இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் பின்னர், இலங்கை அரசியலில் மாற்றங்கள் நிகழ்வது போன்றதொரு தோற்றப்பாடு கட்டமைப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

உண்மையிலேயே சீன சார்பு அணி, மேற்குலக சார்பு அணி, இந்திய சார்பு அணி எல்லாமே, ஆட்சி அதிகார மோதலுக்கு இலங்கை அரசியல் களத்தில் பயன்படுத்தப்படும் இராஜதந்திரச் சொல்லாடல்கள் போலிருக்கிறது.

 

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றினை ஆய்வு செய்யும் முயற்சியில் சில சிந்தனை மையங்கள் ஈடுபடுகின்றன என்கிற செய்தி வருகிறது. மாக்கியவல்லியின் சிந்தனையிலிருந்து அவை கட்டமைப்படுகின்றன என்பதான வியாக்கியானங்களை பொதுப்படையாக முன்வைத்தாலும், மகாவம்சக் கருத்துருவமே சிங்களத்தின் அரச கட்டுமான அடிநாதமாகவும், உள் -வெளி உறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருப்பது நிஜமானது.

 

கொல்வின்.ஆர்.டி.சில்வாவின் அரசியலமைப்புச் சட்டமும், சிங்களத்தின் பரிபூரண இறைமையை வலுவூட்ட ஜே.ஆர்.ஜயவர்தனா மேற்கொண்ட திருத்தங்களும், மகாவம்ச கருத்துருவத்திலிருந்தே எழுதப்பட்டன.

 

2010 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்ட எம்.பியாகப் பதவியேற்று , மைத்திரி-இரணில் ஆட்சியில் உதவி வெளியுறவு அமைச்சராக இருக்கும் யு.என்.பி உறுப்பினர் அஜித்.பி.பெரேரா அவர்கள், ‘ மோடி வரலாம்..போகலாம். ஆனால் 13 வது திருத்தச் சட்டம் பற்றி பேசக்கூடாது’ என்பதும், ‘எல்லை தாண்டும் மீனவர்கள் சுடப்படுவார்கள்’ என்று, தனது கருத்தினை இரண்டாவது தடவை ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா வலியுறுத்துவதும், புதிய ஆட்சிப் பங்காளிகளின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்துகிறதா? அல்லது ‘ தேர்தல்’ அரசியலைக் காட்டுகிறதா? என்று பார்த்தால், இது வாக்கு வங்கி அரசியலின் மலினமான கருத்துக்கூறல் என்கிற முடிவுற்கு மட்டுமே வரலாம்.

 

அண்மைக்காலமாக இரணில் விக்கிரமசிங்கா கூறும் கருத்துக்கள் யாவும், பெருந்தேசியவாத நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதைக் காட்டுவதாக பலரும் விமர்சிக்கிறார்கள்.

 

மகாவம்ச சிங்களத்தின் ஆழ்மனத்தில் பதிந்துள்ள ஓர் இன இறைமைக் கோட்பாட்டினை அரவணைத்துச் செல்லாமல் 75 சதவீத மக்களின் வாக்குகளை பெறுவது கடினம் என்பது, 67 வருட காலமாக அரசியலில் நீந்திக்கொண்டிருக்கும் ஐ.தே.கட்சி மீன்களுக்குப் புரியும்.
அதுமட்டுமல்ல, சனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றாலும், தொகுதிவாரியாக பல இடங்களில் வெற்றி பெற்ற மகிந்த குழுமமும் பெருந்தேசிய இனவாதத்தையே பேசும் என்கிற ‘உள் குத்து’ அரசியல் தெரியாமல், தென்னிலங்கை அரசியலில் எவரும் பிழைக்க முடியாது என்பது விதியாகிவிட்டது.

 

ஆகவே தேர்தல் நெருங்க, இன்னும் பல 13 கதைகள் வெளிவரும்.

 

தனது ஆட்சியைக் கவிழ்க்க இந்திய ‘றோ’வும், மேற்கு நாட்டு உளவு நிறுவனங்களும் செயற்பட்டுள்ளன என்கிற ‘பாரிய’ இராஜதந்திர முக்கியத்துவமிக்க குற்றச் சாட்டினை மகிந்தாவும் கோத்தாவும் முன் வைக்கும் அதேவேளை, ‘தாங்களும் அதற்குச் சளைத்தவர்களல்ல’ என்கிறவகையில் 13 மற்றும் மீனவர் சூட்டுக் கதைகளை யு.என்.பியும் தன் பங்கிற்கு ஊடகங்களில் அவிழ்த்து விடுகிறது.

 

ஆசியாவில் தனக்குச் சார்பான மீள் சமநிலையை ( Rebalancing) உருவாக்க, ‘சீன’ எதிரியை அமெரிக்கா பயன்படுத்த முற்படுவது போன்று, உள்நாட்டில் தத்தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த ‘ இந்திய’ எதிரியை மகிந்தரும்,இரணிலும் தேர்தலுக்கு ஏற்றால் போல் பயன்படுத்துவது தெரிகிறது.

 

மகாவம்ச அரசியல் கோட்பாட்டில் நிலைத்து நிற்கும் ஒரு நாட்டில், மோதும் இரு தரப்பும் ‘இந்தியா’ குறித்து ஒரேவிதமான பார்வையையே வெளிப்படுத்தும்.

 

தமிழர் அரசியல் குறித்து இந்தியா பேசினால், அதனை அந்த நாட்டிற்கு எதிராகப் பேசுவதற்குப் பொருத்தமான ஆயுதமாக பேரினவாதச் சக்திகள் இனம் கண்டு கொள்கின்றன.

 

ஏனெனில் இலங்கை தேர்தல் அரசியலை வெளியுறவுக் கொள்கை தீர்மானிப்பதில்லை.

 

ஆனால் பூகோள அரசியல் நகர்வுகள், இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அதன் அதிகார மையத்தில் எவர் அமர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

 

modi-obamaஇந்துசமுத்திரப் பிராந்திய கடலாதிக்கப்போட்டியில், இலங்கையின் தரையமைப்பும், அதன் துறைமுகங்களும் உணர்திறன்மிக்க மையங்களாக இருப்பதால், இக்கடல் பாதை ஊடாக வணிகப்பயணம் மேற்கொள்ளும் சகல வல்லாளர்களும் இலங்கை தமது நட்பு நாடாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.

 

இங்கு சீனாவின் பக்கம் 45 பாகைக்கு குறைவாக மகிந்த அரசு சாய்ந்ததாலேயே, இந்நட்பு நாட்டில் எவர் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதனை ஏனைய ‘நட்பு’ வல்லாளர்கள் தீர்மானிக்க வேண்டிய துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.

 

 

இப்போது, ‘ றோ’ வால் தோற்கடிக்கப்பட்டேன் என்று மகிந்தர் புலம்புவதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அரசியலில் அனாதையாவதைத் தவிர்த்துக்கொள்ள விரும்பினால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரியைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென்கிற எச்சரிக்கை கலந்த அறிவுரையை மகிந்தரிடம் மோடி கூறியிருக்க வேண்டுமென சில அரசியல் நோக்கர்கள் கணிப்பிடுகின்றார்கள்.

 

யு.என்.பி மற்றும் ஜே.வி.பி.யின் உசுப்பல் கதைகளால் மகிந்தர் தட்டுத் தடுமாறி தனித்துப் போட்டியிட்டால், ரணில் அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். மைத்திரி- மகிந்த அணியின் மீள் இணைவிற்குரிய கால அவகாசத்தைக் கொடுக்காமல் உடனடியாகத் தேர்தலை நடாத்தி முடித்து விட வேண்டும் என்பதே ரணிலின் தந்திரோபாயம்.

 

ஏனெனில் ‘ தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பிறகு பார்ப்போம்’ , ‘தேசிய அரசாங்கம் அமைப்போம்’ என்பன போன்ற யு.என்.பியின் கதையாடல்கள் எல்லாம், இந்தச் சூத்திரத்தினுள் அடங்கும்.

 

தாம் ஆட்சிக்கு வர அல்லது ஆட்சியில் நிலைத்து நிற்பதற்கு, சீன தேசம் ஆதரித்தால் சீன சார்பு, அமெரிக்கா ஆதரவளித்தால் அமெரிக்க சார்பு என்கிற ‘சுயசார்பு’ வெளியுறவுக் கொள்கையை ( அப்படி ஒன்றுமில்லை) வைத்திருக்கும்-இலங்கையை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் பெரிய கட்சிகளுக்கு, ‘பதவிகளே அதிகாரத்தின் திறவுகோல்’ என்கிற மந்திரத்தைத் தவிர வேறென்ன கோட்பாடு இருக்க முடியும்?.

 

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது ‘இன அழிப்பு’ என்று தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினால் சிங்களத்தைப் பொறுத்தமட்டில் அது இனவாதம். சர்வதேச வல்லரசுகளுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் தீர்மானம்.

 

தமது நட்பு நாடான இலங்கையை ‘இன அழிப்பில் ஈடுபட்ட நாடு’ என்று விளிப்பதை விரும்பாத சர்வ தேசம்(?), ஆட்சி மாற்றத்தில் அக்கறை கொள்ளும். அத்தோடு அறிக்கைகளைத் தள்ளிப்போடும்.

 

இவைதவிர இவ்வார ஜெனீவா களத்தினை நோக்கினால்,’மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக, வெளியிடவிருந்த அறிக்கையை செப்டெம்பர் வரை ஒத்திவைத்துள்ளோம்’ என்று மனித உரிமைப் பேரவை சாட்டுச் சொல்லும்போது, அதற்கொரு பூகோள அரசியல் பரிமாணம் உள்ளதென்கிற கலாநிதி.மோங் சார்னி அவர்களின் கருத்து, ஜெனீவ ஊடக மையத்தில் நிகழ்ந்த ஊடகர் சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாம் நீண்டகாலமாக எழுதும் விடயம் அனைத்துலக ஊடக அரங்கிலும் பேசப்பட்டுள்ளது.

 

ஆட்சி மாற்றத்திற்கான காரணிகளும் அறிக்கையை ஒத்திவைத்த பின்னணியும், ஆசிய ‘மீள்சமநிலை’ உருவாக்கிகளின் கை வண்ணத்தில் வரையப்பட்ட பூகோள அரசியல் ஓவியங்கள் என்பது, பிறீமன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் நீதி உரைத்த மோங் சார்னியின் தெளிவான பார்வை.

 

அறிக்கையை வெளியிடாமல் இழுத்தடிப்பது, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஆட்சியாளர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தும் என்பதை மேற்குலகமும், இந்தியாவும் புரிந்து கொள்கிறது.

 

India-airforce-300இவர்களின் ‘ ஒத்திவைப்பு’ பூகோள அரசியலை உணர்ந்து கொள்ளும் இலங்கை அரசு, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றினை அமைக்கப்போவதாகவும், ஐ.நா.வின் நேரடித் தலையீட்டினை தாம் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் கூறத் தொடங்கிவிட்டது.

 

இங்கு குறித்துக் கொள்ள வேண்டிய விவகாரம் ஒன்று உண்டு. அதாவது ‘ஒத்திவைப்பு’ என்கிற சாதகமான சூழல் உருவாகும்போதே, ‘உள்ளக விசாரணை’ என்கிற மறுத்தானைப் போட்டு அதனை முழுமையாக நிராகரிக்கும் நிலைப்பாட்டினை சிங்களம் மேற்கொள்கிறது.
ஆனால் தமிழர் தரப்போ, மேலதிக தகவல்களைத் திரட்டுவதற்கான காலவெளி என்பதனை, போர்க்குற்ற சாட்சியங்களைத் திரட்ட எமக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாத காலம் என்பது போல் வியாக்கியானம் செய்ய முற்படுகிறது.

 

‘இனிமேல் அவ்வறிக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது’ என்கிற செய்தியை அனைத்துலக மக்களவை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றில் ஐ.நா.மனித உரிமைபேரவை ஆணையாளர் அலுவலக பணிப்பாளர்கள் கூறியதாக, ஜெனீவா ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகர் சந்திப்பில் கஜேந்திரகுமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆனால் தேர்தல் நெருங்குவதால், ஒத்திவைப்பிற்கு ஆதரவளித்த தமிழ் அரசியல் தரப்பின் நிலைப்பாடுகள் மாறுவதைக் காண்கிறோம். உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை, அது கண்கட்டு வித்தை என்பது போன்ற ‘தன்னிலை’ மறுப்பு வாதங்களும் சலசலப்பின்றி வரத் தொடங்குகின்றன.

 

இணக்க அரசியலில், சலுகைகளையும் பதவிகளையும் பெறலாம். உரிமைகளைப் பெற முடியாது. இதனை மூடிமறைத்து அரசியல் செய்வது, தேர்தல் அரசியலுக்குத் தேவையானதென்பதை ஈழத்தமிழின வரலாறு புலப்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.

 

திருக்கோணமலையில் ‘கோத்தா’ முகாம் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சான்றுகளோடு சவால் விடுகிறார். நல்லிணக்கம், நல்லாட்சி, சட்ட ஆட்சி பற்றி பேசும் நவீன சனநாயக ஆட்சியாளர்கள் இதற்கு பதில் கூற வேண்டும்.

 

புலிகளிடம் சனநாயகம் இல்லையென்று அடம் பிடித்தவர்கள் இதற்குப் பதில் அளிப்பது சாலப்பொருந்தும். அதிகாரமற்ற தேசிய இனத்தின் முகவர்களாக இருப்போர் செய்யும் இணக்க அரசியல், இறுதியில் அடிபணிவு அரசியலாகவே முடியும். இது வரலாறு.

 

ஆக மொத்தம், ‘பிரச்சினைகளைச் சந்திக்கும் போது சிந்தித்துக் கொள்வோம்’ என்கிற சாதாரண நடைமுறைக்கோட்பாட்டோடு எல்லாத் தரப்பும் இயங்குவது போலிருக்கிறது.

 

எது எப்படி இருப்பினும், வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்றும், அத்தோடு ஒரு இறைமையுள்ள ‘தேசம்’ (Nation) என்பதன் அடிப்படையில் அவர்களின் பிரச்சினையை அணுக வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூறுவது மோடிக்கு புரியாவிட்டாலும், கொள்கை வகுக்கும் டெல்லி தெற்கு வளாகத்திற்கு தெளிவாக விளங்கும்.

 

”நீங்கள் என்னை நம்புகிறீர்களா?” என்று எம்மிடம் கேள்வி கேட்கும் இந்தியப்பிரதமரிடம், ” முதலில் நாம் ஒரு பூர்வீக தேசிய இனம் என்பதை, நீங்களும் உங்கள் நிரந்தர கொள்கை வகுப்பாளர்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேளுங்கள். ஏனெனில் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இங்கிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்.