தென்ஆபிரிக்கா விடுதலைப்போராட்ட வீரரும், முன்னாள் அரச தலைவருமான நெல்சன் மண்டேலா மரணம்

0
716

mandelaதென்ஆபிரிக்கா விடுதலைப்போராட்ட வீரரும், தென்ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரச தலைவருமான நெல்சன் மண்டேலா இன்று (05) காலமாகிவிட்டார். 95 வயதான மண்டேலா தனது மக்களின் விடுதலைக்காக 27 வருடங்கள் சிறையில் இருந்தவர்.


அவரின் மறைவுக்கு அஞ்சலியை செலுத்தும் ஈழம்ஈநியூஸ் காலச்சுவடு இணையத்தில் வெளிவந்த இந்த கட்டுரையை மீள்பதிவு செய்கின்றது.

ரொபன்தீவு-கைதிஎண் 466/64

ஆப்பிரிக்காவின் தென்கோடியில், திராட்சைத் தோட்டங்களால் போர்த்தப்பட்ட, தட்டையான டேபிள்மலை (Table Mountain)யின் அடிவாரத்தில் பரந்துள்ளது கேப்டவுன் நகரம். ஓர் இளவேனிற் காலையில், இங்குள்ள எழிலார்ந்த வளைகுடாவில் அமைந்துள்ள விக்டோரியா ஆல்பெர்ட் துறைமுகத்தில் எட்டு கிமீ தொலைவிலுள்ள ரொபன் (Robben)தீவிற்குச் செல்லவிருந்த ஒரு படகில் மற்ற சுற்றுலாப் பயணிகளுடன் ஏறியமர்ந்தேன். கடல் அலையற்றிருப்பதால் அரைமணிநேரத்தில் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று அறிவித்தார் மாலுமி.


அந்தத் தீவில் காலடியெடுத்து வைத்த டச்சு கடலோடிகள், கடற்கரையில் பல சீல்களைக் கண்டதால், தம்மொழியில் இந்தக் கடல்வாழ் விலங்கைக் குறிக்கும் ‘ரொபன்’ என்ற சொல்லையே அந்தத் தீவிற்குப் பெயராக வைத்தனர். ஐரோப்பியாவிலிருந்து கடல்வழி வந்தவர்கள், பாதுகாப்புக் கருதி, நேராகத் தலை நிலம் செல்லாமல், முதலில் இந்தத் தீவில் முகாமிட்டு பின்னர் அங்கு சென்றனர். தலை நிலம் ஐரோப்பியர் கைவசம் வந்தபின், அங்கு கலகம் செய்தவர்கள், காலனி ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், ஆகியோரை இந்தத் தீவில் சிறை வைத்தனர். கடந்த நூற்றாண்டு, அறுபதுகளின் துவக்கத்தில், மனித உரிமைப் போராளிகளையும், அரசியல் கைதிகளையும் அங்கிருந்து தப்பிக்க இயலாத இந்தத் தீவில் தென்னாப்பிரிக்க அரசு சிறை வைத்தது. இந்த கொடுஞ் சிறைவாசத்தில் உழன்றவர்களில் முக்கியமானவர் ஆப்பிரிக்க இனத் தலைவர் நெல்ஸன் மண்டேலா.


கடந்த நானூறு ஆண்டுகளாக, நாடு கடத்தப் பட்டவர்கள், போர்க் கைதிகள், அரசியல் கைதிகள், தொழுநோயாளிகள், மனநோயாளிகள். இவர்களை சமூகத்தின் குப்பைபோல பாவித்து தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட சிறை, 1997இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. 8 சதுரகிமீ ரொபன் தீவை உலக பாரம் பரியத் தலமாக (Heritage Site) 1999இல் யுனெஸ்கோ அறிவித்தது. அச்சிறைச்சாலையைப் பார்க்கவும், இனவெறிமிக்க தென்னாப்பிரிக்க அரசின் இரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு ஏடு பற்றி மேலும் அறியவும் நான் ரொபன் தீவிற்குச் சென்றுகொண்டிருந்தேன்.


நீரைக் கிழித்துக்கொண்டு படகு முன்னேறியது. கேப்டவுன் நகரம், துறைமுகம் யாவும் சிறிதாகி, பார்வையிலிருந்து மறைய ஆரம்பித்தன. முன்னால் ஒரு தீவு புலப்பட ஆரம்பித்தது. நடுவேயிருந்த கலங் கரைவிளக்கம், சிறைச்சாலையின் கண்காணிப்புத் தளம், மதில்கள் தென்படத் துவங்கின. கரையோரம் கடலரிப்பைத்தடுக்கப் போடப்பட்டிருந்த நான்முக கான்கிரிட் அமைப் பினருகே நீர்க்காகங்களும் பென்குவின் பறவைகளும் நீந்திக்கொண்டிருந்தன. எங்களுக்காக கரையில் காத்துக் கொண்டிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டோம். ‘சென்ஸி’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஸுலு இனப்பெண் தீவைச் சுற்றிக் காட்டும் வழிகாட்டி என்று தன்னைப் பற்றிச் சொன்னாள்.


மெதுவாக நகர ஆரம்பித்த பேருந்து, சுண்ணாம்புக் குவாரி ஒன்றின் முன்நின்றது. அங்கிருந்தக் குகை ஒன்றை சுட்டிக்காட்டிய வழிகாட்டி, “கொளுத்தும் வெயிலில் இங்கு கல்லுடைத்த கைதிகள் சற்றே இளைப்பாறவும், கழிப்பிடமாகவும் இக்குகை பயன்படுத்தப்பட்டது” என்றாள். மேலும் “எழுத்தறிவற்ற கைதிகளுக்கு மற்ற சில கைதிகள் எழுதப்படிக்க சொல்லிக் கொடுத்ததும், மூத்தத் தலைவர்கள் நாட்டின் எதிர்காலம் பற்றி கனவுகண்டதும், இந்தக் குகையில்தான்” என்றாள் சென்ஸி. கல்லுடைக்கும் போது உருவாகும் துகள்களை நாள்தோறும் சுவாசித்ததால் மண்டேலாவுக்கு காசநோய் ஏற்பட்டு அவதிப்பட்டார். ஒரு புதரடர்ந்த கல்லறைத் தோட்டத்தைச் சுட்டிக்காட்டி, தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து மடிந்த 1500 தொழுநோயாளிகள் புதைக்கப் பட்டது இங்குதான் என்றாள்.


அதற்கு அடுத்து வேலியால் சூழப்பட்ட பழைய வீடுகள் அமைந்த பகுதி. 1819இல் கிரஹாம் நகரில் இருந்த ஆங்கிலேய கோட்டையைத் தாக்கிய தலைவர் மக்கோண்டா இங்குதான் சிறை வைக்கப்பட்டார். தாக்கிவிட்டு தப்பியோடிய மக்கோண்டா தம்மக்கள் மேலும் கொல்லப்படுவதைத் தடுக்க ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்ட அவர் சிறையிலிருந்து தப்பி, தலைநிலம் நோக்கி நீந்திச் செல்லும்போது உயிரிழந்தார். பேருந்து நகர்ந்து ஒரு மசூதி போன்ற கட்டிடத்திற்கருகே நின்றது. “எவ்விதமான மாற்றுக் கருத்துக்களையும் சகித்துக் கொள்ளாத அரசு, மதத் தலைவர்களையும் கொடுமைப்படுத்தியது. கேப்டவுனின் முதல் இமாமாக இருந்த அப்துல் ரஹ்மான் மோடுரு (Moturu) 1740இல் இங்கு கொண்டு வரப்பட்டு 1754இல் இறந்தார் என்றும் அவர் நினைவாக எழுப்பப்பட்ட தர்கா அது என விளக்கிய சென்ஸி, “என் வேலை இத்துடன் முடிந்துவிட்டது. இனி மண்டேலாவுடன் சிறையிலிருந்த முன்னாள் கைதி ஒருவர் சிறைச்சாலையின் உள்ளே உங்களை இட்டுச் செல்வார்,” என்று கூறி விடை பெற்றாள்.

mandela8
நாங்கள் சிறைச்சாலையின் வாயில் நோக்கி சென்றோம். அங்கு நடுத்தர வயது, திடகாத்திரமான ஒரு ஆப்பிரிக்கர் எங்களை வரவேற்று, தன்பெயர் ‘தெம்போ’ என்றும் அவரது மொழியில் அச்சொல் யானையைக் குறிக்கும் என்றும் தன் வெண்கலக் குரலில கூறிவிட்டு, தான் ஒரு முன்னாள் கைதி என்றும் எங்களுக்கு சிறையைச் சுற்றிக் காட்டப் போவதாகவும் சொன்னார். முன்னாள் கைதிகளாக இருந்து இன்று வழிகாட்டிகளாகப் பணிபுரிபவர்கள் சிலர் ரொபன் தீவில் வாழ்ந்தாலும், பழைய கசப்பான நினைவுகள் வருவதால் தான் அங்கு வாழ விரும்பவில்லை. தான் கேப்டவுனில் இருந்து தினமும் இந்தத் தீவிற்கு வருவதாகக் கூறினார்.


1960 முதல் 1991 வரை மூவாயிரம் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். எங்களுடன் வந்த ஒருவர் எப்போது, எதற்காக தெம்போ இந்தச் சிறைக்கு வந்தார் என்று கேட்டார். 1976இல் நடந்த சௌவீட்டோ மாணவர் எழுச்சியில் முன்னின்றதால் கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை பெற்று பின் 1990இல் விடுதலையானதாகக் கூறினார். தீவிரவாதம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மழுப்பினார். தென்னாப்பிரிக்காவின் தலைநகரான ஜோஹான்னஸ் பர்க்கின் புறநகர்ப் பகுதி சௌவீட்டோ. சுரங்கத் தொழிலாளர்களான வறிய ஆப்பிரிக்கர்கள் வாழும் இடம். டச்சு வம்சாவழியினரின் ஆப்பிரிக்கான்ஸ் (Afrikaans) மொழியைப் பள்ளிகளில் பயிற்று மொழியாக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1964இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல தொடர் போராட்டங்களை பல மாதங்கள் ஆப்பிரிக்க மாணவர்கள் நடத்தினர். சௌவீட்டோ மாணவர் எழுச்சியில் முதல் நாள் போராட்டத்தில் மட்டும் 200 பேர் உயிரிழந்தனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களில் தெம்போவும் ஒருவர்.


சிறையின் நுழைவாயிலில் உள்ள முதல் அறையில் தான் கைதிகளுக்குச் சீருடை கொடுக்கப்பட்டது. மறுபக்கம் உள்ள ஒரு அறையில் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அங்கிருந்து ஒரு கால்பந்து மைதானம் போன்ற இடத்திற்கு வந்தோம். அங்கேதான் ஆயுத மேந்திய வெள்ளைக் காவலர்களின் தீவிர கண்காணிப்பில் கைதிகள் கல்லுடைப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்தனர். அக்காட்சிகளை சித்தரிக்கும் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்த அறைக்கு தெம்போ எங்களை இட்டுச் சென்றார். மண்டேலா ஸிசுலுவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காட்டும் படம் ஒன்று. சிறையில் தன் வரலாற்றை எழுத ஆரம்பித்த மண்டேலா, எழுதிய பக்கங்களை மதிலொன்றின் படர்ந்திருந்த கொடிகளுக்கிடையே மறைத்து வைத்திருந்தது பற்றி தெம்போ சொன்னார். தனது சககைதிகளுக்குப் புத்தகங்களைப் படித்துக் காட்டு வார் மண்டேலா. அதில் அவருக்குப் பிடித்த ஹென்லி (W.E.Henley) எழுதிய ஒரு கவிதையின் ஒரு பகுதி. (அண்மையில் ரொபன் தீவிற்குச் சென்றபோது அமெரிக்க அதிபர் ஓபாமா இவ்வரிகளை நினைவுகூர்ந்ததாக ஊடகங்கள் கூறின.)


It matters not how straight the gate
How charged with punishment the scroll
I am the master of my fate
I am the captain of my soul.


அடுத்த ஒரு பெரிய அறையில் கொலை மற்றும் களவு செய்த குற்றவாளிகள் நாற்பது, ஐம்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனராம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவுப்பட்டியல் அங்கே இருக்கின்றது. அதிலும் இந்திய வம்சாவழியினருக்கு ஒரு விதமான உணவு, பாண்டு (Bantu) ஆப்பிரிக்கர்களுக்கு வேறு உணவு என்ற பேதம் தெரிந்தது. பின்னர் தெம்போ, “இந்தச் சிறையில்தான் மண்டேலா தம் 27 வருட சிறைவாசத்தில் 18 ஆண்டுகளைக் கழித்தார்.” என்று உரத்த குரலில் பிரசங்க மேடையில் பேசும் போதகரின் தொனியில், மண்டேலாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றிச் சுருக்கமாக, ஆனால் விளக்கமாகப் பேசினார்.

Mandela-cell
1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தெம்பு ராஜ பரம்பரையினருக்கு ஆலோசகராயிருந்த கேட்லாவின் (Gadla) நான்காவது மகனாகப் பிறந்தவர் ரோலிஹலாடாலி புங்கா (Rolihlahla Dalibunga); கோஸாமொழியில் ‘ரோலிஹலா என்றால் குறும்புக்காரன் என்றுபொருள். எழுத்தறிவற்ற அவனது பெற்றோர் தம் மகன் மேனாட்டு கல்வி கற்க வேண்டும் என விரும்பி அவரை ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்த்தனர். அங்கிருந்த ஆசிரியை, வாயில் நுழையாத பெயருக்குப் பதில் ‘நெல்சன்’ என்ற ஆங்கிலப் பெயரைச் சூட்டினார். அதைத் தொடர்ந்து கேட்லா தன் குடியின் மரபுப்படி, தன் பாட்டனின் பெயரான ‘மண்டேலா’வை பையனின் பெயருடன் சேர்த்து விட்டார். என்றாலும் தெம்பு இனத்தின் பிதாமகனான ‘மடிபா(Madiba)வின் பெயரிலேயே மக்கள் அவரை அன்பாகவும், மரியாதையாகவும் குறிப்பிடுகின்றார்கள்.


நாற்பதுகளின் போர்ட்ஹரே கல்லூரியில் பயின்ற மண்டேலா பின்னாளில் ஆப்பிரிக்க தலைவரான ஆலிவர் தம்போ (Oliver Tambo)வை அங்கு சந்தித்தார். அவர்கள் நட்பு நீடித்த ஒன்று. அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டியதற்காக, தம்போவுடன் சேர்த்து கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதால் இளங்கலைப் பட்டப் படிப்பை மண்டேலா முடிக்கவில்லை. ஊருக்குத் திரும்பிய அவர் தனக்குக் கல்யாண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்துகொண்டிருப்பதை அறிந்து, ஊரை விட்டு ஓடி ஜோஹனஸ்பர்க்கில் காவலாளியாக வேலைபார்க்க ஆரம்பித்தார். 1941-42இல் ஒரு வழக்கறிஞரிடம் எழுத்தராகப் பணியாற்றிய மண்டேலா படிப்பை அஞ்சல்வழி மூலம் தொடர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்று, தொடர்ந்து சட்டமும் பயின்றார். 1943இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் (ஆ.தே.கா. ANC – African National Congress) கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் உறுப்பினராகி, வால்டெர் சிஸூலு, ஆலிவர் தெம்போ போன்ற மூத்தத் தலைவர்களின் நம்பிக்கைக்கு உரியவரானார்.


சில உறுப்பினர்கள் ஆ.தே.காவின் கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டன என்றும், கட்சியில் புதுரத்தம் செலுத்த இளைஞர் அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட அணியின் தலைவராக 1954இல் மண்டேலா பொறுப்பேற்றார். அவர்களது உரிமைகள், சமநீதி பற்றிய சட்ட நுணுக் கங்கள் ஆகியவற்றை இளைஞர்களுக்கு விளக்கி, அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தென்னாப்பிரிக்காவின் அரசியல் கொள்கைகளுக்கு எதிராகக் குரல்எழுப்பியவர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிக்கொண்டிருந்த காலம் அது. மண்டேலா முன்னின்று நடத்திய ஒத்துழையாமை இயக்கமும் உரிமைப் போராட்டமும் தீவிரமடைந்ததால் தென்னாப்பிரிக்க அரசு மருள ஆரம்பித்தது. 1956இல் மண்டேலாவுடன் ஆ.தே.கா தலைவர் ஆல்பர்ட் லுதுலி மற்றும் 156 பேரும் தேசத் துரோகம், வன்முறை மூலம் ஆட்சியைக் கவிழ்க்கவும், கம்யூனிசத்தை நிறுவவும் முயன்ற குற்றங்களுக்கென கைது செய்யப்பட்டனர். வழக்கு ஐந்து ஆண்டுகள் இழு பறியாக நடந்த காலத்தில் மண்டேலா பலமுறை கைது செய்யப்பட்டார். ஆ.தே.காவும் அதன் தோழமைக் கட்சிகளும் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும், அமைதிப் போராட்டங்களும், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. மேலும் கடுமையான சட்டங்களையும் அடக்கு முறைகளையும் உருவாக்கி, ஆப்பிரிக்கர்களை அரசு அல்லல்படுத்தியது. எனவே போராட்டத்தின் வியூகத்தை மாற்ற வேண்டுமென்று தீவிரவாதத்திற்கு ஆதரவான குரல்கள் எழுப்பப்பட்டன. அப்போது ஆல்பர்ட் லுதுலி, காந்தி காட்டிய வழியில், வன்முறையற்ற உரிமைப் போராட்டங்களை நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். இதை விளக்கிக்கொண்டிருந்த எங்கள் வழிகாட்டி தெம்போ, நான் ஒரு இந்தியன் என்பதை உணர்ந்து என்னை நோக்கியவாறு “1906இல் கைரேகைப் பதிவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கவாழ் இந்தியர் வன்முறையற்ற முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்ற காந்தியின் போராட்டமே தென்னாப்பிரிக்காவில் சமஉரிமைக்கான முதல் குரல் எனலாம்’ என்றார்.


1960ஆம் ஆண்டு மார்ச் மாதம், 21ஆம் தேதி, ஷார்ப்வில் நகரில் சுமார் 7000 பேர் அடையாளச் சீட்டுக்கு எதிர்ப்பு காட்ட, காவல் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அதற்குச் சில நாட்களுக்கு முன், கேடோமேனர் என்ற ஊரில் போராட்டக்காரர்கள் ஒன்பது போலீஸ் காரர்களை கொன்றுவிட்டனர். ஆகவே பெரிய கூட்டத்தைப் பார்த்துப் பதட்டமடைந்து கவச வண்டிகளில் வந்து கண்ணீர்ப்புகை வீசி, தடியடி நடத்தினர். கடி நாய்களை ஏவினர். கூட்டம் கலைய வில்லை. போலீஸார் சுட்டதில், பெண்கள், சிறுவர்கள் உட்பட 67 பேர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. பன்னாட்டளவில் கண்டனம் எழுந்தது. ஆ.தே.காவைத் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அரசு அறிவித்தது. ஆயுத மேந்திப் போராடுவது உகந்ததல்ல என்று சில ஆப்பிரிக்கத் தலைவர்கள் நினைத்தாலும், இனியும் பொறுத்திருக்க முடியாது என பல உறுப்பினர்கள் கருதினர். இனவெறி அரசை ஆயுதமேந்தி எதிர்க்க முடிவு செய்தனர்.


1961ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மண்டேலாவின் தலைமையில் ஒரு புதிய இயக்கம் உருவாக்கப்பட்டது. ஸூலு மொழியில் ‘நாட்டின் ஈட்டி’ என்று பொருள்படும் கோண்டோவெசீஸ்வெ (MkontoWesizwe) என்ற பெயர் கொண்ட, (சுருக்கமாக எம்கேவி) போராளிகள் இயக்கம், ஆ.தே.காவின் ஒரு கூறாக,
ஆனால் தனித்து இயங்கும் அமைப்பாக உருவானது. அதைத் துவங்க தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் ஒரு சோக வரலாற்றைக் கொண்டது. 1838ஆம் ஆண்டு அந்தநாளில், ஆப்பிரிக்கர்களுக்கும் டச்சு வம்சாவழியினருக்கும் ஒரு ஆற்றின் கரையில் மோதல் நடந்தது. டச்சு தளபதி பிரிடோரியஸ் துப்பாக்கி, பீரங்கி சகிதம் வந்து, ஈட்டி ஏந்தி வந்த ஆயிரக்கணக்கான ஸுலு வீரர்களை எதிர் கொண்டான். நாலுமணி நேரப் போரில், துப்பாக்கிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 3000 ஆப்பிரிக்க வீரர்கள் மடிந்தனர். அந்தப் போர் ‘இரத்த ஆற்றுப் போர்’ (Battle of the Blood river) என்று வரலாற்றில் இடம் பிடித்தது. ஈட்டி பிடித்துப் போராடிய இந்த வீரர்களின் நினைவாகவே ‘நாட்டின் ஈட்டி’ என்று அந்தப் புதிய அமைப்பிற்குப் பெயர் சூட்டப்பட்டது.


கியூபாவில் பாடிஸ்டா ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோ நடத்திய ஆயுதப் புரட்சி, சேகுவேராவின் கெரில்லாப் போர்முறை, எத்தியோப்பிய, சீனப்புரட்சிகள் மண்டேலாவையும் அவரது கூட்டாளிகளையும் வெகுவாகப் பாதித்திருந்தன. எம்கேவியில் முதலில் சேர்ந்த உறுப்பினர் பலர் கம்யூனிஸ்டுகள், ராணுவத் தளங்களையும் மின்நிலையங்களையும் உயிர்ச் சேதத்தை குறைக்க இரவில் தாக்க தீர்மானித்து, இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். அரசு வழிக்கு வராவிட்டால் அடுத்தக் கட்டமாக கெரில்லாப் போர் முறை கையாளப்படுமென்று திட்டமிட்டு எம்கேவி தம் அங்கத்தினர் முன்னூறுபேரை ரகசியமாக அண்டை நாடுகளில் ஆயுதப் பயிற்சிக்கென அனுப்பியது. 1962இல் நாட்டை விட்டு மாறுவேடத்தில் வெளியேறிய மண்டேலா எத்தியோப்பியாவில் நடந்த ஆப்பிரிக்க தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு தென்னாப்பிரிக்கர்களின் அவல நிலையை விளக்கி அங்கு மக்கள் அரசு மலர உதவுமாறு கேட்டுக்கொண்டார். அங்கிருந்து அல்ஜீரியா சென்ற அவர் ஆறுமாத காலம் கெரில்லாப் போர் முறையில் பயிற்சி பெற்றார். லிபியாவின் கடாஃபியிடம் உதவி கேட்டார்.


சீனாவிடமிருந்து நிதி, ஆயுத உதவி வேண்டியதற்காக ஆ.தே.கா உறுப்பினர் சிலரின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட மண்டேலா பிரிட்டன் சென்று அங்கு வாழ்ந்த ஆலிவர் டெம்போவின் உதவியுடன் சில ஆங்கிலேய எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்து அவர்களது ஆதரவை கேட்டார். தென்னாப்பிரிக்கா திரும்பிய மண்டேலா வையும் பத்து மற்ற தலைவர்களையும் சேர்த்து தேசத் துரோகம், ராணுவப் புரட்சி செய்யத் தூண்டியது என்ற குற்றங்களுக்காகத் தீவிரவாதிகளை ஒடுக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


ரிவோனியா (Rivonia) என்று குறிப்பிடப்பட்ட இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் ஆதாரங்களைக் காட்டி அவர்களுக்கு குறைந்தபட்சம் மரணதண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடினார். நீண்ட இந்த வழக்கின் இறுதியில் 1964இல் மண்டேலாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.


தன் வரலாறான Long walk to Freedom என்ற நூலில் மண்டேலா எழுதுகின்றார்: “சிறைக்குள்ளேயுள்ள நடைபாதைக்கு வலதுபுறமிருந்த குறுகிய அறையில் அடைக்கப்பட்டேன். வெளியில் “நெல்சன் மண்டேலா” என்ற பெயருடன் 1964இல் அச்சிறைக்கு வந்த 466வது கைதி என்பதைக் குறிக்க 466/64 என்று எழுதப்பட்ட வெள்ளைப் பலகை தொங்கியது . . . அரசியல் கைதியாக அங்கு சிறை வைக்கப்பட்டபோது என் வயது 46. அந்தச் சிறைக்குள் எத்தனை ஆண்டுகள் இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது.”


1964 முதல் 1982 வரை ரொபன் தீவுச் சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்ற தெம்போ, அங்கு உயர் நிலையிலிருந்த முக்கியமான அரசியல் கைதிகள் தனிமைச் சிறையிலும், மாணவர் போராட்டத்தில் பங்குபெற்ற தான், வேறு ஒரு பிரிவிலும் இருந்ததாகக் கூறினார். மண்டேலா போன்ற, அரசியல் தீவிரவாதிகள் என்று கருதியவர்களை அடைத்து வைத்திருந்த இரும்புக் கம்பி போட்ட சிறிய அறைகளைக் கடந்து சென்று ஒரு குறுகிய அறை முன் நின்றார் எங்கள் வழிகாட்டி. கதவைத் திறந்து காட்டினார். தரையில், கத்தாளை நாரால் ஆன விரிப்பான் மேல் கம்பளி ஒன்று சுற்றி வைக்கப்பட்டிருந்தது. சுவரில் சிறிய ஷெல்ஃப், ஒரு சிறிய மேஜை, மலஜலம் கழிக்க மூலையில் ஒரு தகரவாளி இருந்தது. 1978இல் எப்படியிருந்ததோ அதேபோல் இருந்த அந்த அறையில்தான் மண்டேலா தன் நாட்களைக் கழித்தார் என்றார்.


“ரொபன் தீவில் சிறை வைக்கப்பட்ட முதல் அரசியல் கைதி 1963இல் அரசுக்கு எதிரான குரல் எழுப்பிய மசேமூலா என்ற போராளி. சிறைக்கு வந்த கைதிகளுக்கு கைரேகை பதிவு செய்யப்பட்டு அடையாளச் சீட்டு அளிக்கப்பட்டது.” என்று கூறி பெரிதாக்கப்பட்ட அடையாளச் சீட்டு ஒன்றை தெம்போ தூக்கிப் பிடித்துக்காட்டினார். மண்டேலா வந்த அதே ஆண்டு நாசவேலை செய்ததற்காக தீவாந்திர தண்டனை பெற்று வந்த பில்லி நாயர் என்ற இந்திய வம்சாவழியினர் ஒருவரின் அடையாளச் சீட்டு அது. 1985இல் குடியரசுத் தலைவராக இருந்த ஃபிரெட்ரிக் போத்தா, அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதையும், போராட்டங்கள் நடத்துவதையும் கைவிடுமாறு ஆ.தே.கா தொண்டர்களை மண்டேலா கேட்டுக் கொள்ளவேண்டுமென்றார். அப்படி செய்தால் மண்டேலா விடுதலை செய்யப்படலாம் என போத்தா தூது விட்டார். சமரசங்களுக்கு தான் உடன்படப் போவதில்லை என்று மண்டேலா திட்ட வட்டமாக பதில் தந்தார் . . . தொண்டர்களுடன் அவர் சிறைவாசம் தொடர்ந்தது. பன்னாட்டு தலைவர்கள் வற்புறுத்தியதாலும் மனித உரிமை இயக்கங்கள் தந்த நெருக்கடியாலும் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தென்னாப்பிரிக்க அரசு மண்டேலாவை விடுதலை செய்யப்போவதாகவும், ஆ.தே.காவின் மீதிருந்தத் தடையை நீக்கப்போவதாகவும் அறிவித்தது. அதன்படியே ஒன்பது நாட்களுக்குப் பின் இருபத்தியேழு ஆண்டுகள் சிறையில் நலிந்திருந்த மண்டேலா விடுவிக்கப்பட்டார்.


எல்லைக் காந்தி கஃபார்கானுக்கு அடுத்து, இந்தியரல்லாத ஒருவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது நெல்சன் மண்டேலாவுக்குத்தான். தனது ஏற்புரையில் “சிறுபான்மை வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, ஜனநாயக முறைப்படி, இனவேறுபாடற்ற, ஆப்பிரிக்கர்களைச் சமமாக நடத்தும் அரசு தென்னாப்பிரிக்காவில் ஏற்பட வேண்டும்,” என்றார். தென்னாப்பிரிக்காவில் இனவேறுபாடு (Apartheid) சித்தாந்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததற்காக அன்று ஜனாதிபதியாக இருந்த டெ கிளர்க் (E.W. de Klerk),மண்டேலா இருவருக்கும் 1993இல் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.


மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி, மண்டேலாவின் பெயருக்கு களங்கம் விளைவித்தது ஒரு தொடர்கதை. “ஏழைகளுக்குப் பிரமாதமாக ஒன்றும் செய்துவிடாத இவர் தன்னை சிறைவைத்த டெகிளர்க்குடன் சேர்ந்து பரிசு பெற்று தென்னாப்பிரிக்கர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்” என்றார். மணமாகி 38 ஆண்டுகள் கழித்து அவரை வின்னி விவாகரத்து செய்தார். அவர்கள் இருவரும் ஐந்து வருடங்களே தம்பதிகளாக வாழ்ந்ததும், எஞ்சிய ஆண்டுகளை மண்டேலா சிறையில் கழித்ததும் அந்த ஆண்டுகளில் வின்னி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் இந்த முடிவிற்குக் காரணங்கள். வின்னியின் ஆணைப்படி, மெய்க்காவலாளிகள் ஒரு 14 வயது சிறுவனைக் கடத்தி கொன்றதற்காக அவர் 1991இல் கைதுசெய்யப்பட்டார். வெள்ளையருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆப்பிரிக்கர்களைப் பிடித்து, கழுத்தில் டயரை மாட்டி எரித்துக் கொல்லவேண்டும் என்று சொன்னதற்காக பலரின் கோபத்தை வின்னி சம்பாதித்துக்கொண்டார். ஆ.தே.காவின் நிதியை கையாடியதற்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.


1994இல் தேர்தல் நடந்தபோது ஆ.தே.கா. தான் வெற்றி பெற்றால் நாட்டின் புனரமைப்பு, மேம்பாட்டிற்கு முதலிடம் தரப்போவதாகப் பிரச்சாரம் செய்தது. 60 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகளைப் பெற்று ஆ.தே.கா பெரும் வெற்றி பெற்றது. மண்டேலா தென்னாப்பிரிக் காவின் முதன் ஆப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஆனார். அப்போது தென்னாப்பிரிக்காவில் மட்டுமன்றி பன்னாட்டு அரங்குகளிலும் மண்டேலாவின் தலைமை குறித்துப் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து, கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் நாடுகளின் ஆதரவுடன் போராடியவர், தென்னாப்பிரிக்காவில் பன்னாட்டு முதலீடுகளை எவ்வாறு எதிர்கொள்வார் என்ற கலக்கமும் இருந்தது. எடுத்துக்காட்டாக ரொனால்ட் ரேகன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தபோது அந்த அரசு தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் ஆதிக்கத்தை ஆதரித்தது. மண்டேலாவை தீவிரவாதியாக கருதி அவர் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை செய்திருந்தது. ஆனால் பின்னர் மண்டேலா குடியரசுத் தலைவரான பின்பு அவரது இறையாண்மை, வெளிநாட்டுக் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றை மதித்த அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள் தென்னாப்பிரிக்காவில் தம் முதலீடுகளை அதிகரித்தன.


சிறைச்சாலையை சுற்றிக் காட்டி முடித்த தெம்போ “பல இனங்கள் ஒருங்கிணைந்து வாழ்வதால் எங்கள் நாட்டை வானவில் தேசம் என்று குறிப்பிடுகின்றோம்.” என்று கூறி விடை பெற்றார். ஊர் திரும்புவதற்காக படகுத் துறைக்கு சென்றபோது, எப்போதும் ஒரு சுற்றுலா முடிவில் ஏற்படும் மன நிறைவிற்குப் பதிலாக ஆழ்ந்த மனச்சோர்வை உணர்ந்தேன். சில நூற்றாண்டுகளாக நாடுகடத்தப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு அல்லாடியவர்கள் வேதனை என்னையும் பற்றிக்கொண்டது. படகின் மேல்தட்டில் ஏறி காற்றாட நின்றபோது, அங்கிருந்த இந்திய இளைஞர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். டர்பன் நகரிலிருந்து வந்த இந்திய வம்சாவழி வணிகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மக்களாட்சி மலர்ந்த பின் தென்னாப்பிரிக்காவின் நிலை என்ன என்று கேட்டேன். “ஆட்சி மாறியதற்குப் பின்னர் எல்லாம் நன்றாக நடக்கின்றது என்பது உண்மைக்குப் புறம்பானது. ஊழல், வேலையில்லாமை, கொலை, களவு, பாதுகாப்பற்ற நிலை ஆகியவை உருவாக்கும் தார்மீகக் கோபத்தை இன்றைய தென்னாப்பிரிக்கர்கள் பலரிடம் காணலாம். மண்டேலாவிற்குப் பின் பொறுப்பேற்றவர்கள், அவர் கொண்டிருந்த தொலைநோக்கு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்பும் முனைப்பும் அக்கறையும் இல்லாதவர்களாயிருப்பது பெரிய ஏமாற்றம்.” என்றார் அந்த இளைஞர். படகு அப்போது கரையை நெருங்கியிருந்தது. விண்ணில் வானவில் தெரிகிறதா என்று பார்த்தேன்.


சு.கி. ஜெயகரன்