திருச்செந்தூர் ஆத்தூர் அருகில் உள்ள கொளுவை நல்லூரில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் குமரசேன் சண்முகத்தாய் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் முத்துக்குமார். இவருக்கு தமிழரசி என்ற தங்கையும், வசந்தகுமார் என்ற தம்பியும் உண்டு. தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. வறுமைக்கு முகம் கொடுத்துப் பழகிப்போனது முத்துக்குமார் குடும்பம். அவரது தாயார் காசநோய் காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு முன்புபோல் வேலைசெய்ய முடியவில்லை. முத்துக்குமார் இளம்வயதிலே ஆத்தூரில் உள்ள சீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

புலவர் தமிழ்மாறன் அவர்களால் தமிழ்த்தேசிய உணர்வு பெற்ற முத்துக்குமார் சீட்டுப் பணம் வசூலிக்க மக்களிடம் செல்லும் போதெல்லாம் தனித்தமிழில் பேசுவதை வழமையாகக் கொண்டார். அம்மாவின் காசநோய் தீவிரமானதை உணர்ந்தகொண்ட முத்துக்குமார் தனது அம்மாவை சென்னைக்கு அழைத்துச்சென்று மருத்துவம் வழங்க முடிவுசெய்தார். அப்போது அவரது அப்பாவும், தம்பி வசந்தகுமாரும் சென்னையில் இருந்தனர். தன்னுடன் இருந்த தங்கை தமிழரசியையும், அம்மாவையும் அழைத்துக்கொண்டு சென்னை புறப்பட்டார்.

muththu-87
முத்துக்குமாரிடமிருந்து அம்மாவை காலம் பிரித்துவிட்டது. இது 29.10.2000 இல் நிகழ்ந்தது. நிலைகுலைந்து போனார். அவருக்கு அம்மா தான் எல்லாம். அவரிடம் கதைகேட்பது, விழாக்காலங்களில் அவர் சமைத்துக் கொட்டவைத்த இறைச்சி உணவு வகைகள், பட்டினி விரதங்கள் வாழ்க்கையில் நடந்த பலவும் அவரது மனத்திரையில் ஓடியது.

இளமையில் வறுமை என்பதும், பொறுப்பு என்பதும் சோகமானது. தாயை இழந்த தம்பி, தங்கையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மளிகைக்கடை ஒன்றில் பதினாறு, பதினெட்டு மணி நேரம் வேலைசெய்தார். தாய் இல்லாத நிலையில் தன் தங்கையின் திருமணத்தை தானே நடத்திவைக்க முன்வந்தார்.

சுருக்குவேல் ராசன் என்பவரும் தங்கை தமிழரசியும் ஒருவருக்கொருவர் விரும்புவதைக்கண்டார். 2004இல் திருமணம் இனிதே நடைபெற்றது. தங்கைக்கு தன் கடமையைச் செய்த முத்துக்குமார் தனது தம்பிக்கும் கடமையைச் செய்வதில் பின்வாங்கவில்லை.

தம்பி வசந்தகுமார் நான்காம் வகுப்பு வரை படித்தவர். பாக்யா அலுவலகத்தில் வேலை செய்துவந்தார். முத்துக்குமார் தான் படிக்கும் புத்தகங்களை அவரிடம் கொடுத்து படிக்கச்சொல்வார். இதன் மூலம் தம்பிக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். தான் ஏற்றுக்கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கருத்தியலை அடிக்கடி சொல்லிக்கொடுத்து தனது தம்பியை அரசியல்ப்படுத்தினார் முத்துக்குமார்.

திடீரென்று ஒரு நாள் தம்பி வசந்தகுமார் 31.05.2006 அன்று சாலை விபத்தொன்றில் அகால சாவடைந்தார். அதனால் முத்துகுமார் அதிர்ந்து போனார். அவரது நண்பர் கலைச்செல்வனிடம் பின்வருமாறு கூறினார்: “எங்கள் வீட்டின் மகிழ்ச்சிப் பொருளை இழந்துவிட்டோம். அவனை நான் எவ்வளவு மனப்பூர்வமாக நேசித்தேன். அவன் எனக்குச் சகோதரனாகப் பிறந்தான். ஆனால் என் நண்பன். என் வாசகன், என் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தோழன் அவனே. அவன் இறந்த பிறகும் கூட அவனது புன்சிரிப்பு முகத்தை மறக்கமுடியவில்லையே” என வேதனைப்பட்டார்.

திரு.ஆ.கலைச்செல்வன்
(முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன் நூலிலிருந்து..)