ரகசியங்கள் எங்கே வெளிப்பட்டுவிடுமோ என்கிற அச்சமே.இலங்கையை பொறுத்தவரை இப்படிப்பட்ட பெளத்த சிங்கள இனவெறி சக்திகளே அந்நாட்டு அரசியலின் போக்கை நிர்ணயிக்கின்றன என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையரும், தலைசிறந்த மனித உரிமை சட்ட நிபுணருமான நவி பிள்ளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நவி பிள்ளை அவர்களை திசை திருப்பும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சிங்கள படைகள் இருந்த முகாம்கள் காலி செய்யப்பட்டு, அங்கு மக்கள் குடியேற வழி செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி அந்நாட்டு நாளேடுகளில் வெளியாகியுள்ளது.

இது அப்பட்டமான பொயப் பரைப்புரையாகும்.யாழ்ப்பாணத்தின் வலிகாமம் எனுமிடத்தில் குடியிருக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றி அங்கு ஒரு மிகப் பெரிய ராணுவ முகாமை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள ராணுவம், அதனை மறைக்க இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நவி பிள்ளை, வலிகாமம் பகுதிக்குச் சென்றால், தமிழ் மக்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி தமிழ் மக்கள் ஏராளமான தகவல்களைத் தருவார்கள்.

மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள சிறிய ராணுவ முகாம்களை மூட வேண்டும் என்று இலங்கை அதிபர் அமைத்த கற்ற பாடங்களும் இணக்கப்பாடும் ஆணையம் கொடுத்த கண் துடைப்பு பரிந்துரைகளைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை எனும் உண்மையை நவி பிள்ளை கண்கூடாகக் காணலாம்.இறுதி கட்ட போர் நடத்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட இடங்களில் நவி பிள்ளை அவர்கள் நேரில் சென்று மக்களை சந்திப்பார்கள் என்ற செய்தி மிகுந்த ஆறுதலாக உள்ளது.

தங்கள் குடும்பத் தலைவரையும், இளம் பிள்ளைகளையும் பெற்ற குழந்தைகளையும் சிங்கள பெளத்த இனவெறி ராணுவத்தின் கொடுமைகளுக்கு பலிகொடுத்துவிட்டு நிற்கும் அப்பகுதி மக்கள் கூறப்போகும் உண்மைகளே, அங்கு தமிழினம் திட்டமிட்டு இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையும், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டிருப்பதையும், தமிழர் நகரங்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டிருப்பதையும் காணும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.போருக்குப் பிறகும் தமிழர்களின் பூர்வீக மண்ணில் ஒரு திட்டமிடப்பட்ட இன அழித்தல் தொடருவதை உறுதிசெய்யும் சான்றுகள் பலவும் கிட்டும்.

அதனடிப்படையில் நவி பிள்ளை அவர்கள் கொடுக்கப்போகுத் அறிக்கையே உலகத் தமிழினம் எதிர்பார்க்கும் இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு வழிகோலும். எனவே உலகத் தமிழினம் நவி பிள்ளை அவர்களின் பயணத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திருமதி. நவநீதம் பிள்ளையின் பயணம், நீதியை வழங்குமா?

இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்று இருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்களின் முயற்சியை வரவேற்கிறோம்.
vaiko
சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற திருமதி நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு, தமிழ்க்குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்சே அரசின் தூண்டுதலால் எதிர்ப்பும் கண்டனமும் காட்டி வருகிறார்கள். கடந்த கால நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டால், அவரது இப்போதைய பயணத்தாலும், தமிழர்களுக்கு, நீதி மறுக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் எழுகிறது.

2008 இல், இலங்கைப் பிரச்சினையைக் கண்காணிக்கின்ற ஐ.நா. குழுவில், மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை, ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆலோசகர் விஜய் நம்பியார் உள்ளிட்டவர்களால் நிராகரிக்கப்பட்டது.

2009 மார்ச் மாதம் நிகழ்ந்த உச்சகட்டப் போரின்போது, ஐ.நா. அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களில், படுகொலையான தமிழர்களின் எண்ணிக்கை, அதிர்ச்சி தரும் அளவுக்கு அதிகமாக இருந்ததால், ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில், மார்ச் இரண்டாம் வாரத்தில், அவசரக் கூட்டமும், செய்தியாளர்கள் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், இரண்டு நிகழ்வுகளையும் விஜய் நம்பியார் ரத்து செய்து விட்டார்.

சிங்கள அரசின் இனக்கொலையை மூடி மறைக்க, புலிகள் மீதும் குற்றச்சாட்டு வைக்க, அழுத்தம் தரப்பட்டது என்பதை, ஐ.நா.வின் உள்ளக அறிக்கையும், சார்லÞ பெற்றியின் விசாரணை முடிவுகளும் அம்பலப்படுத்தின. இலங்கை அரசின் மீது, அனைத்து உலக நாடுகளின் விசாரணை வேண்டும் என்று, ஐ.நா.வின் பிற அமைப்புகள் வைத்த கோரிக்கையை, ஐ.நா. தலைமை நிராகரித்ததையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது.

ஐ.நா. விதிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ‘இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்’ என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் கூறியது, தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மறுத்தது ஆகும்.

தமிழ் இனக்கொலை குறித்து, ஐ.நா.வில் நீதி இல்லை என்ற கண்டனம், பல நாடுகளில் எழுந்ததால், வேறு வழி இன்றி, பான்-கி- மூன், மார்சுகி தாருÞமன் தலைமையில், மூவர் குழுவை அமைத்தார். அந்தக் குழு, தமிழ் இனப் பேரழிவு குறித்த உண்மைகளை, உலகுக்குச் சொன்னது .

இதற்கு இடையில், உலகின் கண்களில் மண்ணைத் தூவவும், தான் செய்த இனக்கொலையை மூடி மறைக்கவும், ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (Lessons Learned and Reconciliation Commission)’ என்ற அப்பட்டமான ஒரு மோசடி நாடகக் குழுவை இலங்கை அரசே அமைத்துக் கொண்டது. இந்தக் குழு, உண்மைகளைக் கண்டு அறியவில்லை; அரசின் கொடுமைகளைப் பதிவு செய்யவில்லை; மாறாக, நீதியையும் உண்மையும் புதைக்கின்ற வேலையைத்தான் செய்து உள்ளது என்பதை, பல நீதிமான்களும், சட்ட வல்லுநர்களும், சுட்டிக் காட்டி உள்ளனர்.

இந்த ஏமாற்றுக் குழுவின் பரிந்துரைகளைத்தான் செயல்படுத்த வேண்டும் என, ஜெனீவா மனித உரிமைக் குழுவில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது கண்துடைப்பே ஆகும்.

இந்தப் பின்னணியில், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன், நவநீதம் பிள்ளையின் பயணம் அமையும் என்றால், அது தமிழர்களுக்கு எவ்விதத்திலும் நீதியை வழங்காது; தமிழர்களால் முற்றிலும் நிராகரிக்கப்படும் என்பதை, கனத்த இதயத்தோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஜெனீவா மனித உரிமைக் குழுவின் தீர்மானம், தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை. கொடுமை செய்த இலங்கை அரசுக்கு, எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தமிழர்களின் வாழ்வு உரிமை, பாதுகாப்பு, நிலங்கள் என எதுவும், ஐ.நா. மன்றத்தால், மனித உரிமைக் குழுவால் பாதுகாக்கப்படவில்லை.

2009 மே மாதத்துக்குப் பின்னரும், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கும், கொடுந் துன்பத்துக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி வருகிறார்கள் என்பதுதான், உண்மையிலும் உண்மை ஆகும். செய்தியாளர்கள் தாக்கப்படுகிறார்கள்; தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்; தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன;, வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்கின்றார்கள்; தமிழர் தாயகம் சிங்களமயமாக்கப்படுகிறது; இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுவதும், ஏராளமானோர் விசாரணைச் இன்றி சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

2007 இல் இலங்கைக்குச் சென்ற, சர்வதேச நீதிபதிகள் குழுவின் தலைவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி அவர்கள், ‘இலங்கையின் நீதி பரிபாலனம் என்பது, நேர்மை அற்றது; அனைத்து உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட நீதியின் அடிப்படைகளைக் கூடக் கடைப்பிடிக்க முடியாதது; இலங்கையில் சாட்சிகளுக்கான பாதுகாப்பே கிடையாது’ என்று பதிவு செய்ததை, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இதே பின்னணியில், இலங்கை அரசு அண்மையில் அமைத்து இருக்கின்ற, காணாமல் போனவர்களைப் பற்றிய போலி விசாரணைக் கமிசனையும் நிராகரிக்க வேண்டும்.

இந்நிலையில், நவநீதம் பிள்ளை அவர்களது தமிழ் ஈழப் பயணம், முக்கியமானதும், அவசியமானதும் ஆகும். பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளை, அரசின் குறுக்கீடு இன்றிச் சந்தித்து, தமிழர்களின் பிரச்சினைகளையும், அச்சத்தையும், கோரிக்கைகளையும் அவர் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், கொலைவெறி சிங்கள அரசின், எதேச்சாதிகார அடக்குமுறைப் போக்கு, ஒரு நேர்மையான விசாரணைக்கோ, கருத்துப் பதிவுக்கோ, வாய்ப்பு அளிக்குமா? என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

எனவே, ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், தமிழர்களின் பிரதிநிதிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், நிலங்களை இழந்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரையும், யுத்தத்தில் தமிழ்ப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்துப் பதிவு செய்ய விரும்பும் மகளிர் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று, துயரத்தில் தவிக்கும் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறேன்.

இது ஒன்றுதான், குறைந்த பட்ச நேர்மையான விசாரணைக்கான நடவடிக்கை ஆகும் என்பதை, திருமதி நவநீதம் பிள்ளை அவர்களும் நன்கு அறிவார்கள்.ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம், கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலும் வலியுறுத்தியது போல, தமிழ் இனப்படுகொலை குறித்து, இலங்கை அரசின் மீது, சுதந்திரமான அனைத்து உலக விசாரணையை நடத்த வேண்டும்.

2008, 2009 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைத் தாக்குதல்களும், தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கின்ற கட்டுமான இனப்படுகொலையும், அனைத்து உலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நீதிக்கான பாதையை, நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, ஈழத்தமிழர்களும், உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், தமிழர் தாயகத்தை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து இருப்பது, தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்குதல், சிங்களச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள், கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், தமிழர் தாயகத்தில் நிலை கொண்டு உள்ள சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும், உலகுக்குத் தெரியப்படுத்திட, மனித உரிமைகள் ஆணையர், முன்வர வேண்டுகிறேன்.

மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தடுக்கும் இராணுவ அடக்குமுறைகள், இறந்தவர்களின் கல்லறைகளையும், புதைக்கப்பட்ட இடங்களையும் அழித்து, அங்கே சிங்கள இராணுவத்துக்கான கட்டடங்களைக் கட்டுதல், வெற்றித்தூண்களை நிறுவுதல், யுத்த அருங்காட்சியகம் அமைத்தல், தமிழர் மடிந்த பகுதிகளில் கேளிக்கை விடுதிகள் கட்டுதல், இவை அனைத்தையும் குறித்து, விசாரணை நடத்த, மனித உரிமை ஆணையர், உலகுக்கு அறிக்கை தர வேண்டுகிறேன்.

உண்மை வெளிச்சத்துக்கு வருவதைத் தடுக்க முற்படும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

இருண்டு போன தமிழர் வானத்தில், நம்பிக்கை ஒளிக்கீற்றாக, நவநீதம் பிள்ளை அவர்களின் கடந்த அறிக்கை அமைந்தது. தற்போது, தமிழர் பகுதிகளுக்குச் சென்று, ஈழத் தமிழ் மக்களைத் தடைஇன்றிச் சந்தித்து, சிங்களவர்களால் தடுத்து வைக்கப்பட்டு உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களையும் நேரடியாகச் சந்தித்து, உண்மையை அவர் உலகத்துக்குச் சொல்லவும், அனைத்தையும் ஆவணப்படுத்திடவும் வேண்டுகிறேன்.

தமிழ் மக்களின் மொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்து உள்ள ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களுக்கு, 2009 பிப்ரவரி 12 ஆம் நாள், ஜெனீவா ஐ.நா. அலுவலகம் முன்பு, தீக்குளித்து மடிந்த மாவீரன் முருகதாசன் எழுதிய கடிதத்தின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

‘சிங்கள அரசு, எமது தமிழ் மக்களுக்குச் செய்து வந்த கொடுமைகள், நீண்ட துன்பியல் வரலாற்றைக் கொண்டது. அதன் நிகழ்காலப் பரிமாணமாகவே, தமிழ் மக்களின் பிரச்சினையில், உலக நாடுகளின் தலையீடும் ஏற்பட்டது. இதன் விளைவாக, நீதி கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள். நானும் அதை நம்பினேன். ஆனால், நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கிறோம். எமது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும், சிங்கள அரசுடன் சேர்ந்து, இணைத் தலைமை நாடுகள், இன அழிப்புக்குத் துணை போனதற்கும் சாட்சியாக, ஐ.நா. மன்றத்தின் முன், இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீதி கிடைக்கச் செய்வதில், ஐ.நா. வின் பங்கு எவ்வாறானது என ஆய்வு செய்யப்படும் போது, ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் சார்பாக, இலங்கைத் தமிழ் இளைஞன் முருகதாசன் தீக்குளித்து உயிர் கொடுத்தான் என்ற வரலாறும் சேரட்டும்’ என்று தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தத் தியாகத்தை மனதில் கொண்டு, தங்கள் தாயக விடுதலைக்காக, இனக்கொலைக் களத்தில் பலியான, 1 இலட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழ் ஈழத்தின் விடுதலைக்கான, பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கும், இலங்கை அரசு மீது, இனப்படுகொலைக்கான விசாரணையை, ஐ.நா.மன்றமும், அனைத்து உலக நாடுகளும் மேற்கொள்வதற்கும், நீதியின் வெளிச்சம் தமிழர்களுக்கு நிரந்தரமாகக் கிடைப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், இப்போதைய பயணத்தின் மூலம், மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
27.08.2013 மறுமலர்ச்சி தி.மு.க.