namdeshamஇலங்கைத்தீவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ ஆட்சி அகன்ற பின் தமிழர் தாயகப்பகுதிக்குள் விஐயம் செய்த அதி உயர் மட்ட தலைவராக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் விளங்குகின்றார்.

இன்று இலங்கைத்தீவை பீடித்திருக்கும் இன முரண்பாட்டிற்கு தனித்தனியாக இருந்த தமிழ் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் 1833ல் கோல்புறூக் சீர்திருத்தத்தின் மூலம் பிரித்தானியா ஒன்று சேர்த்தமையே காரணமாகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் பலர் கோடிட்டுக் காட்டுகின்றனர்.

இலங்கைத்தீவில் கொழுந்துவிட்டெரியும் இன முரண்பாட்டை தீர்த்துவைக்க வேண்டிய தார்மீக பொறுப்புடைய பிரித்தானிய அரசின் அதிஉயர் தலைவரான பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை யாழில் சந்திக்கும் ஒர் அரிய சந்தர்ப்பம் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்தது. டேவிற்கமரூன் அவர்களை கூட்டமைப்பின் தலைவரான சட்டத்தரணி சம்பந்தன், ஓய்வு பெற்ற நீதியரசரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது கூட்டமைப்பினர் 06 அம்சக்கோரிக்கைகளை முன்வைத் ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

01. வடமாகாணத்தில் இராணுவக்குறைப்பு மற்றும், இராணுவ ஆளுநரை மாற்றி சிவில் ஆளுநரை நியமித்தல்.

02. 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துதல்.

03. வடமாகாணசபை நிர்வாகத்தினை பலப்படுத்தல்.

04. மீள்குடியேற்றம்.

05. வடமாகாணத்தில் போருக்குப் பிந்திய புனரமைப்பு.

06. வடமாகாணத்திற்கான தகவல் தொழில் நுட்பநிறுவனம் ஒன்றினை அமைத்தல் ((NOTHERN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY)

மேற் கூறப்பட்ட 06 கோரிக்கைகளும் வடமாகாணத்திற்கு மட்டுமே பொருத்த மானதாகவும் வடமாகாணசபையை பலப்படுத்துவதற்காகவும் 13ம் திருத்தச் சட்டத்தினை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

சட்டத்துறையில் பேர் பெற்ற மூவரும் 13வது திருத்தசட்டத்தில் உள்ள ஆளுநர் என்கின்ற பதவி பிரச்சனை அல்ல. மாறாக இராணுவ ஆளுநர் தான் பிரச்சனை என்று டேவிற் கமரூனுக்கு நிறுவியிருக்கின்றார்கள். அவர்கள் அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 (b) (2) இணை வசதியாக மறந்துவிட்டார்கள். அவ் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது.

“THE GOVERNOR SHALL BE APPOINTED BY THE PRESIDENT BY WARRANT UNDER HIS HAND, AND SHALL HOLD OFFICE IN ACCORDANCE WITH ARTICLE 4 (b ) DURING THE PLEASURE OF THE PRESIDENT”

அதாவது ஆளுநர் ஐனாதிபதியால் நியமிக்கப்படுவதுடன் ஐனாதிபதியின் விருப்பத்தை திருத்திப்படுத்தும் வரையில் பதவியில் இருப்பார். திரு.சம்பந்தன் அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் ஐனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக செயற்படமுடியாது என்பது அதன் பொருள்.

ஜனதிபதியின் விருப்பம் என்பது பிரித்தானியர் இலங்கையைவிட்டு அகன்ற நாள் முதல் விஸ்வரூபம் எடுத்து வரும் சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலையைப் பிரதிபலிப்பதாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. நல்லவேளையாக நமது கற்றறிந்த சட்டவாதிகள் ஐனாதிபதியாக சம்பந்தரை நியமிக்கவேண்டும் என்று கமரூனிடம் கோரிக்கை விடாதவரையில் தமிழ் மக்களின் மானம் காக்கப்பட்டிருக்கின்றது. இங்கு உருவாக்கப்பட வேண்டியது சிங்கள பௌத்த பேரினவாத மனோ நிலையால் தமிழர்கள் தேசம் பாதிக்கப்படாதவாறான ஓர் அரசியற் கட்டமைப்பு ஆகும். இங்கு வேதனைக்குரிய வியடம் என்ன வென்றால் வடகிழக்கை தாயகமாகக்கொண்ட தமிழ் மக்களின் அரசியலை வடமா காணத்திற்குள் எம் தலைவர்கள் மட்டுப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே. இது வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரிப்பை கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டு விட்டதை காட்டுகின்றது.

இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி,

01. இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை கோரப்படாமலும்.

02. காணாமல் போன எம் உறவுகளை மீட்டுத் தருமாறு கோராமலும்

03. ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும் எமது நிலங்களை பாதுகாத்து தருமாறு கோராமலும்.

04. சிங்கள பௌத்த மயமாக்களையும் தடுத்து நிறுத்தக்கோராமலும்.

05. எல்லாவற்றிற்கும் மேலாக 65 ஆண்டுகளாக கொழுந்து விட்டெரியும் இன முரண்பாட்டை நிரந்தரமாக தீர்க்கக்கூடியவாறு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ப+ர்த்திசெய்யக்கூடிய வகையில் அவர்களை நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழக்கூடிய ஒர் அரசியல் தீர்வை அடைய தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அவற்றின் அடிப்படையில் தமிழர் தேசம் என்பவற்றை அங்கிகரிக்கவேண்டும் என்று கோராமலும் கோட்டைவிட்டிருக் கிறார்கள் கூட்டமைப்பினர்.

ஆகக் குறைந்தது நூலக வாயிலில் நின்று காணாமல் போன தமது உறவுகளுக்காக அழுகுரல் எழுப்பிய, தம்மை தேர்ந்தெடுத்த மக்களையாவது சந்தியுங்கள் என்று கமரூனுக்கு அன்புக்கட்டளையிடக்கூட கல்நெஞ்சத் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

அவர்கள் பொலீஸ் பாதுகாப்புடன் தப்பிச் செல்லுகின்ற சோகம் தான் மிஞ்சியது. வரலாற்றுச் சந்தர்ப்பங்கள் மீண்டும் மீண்டும் எம்மை தேடிவராது. எமது இனத்தின் விடிவிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கூட்டமைப்பு அகற்றப்பட்டு புதிய அரசியல் சக்தி ஒன்று உடன் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

ஆசிரியர் தலையங்கம்

– நம் தேசம்