மீனவர் படுகொலையை புரிந்து கொள்ள கொஞ்சமேனும் புவிசார் அரசியல் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

 

சமகாலத்தில் இரு தமிழர் நிலமும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இது சிங்கள – இந்திய அரசுகளுக்கு தமது பிராந்திய நலன் சார்ந்து உவப்பான விடயம் அல்ல.

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து வெடித்த மெரினா புரட்சிதான் ஈழத்தில் மக்கள் போராடுவதற்கான ஒரு உந்துதலை தந்ததென்றால் அது மிகையல்ல.

 

ஈழத்தில் அச்சத்தின் விளைவாக அடங்கியிருந்த மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சாக்காக வைத்தே வீதிக்கு வந்தார்கள். ஒரு கட்டத்தில் ‘கேப்பாபுலவு’ என்னும் நவீன போராட்டம் ஒன்றை கட்டமைப்பதில் அது போய் முடிந்தது.

 

இதன் தொடர்ச்சியாக இரு தமிழ் நிலமும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைந்து ஒரு தீவிரமான போராட்டத்தில் குதித்துவிட்டால் இரு அரசுகளாலும் அதை தடுத்து நிறுத்துவது கடினம்.

 

அவர்கள் எதிர்பார்க்காத விளைவுகளைத் தந்து விடும் அபாயத்தை இரு அரசுகளும் உணர்ந்தே இருக்கின்றன.

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று இறங்கி வருவதற்கும் , ஈழத்தில் நிலங்களை விடுவிக்கலாம் என்று இறங்கி வருவதற்கும் இந்த பின்னணியே காரணம்.

 

நாம் ஜெனிவாவிற்காக நிலங்களை விடுத்ததாக தட்டையாக புரிந்து வைத்துள்ளோம்.

 

அரசுகள் ஜெனிவாவில் தங்களை ஒருவருக்கொருவர் காத்துக்கொள்ள பிராந்திய – பூகோள சக்திகளும் அவர்கள் வகுத்து வைத்த உலக ஒழுங்கும் தயாராகவே இருக்கிறது. ஆனால் போர்க்குணத்துடன் உக்கிரமாக வெடிக்கும் மக்கள் பேராட்டத்தை காக்க எந்த பொறிமுறையும் அரசுகளிடம் இல்லை.

 

இந்த படுகொலை என்பது இரு அரசுகளினதும் பின்னணியில் நடக்கும் ஒரு திசை திருப்பல் முயற்சி அல்லது ஈழ -தமிழக போராட்டங்களின் வீச்சை அளவிடும் ஒரு ஒத்திகையாகவும கருதலாம். இதை விட வேறு இரஜதந்திர காரணங்களும் இருக்கலாம்.

 

ஏனென்றால் ஜெனிவாவில் தன்னை காக்க ஒரு பொறிமுறையை வகுக்க முனைந்துள்ள சிங்களம் என்னதான் எல்லை தாண்டினாலும் இந்த நேரத்தில் சுட்டிருக்காது. அடுத்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து அது ஈழத்திற்கும் பரவிக் கொண்டிருக்கிற நேரத்தில் வலிய வம்பை விலை கொடுத்து வாங்கத் துணியாது.

 

எனவே இதில் ஏதோ ஒரு வகையில் இந்திய தொடர்பு உள்ளது திண்ணம்.

 

இதை நாம் உடனடியாக நூல் பிடித்து அறியாவிட்டால் இரு தமிழர் நிலமும் பெரும் சிக்கலுக்குள் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது.

 

2009 மே இற்கு பிறகு ‘தமிழ் வெளியுறவுக் கொள்கை’ அல்லது “தமிழ் லொபி” ஒன்றை இரு தமிழர் நிலமும் இணைந்து உருவாக்க வேண்டும் என்று பேசி வருகிறோம். ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை.

 

அப்படியான ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கி நாம் நமது அரசியலை தீர்மானிக்காவிட்டால் இப்படி பிராந்திய – புவிசார் அரசியலுக்குள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான்.

 

இனியாவது சிந்திப்போம்.

 

இந்த மீனவர் படுகொலை நடந்த நேரம் – நடந்த விதம் -நடந்த சூழல் நம்ககு இதையே அறிவுறுத்துகிறது.