தங்களது புகழ்பெற்ற உளவுத்துறை அதிகாரியான ரபேல் ரபி எய்த்தான் 2019 மார்ச் 23 ஆம் நாள் தமது 92 வது அகவையில் மரணமடைந்து விட்டதாக இசுரேலிய அரசு வானொலி சேவை அறிவித்துள்ளது. யூதர்களுக்கு இவர் ஒரு நாயகன், ஆனால் தமிழரை பொருத்தமட்டில் அப்படியல்ல. முக்கியமான கட்டத்தில் தமிழரின் அரசியலை மடைமாற்றி இலாவகமாக தமிழரை அழிவை நோக்கி தள்ளியவர் இவர் .

 

ரபி எய்த்தான், இசுரேலின் உளவு நிறுவனங்களான ‘சின் பெத்’, ‘சாபக்’, ‘மொசாட்’ போன்றவற்றில் பல முக்கிய பதவிகளை வகித்தவர்.

 

1960 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவிலிருந்து ஜெர்மானிய SS தளபதி அடால்ப் எய்க்மன் கடத்திவரப்பட்ட நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவர்.

 

1972 ஆம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இசுரேலிய வீரர்கள் மீது பாலஸ்தீனிய போராளி அமைப்புகளால் தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் கொல்லப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தங்கள் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதலில் தொடர்பு பட்டிருந்த அனைத்து பாலஸ்தீன தலைவர்களையும் அழிக்க அன்றைய இசுரேலிய பிரதமர் கோல்டா மெயரின் உத்தரவின் படி ‘மொசாட்’ Wrath of God [கடவுளின் கோபம்] என்ற பெயரில் ஒரு நடவடிக்கையை தொடங்கியது. 20 ஆண்டுகள் வரை தொடர்ந்த இந்நடவடிக்கையில் அலி அசன் சாலமே உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்த பாலஸ்தீன தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையை ஒருங்கிணைத்த இசுரேலிய தரப்பில் எய்த்தான் முக்கியமானவர்.

 

1981 ஆம் ஆண்டு ஈராக்கின் தலைநகர் பாக்தாதுக்கு அண்மையில் பிரான்சின் உதவியுடன் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ‘ஒசிரக்’ அணுவுலை மீது இசுரேல் வான் வழி தாக்குதல் நடத்தி அதை அழித்தது. “ஒப்பேரா” என்று பெயரிடப்பட்டிருந்த அந்நடவடிக்கையின் திட்டம் மற்றும் செயல்படுத்தல் குழுவில் பொறுப்பு வகித்தவர் எய்த்தான்.

 

1981 ஆம் ஆண்டு பிற நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பங்களை கண்காணிக்கும் இசுரேலின் ‘LEKEM’ உளவு நிறுவனத்துக்கு பொறுப்பாளராக மாற்றப்பட்டார். 1985 ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நுட்பங்களை திருட முயன்ற போது இவ்வமைப்பின் உளவாளி பிடிபடவே ‘LEKEM’ கலைக்கப்பட்டது. ரபி எய்த்தானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்கா பிடியாணை பிறப்பித்தது.

 

இதன் பிறகு இசுரேலின் தேசிய இரசாயன உற்பத்தி நிறுவனமான “Israel Chemical Corporation” இன் தலைவராக நியமிக்கப்பட்ட்டார். பல நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கு இசுரேலின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் இலங்கையில் செயல்பட்டு வந்த மொசாட் பிரிவுக்கு கூடுதல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

 

சிங்கள அதிபர் ஜெ ஆர் ஜெயவர்த்தனா இசுரேலுடன் மிக நெருக்கமான உறவை பேணிவந்தவர். அக்காலங்களில் வளர்ந்து வந்த பிரிவினை வாதமும் இடது சாரி கொள்கைகளும் சிங்கள பேரினவாதத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதை அறிந்திருந்த ஜெ ஆர் முதன் முதலில் உதவி கோரியது இசுரேலிடம்.

 

இலங்கையில் நிறுவப்பட்டிருந்த ஒரு இசுரேலின் இரசாயன ஆலைக்கு வருகை தரும் அதிகாரி என்ற போர்வையில் 1980 களின் பிற்பகுதிகளில் ரபி எய்த்தான் பல நாட்கள் இலங்கையில் இருந்தவர். இவர் பொறுப்பேற்ற பிறகே தமிழ் இசுலாமிய பகைமை மட்டுமில்லாது இலங்கை உள்நாட்டு போர் என்ற போர்வையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அப்பாவி பொது மக்கள் இலக்கு வைக்கப்பட்டு வகை தொகையின்றி கொல்லப்பட்டதாகவும், போர் புதிய பரிணாமத்தை அடைந்ததாகவும் நம்பப்படுகிறது.

 

தொடர்ந்த தமிழர் இசுலாமியர்களுக்கு இடையேயான முரண் அதுவரை தமிழ் போராளி அமைப்புகளுக்கும் பாலஸ்தீனிய போராளி அமைப்புகளுக்கும் இடையே இருந்த நல்லுறவை வெகுவாக பாதித்தது.

 

தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கி அன்று இசுரேலின் துணையுடன் தங்களை பாதுகாத்துக்கொண்டது சிங்கள பேரினவாதம்.

நன்றி: திரு