அரசியல் பின்புலத்தில் அரங்கேறிய மற்றொரு அராஜகம் கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தாக்குதலுக்கு உள்ளான பெண் பேசும் போது , ” விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து மரணித்த தனது மூன்று சகோதரர்களில் ஒருவர் வாங்கிய காணியில் தான் வசித்து வந்த நிலையில், அரசியல் பின் புலத்தில் தொடர்ச்சியாக குறித்த காணியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு கடும் நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் நான் தொடர்ச்சியாக குறித்த காணியில் வசித்து வந்தேன்.
அவ்வவ்போது மாத்தளையிலிருந்து காணியை இயக்கத்திற்கு விற்பனை செய்துவிட்டு சென்றவர் என ஒருவரை வைத்து எனக்கு கடும் நெருக்கடி கொடுப்பட்டது. இந்த நிலையில் நேற்று 16-07-2020 கிளிநொச்சி பொலீஸாரின் ஆதரவுடன் சிலர் நான் குடியிருக்கும் காணிக்குள் நுழைந்து வேலியினை பிரித்து எறிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த போது நான் எதிர்த்து நின்றேன். இதன் போது நான் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது வீட்டு உடமைகள் வீதியில் எறியப்பட்டுள்ளன. வசித்த வீடும் உடைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினால் எங்கு செல்வேன் என்றே தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
சில வருடங்களுக்கு முன் நள்ளிரவில் எனது தொலைபேசி அழைப்புக்கு தொடர்பு கொண்ட உள்ளுர் அரசியல்வாதி ஒருவர் கொத்துரொட்டி கட்டிக்கொண்டு வரட்டா எனக் கேட்ட விடயத்தை நான் அம்பலப்படுத்திய நாள் முதல் நெருக்கடியை சந்தித்து வருகின்றேன் என்றார் அவர் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சில அரசியல் பலம் கொண்டோர் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்த முடியாத போது , தமது அதிகார பலத்தை காட்டி மக்களை அவலத்துக்குள்ளாக்கிக் கொண்டு இப்பகுதி அரசியலில் ஈடுபட்டு வருவதால் அப்பாவிகள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.