canada-2016எங்கள் தேசத்தில் மாவீரர் நாள் பல்வேறு இடங்களிலும் அடக்குமுறைகளை மீறி பேரெழுச்சியாக நடைபெற்ற மகிழ்ச்சியோடு நேற்றைய நாள் கனடிய மண்ணில் மார்க்கம் பாயர் திடலில் கனடா தமிழர் நினைவெழுச்சி அகவம் ஒழுங்கமைப்பில் கனடா தமிழர் மகளிர் அமைப்பினர், கனடா தமிழ் கலை பண்பாட்டு கழகம், கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் என பல கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ஒரே அரங்கில் 3 நிகழ்வுகளாக தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் வணக்க நிகழ்வுகள், எழுச்சி கலை நிகழ்வுகள், எழுச்சி உரைகள் என பல்லாயிரம் மக்கள் அரங்கை நிறைத்து எழுச்சியோடு நடைபெற்றது.

 

காலையில் 7:00 மணிக்கு முதலாம் அமர்வில் ஏற்றப்பட்ட தமிழீழ, கனடிய தேசிய கொடிகள் இறுதி நிகழ்வின் நிறைவின் பின் திறக்கப்பட்டன.

 

பொதுச்சுடர் ஏற்றி, ஈகை சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒவ்வொரு அமர்விலும் நடைபெற்றன.

 

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், போன்றோரின் முன்னிலையில் உருக்கமாக மாவீரர் பாடல் மூன்று அமர்விலும் இசைக்கப்பட்ட பொழுது கலங்காத விழிகளும் கரைந்தன.

 

வானம்பாடிகள் இசை குழுவின் இசை விருந்து, இறுதி நிகழ்வில் செந்தூரன் அழகையா வழங்கிய எழுச்சி பாடல்கள் உணர்வெழுச்சியூட்டின.

 

3 முன்னணி நடன ஆசிரியைகளின் கூட்டுமுயற்சியில் தேசிய தலைவரின் பிறந்த நாளிற்கு பாவலர் அறிவுமதி எழுதிய வரிகளுக்கு கனடா தமிழர் நினைவெழுச்சி அகவம் தயாரித்த பாடலுக்கு சுமார் 50 மாணவிகள் இணைந்து வழங்கிய நடனம் மிக மிக நேர்த்தியாக எழுச்சியாக இருந்தது.

 

அனைத்து நடனங்களும் எழுச்சியூட்டுனவனவாக இருந்தது போல் சிலம்பாட்ட நடனமும் தமிழர் கலைகளை மீட்டு வருவதாக எழுச்சி பாடலுக்கு மிக சிறப்பாக அமைந்தது.

 

கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகத்தினர் வழங்கிய நாடகம் யதார்த்தத்தையும் பல உண்மைகளையும் மிக சிறப்பாக சுட்டி காட்டியது. உணர்வோடு முன்னணி கலைஞர்களோடு பல இளையவர்களுக்கு பங்கேற்றார்கள்.

 

தமிழகத்தில் இருந்து உணர்வோடு இந்த நிகழ்வை பார்க்க வேண்டும் என வருகை தந்திருந்த உணர்வாளரும் இயக்குனருமான கௌதமன் அவர்கள் இறுதி நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார்.

 

ஒவ்வொரு அமர்விலும் நிறைவு நிகழ்வாக நடைபெற்ற கனடா தமிழ் இளையோர் அமைப்பினரின் “வரலாறு எங்கள் வழிகாட்டி” என்ற நாட்டிய நாடகம் இளையவர்கள் திறமைகளை மட்டுமன்றி உணர்வெழுச்சியையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்த நாட்டிய நாடகத்தில் சுமார் 50 இளையவர்கள் பங்கேற்று இருந்தார்கள். தமிழர்களின் சமகால நிலை விடுதலைக்கான பயணத்தின் தேவை என்பன இந்த நாட்டிய நாடகத்தில் வலியுறுத்தப்பட்டன.

 

மூன்றாம் அமர்வில் கடலென அலை அலையாக வந்த மக்கள் வெள்ளத்தை 30,000 வரையான மக்களை உள்ளடக்க தயாராக இருந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மண்டபத்தில் முடியாமல் போனதால் வெளியே வரிசையில் நின்ற மக்கள் வரிசையில் நின்று பூவள்ளி தூவி வரிசையில் வணங்கி செல்ல மட்டுமே முடிந்தது.

 

இருப்பினும் மற்றவர்கள் பார்க்கட்டும் என விட்டுக்கொடுத்து ஒருங்கிணைவோடும் அன்போடும் எம் மக்கள் பொறுப்போடு செயலாற்றிய காட்சிகள் உணர்வு மிக்கவை.

 

கனடிய தமிழ் வானொலி கனடாவில் உள்ள தேசிய வானொலி என்ற வகையில் அரங்க நிகழ்வுகளை உணர்வெழுச்சி குன்றாமல் முழு நாளும் சிறப்பு கலையகத்தில் இருந்து சிறப்பாக எடுத்து வரும் பணியை செய்தது.

 

ஊர் கூடி தேர் இழுத்தால் நகராமல் இருக்க முடியுமா? வரலாறும் எழுகை கொண்ட மக்களின் எழுச்சியால் வடமிழுக்கப்படுகிறது நிலத்திலும் புலத்திலும் என்பதற்கு சான்றே எழுகை கொண்ட தமிழ் தேசிய மக்களின் எழுச்சி கொண்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் சொல்லும் பாடம்.

 

தொடரும் அடக்குமுறைகள் விடுதலைக்கான வாசலை அகல திறந்து எங்கள் பயணங்களை வீச்சு கொள்ள வைப்பது உறுதி.

 

செந்தமிழினி பிரபாகரன் .