தெலுங்கானா பிரிவும் தமிழகத்தின் கருத்துக்களும்

0
692

தெலுங்கான பிரிவு குறித்து தோழர் தமிழானந்தன் எழுதிய ஆக்கம் இது:

 

delunganaதெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி இந்திய அரசிற்கு எதிராக தொடர்ந்து பல வருடங்களாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தெலுங்கானா மாணவர்களும் மக்களும் ஒன்று சேர்ந்து பல உயிர்களை பலிகொடுத்து நடத்திய போரில் இன்று இறுதிகட்டத்தை அடைந்துள்ளனர்.

 

ஐதராபாத் நிஜாம் ஆட்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படாத தனி நாடாக விளங்கிய தெலுங்கானா பகுதி மக்கள், தங்கள் கடும் உழைப்பில் உருவாகி வைத்திருந்த ஐதராபாத் என்ற தலைநகரோடு அயோக்கிய இந்திய அரசு கொடுத்த போலி வாக்குறுதிகளை நம்பி, நிஜாம் ஆட்சியை எதிர்த்து போராடி ஆங்கிலேயர் உருவாக்கிய இந்தியாவில் இணைந்தனர்.

 

பேய்க்கு பயந்து பிசாசிடம் மாட்டிய கதையாக. தனி நாடாக மாற வேண்டிய தெலுங்கானா பகுதி அயோக்கிய மக்கள் விரோத இந்திய அரசில் இணைந்ததால் தங்கள் மொழி பேசுகிற மக்களாலே சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு, உரிமைகளை பறிக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு கையறு நிலைக்கு உள்ளான காலகட்டத்தில் தனி மாநில கோரிக்கை வெடித்தது.

 

2009 தொடக்கத்தில் தீக்குளிப்பு போராட்டங்கள் வெகு விரைவாக பரவின, அடுத்த 4 மாதத்தில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கிட்டதட்ட 300 மேற்பட்டோர் தீக்குளித்தனர். உஸ்மானிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை வலுவாக்க தொடங்கினர்..பின்னர் நடந்த தொடர்ச்சியான போராட்டங்களால் தங்கள் கோரிக்கையை உயிப்புடன் வைத்து இன்று வெற்றி பெற்றுள்ளனர்.. இந்திய அரசின் துரோகம் நிச்சயம் தொடரும், அதை உணரும் போது தனி நாடாக போகும் போராட்டத்தை அடுத்து அவர்கள் நிச்சயம் முன்னெடுப்பார்கள்.

 

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :அழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்.போராடினால் தான் உரிமையை வென்றெடுக்க முடியும். சாதி என்னும் விசத்தை பரப்பி தமிழக மக்களை துண்டாட துடிக்கும் பார்ப்பனிய இந்திய அரசுக்கு எதிராகவும், ஈழம் உட்பட தமிழகத்துக்கான அத்துனை உரிமைகளை வென்றெடுக்க உரிமைக்கான அரசியல் போராட்டம் தொடங்கப்பட வேண்டும்.

 

தெலுங்கானாவை போல் மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வரும் தமிழகம் தனது தேசிய விடுதலைக்கான போராட்டங்களை தொடங்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.
“அரசியல் விடுதலையே மக்கள் விடுதலை””. அதனை மாணவர்களாகிய நாம் முன்னின்று முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். தேவையும் கூட.

 

இதனிடையே தெலுங்கான பிரிவு குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை வருமாறு !

 

ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.

 

rajive1956 இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாநிலம் அமையக் காரணமானது.

 

ஆனால், கனிம, நீர் வளங்கள் கொண்டிருந்த தங்களுடைய பகுதி ஆந்திர ஆட்சி, அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆந்திரத்தின் வறுமைப் பகுதியாக தெலுங்கானா இருப்பதாக கூறியே, தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்தது (இராஜீவ் சிலை உடைக்கப்படுகின்றது).

 

இந்தியாவிலுள்ள பொருளாதார ரீதியில் பிற்பட்ட பகுதிகளை பற்றி ஆய்வு செய்த மத்திய அரசுக் குழு, 2009-10ஆம் ஆண்டுகளில் அளித்த அறிக்கையின்படி, ஆந்திரத்தின் 13 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தது. அதில் பத்து மாவட்டங்கள் தெலுங்கானா பகுதிக்கு உட்பட்டவையாகும். அந்த அடிப்படையில்தான் ஹைதராபாத், அடிலாபாத், மேடக், கம்மம், கரீம் நகர், மெஹபூப் நகர் நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய 10 மாவட்டங்களும் சேர்ந்த தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

 

தெலுங்கானா தவிர்த்த ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக ஒரு தலைநகர் உருவாக்கப்படும்வரை ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்குமான பொதுத் தலைநகராக்க செய்யப்பட்டிருக்கும் முடிவும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்பது ஏற்கப்பட்டிருப்பது, ஆந்திராவின் இதர பகுதி மக்களுக்கு ஒரு ஏமாற்றமானதுதான் என்றாலும், ஹைதராபாத் தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளதால், ஆந்திரத்திற்கென்று ஒரு தனித்த தலைநகர் உருவாக்கப்படுவதே நல்லதாகும்.

 

தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்க்கும் ஆந்திர அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு, தெலுங்கானாவுடன் சகோதர மனப்பாங்குடன் எப்போதும் போல் செயல்பட வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான நியாயம் எப்போதோ ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் பல உயிர்களைக் குடித்துவிட்டது. இதற்குமேலும் அந்த நிலை தொடர ஆந்திர, தெலுங்கானா மக்களும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காமல், வெவ்வேறு மாநிலத்தில் இருந்தாலும் ஒரே தேசிய இனம் என்ற ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறது.

 

கேலிச்சித்திர வரைஞர் பாலாவின் முகநூல் பதிவு இது

 

தெலுங்கானா  மாநிலம்  அமைவது  உறுதியாகியிருக்கிறது. இதற்காக ஒற்றுமையாக  இறுதிவரை  வீரமிக்க  போராட்டங்களை  நடத்திய  உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஒன்றுபட்டு நின்ற தெலுங்கானா மக்களுக்கும் வாழ்த்துகள்.

 

உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்வோம்.

 

ஆனால் தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரியை இந்திய மத்திய அரசு அவமதித்தது பெரும் வெறுப்பை இந்திய மத்திய அரசு மீது தோற்றுவித்துள்ளது.

கீழே உள்ளது தமிழக முதல்வரின் கடிதத்தின் சுருக்கம்:

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ‘பெல்’ நிறுவனத்தின் தொழிற்சாலை பிரிவை தொடக்கி வைப்பதற்காக 2–ந்தேதி திருச்சிக்கு வந்திருந்தீர்கள். தமிழக அரசின் சார்பில் உங்களை வரவேற்பதற்காக திருச்சி மாவட்ட கலெக்டரை தவிர்த்து, நிதித்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், காதி மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை நியமித்திருந்தேன்.
திருச்சியில் வரவேற்புக்காக வந்த டி.ஜி.பி.யை சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) அதிகாரி தடுத்ததாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

 

சரி இது தொடர்பில் தமிழ் மக்களின் கருத்து என்ன?

 

தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால், இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும்இ ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல். தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது.

 

தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால்  இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும், ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல். தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது.

 

சிறீலங்கா அரசினால் கொல்லப்படும் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் தொடர்பான நிலை என்ன?

 

தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டுவது தான் இன்றைக்கு மீனவர்கள் பிரச் சினைக்குக் காரணம் என்கிறார்களே?

 

நான் மீனவர்களுடன் இருபது தடவைகளுக்கு மேல் கடலுக்குச் சென்றிருக்கிறேன்.  கடலில் எல்லையெல்லாம் தெரியாது. எல்லையைத் தாண்டுகிறார்கள் என்கிறார்களேஇ “இதுதான் நமது எல்லை” என்பதை மீனவர்களுக்குத் தெரிவிக்க  இந்திய  கடற்படை கப்பலை  நம்  எல்லையில் மத்திய  அரசு  நிறுத்தட்டுமே?  ஏன் நிறுத்தவில்லை? இது நாள் வரை  இந்தப் பகுதியில் கடலைப்  பாதுகாத்தவர்கள்  கடற்படையினர்  அல்லர். 

 

மீனவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படிப் பட்ட தமிழக மீனவ சமூகம் இன்றைக்கு வஞ்சிக்கப்படும்,  ஏமாற்றப்படும்,  சுரண்டப்படும்  சமூகமாக இருக்கிறது என்பது பரிதாபத்துக் குரியது.  அவர்கள் நலனில்  அரசுக்கோ,  அரசியல்வாதிகளுக்கோ அக்கறை இல்லை என்பதுதான்  உண்மை.

 

புதிய தரிசனம் இதழில் சுவாமி பிரணவானந்தா.

 

தெலுங்கானாவின் பிரிவின் பின்னர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கவனம் எங்கு சென்றுள்ளது?

 

கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறியிருக்கும் என்று அமர்த்தியா சென் எழுதியிருப்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

 

‘நோபல்’’ பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, வெளிவந்துள்ள நூலினை அண்மையில் நக்கீரன் காமராஜ் தனது பிறந்த நாளினையொட்டி என்னிடம் அளித்தார்.இவர்கள் எழுதிய ‘‘நிலையில்லா புகழ்–இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்’’ என்ற தலைப்பு கொண்ட அந்நூலில், பக்கம் 72–ல், ‘‘தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் பார்ப்போமேயானால், கேரளாவும், தமிழ்நாடும் மற்றெல்லா மாநிலங்களை விடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும்; உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்; இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான இந்த ஒப்பீடுகளில் இருந்து தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், பன்முகம் கொண்ட ஒரு நாடு, மிக வெற்றிகரமான செயலாக்கம்மிக்க அந்த நாட்டு மாநிலங்களில் இருந்து உருவாகும் அனுபவங்களிலிருந்தே படிப்பினைகளைப் பெற முடியும் என்று எழுதியுள்ளார்கள்.

 

karuஇந்திய மாநிலங்களுக்கு இடையிலான வளர்ச்சி வேறுபாடுகளுடையது என்பதை விளக்குவதற்காக, ஏராளமான புள்ளிவிவரங்களை அமர்த்தியா சென் தனது நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். இந்தியாவின் மக்கள் தொகையில் சரிபாதியாக அதாவது 54.5 கோடி மக்கள் தொகை கொண்ட 7 பெரிய மாநிலங்களான பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் ஏழ்மை நிலை மிக அதிகமாக இருந்து வருகிறது. இவற்றில் சில மாநிலங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலவிவரும் வறுமை நிலைமையைவிட, மிகக் கொடுமையான நிலையே நீடித்து வருகிறது.ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளில் போதிய கவனமின்மை, பெண்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான பொறுப்பின்மை, இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சினைகளாக இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

 

மக்களுடைய வாழும் சூழ்நிலைகளில் மேம்பாடு காண்பதற்குத் தேவையான இயற்கை வளங்களை மிக அதிக அளவில் பயன்படுத்துதல், மக்களின் ஈடுபாட்டை அதிகரித்தல் போன்றவற்றில் போதுமான முன்னேற்றம் இல்லை என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான மின்சாரம், கழிவுநீர் வசதிகள், போக்குவரத்து மற்றும் சுகாதாரம் ஆகிய பிரச்சினைகள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன என்று அமர்த்தியா சென் குறைபட்டிருக்கிறார்.

 

பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது எனினும், சர்வதேச ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கில்லை. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே அருந்தி வருகின்றனர். மிகப் பெரிய மக்கள்தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும், இந்தியாவின் எதிரே உள்ள சவால்களாகும்’’ என்றும்; ‘‘இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய நுட்பமான ஆய்வு இந்த நூலில் செய்யப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் அளவற்ற வளத்தைப் பற்றியும், இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்திய நாட்டுப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆழ்ந்த சரியான விமர்சனமாக இந்த நூலை எடுத்துக்கொள்ளலாம். இந்த நூலில் இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், அரசியல், வரலாறு மற்றும் சட்டத்தைப் பற்றிய நுணுக்கங்களும் விரிவாக கையாளப்பட்டுள்ளன’’ என்றும்; இந்த நூலைப் பற்றி சில விற்பன்னர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

 

இந்திய அளவில் இப்படிப்பட்ட கருத்துகளையெல்லாம் தொகுத்திருந்த போதிலும் நம்மைப் பொறுத்தவரையில் நான் முதலில் எழுதியவாறு; கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால், எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்க முடியும் என்ற கருத்தும்; மாநிலங்கள் அனைத்தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் தான் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன.குறிப்பாக சேது திட்டம் போன்றவற்றை தடுக்க நினைக்காமல்; ஒட்டுமொத்தமாக அவற்றால் ஏற்படக்கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப்பார்த்து நிறைவேற்றிட அனைத்துத் தரப்பினரும் முன் வருவார்களேயானால் அமர்த்தியா சென் எழுதியிருப்பதைப்போல, நமக்கு எதிரே உள்ள சவால்களை சாமர்த்திய மாகப் புறந்தள்ளி முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வேகமாக அடியெடுத்து வைத்திட முடியும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து ம.தி.மு.க தொண்டரின் கருத்து இது:

 

தி மு க மற்றும் அதிமுக விடம் தொலைநோக்கு பார்வை இல்லாததால் இன்று நாம் பல சிரமங்களை சந்தித்து கொண்டுள்ளோம். அதில் ஒன்று மின்சாரம். இதை போன்று இன்னும் பல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரபோகின்றன. ஊழல்கள் லட்சங்களில் இருந்து லட்சம் கோடிகளாக மாறி உள்ளன.

 

இலவசங்கள் மற்றும் பணம் கொடுத்து எப்படியும் ஓட்டு வாங்கி வெல்வது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. எனவே தி மு க மற்றும் அ தி மு க விற்கு மாற்றாக தமிழகம் மற்றும் உலக தமிழினத்தின் முன்னேற்றதிற்காக சமரசம் இன்றி போராட ஒரு மாற்று சக்தி வேண்டும் என்பது உடனடி அவசியம்.

 

மாற்றம் என்பது தானாக நிகழாது. முதலில் நாம் மாற வேண்டும். நான் ஒருவன் மாறினால் மட்டும் மாற்றம் நிகழந்து விடுமா என்றால் கண்டிப்பாக நிகழும்.

 பல பதிவுகளின் தொகுப்பு இது.