sarath-maithreeகடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி, 19வது திருத்தச் சட்டம், சிறிலங்காவின் பாரளுமன்றத்தில் மிக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

வழமையாக அரசும், எதிர்க்கட்சியினரும் எதிர்மாறக வாக்களித்து வரும் 225 உறுப்பினர்களை கொண்ட சிறிலங்காவின் பாராளுமன்றத்தில், 212 உறுப்பினர்கள் 19வது திருத்தச் சட்டத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளது, ஓர் சரித்திர முக்கியத்துவ வாய்ந்த வாக்கெடுப்பு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

 

தற்போதைய சிறிலங்காவின் அரசு, ஓர் சிறுபான்மை அரசாக இருந்த பொழுதிலும்,19வது திருத்தச் சட்டம் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால், விசேடமாக முன்னாள் ஜனதிபதி ராஜபக்சவின் ஆதரவாளர்களும், இவ் வாக்கெடுப்பில் அரசுடன் இணைந்து இத்திருத்தச் சட்டத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர் என்பது ஓர் புதுமையான விடயமே.

 

இத் திருத்தச் சட்டம், நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனதிபதியின் அதிகாரங்கள் பலவற்றை குறைத்துள்ளதாக கூறியிருந்தாலும், இத் திருத்தப் பிரேரணையில் வேறு பல அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

உள்நாட்டு அரசியல்வாதிகள் தலைவர்களை பொறுத்தவரையில்,இவ் வெற்றிகரமான வாக்கெடுப்பு, சிறிலங்காவின் அரசியல் நிலைப்பாட்டில் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக கணிக்கப்படுகிறது.  நிச்சயமாக இது உண்மையல்ல!

 

ஜனநாயகம் என்பது, மக்கள், மக்களுக்காக, மக்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும். இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களை, கடந்த பல தசாப்தங்களாக அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களது அரசியல் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் ஜனநாயக ஆட்சி நிச்சயம் நிலவ முடியாது. 19வது திருத்தச் சட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

 

கடந்த பல வருடங்களாக சர்வதேச சமுதாயத்திடமிருந்து இனப்பிரச்சனையை தீர்க்குமாறு வேண்டுகோள் வரும் ஒவ்வொரு வேளைகளிலும், முப்பது வருடகால யுத்தத்தை, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக கூறி, சிறிலங்கா அரசுகள் தப்பியுள்ளது.

 

ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்து இன்று ஆறு வருடங்களாகியும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.ஆனால் சுவையான வார்த்தைகள், கதைகளால் காலம் கரைந்து ஒடியுள்ளது, ஓடுகிறது.

 

முன்னைய ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரங்களை கொண்டிருந்தது மட்டுமல்லாது, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் பெற்றிருந்தார். ஆனால் யுத்த காலத்தில் தாம் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தொட்டதற்கு எல்லாம், பாரளுமன்ற தெரிவு குழுவை காரணம் காட்டி காலத்தை கடத்தினார்கள்.

 

அன்று அவர்கள் கூறிய ‘பாரளுமன்ற தெரிவு குழு’ இன்று எங்கு போயுள்ளது? வடக்கு கிழக்கில் – பௌத்தமயம், சிங்களமயம், இராணுவமயம், நில ஆக்கிரமிப்பு யாவும் வெற்றியாக நடந்து முடியும் வரை, காலத்தை கடத்தினார்கள் என்பதே உண்மை. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது, யுத்தம் முடிந்த பின்னர் நாட்டின் வளர்ச்சி என்ற வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

 

தேசிய அரசு

 

தற்பொழுது ஒரு புதிய ஜனதிபதி, ஓர் சிறுபான்மை அரசுடனான ஆட்சி சிறிலங்காவில் நடைபெறுகிறது. இது ஓர் சிறுபான்மை அரசாக இருந்த பொழுதிலும்,இவ் அரசில், எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளார்கள். பலவிதப்பட்ட குளறுபடிகள் நிலவியிருந்தும், 19வது திருத்தச் சட்டம், சிறிலங்காவின் சகல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சிறிலங்காவை பொறுத்தவரையில், இவ் அசாதாரணமான பாரளுமன்ற வாக்கெடுப்பை, பொது அறிவு படைத்த ஒவ்வொருவரும் ஆராயக் கடமைப்பட்டுள்ளார்கள். இதில் முதல் விடயமாக, வடக்கு கிழக்கு மலைநாட்டு தமிழர்களது வாக்குகளினாலேயே, புதிய ஜனாதிபதி வெற்றி பெற்றார் என்பதை யாரும் மறைக்க முடியாது.

 

முன்பு போன்று வடக்கு கிழக்கு வாழ் மக்கள், இவ் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்திருந்தால், முன்னைய ஜனாதிபதி இன்று தனது மூன்றாவது தடவை அரியாசனம் ஏறியிருப்பார். மூன்றாவதாக, தற்போதைய அரசு ஓர் சிறுபான்மை அரசாக இருந்த பொழுதிலும், இது தேசிய ஓர் அரசாங்கம். அடுத்து எதிர்க்கட்சியிலிருக்கும் யாவரும் இவ் அரசை ஆதரிக்க முன்வரவில்லை.

 

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி, இன்று தினமும் தனது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளது மட்டுமல்லாது, தனது தோல்விக்கு இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களே காரணமென மேடைகளில் கூறிவருகிறார் போன்ற விடயங்களை, நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

இப்படியான ஓர் நிலையில், 225 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்றத்தில், 19வது திருத்தச் சட்டத்தை எதிர்த்து, ஓரே ஒரு உறுப்பினர் மட்டுமே வாக்களித்தார். எப்படியாக எதிர்க்கட்சி உறுப்பினார்களை, விசேடமாக முன்னாள் ஜனதிபதியின் கையாட்களை, இவ் 19வது திருத்தச்சட்டத்திற்கு சார்பாக வாக்களிக்க, தற்போதைய அரசு வைத்துள்ளது என்பது ஆய்விற்குரிய விடயங்கள்.

 

மிக அண்மையில், சிறிலங்காவை சார்ந்த ஓர் நண்பரை, மிக நீண்டகாலத்திற்கு பின்னர் சந்தித்து, சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடினோம். இவ்வேளையில், இந் நண்பரால் கூறப்பட்ட விடயங்கள் என்னை திகைக்க வைத்துள்ளது.

 

அதாவது 19வது திருத்தச் சட்டத்திற்கு சார்பாக தெற்கை சார்ந்த சகல பாரளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பதற்காக, முன்வைக்கப்பட்ட பரப்புரைக்கு விடயங்கள் மிகவும் இனவாத சாயல் கொண்டவை. இந்த உலகில் இப்படியும், இரு நாக்கு, இரு மாறுபட்ட முகங்கள் செயற்பாடுகளை, தேசப்பற்றின் பெயரால் மேற்கொள்பவர்கள் உள்ளார்களா என எண்ணத் தோன்றுகிறது.

 

பின்தள்ளப்படும் இனப்பிரச்சினை

 

19வது திருத்தச் சட்டத்திற்கு சார்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்குமாறு வேண்டப்பட்ட வேளையில், இவர்களில் சிலருக்கு முன் வைக்கப்பட்ட விடயங்களில் ஒன்று, இவ் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமே, இனப்பிரச்சினைக்கான தீர்வை சட்ட ரீதியாக பின்தள்ள முடியுமென கூறப்பட்டுள்ளது.

 

இப்பிரச்சார வேளையில், அரசு தரப்பினர் சார்பாக சிலரினால் கூறப்பட்டுள்ள விடயம் என்னவெனில், இனப்பிரச்சினையை உடன் தீர்க்குமாறு தமக்கு சர்வதேசம் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும், ஆகையால் இவ் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமே,தாம் சில காலம் இவ் அழுத்தங்களிலிருந்து தப்பித்து கொள்ள முடியுமென கூறப்பட்டுள்ளது.

 

தற்பொழுது இவ் 19வது திருத்தச் சட்டம் அமுலாக்கப்படடுள்ளதை தொடர்ந்து, ஜனதிபதியின் நிறைவேற்று அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மூலம், 1987ம் ஆண்டு போல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக எந்த உடன்படிக்கையோ அல்லது எந்த மாகாணங்களையும் தாம் எண்ணியவாறு இணைக்கவோ முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

எமது அரசியல் தீர்வு கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இழுபட்டு செல்வதற்கு ஓர் முக்கிய காரணி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கான எந்த அரசியல் தீர்வையும் எந்த சந்தர்பத்திலும் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு அமைய, 1987ம் ஆண்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன, 13வது திருத்தச் சட்டத்தை உருவாக்க காரணமாக விளங்கிய, இலங்கை இந்தியா உடன்படிக்கை கைச்சாத்திட்டது மட்டுமல்லாது, தமிழ் மக்களது வடக்கு கிழக்கை இணைத்து ஓர் மாகாண சபையையும் உருவாக்கப்பட்டது.

 

இவ் 13வது திருத்தச் சட்டத்தை, தனது அதிகார பலத்தை பாவித்து அரசியல் யாப்பிலும் இணைத்து கொண்டார் என்பதே சரித்திரம்.

 

ஆனால் 19ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள இன்றைய நிலையில,தமிழர்களது அரசியல் தீர்விற்கு, அதிகாரங்களை கொண்டுள்ள பாராளுமன்றத்தில் ஓர் தீர்வை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத நிலை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

 

காரணம், தமிழர்களிற்கு அரசியல் உரிமை வழங்கப்படுவதற்கான புதிய யாப்பு, புதிய சட்டம் உருவாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பெரும்பான்மையாக வாக்களிக்க வேண்டும். இது நிச்சயம் ‘கல்லில் நார் உரிக்கும’ வேலையே.

 

இப்படியாக இன்னும் சாட்டுப்போக்குகளை கூறி மேலும் சில வருடங்களை கடத்தும் கட்டத்தில், யுத்தத்தின் பின்னர் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ள – பௌத்தமயம், சிங்களமயம், இராணுவமயம், நிலம் பறிப்பு யாவும் முற்று முழுதாக நிறைவேற்றப்பட்டு தமிழர்கள், தங்களது தாயக பூமியான வடக்கு கிழக்கிலேயே அரசியல் அனாதைகளாக வாழ்வதற்கு வழி வகுக்கப்பட்டுவிடும்.

 

இவ் உண்மையை, முன்னைய ஜனாதிபதி, யுத்தத்தின் பின்னர் தான் ஆற்றிய உரையில் “நாங்கள் எமது அகராதியிலிருந்து சிறுபான்மை என்ற சொற்பதத்தை நீங்கியுள்ளோம்” என மிக ஆணித்தரமாக பாரளுமன்றத்தில் கூறியிருந்தார். அதாவது, வடக்கு கிழக்கு மட்டுமல்லாது, மலைநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு தாம் எந்த அரசியல் சலுகைகளையும் வழங்க மாட்டோம் என்பதை மிக தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

13வது திருத்தச் சட்டம்

 

இலங்கை இந்திய ஒப்பந்தை தொடர்ந்து உருவாகிய 13வது திருத்தச் சட்டம் என்பது, சிறிலங்காவின் அரசியல் யாப்பில் 1987ம் இணைக்கப்பட்டுள்ள போதிலும், இன்றுவரை இத்திருத்தச் சட்டம் முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உலகறிந்த உண்மை.

 

இதை முற்று முழுதாக நடைமுறைபடுத்துவதற்கு பாராளுமன்றத்தில் எந்த வாக்கெடுப்பை யாரும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது பற்றிய எந்த விடயத்தையும் தற்போதைய அரசோ, ஜனதிபதியோ முன்வைக்கவோ அக்கறை கொண்டதோ கிடையாது.

 

இந்நிலையில், தற்போதைய அரசின் பங்காளியான, சிங்கள மொழிச் சட்டத்தை வெற்றியாக அமுல்படுத்தி, அன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக சமஷடி அரசே இருக்க முடியுமென ஆசைவார்த்தை கூறிவந்த எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கவின் மகளாகிய, முன்னாள் ஜனாதிபதி, இப்பொழுது சமஷ்டி அரசு என்ற ஆசை வார்த்தையை மீண்டும் ஆரம்பித்துள்ளதன் நோக்கம் என்ன?

 

இன்று 19வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தியது போல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் கூறப்படும், சமஷ்டி அரசை உருவாக்குவதற்கான அரசியல் யாப்பில் மாற்றங்களை இவர்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியுமா? இவ் சமஷடி அரசு பற்றிய விடயங்கள் யாவும், நான்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், சிங்கள அரசியல்வாதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், இதை கூறுபவர்களினால் எப்படியாக சமஷடி அரகை உருவாக்க முடியும்?

 

உண்மை என்னவெனில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர், தற்போதைய அரசு பதவியிலிருக்குமா என்பதே கேள்வி குறி. ஓர் பேச்சிற்கு இவ் அரசு மீண்டும் தேர்தலின் பதவிக்கு வந்து விட்டார்களென எடுத்து கொள்வோம்.

 

இவ் நிலையில், இவர்களால் இனப்பிரச்சினையை தீர்பதற்கான எந்த அரசியல் தீர்வை முன் வைப்பார்கள்? அது ஒன்றில் 13வது திருத்தச் சட்டம் அல்லா சமஷ்டி தீர்வாகவே இருக்க முடியும். சரி சமஷ்டி தீர்வு என இவர்களால் கூறப்பட்டால், அது ‘பழைய குருடி கதவை திறவடி’ கதையாகத் தான் முடியும்.

 

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், இதை முற்று முழுதாக அமூல் படுத்துவதே தற்பொழுது மிக முக்கியம். இதை 19வது திருத்த சட்டத்தை நிறைவேற்ற இணைந்த அரசும், எதிர்க்கட்சிகளும் இணைந்து நடைமுறைப்படுத்த முடியும். இதை இவர்களால் இப்பொழுது செய்வதில் என்ன தடைகள் உண்டு?

 

உண்மையில் முன்னாள் ஜனதிபதி சந்திரிக்கா விசுவாசமாக சமஷ்டி பற்றி கூறியிருந்தால், இவர்களுடன் இணைந்தவர்கள் யாவரும் மனப்பூர்வமாக தமிழர்களது அரசியல் பிரச்சினை தீர்க்க விரும்பியிருந்தால், முதலில் மிக இலகுவான 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

 

இதன் பின்னர் தமது ஏகோபித்த விருப்பத்திற்கமைய, தமிழ் மக்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, இதற்கு மேலான சமஷ்டியையோ அல்லது முன்னாள் ஜனாதிபதி கூறியது போல், 13 பிளஸ் எனப்படும் பேய்காட்டு தீர்வையோ முன்வைக்க முடியும்.

 

யதார்த்தம் உண்மை என்னவெனில், தற்போதைய அரசிற்கும், முன்னைய அரசுகள் போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வை தாமதப்படுத்த வேண்டிய ஓர் தேவை உள்ளது. காரணம், வடக்கு கிழக்கில் – பௌத்தமயம், சிங்களமயம், இராணுவமயம், ஆகியவை இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இவை தற்பொழுது வேகம் குறைந்து காணப்பட்டாலும், வடக்கு கிழக்கின் புவியியல் 1948ம் ஆண்டு முதல் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வருகிறது. இந்த அடிப்படையில் இன்னும் சில வருடங்களில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற கதையே இலங்கைத்தீவில் இல்லாமல் போகும் நிலை உருவாகிவருகிறது.

 

தமிழர்கள் ஆகிய நாங்கள், விசேடமாக எம்மை பாரளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் யாவரும் இவ்விடயத்தில் ஒத்து மொத்தமாக, ஏமாளிகளே!

 

நாம் இவற்றிலிருந்து தப்பி கொள்வதற்கு, உடனடியாக சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் மிக அடிப்படை தீர்வான 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இதற்காக யாரும் பாரளுமன்ற தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

 

இந்தியாவிற்கு இவ்விடயத்தில் ஓர் முக்கிய கடமை உண்டு. 13வது திருத்த சட்டத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு வழக்கபட வேண்டும் என்பது, ஐ.நா. மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

சமஷ்டி தீர்வு பகற் கனவு!

 

ஏற்கனவே சிங்கள அரசியல்வாதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ள சமஷடி தீர்வை எஸ் டபிள்யூ ஆர் டி பண்டரநாயக்கவின் மகளாகிய முன்னாள் ஜனாதிபதி, தற்பொழுது முன் வைப்பது என்பது ஓர் கேலி கூத்தாகவுள்ளது.

 

13வது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரையில் உண்மையான அரசியல் தீர்வாக இருக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் இவ் தீர்வு ஒழுங்கான முறையில் அமுல்படுத்தப்பட்டால், அடுத்த கட்டத்திற்கு தமிழ் மக்கள் தம்மை நகர்த்துவதற்கான வழி திறக்கப்படும்.

 

இதிலும் சம்ஷ்டி ஆட்சி என்பது, தமிழ் மக்களை பொறுத்தவரையில் மிகவும் ஆபூர்வமான அரசியல் தீர்வாக அமையும் என்ற எமது பலவீனத்தை மனதில் கொண்டு, தெற்கின் அரசியல்வாதிகள் எம்மீது வழமையான சவாரியை செய்கின்றனர்.

 

உண்மையை கூறுவதனால், முன்னைய உடன்படிக்கைகளான –பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம்,சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரினால் கைச்சாத்திடப்பட்ட பல ஒப்பந்தங்களின் நிர்க்கதியை நாம் மறந்தவர்கள் அல்ல.

 

ஆகையால் இன்றைய சூழலில் என்ன நடைமுறைக்கு சாத்வீகமாக உள்ளதோ, அதையே நாம் முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும். ‘பொரிமாததோண்டி’ போன்று தமிழர்களது அரசியல் தீர்வை கற்பனை செய்து, உள்ளவற்றையும் பறி கொடுக்குமளவிற்கு எமது நிலை இல்லை.

 

ஆகையால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், 13வது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல் செய்யுமாறு அரசிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். இதை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தாவிடில், இவர்களும் முன்னைய அரசுபோல் காலம் கடத்தும் அரசியல் தான் செய்கிறார்கள் என்பதை தமிழ் பிரதிநிதிகள் சர்வதேச சமூதாயத்திற் கூற வேண்டும்.

 

இலங்கைதீவின் சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்துள்ள ஒவ்வொரு ஆட்சியாளரும், தமிழர்கள் மீது சவரி செய்வதை நிறுத்தவில்லை. ஆகையால் தற்போதைய ஜனதிபதியும் இதை நிச்சயமாக இன்றோ நாளை வெற்றிகரமாக செய்வார். இதே இடத்தில், தமிழர்கள் ஆகிய நாம், கற்பனை தீர்வு திட்டங்களை நம்பி உள்ளவற்றையும் பறிகொடுக்காது, கையில் உள்ளவற்றை ஒழுங்காக காப்பாற்ற முன் வரவேண்டும்.

 

ஏமாற்று வாக்குறுதிகளையும், ஏமாற்று தீர்வுகளையும் பொறுத்தவரையில், உலகின் கண்களில் சிறிலங்கா அரசு முன்னிடத்தில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

ஜனாதிபதிகளும் முக்கிய புள்ளிகளும்

 

சிறிலங்காவின் ஜனாதிபதிகளும் முக்கிய புள்ளிகளும் சிறிலங்காவில் அரசியல் தீர்வு பற்றி கூறியவற்றை மிக சுருக்கமாக இங்கே தருகிறேன்.

 

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது உரையில், சிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை நாம் எமது அகராதியிலிந்து மூன்று வருடங்களிற்கு முன்னரே நீக்கிவிட்டோம் எனக் கூறியுள்ளார். இவர் கூறியதன் முழு அர்த்தத்தையும் இவரது கடந்த ஆறு வருட கால ஆட்சியில் நடைமுறையில் கண்டோம்.

 

2008ம் ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி, கனடிய பத்திரிகையான ‘நசனல் போஸ்ற்’ என்ற பத்திரிகைக்கு, தளபதி சரத் பொன்சேக்கா கொடுத்துள்ள செவ்வியில்,‘இந் நாடு சிங்களவர்களுக்கு உரியது என்பதை நான் திடகாத்திரமாக நம்புகிறேன். ஆனால் இங்குள்ள சிறுபான்மையினரை நாம் எமது மக்களாக நடத்துகிறோம். இவர்கள் தாம் சிறுபான்மையினர் என்பதை மறந்து, நியாயமற்ற உரிமைகளை முன்வைக்கப்படாது.

 

1998ம் ஆண்டு ஆகஸ்ட் 31முதல், செப்டம்பர் 6ம் திகதி வரை, தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மகாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஜனாதிபதி சந்திரிக்கா குமரதுங்க, அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றில், “சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த தமிழர், எமது நாட்டின் பூர்வீக மக்கள் அல்ல. ஆனால் இவர்களுக்கு தனி நாடு தேவைப்படுகிறது, எனக் கூறியிருந்தார்.

 

1994ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி கொழும்பில் வெளியான, ‘சண்டே ஓப்சேவர்’ என்ற பத்திரிகையில், ஜனதிபதி டி. பி. விஜயதுங்க அவர்கள், “பெரும்பான்மை சிங்கள இனத்தை சுற்றி வளரும் கொடியே சிறுபான்மையினர்” என மிகவும் மோசமாக தமிழ் மக்களை இழிவுபடுத்தியிருந்தார்.

 

1983ம் ஆண்டு யூலை மாதம் 11ம் திகதி, பிரித்தானியாவில் வெளியான ‘டெயிலி ரெலிகிறாவ்’ என்ற பத்திரிகைக்கு கொடுத்த செவ்வி ஒன்றில்,ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன,“

 

நான் தமிழ் மக்களின் கருத்து பற்றி கவலைப்படவில்லை. இப்பொழுது நாம் அவர்களது உயிர்களை அல்லது கருத்துக்கள் பற்றி அக்கறை கொள்ள முடியாது. நாம் எவ்வளவிற்கு வடக்கிற்கு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவிற்கு இங்குள்ள சிங்களம் மக்கள் சந்தோஷப்படுவார்கள். நான் தமிழர்களை எவ்வளவிற்கு பட்டினி போடுகிறேனோ, அவ்வளவிற்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 

இது ஓர் முதிர்ந்த சிங்கள அரசியல்வாதியும், ஜனாதிபதியுமான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் கருத்து.

 

இந்நிலையில், இலங்கைத்தீவின் தமிழர்களாகிய நாம், சிங்கள பௌத்தவாதிகளிடமிருந்து எந்த அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, சாதாரண தமிழ் மக்கள் முதல், அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் வரை சிந்திக்க வேண்டும்.

 

ஆகையால், சர்வதேச சமுதாயத்தின், விசேடமாக இந்தியாவின் அனுசரணையுடன், நாம் ஏற்கனவே சிறிலங்காவின் அரசியல் யாப்பில் உள்ள தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். இது தவறும் பட்சத்தில் எல்லாம் ‘பூச்சியமாக’ (சைபர்) ஆகவே முடியவுள்ளது.

 

 

ச.வி. கிருபாகரன்

17 மே 2015