Kanimozhi, Women Entrepreneurs Conference, Madurai.jpgஅனந்தி எழிலன். இறுதிவரை தமிழர்தேச விடுதலைக்காக களமாடி இனஅழிப்பு அரசின் படையினரால் கைது செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் போராளியான எழிலனின் துணைவியார். மே 18 இற்கு பிறகு கைது செய்யப்பட்ட தனது கணவரையும் சக போராளிகளையும் மக்களையும் விடுவிக்குமாறு துணிச்சலாக குரல் கொடுத்து வருபவர். இதற்காக பெரும் ஆபத்துக்களையும் சந்தித்து வருபவர்.

 

அரைவிதவைகள் (Half wodows) என்ற எமது இனப்பெண்களின் மீது இனஅழிப்பு அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இனஅழிப்பு வடிவத்தின் ஒற்றைக் குறியீடு அனந்தி எழிலன்.

 

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மறைந்த போது “தேசத்தின் குரல்” என்று அவரை குறிப்பிட்டார். தற்போது எமது “தேசத்தின் உண்மையான குரல்” அனந்தி எழிலன்தான்.

 

மே 18 இற்கு பிறகான இன்றைய எமது தேசத்தின்- எமது மக்களின்- எமது இனப் பெண்களின் ஒட்டு மொத்த குறியீடு அனந்தி எழிலன் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்குள் சிக்கியிருக்கும் ஒரு இனத்தின் அனைத்து அவலங்களையும் அவர் பிரதிநித்துவப்படுத்துகிறார்.

 

‘புலிகளின் பிரதிநிதி’ என்ற மக்களின் மனபிம்பத்தையும் ‘அரைவிதவைகள்’ என்ற இனஅழிப்பு குறீயீட்டையும் இனங்கண்டு தமது வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக சம்பந்தர் குழு அனந்தியை வடக்கு மாகாண சபை தேர்தலில் களமிறக்கி தமது வெற்றியை உறுதி செய்ததையும் நாம் அறிவோம்.

 

அவர் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. வரலாறு அவரை இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

 

elilan-wifeபுலிகளுக்கு எதிரான – புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலின் ஒரு பகுதியாகவே இன்று விதிவிலக்கில்லாமல் அனைவரும் அரசியல் செய்யப்புகுந்துள்ள போதும் அதை முதன்மைப்படுத்தும் கூட்டமைப்பின் ஒரு வேட்பாளராக களமிறங்கிய போதும் அனந்தி மக்களின் உணர்வுகளின் வடிகாலாக மே 18 இற்கு முந்தைய ஒரு அரசியலின் தொடர்ச்சியாகவே அடையாளம் காணப்பட்டார்.

 

இது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தனக்கு பிறகு வெள்ளை வேட்டிகட்டிய மற்றும் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் கோட்சூட் போட்ட கும்பல்களிற்கு அப்பால் மக்களோடு மக்களாக வாழ்ந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட குறிப்பாக பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று கனவு கண்டதன் ஒரு பகுதியும் கூட.

 

இப்படி அனந்தி குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம். அவர் தன்னை அறியாமல் புரியாமல் செய்த ஓரிரு தவறுகளைத் தவிர அவர் குறித்து விமர்சிக்க தமிழ்த் தேசியப் பரப்பில் எதுவுமேயில்லை.

 

தற்போது அனந்தி எழிலனை குறிவைத்து தமிழகத்திலிருந்து சில பச்சோந்திகள் – குறிப்பாக திமுகவினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரை சந்தர்ப்பவாதியாகவும், பொய்யுரைப்பவராகவும் சித்திரிக்க பெரும் பிரயத்தனம் எடுத்துள்ளார்கள். அவர் செய்த தவறுதான் என்ன?

 

அவர் புதுக்குடியிருபப்பில் நீதிமன்ற சாட்சியத்தின் போது தனது கணவர் எழிலன் எந்த பின்னணியில் சரணடைய வைக்கப்பட்டார். அதன் பின்புலம் மற்றும் சாட்சிகள் யார்? என்பதை தனது சாட்சியமாக பதிவு செய்திருந்தார்.

 

kani-2அதில் ‘16.05.2009 அன்று இரவு எழிலனுடன் செய்மதி தொலைபேசியூடாக பேசிய திமுக தலைவர் கலைஞரின் மகள் கனிமொழி இந்த சரணடைவின் பின்னணியில் ஒரு பாத்திரமாக இருந்தார்’ என்பதை பதிவு செய்திருந்தார். எந்த சாட்சியமும் இல்லாமல் நடத்தப்பட்ட இனஅழிப்பையும் அதன் பின்புல சதிகளையும் அம்பலப்படுத்த அவர் முழுமையாக அதை பதிவு செய்திருந்தார். நடந்தது இதுதான். அவர் தேடிப்போய் கனிமொழியையோ, அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியையும் வம்புக்கிழுக்கவில்லை.

 

தமிழக ஊடகங்கள் பிற்பாடு அனந்தியை தொடர்புகொண்டு இது குறித்து வினாவியபோதே, நடந்த இனஅழிப்பில் இந்தியாவிற்கிருந்த பங்கை அறிந்த திமுக தலைமை அதை அம்பலப்படுத்த வேண்டும் என்றே கனிமொழி மற்றும் கலைஞர் பெயரை உச்சரித்தார்.

 

ஏனென்றால் இந்திய அரசின் இனஅழிப்பு பங்களிப்பை அம்பலப்படுத்தாமல் நாம் எமது விடுதலையை சாத்தியப்படுத்தவே முடியாது. அதை அம்பலப்படுத்த வேண்டிய பலர் தொடர்ந்து பல்டி அடித்து வரும் சூழலில் அனந்தி இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முனைந்ததே இதன் பின்னணியாகும். இங்கு திமுக வை குற்றவாளியாக்குவது நோக்கமல்ல. இனஅழிப்பில் இந்திய பங்களிப்பை அம்பலப்படுத்துவதனூடாக தொடரும் ஈழவிடுதலைக்கு எதிரான இந்திய நெருக்டிகளுக்கு ‘செக்’ வைப்பதே அனந்தியின் நோக்கமாகும்.

 

ஆனால் அனைத்தும் தெரிந்திருந்தும் – புரிந்திருந்தும் தமது பதவி கதிரைகளுக்காக 2009 இல் செய்த அதே துரோகப்பாத்திரத்தை தற்போதும் தமதாக்கி கொண்டுள்ளது திமுக.

 

கனிமொழியுடன் எழிலன் மட்டுமல்ல களத்திலிருந்து பல புலித்தலைவர்கள் மற்றும் புலத்திலிருந்து பல அரசியற்செயற்பாட்டாளர்கள் பேசியதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெகத் கஸ்பர் அடிகளார் மற்றும் சுப வீரபாண்டியன் போன்றவர்களும் இந்த காட்சிகளுக்குள் வந்த கதையின் பின்புலம் இதுதான்.

 

கனிமொழி சொல்லி சரணடைவதற்கு புலிகள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. ‘சரணடைவு’ என்ற பெயரில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நடத்திய நயவஞ்சக நாடகத்தின் சாட்சி கனிமொழி. இதை ‘இனியாவது அம்பலப்படுத்த வேண்டும்’ என்ற ஒரு இனஅழிப்பின் குறியீடாக உள்ள ஒரு அபலைப் பெண்ணின் குரலை மடைமாற்றி அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் திமுக வினரை என்னதான் செய்வது?

 

புலிகள் கடைசிவரை ‘சரணடைவு’ என்ற பதத்தையே பாவிக்கவில்லை. இதற்கு மேரி கொல்வின் அம்மையார் ஒரு சாட்சி.

 

‘ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம்’ என்று நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.

 

மேரி கொல்வின் குறிப்பிடுவதுபோல் ஆயுதங்களை கீழே போடுதல் என்பது சரணடைவுதான். ஆனால் கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள் புலிகள். ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.

 

kaniஎனவே இந்த சர்ச்சையை காரணமாகக் காட்டி புலிகளின் அரசியல் விஞ்ஞான அறிவு மற்றும் போர்தந்திரம் குறித்து எல்லாம் யாரும் தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை.

 

திமுக வினரும் அவர்களது அடிவருடிகளும் தமது உண்ணாவிரதம், பதவி விலகாமை, இனஅழிப்பை தடுத்து நிறுத்தாமை குறித்து திரும்ப திரும்ப ஒரே பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

கருணாநிதி மீதான இந்த வரலாற்று குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் அவர் நினைத்திருந்தாலும் – பதவியை துறந்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்ற வாதம் வெளிப்பார்வைக்கு சரியானதுதான்.

 

‘புலிகளை அழிக்கிறோம்’ என்ற போர்வையில் தமிழர்களை அழிக்கிற நிகழ்ச்சி நிரல் இலங்கை – இந்திய மற்றும் மேற்குலகத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. எனவே கருணாநிதியால் அதை மாற்றியிருக்க முடியும் என்பது ஏற்புடைய ஒன்றில்லைத்தான். ஆனால் நடந்த விளைவுகளை திசைமாற்றியிருக்க முடியும். ஒரு தமிழர் தலைவராக – தமிழக முதலமைச்சராக – மத்திய அரசில் அங்கம் வகித்தவாராக ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் அவரிடம் ஒரு தோழமை உணர்வை எதிர்பார்த்தார்கள். மாறாக அவர் நிறைய தகிடுதத்தங்களை செய்தார். மக்கள்இ மாணவர் எழுச்சியை அடக்கியதுடன் போலி உண்ணாவிரத நாடகங்களை நடத்தி போர் நிறுத்தப்பட்டதாக போலிப்பரப்புரை செய்து இனஅழிப்புக்கு துணைநின்றார். எம்மிடம் உள்ள ஆவணங்களின் படி கருணாநிதியின் உண்ணாவிரத நாடக இடைவெளியான 4 மணிநேரத்தில் குழந்தைகளும் பெண்களுமாக சேர்த்து 2716 தமிழர்கள் கனரக ஆயுதங்களின் துணையுடன் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

 

கருணாநிதி பதவி விலகினாலும் போர் நிற்காது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் மத்திய அரசிலிருந்து இவர் வெளியேறும் நிகழ்வு எமக்கு தோழமைரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழீழத்தின் திறவுகோல் தமிழகம் என்ற அடிப்படையில் பிராந்திய பூகோள அரசுகளின் பகைடையாட்டத்திற்கு – தமிழின அழிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட ‘செக்’ ஆக அது இருந்திருக்கும். அது நிச்சயம் எமக்கு சாதகமான அரசியல் விளைவுகளை தந்திருக்கும். ஆனால் கருணாநிதி தனதும் தனது குடும்பத்தினதும் நலன் கருதி காய் நகர்த்துவதிலேயே குறியாக இருந்தார். விளைவாக எந்தவித தடயமுமின்றி 146679 தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். கருணாநிதி நேர்மையாகவும் அறவுணர்வுடனும் செயற்பட்டிருந்தால் இந்த இழப்பில் பாதியையாவது குறைத்திருக்கலாம் என்பதே எமமுடைய ஆதங்கமாக இருக்கிறது.

 

அவரை தமிழின துரோகி என்று உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழ் மக்கள் தூற்றுவதன் பின்னணி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

 

தமிழீழ கொள்கை வகுப்பாளர்களால் இந்த பின்னணி ஏற்கனவே விளக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் பலர் திருந்திய மாதிரி தெரியவில்லை.

 

எனவே கருணாநிதியும் அவரது மகளும் இனியும் துரோகத்தை தொடரக்கூடாது. இந்திய கொள்கை வகுப்பாளர்களின், அப்போதைய காங்கிரஸ் அரசின், ஐநாவில் இந்திய அடிவருடியாக செயற்பட்ட நம்பியார் போன்றவர்களின் தமிழின அழிப்பு பங்களிப்பை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும். அனந்தி எழிலன் விரும்புவது இதைத்தான்.

 

முடியாவிட்டால் மூடிக்கொண்டாவது இருங்கள். உங்கள் பதவி கதிரைகளுக்காக வரலாற்றை மறைத்து இனஅழிப்புக்கு வெள்ளையடிக்காதீர்கள்..

 

ஈழம்ஈநியூஸ்.

நன்றி படம் : ஈழமுரசு