”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?”

”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவற மாட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.

veeramani-praba
1986-ம் ஆண்டு நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார். தன் விருப்பத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடமும் தெரிவித்து, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார் ராஜீவ். எம்.ஜி.ஆர் தமது உளவுத் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு முழுக்கத் தேடியும் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது உடல் நலம் சரியில்லாமல் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

அங்கே வந்து தமிழக காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர், என்னைச் சந்தித்தார். ”எப்படியாவது பிரபாகரனை பெங்களூருக்கு அனுப்பி, ஜெயவர்த்தனேவைச் சந்திக்கச் செய்யுங்கள்’ என்று முதல்வர் உங்களிடம் தகவல் சொல்லச் சொன் னார்’ என்றார். அந்த அதிகாரிக்கு எங்களைப் பற்றி தெரியும். அப்போது பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று உண்மையாகவே எனக்குத் தெரியாது. ‘தகவல் அனுப்ப முடிந்தால், அவசியம் சொல்லி அவரை பெங்களூருக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்’ என்றேன்.

ஆச்சர்யமாக, அதே நாளில் எனது உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு திடீரென்று வந்து நின்றார் தம்பி பிரபாகரன்! என்னால் நம்பவே முடியவில்லை. பிரபாகரனிடம் எம்.ஜி.ஆரின் ஆலோசனையைப் பற்றி சொல்லி, அவரை பெங்களூருக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை. ஆனால் ‘நீங்கள் செல்லாவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு நல்விளைவு ஏற்படுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்கிற பேச்சு உருவாகும்’ என்றெல்லாம் அவரைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். இறுதியில், “அந்தச் சந்திப்பினால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனாலும், தமிழக முதல்வர் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்” என்றார். அவரது கணிப்புதான் பிறகு சரி என்று ஆனது!

பின்னர், புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை தமிழக அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் பிரபாகரன். ‘உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டுப் போராடுங்கள்’ என்று அறிக்கை விடுத்தேன். அதை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள முன்வந்தனர் புலிகள். சென்னை இந்திரா நகரில் நடந்த உண்ணாவிரதத்தை பழரசம் கொடுத்து நாங்கள் முடித்துவைத்தோம். ஆயுதங்களையும் திரும்பத் தரும் நிலை உடன் வந்தது.

புலிகள் இயக்கத்தின் தளபதி கிட்டு ஆற்றலும் அறிவும் பண்பும் நிறைந்தவர். ஆன்டன் பாலசிங்கமும் எங்களிடம் பல நேரங்களில் அறிவார்ந்த ஆலோசனைகளைப் பெறுவார். பேபி (சுப்பிரமணியம்), எப்போதும் அன்புடன் பழகிய அதிகம் பேசாத தம்பியின் தளகர்த்தர். இப்படி பலரும் அன்புடன் பழகியவர்கள். இதையெல்லாம் நினைவுகூர்ந்து எழுதும்போது என்னை அறியாமல் கண்கள் பனிக்கின்றன!”

விகடன் மேடை – கி.வீரமணி பதில்கள்