praba-stuதொடரும் இனப்படுகொலைக்கு தமிழீழம் ஒன்றே நிர்ந்தர தீர்வு என்ற கோரிக்கையுடன் 05.07.2015 அன்று சென்னையில் நடந்த மாணவர்கள் கருத்தரங்கில் மாணவ தோழர் பிரபாகரன் பேசிய உரையின் சுருக்க வடிவம்.

 

இந்த கருத்தரங்கிற்கு வந்திருக்கும் தலைவர்கள் ,உணர்வாளர்கள் மற்றும் அனைத்து மாணவ இயக்க தோழர்களுக்கும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இன விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தந்த கரும்புலி வீரர்களுக்கு இந்த கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தினை தெரிவித்துகொண்டு எனது.உரையினை துவங்குகிறேன்.

 

2009 வரை ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

 

2009 மே மாதம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்றது துவங்கி இனப்படுகொலைக்குஒருப்படி மேலே சென்று இப்பொழுது நிலவும் போருக்கு பிந்தைய சூழலிலும் தமிழர்களை முற்றாக அழித்தொழிக்கும் இனசுத்திகரிப்பு  நடவடிக்கையை தீவிரபடுத்தியிருக்கிறது சிங்கள இனவெறி அரசாங்கம்.

 

இலங்கையில் சமீபத்தில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்தினால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தலைமை தான் மாறியிருக்கிறதே தவிர தமிழர்தரப்பிற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பதில் நாம் தெளிவடைய வேண்டும்.

 

ராஜபக்சே பதவியில் இருந்து இறக்கபட்டதை வெற்றியாக கருதி இனிப்பு கொடுத்து கொண்டாடிய தமிழர்களை இங்கு நாம் பார்த்தோம். ஆனால் இந்த ஆட்சிமாற்ற நாடகத்திற்கு பின்னால் உள்ள சூழ்ச்சமத்தை நாம் இன்னும் விளங்கிக்கொல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

 

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஈழத்தில் ஏதோ அமைதி நிலவுவது போலவும், இலங்கையில் தமிழர் தரப்பு நிம்மதியாக வாழ்வது போலவும் ஒரு மாயையை இந்த வல்லாதிக்க நாடுகளும் மேற்குலகமும் காட்ட முயற்சிக்கிறது.இதன் மூலம் தமிழர்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான தமிழீழ கோரிக்கையினை மட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே இதை திட்டமிட்டு செய்கிறார்கள்.

 

இந்த சிறிசேன ஆட்சியில் தான் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மறைமுகமாகவும் இன்னும் துரிதமாகவும் நடந்தேறி வருகிறது.

 

போருக்கு பிந்தைய சூழலில் தற்போது ஈழத்தில்நடந்து வரும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை பற்றி தான் இப்பொழுது நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள போகிறேன்.

 

ஈழத்தில் தமிழர்களின் நிலம் அங்கே கையகப்படுத்தப்படுகிறது, தமிழ் கிராமங்கள் சிங்களமயமாக்கப்படுதலும், தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவமயமாக்கப்படுதலும் பெருமளவில் நடந்தேறிவருகிறது.

 

குறிப்பாக சொல்ல போனால்., சிங்கள ராணுவத்தில் இருக்கும் சாதாரண ஒரு சிப்பாய் தமிழ் பெண்ணை மனந்துக்கொண்டால் அவருக்கு கேப்டன் பதவி வரை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதே அந்த தமிழ் பெண்ணுடன் இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் அவருக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. அதே வேலையில் அந்த தமிழ் பெண்ணை சிங்களன் கைவிட்டுசென்றால் கேட்க நாதியில்லாத நிலை தான்
அங்கு தொடர்கிறது.

 

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இன்னும்15-20 வருடங்களில் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டு இலங்கையில் இரண்டு இனங்கள் தான் எஞ்சி இருக்கும். ஒன்று சிங்களம் மற்றொன்று சிங்கள+தமிழ் கலப்பு இனம்.

 

எது நடக்ககூடாது என்று நமது தலைவர்கள் போராடினார்களோ, எந்த கொடுமைகளை எதிர்த்து புலிகள் ஆயுதம் ஏந்தினார்களோ, அது இப்பொழுது செவ்வனே நடந்து வருகிறது.

 

தமிழர்களின் பிரதான தொழில்களான விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும் இப்பொழுது சிங்கள ராணுவமே செய்ய தொடங்கி இருக்கிறது.

 

காய்கறிகளையும், மீன்களையும் விற்று சம்பாதித்த பணத்தில் தான் வருமானம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாத சிங்கள இராணுவத்தினர், விளையும் பயிர்களையும் காய்கறிகளையும் பாதி விலைக்கு விற்கிறார்கள். இதனால் பல லட்சம் தமிழ் விவசாய குடும்பங்கள் நலிவடைந்து பிழைப்பிற்காக சொந்த ஊரை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயரும் சூழலுக்கு தள்ளபட்டிருக்கிறார்கள்.

 

சிறு தொழில்கள் மட்டுமல்லாமல் தமிழர்களிடமிருந்த பெரிய தொழிற்சாலைகளையும் மூடும் நடவடிக்கைகளில் சிங்கள அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.

 

காங்கேசன் துறையில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை, மட்டகளப்பு பகுதியில் இயங்கி வந்த காகித தொழிற்சாலை, பரந்தன் பகுதியில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலை உட்பட பல தமிழ் தொழிற்சாலைகளை தமிழர்களின் பொருளாதாரத்தை நசுக்கவேண்டும் என்று எண்ணத்துடன் சிங்கள அரசாங்கம் திட்டமிட்டே மூடியுள்ளது.

 

தமிழ் கிராமங்களில் ஆலமரமும் அதற்கடியில் அவர்களின் குலதெய்வ கோயில்களும் இருக்கும், இந்த சாலையோர மரங்களினால் சாலைவிபத்துக்கள் அதிகம் நடப்பதாக சொல்லி இந்த தமிழ் கோயில்களை தகர்த்துவிட்டு அதற்கு பதில் புத்த விகாரனகளை அங்கு கட்டி அதற்க்கு வழிபாடுகளை நடத்த புத்த பிக்குகளை அங்கு நியமித்து பிறகு அவருக்கு பணிவுடைகள் செய்ய பவுத்த குடும்பங்களை குடியமர்த்தி தமிழ் கிராமங்களை சிங்கள கிராமங்களாக மாற்றும் செயல்கள் வெகுவாக ஈழத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

 

நாவல்புலியூர், யாழ்ப்பாணத்தில் உள்ள மத்தக்கள் மற்றும் மணலாறு ஆகிய கிராமங்கள் சமிபத்தில் சிங்களமயமாக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் ஆகும். வன்னி பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமத்திற்கு ராஜபக்சேவின் மகனின் பெயரில் ‘நமல்காம’ என்று பெயர்மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஈழத்தில் உள்ள தமிழர்களின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் அழித்து அந்த இனத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற முனைப்புடனே இது போன்ற தொடர் நடவடிக்கைகள் சிங்கள அரசாங்கத்தால் ஈழத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

2009ம் ஆண்டு ஈழத்தில் லட்சகணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கபட்ட பொழுது தமிழகத்தில் இருந்து எதுவும் செய்ய முடியாமல் நாம் வேடிக்கை பார்த்ததற்கு இன்றும் நாம் குற்றவுணர்ச்சியில் வெட்கி வேதனை படுகிறோம், ஆனால் போரை தடுத்து நிறுத்த எந்த அளவுக்கு இங்கு மக்கள் கொந்தளித்திருக்க வேண்டுமோ அதைவிட அதிகமாக மக்களை திரட்டி நாம் போராடுவதற்கான தேவை இப்பொழுது எழுந்திருக்கிறது. ஈழத்தில் சத்தமின்றி நம் இனம் அழிந்துக்கொண்டிருக்கிறது.

 

எனக்கு துருக்கி நாட்டில் ஒரு நண்பர் இருக்கிறார், அவர் முகநூளில் துருக்கியில் நடந்த ஒரு போராட்ட புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். லட்சகணக்கான மக்கள் கூட்டம் ஆரவாரத்தோடு போராட்ட களத்தில் நிற்கிறார்கள். அதை பார்த்தவுடன் அந்த நண்பரை தொடர்புக்கொண்டேன் இவ்வளவு பேர் ஒருங்கிணைந்திருக்கிரார்களே இவர்களை ஒருங்கிணைத்த இயக்கம் அல்லது தலைவர் யார் என்று அவரிடம் கேட்டேன்..

 

எந்த தலைவரும் ஒருங்கிணைக்கவில்லை பிரச்சனையின் அடிப்படையில் லச்சக்கணக்கான மக்கள் தாங்களே தன்எழுச்சியாக போராட்டத்தில் கலந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டவுடன் எனக்கு ஒரே ஆச்சிரியம். லட்சகணக்கான மக்கள் தன் எழுச்சியாக ஒன்றுகூடி போராடும் அளவிற்கு அப்படி என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவரிடம் அந்த கேள்வியை கேட்டேன்.

 

அதற்க்கு, எங்கள் ஊரில் ஒரு வணிக வளாகம் கட்ட இருக்கிறார்கள் அதற்காக அங்குள்ள இரண்டு மரங்களை வெட்ட போகிறார்கள். அந்த இரண்டு மரங்களை வெட்டக்கூடாது என நாங்கள் போராடுகிறோம் என்று அவர் கூறினார்.

 

அந்த போராட்டம் மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கிறது அரசாங்கம் அவர்களின் கோரிக்கையினை ஏற்று மரத்தை வெட்டவில்லை என்றுஅறிவிக்கிறது. இருந்தும் மக்கள் களைந்து செல்லாமால் அங்கேயே இருக்கிறார்கள், ஒருநாள் முழுக்க அவர்கள் அங்கே வெற்றியினை கொண்டாடுகிறார்கள்.

 

நான் அந்த சூழலையும் இங்குள்ள சூழலையும் ஒப்பிட்டு பார்க்கிறேன் வேதனையாக உள்ளது. சொந்த இனத்து மக்கள் லட்சகணக்கணக்கில் கொல்லப்பட்ட பொழுது கூட நாம் பெரிய அளவில் போராடவில்லையே.

 

இதற்கெல்லாம் காரணம் நம்முடையே போராட்ட குணத்தை இந்த அரசாங்கம் திட்டமிட்டு மழுங்கடித்துவிட்டது தோழர்களே.

 

நம் மக்களுக்கெதிரான அநீதிகளை கண்டு கொந்தளிக்க வேண்டிய நம் இளைஞர்கள் கிரிக்கெட்டிலும், சினிமாவிலும், டாஸ்மாக்கிலும் மூழ்கிபோய் கிடக்கிறார்கள்..

 

நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன் தோழர்களே இந்த நிலைமை இப்படியே இருந்துவிடாது, இந்த நிலை நிச்சயம் மாறும்..

 

2013 மாணவர் போரட்டத்திற்கு பிறகு ஈழ பிரச்சனை தொடங்கி பல்வேறு தமிழக பிரச்சனைகள் வரை மாணவர்களிடையே விழிப்புணர்வு பெருகிவருகிறது,மாணவர்கள் அரசியல்வயப்படுதலும் , மாணவர்களிடையே போராட்ட குணம் பெருகுதலும் கல்லூரி வளாகங்கள் தோறும் அதிகரித்துகொண்டிருக்கிறது.

 

இந்த அரசு ஏந்திரம் இதை கண்டுதான் பயப்படுகிறது, எங்கு இந்த மாணவர்களின் போராட்டத்தின் நியாங்களை உணர்ந்து மக்கள் இவர்கள் பின்னால் அணிதிரண்டுவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணாமாக மாணவர்களின் போராட்டத்தினை நசுக்கும் வேலையினை இந்தஏகாதிபத்திய அராங்கம் செய்து வருகிறது.

 

நன்கு கவனித்து பாருங்கள் ஒவ்வொருமுறை மாணவர் போராட்டம் தலைதூக்கும் பொழுதும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பிரெசிடென்சி கல்லூரி மாணவர்களுடன் மோதல்,

 

நந்தனம் கலை கல்லூரி மாணவர்களிடையே கோஸ்டி தகராறு என்று பத்திரிகையில் பெரிய பெரிய கட்டங்களில் செய்தி வரும், இவையெல்லாம் மாணவர்களிடம் இருந்து மக்களை பிரிக்கும் இந்த இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதியாகவே உணரமுடிகிறது.

 

உலக புரட்சிகர சிந்தனையாளர்களிடம் ஒரு சிந்தனை உள்ளது அதாவது ”எதிர்பாராத இடத்தில் இருந்து தான் புரட்சி வரும் எதிர்பார்ப்புகள் உள்ள இடத்தில் இருந்து புரட்சி வராது” என்று,

 

அது ஏன் என்றால் புரட்சி வெடிக்கும் என்று கருதப்படும் இடங்களில் இந்த அரசாங்கத்தின் தலையீடுகள் அதிகமாக இருக்கும், அந்த இடங்களில் சர்வாதிகாரத்தினாலும் தனது கட்டுப்பாட்டாலும் கண்காணிப்பாலும்அப்படி ஒரு எழுச்சி வராமால் பார்த்துக்கொள்ளும்..

 

அப்படியாக தான் ஈழத்தில் யாழ் பல்கலைகழகத்தில் இருந்து எங்கே புரட்சி வந்துவிட போகிறதோ என்ற அச்சத்தின் வெளிப்பாட்டில் தான் இன்று சிங்கள அரசாங்கம் ராணுவத்தினை அங்கு பெருமளவில் குவித்து மாணவர்களின் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு நிலைமையை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறது.

 

அதே போல தான் 2013 க்கு பிறகு தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார்கள். மாணவ தலைவர்களுக்கு அவ்வப்பொழுது நெருக்கடியும் தந்து வருகிறார்கள்.

 

உலகெங்கும் வாழும் 10கோடி தமிழர்கள் இந்த மாணவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையினையும் வைத்திருக்கிறார்கள்,

 

உங்கள் அனைவருக்கும் நான் ஒன்றினை சொல்லிக்கொள்கிறேன் இந்த செப்டம்பர் மாதம் நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய மாதம் .

 

எதிர் பார்க்கும் இடத்தில் இருந்து புரட்சி வராது என்ற கூற்றினை பொய்யாக்கும் விதமாக எதிர் பார்க்கும் இடத்தில் இருந்தே எதிர்பாராத விதத்தில் புரட்சி வெடிக்கும். அதை தமிழ் மாணவர்கள் சாத்தியப்படுத்துவோம் என்று நம்பிக்கை கூறி விடைபெறுகிறேன்,

 

நன்றி வணக்கம்.