தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் வன்முறைகள் இடம்பெறலாம் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

Hrw_logo_svg
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பரப்புரை நடவடிக்கைகளின்போது பல வன்முறைச் சம்பவங்களும், மிரட்டல்களும் இடம்பெற்றன என இலங்கையை சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.

வாக்காளர்கள், வேட்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், தாக்கப்படுதல், மிரட்டப்படுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இலங்கை அதிகாரிகள் சகல விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

தேர்தல் பரப்புரை காலத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் வாக்களிப்பு தினத்தன்று இடம்பெறுவதையும், வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் வன்முறைகள் இடம்பெறலாம் எனவே பொலிஸாரும் ஏனையவர்களும் பக்கச்சார்பற்ற விதத்தில் நடந்து மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதை தேர்தல் ஆணையகமும் ஏனைய தரப்புகளும் உறுதி செய்யவேண்டும்.

குறிப்பாக சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் இதனை செய்யவேண்டும். தேர்தலுக்குப் பின்னர் இராணுவத்தினர் ஆற்றும் பங்களிப்பு இலங்கையில் எதிர்கால மனித உரிமைகள் நிலவரம் எவ்வாறு அமையும் என்பதை தெரிவிப்பதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.