சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை, 10 கோடி அபராதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு இன்று காலை 10.30க்கு மேல்தான் மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று சசிகலாவின் எதிர் தரப்பினருக்கு ஏற்கனவே தெரியும். அதனால்தான் சசியின் எதிர்தரப்பினர் அனைவருமே தர்மம் வெல்லும், தர்மம் வெல்லும் என்று சொன்னார்கள்.

 

அம்மாவின் மரணத்திற்குப் பிறகு பன்னீர் செல்வத்தைக் கைப்பற்றி தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போடப்பட்டதை பல சம்பவங்களின் அடிப்படையில் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று எண்ணம் கொண்டதால் அதை முறியடிக்க முதலில் களமிறக்கப்பட்டவர்தான் தீபா.

 

அதுவரை தீபா என்றால் யார் என்றே தெரியாத நிலையில் காவி பயங்கரவாதிகளால் தீபாவை ஊதி ஊதி பெரிதாக்க நினைத்தார்கள். ஆனால் சசிகலாவை மிஞ்சும் அளவிற்கு தீபாவிற்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. அதுமட்டுமின்றி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தீபாவை ஆதரித்ததால் சசிகலா அளவிற்கு தீபா மக்கள் மனதில் இடம் பெறவில்லை.

 

காவி பயங்கரவாதிகளின் திட்டம் சாதாரணமாக இருக்காது. ஓட்டை இடித்துப் பார்ப்பார்கள் அது சரிப்படாவிட்டால் வீட்டையே இடிப்பார்கள். அதற்கு அடுத்த நிலைதான் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு. சசிகலா முதல்வர் ஆவேன் என்று சொன்னதும் அவர்கள் ஏவிய அடுத்த ஆயுதம்தான் சொத்துக் குவிப்பு வழக்கு. அதுவரை தலைக்காட்டாத இந்த வழக்கு சசிகலா முதல்வர் ஆவேன் என்று சொன்னதும் தலையைக் காட்டத் துவங்கியது.
பொதுச்செயலாளராக நீங்கள் இருங்கள், முதல்வராக பன்னீர் இருக்கட்டும் என்று அப்போதும் சசியிடம் ஒரு பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகின்றது.

 

இந்த நிலையிலும் சசிகலா அவசரவே இல்லை. நான்தான் முதலமைச்சர் என்று உறுதியாகவே இருந்தார். இதற்கு இடையில் மக்களை சசியிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எறிந்த கடைசி ஆயுதம் பிரம்மாஸ்திரம்தான் பன்னீர் செல்வம்.

 

பன்னீர் செல்வத்திற்கு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டு இரவு நேரத்தில் அம்மாவின் சமாதியில் உக்கார வைக்கப்பட்டு பெரிய குழப்பத்தை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பன்னீர் பகடைக்காயானார். அதுவரை மிக்சர் செல்வமாய் மக்களிடம் திட்டு வாங்கிய பன்னீர் செல்வம் மக்களிடம் ஹீரோவாகப் பதிவு செய்யப்பட்டார். மோடியை ஊதிப் பெரிதாக்கிய அதே மெத்தடில்தான் இப்போது பன்னீரையும் ஊதி பெரிதாக்கி இருக்கின்றார்கள்.

 

சசிகலா எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் அவரை முடக்க இப்போது அவர்கள் பழையதை தூசித்தட்டி விட்டார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் வேறு எதற்காகவோ எதையோ எடுத்து வைத்து தீர்ப்பு சொல்வதுதான் இப்போது நடந்துள்ளது. பன்னீர்தான் முதல்வராக வர வேண்டும் என்று அரசியலே தெரியாத பாமரனைக் கூட பேச வைத்ததில் அவர்களின் சூழ்ச்சிக்கு நிகர் அவர்களே என்று மீண்டும் பேச வைத்து விட்டார்கள்.

 

பன்னீர் செல்வம் தினசரி மைத்ரேயனின் உதவியுடன் அமித்ஷாவிடம் ஆலோசனை செய்கின்றார் என்று அன்வர் ராஜா தெளிவாக தெரிவித்திருக்கிறார். பாஜகவின் காய் நகர்த்தல் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமாகி இருக்காது. இதை விட அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா?

 

பாஜக தமிழகத்தில் தன் பினாமி ஆட்சியை நிர்மானிக்க வேண்டும் என்பதெல்லாம் இன்று நேற்று போட்ட திட்டமல்ல! முன்கூட்டியே போட்ட திட்டம் என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழக ஆளுனராக இருந்த ரோசய்யாவின் ஆட்சிக்காலம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அதனையடுத்து தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமித்திருக்க வேண்டும்.

 

ஆனால் அப்படி செய்யவில்லை மும்பை கவர்னரும் ஆர்.எஸ்.எஸின் தீவிர உறுப்பினருமான வித்யாசாகர் ராவை தமிழகத்திற்கு பொறுப்பு கவர்னராக நியமித்து தங்களின் பிள்ளையார் சுழியைப் போட்டார்கள். அதன்பிறகுதான் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார் மர்மமான முறையில் மரணிக்கிறார். ஜெயாவின் மரணம் நிகழ்ந்தது டிசம்பர் 5 ஆம் தேதி. ஆனால் அதற்கு முந்தையை செப்டம்பரில் இருந்தே காவிகளின் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு விட்டது. சொல்லப்போனால் ஜெயாவின் மரணத்தில் கூட காவிகளின் கைவண்ணம் இருக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

 

ஜெயாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் அதிகார மையத்தைக் கைப்பற்ற திட்டமிட்டுத்தான் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் ரைடு நடத்தப்பட்டது. ராம மோகனராவ் பன்னீர் செல்வத்தின் நண்பராக இருந்த போதும், தன் பசிக்கு தன் குட்டியைச் சாப்பிடும் முதலையைப் போன்றவர்களின் திட்டமிடுதலில் சில பலிகளை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதன்பிறகுதான் கிரிஜா வைத்தியநாதனை தலைமைச் செயலாளராக நியமித்தார்கள். ஆக தமிழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது இன்றைய திட்டமே அல்ல! ஜெயாவின் மரணத்திற்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டு விட்டது.

 

இப்போது சசிகலாவை முடக்கினாலும் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் எத்தனையோ சதிகளைச் செய்து தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் டவுசர் கூட்டம் சசி அணியில் உள்ள உறுப்பினர்களை இன்னமும் உடைத்து சுக்கு நூறாக்கி விடுவார்கள். ஆட்சியமைக்கும் பலம் குறைந்தால் யாராலும் தனிப்பெரும்பான்மை வராது.

 

ஒருவேளை பன்னீர் ஆட்சியமைக்கும் நிலை வந்தால் அதற்கு எவ்வித தடையும் இருக்காது. ஈராக்கில் இப்போது இருக்கும் அமெரிக்க ஆட்சியைப் போல தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடைபெறும். அதுவல்லாமல் சசி அணியினர் பன்னீருக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் யாருக்கும் பெரும்பாண்மை இருக்காது, தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து விடுவார்கள்.

 

அதனையடுத்து கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவர் டி.எச். சங்கரமூர்த்தி தமிழக ஆளுனராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தமிழ் வேங்கை