லைகா குழுமத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டுதான் நடத்துகிறார்களா?

மே 18 இற்கு பிறகு ஆயுதம் மவுனிக்கப்ட்டதன் பிற்பாடு எமது போராட்டவடிவம் மாறிவிட்டது. ஆனால் தமிழீழ தனியரசு என்ற எமது நோக்கம் மாறவில்லை.

நடந்த இனஅழிப்பையும் தொடரும் இனஅழிப்பையும் அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்தி எமக்கான நீதியை கோருவதே மே 18 இற்கு பிறகான எமது அரசியற் செயற்பாட்டின் அடித்தளமாகும்.

lyca-alliraja
இதில் பல கட்டங்கள் இருக்கின்றன. இதை நாம் சரியாகப் புரிந்து அதற்கமைய போராட்டங்களை நடத்துகிறோமா என்பது விவாதத்திற்குரியது.

ஆனால் இதுதான் எமது போராட்டவடிவம் என்பதை நாம் இந்த இடத்திலாவது புரிந்து கொள்ள முற்படுவோம்.

எனவே நாம் சிங்கள அரசின் நடந்த இனஅழிப்பை, தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை மறைக்கும் அனைத்துச் செயற்பாட்டிற்கும் எதிராக போராட வேண்டியுள்ளது.

அதுவே உண்மையை வெளிக்கொணர்ந்து எம்மை நீதியை நோக்கி நகர்த்தும்.

எனவே எமது தற்போதைய நேரடி எதிரி என்பது சிங்களம் அல்ல. சிங்களத்தின் இனஅழிப்புக்கு வெள்ளையடிப்பவர்களே..

சிங்களத்தை “இனஅழிப்பு அரசு” என்று அறிவிக்குமாறு நாம் போராட்டம் நடத்தி வருகிறோம்.

அதன் ஒரு கட்டமாக சிங்களத்தை தனிமைப்படுத்த கோரியும், அதன் மீது பொருளாதாரத்தடை விதிக்குமாறும், அதன் மீதான வரிச்சலுகைகளை இரத்து செய்யுமாறும், கொமன்வெல்த் அமைப்பு தொடக்கம் ஐநா உறுப்புரிமை வரை அதன் அங்கத்துவத்தை இரத்து செய்யுமாறும், சிறீலங்கா உற்பத்திகளை வாங்குவது தொடக்கம் அங்கு உல்லாச விடுமுறை செல்வதுவரை தவிர்க்குமாறும் அல்லது தடைசெய்யுமாறும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

பெரியளவில் இல்லாவிட்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நாம் போராடி வருவது இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத்தான்..

ஆனால் லைகா குழுமம் என்பது எமது மேற்படி போராட்ட அம்சங்களுக்கு எதிரான அனைத்து தளங்களிலும் இனஅழிப்பு அரசை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இனஅழிப்பு மண்ணுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் Lyca fly , Lyca holliday தொடக்கம் கொமன்வெல்த் மாநாடு மற்றும் இனஅழிப்பு அரசின் அனைத்து கருத்தரங்க அனுசரணையாளர் என்பது வரை அதன் பட்டியல் நீளமானது.

இதைத்தான் நாம் இனஅழிப்புக்கு “வெள்ளையடிப்பது” என்றும் இனஅழிப்பு அரசின் லொபியை காவும் ஒரு முகவர் செயற்பாடு என்றும் குறிப்பிடுகிறோம்.

லைகாவை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதன் அரசியல் சார்ந்த விளக்கம் இதுதான்.

ஆனால் லைகா குழுமத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து தரப்பும் இதைத் தெளிவாகப் புரிந்துள்ளார்களா? என்பது இங்கு கேள்விக்குறிதான்.

ஏனென்றால் லைகா எதிhப்பை முன்வைத்து ஊடக வெளிகளிலும் இணையப்பரப்பிலும் நடக்கும் சொற்போரை பார்த்தால் அப்படி தெரியவில்லை.

தத்தமது கட்சி சார்ந்து, அரசியல் மற்றும் தனி மனித நிலைப்பாடு சார்ந்து இதை பயன்படுத்துவதுபோல்தான் தெரிகிறது.

ஒரு போராடும் இனமாக மிக மோசமான அயர்ச்சியை தந்த நிகழ்வு இது.

எமது விடுதலை சார்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக வேண்டிய எதிர்ப்பு ஒரு மசாலா சினமாவிற்கும் அதன் நடிகர், இயக்குனருக்கு எதிரான, அவர்களை நிபந்தனை அடிப்படையில் ஆதரிக்கும் சீமான் போன்றவர்களுக்கு எதிரான போராட்டமாக சுருக்கியது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

குறிப்பாக சீமான் எதிர் மற்றும் ஆதரவு பிரச்சினையாக இதைச் சுருக்கிய அனைவரையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

seeman1-300
சீமானும் தனக்கு எதிரான வலையாக இதை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து தெளிவாக விளக்கம் அளித்திருக்க வேண்டும் அல்லது விலகியிருக்க வேண்டும்.

சந்தர்ப்பவாதிகள் விரித்த வலையில் வீழ்ந்து தன்னை பலிக்கடாயாக்கி மாணவர் போராட்டம் முதல் லைகா எதிர்ப்பு வரை தனது உணர்ச்சிவயப்பட்ட தட்டையான ஒற்றையான பார்வைகளை அள்ளித்தெளித்தது குறித்து கவலைகொள்கிறோம்.

அவர் தன்னை சரி செய்து கொள்ள முன்வர வேண்டும். இது சீமான் என்ற தனிமனிதனுக்காக அல்ல..

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரளை தமது நெஞ்சில் சுமந்து தமிழீழ கனவுடன் சீமான் பின் அணிவகுத்துள்ள இலட்சக்கணக்கான தொண்டர்களுக்காகவேனும் சீமான் லைகா விடயத்தில் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து லைகா எதிர்ப்பை புரிந்து கொண்ட சிலர் கூட லைகா தாயகத்தில் செய்த சில உதவிகளை கணக்கில் வைத்து iலைகாவை எதிர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

வெளிப்பார்வைக்கு இது நியாயம் போல் தோன்றினாலும் அரசியல் அர்த்தத்தில் இந்த பார்வையில் நிறைய கோளாறு இருக்கிறது.

லைகாவின் இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் மேற்குறிப்பிட்ட பட்டியலுடன் ஒப்பிடும் பொழுது இது நாய்க்கு வீசப்படும் எலும்புத்துண்டுக்குக் கூட ஒப்பிட முடியாதது.

சில தனிமனிதர்கள் சத்தமில்லாமல் செய்த உதவியைக் கூட iலாகா செய்யவில்லை. எல்லாம் பெரு விளம்பரங்கள்தானே ஒழிய வேறொன்றுமில்லை.

அத்தோடு அனைத்துலக மட்டத்தில் தாம் இனஅழிப்பு அரசுக்கு செய்யும் சேவகத்தை மறைக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது.

கேபி, டக்ளஸ், கருணா போன்றவர்கள் கூட நமது மக்களுக்கு தற்போது “பிச்சை” போடுகிறார்கள். அதற்காக அவர்களை நாம் நியாயப்படுத்த முடியுமா?

எத்தனை மனிதர்களின் உயிரைக்குடிக்க காரணமாக இருந்ததுடன் எத்தனை மில்லியன் தமிழர் சொத்துக்களை இனஅழிப்பு அரசிடம் கையளித்தவர்கள் இவர்கள். அத்தோடு நமது இந்த இழி நிலைக்கு காரணமும் இவர்கள்தானே..

இப்போது இவர்கள் எறியும் எலும்புத்துண்டை வைத்து அவர்களுக்கு “மனிதாபிமான” பட்டங்களை வழங்குவது எத்தகைய அயோக்கியத்தனம்.?

அந்த வரிசையில்தான் தற்போது “லைகா” பெரு விசுவருபம் எடுத்து நிற்கிறது.

அனைத்துலக மட்டத்தில் இனஅழிப்பு அரசை அம்பலப்படுத்தி எமக்கான நீதியைப் பெற இனஅழிப்பு அரசை சுற்றி லைகா உருவாக்கியிருக்கும் கவசத்தை உடைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை.

எனவே சுயநல, சந்தர்ப்பவாத குதர்க்க வாதங்களை தூக்கி எறிந்துவிட்டு “ஏன் iலாகா வை எதிர்க்க வேண்டும்?” என்ற தெளிவான புரிதலுடன் லைகாவிற்கு எதிரான போராட்டத்தை விரிவுபடுத்துவோம்.

ஈழம்ஈநியூஸ்.