தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழி என்று (27/12/1956)அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அந்த ஆட்சி மொழி சட்டம் இன்னும் முழுமை பெறவில்லை என்பதே உண்மை.

TN-Tamileelam
காவல்துறையில் தமிழ் இல்லை, பள்ளிகளில் தமிழ் இல்லை, வணிக நிறுவனப் பெயர் பலகைகளில் தமிழ் இல்லை, ஊடகங்களில் தமிழ் இல்லை, வங்கிகளில் தமிழ் இல்லை, அரசு நிறுவனங்களில் தமிழ் இல்லை, ஏன் ஆட்சி நடத்தும் கோட்டையில் கூட தமிழ் இல்லை.

இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற நிலையை உருவாக்கிய பெருமை நம்மை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளையே சாரும்.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி இருக்கும் காரணத்தால் தமிழ் மொழி தமிழ் நாட்டிலேயே புறக்கணிக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை சொல்லிக் கொடுக்காமல் இந்தியை சொல்லிக் கொடுகின்றனர்.

இந்திய நடுவண் அரசு எந்த இடத்திலும் தமிழ் மொழிக்கு இடம் தராமல் பார்த்துக் கொண்டு வருகிறது. தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகாமல் தமிழ் மொழி உண்மையான அதிகாரத்தை பெற இயலாது . தமிழர்கள் இந்தியர்கள் போல மொழி உரிமை பெற்று தலை நிமிர்ந்து வாழவும் இயலாது.

அதனால் தமிழ் நாட்டில் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாக வேண்டும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாகவும் வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை இந்த நாளில் நினைவுபடுத்துவது நம் கடமையாகும்.

இராச்குமார் பழனிசாமி