தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆணிவேருமான முத்துவேல் கருணாநிதி இன்று (7) காலமானார். உலகத் தமிழ் மக்களின் மனங்களில் கரும்புள்ளியாக படிந்த அவரின் முறைகேடான தலைமைத்துவம் அவரை முன்னாள் முதல்வர் என்ற அடைமொழியுடன் வழியனுப்பி வைத்துள்ளது.

 
ஆம் தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த துரோகத்திற்காக பதவியை பறிகொடுத்த கருணாநிதியினால் தான் இறக்கும் வரையிலும் தனது பதவியை மீண்டும் பெறமுடியவில்லை. முதல்வர் என்ற நாற்காலியில் இருக்கும் போது கருணாநிதி என்ற துரோகத்தின் சின்னம் மரணத்தை தழுவக்கூடாது என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும், முயற்சிகளும் இன்று கைகூடியுள்ளது.

 
தனது அரசியல் நலன்களுக்காக அவர் எழுதிய திரைப்பட வசனங்களை தமிழை வளர்ப்பதற்காக எழுதியாக சிலர் எண்ணுகின்றனர், அரச சுகபோகத்தில் மிதந்த கருணாநிதி மூன்று மனைவிகள், பல பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஒரு குறுநில மன்னனைப் போல வாழ்ந்து, தனக்கும் தனது பிள்ளைகளுக்கும், ஏன் பேரப்பிள்ளைகளுக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை களவாடியது, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், சொத்துக்களையும் சேர்த்தது போக எஞ்சியதில் மேற்கொண்ட திட்டங்களை தமிழர் நல திட்டங்கள என சிலர் இன்றும் நம்புகின்றனர்.

 
நம்பிக்கை துரோகத்திற்கும், இராஜதந்திரத்திற்கும் சிறு அளவே வேறுபாடு உண்டு, தனது சொந்த நலனுக்கும், குடும்ப நன்மைக்கும் கருணாநிதி செய்த துரோகங்களை அவரின் இராஜதந்திரமாக நம்பும் ஒரு கூட்டம் இன்றும் எம் மத்தியில் உள்ளது.

 
எனவே தான் தனது அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு இனத்திற்கு எதனையும் செய்யாத ஒருவருக்கு மெரினா கடற்கரையில் ஆறு அடி நிலம் கேட்டு சிலர் புலம்புகின்றனர், சிலர் பிச்சை எடுக்கின்றனர். தமிழ்த் தேசியம் என்று முகநூலில் களமாடிய பலர் தற்போது நிடுநிலை சாயம் பூசி இருந்த சாயத்தையும் கலைத்துள்ளனர்.

 
கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியது போல “உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்பது எதுவும் இல்லை” அதாவது நடுநிலமை என்பதும் பொய்மைக்கு ஆதரவளிப்பதேயாகும். கருணாநிதி பலருக்கு தலைவராக இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிரி என்பதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

 
ஏனெனில் பலகோடி மக்கள் தொகையை கொண்ட தமிழ் இனம் தனக்கென ஒரு நாடற்று உலகம் எங்கும் ஏதிலிகளாக திரிகின்றது. தனக்கு என ஒரு நாட்டை உருவாக்கும் தகமையுள்ள தலைவர் ஒருவரை தமிழ் இனம் பெற்றுக்கொண்டதுடன், குறுகிய வளங்களுடன் முப்படைகளையும் கட்டியமைத்து போராடிய ஒரு விடுதலைப்போரையும் தமிழ் இனம் இந்த நூற்றாண்டில் கண்டிருந்தது. ஆனால் தனது அரசியல் மற்றும் குடும்ப நன்களுக்காக இந்த விடுதலை இயக்கத்தை துரோகத்தால் வீழ்த்திய பெருமை கருணாநிதியையே சேரும்.

 
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள அரசு பல லட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்துவைத்து துன்புறுத்திய போதும், அதனை கருத்திற்கொள்ளாது சிறீங்காவுக்கு சென்று ஒரு போர்க்குற்றவாளிக்கு பொன்னாடை போர்த்திய பெருமையும் கருணாநிதியின் கட்சிக்கும், அவரின் குடும்பத்திற்குமே உரித்தானது.

 
இவை எதனையும் தமிழ் இனம் இன்றுவரை மறக்கவில்லை அதனால் தான் ஆட்சியில் இருந்தபடி மிகுந்த மரியாதையுடன் மரணத்தை தழுவவேண்டிய கருணாநிதி தற்போது முன்னாள் முதல்வர் என்ற நாமத்துடன் தனது உடலைப் புதைப்பதற்கான ஆறு அடி நிலத்திற்காக மீண்டும் அரசியல் பேரம் பேசும் நிலையை தனது கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளார்.

 
சிலருக்கு அவர் தலைவராகலாம் ஆனால் தவறான ஒருவரை எமது இனத்தின் மற்றும் மொழியின் தலைவராக நாம் எமது பிள்ளைகளுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் அடையாளம் காண்பிக்க முடியாது.

 
அது எமது இனத்தை இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னோக்கி நகர்த்தும் என்பதுடன், எமது வளரும் பிள்ளைகளையும் அது தவறான பதையிலேயே அழைத்துச் செல்லும்.

 
காலம் மகத்தானது, அது பல பாடங்களை நமக்கு கூறிச் செல்கின்றது, அதனை உள்வாங்கி பயணிக்கும் போதுதான் நாமும் எமது இனமும், மொழியும் முன்னேற முடியும், எனவே கருணாநிதி என்ற மனிதர் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட இனவிரோத செயற்பாடுகளை இனிமேலாவது திருத்திக் கொண்டு ஒரு புதிய கழகமாக திராவிட முன்னேற்றக்கழகம் தன்னை உருவகப்படுத்திக் கொண்டால் வருங்காலத்தில் அது தப்பிப்பிழைக்கும் இல்லையேல் வரலாற்றில் இருந்து மறைந்துவிடும்.

 
ஈழம் ஈ நியூஸ்