நான்கு நாட்களுக்கு முன்பு தலை மன்னார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் தாயான தமிழரசன் ரோகினி (வயது 40 ) என்ற பெண் மர்மமான முறையில் திடீரென மரணமடைந்துள்ளார்.

 

sivagowriyநல்ல ஆரோக்கியமாக இருந்த அவர் இறுதி இனஅழிப்பிற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தை இழந்து அறுவைச்சிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல மருத்துவமனையிலேயே அறுவைச்சிகிச்சைக்கு முன்பாகவே திடீரென்று மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

 

2009 இனஅழிப்பிற்கு பிறகு குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பை சேர்ந்த மக்கள் – குறிப்பாக பெண்கள் பெரும்பாலும் இப்படியான மரணங்களை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அதிலும் குறிப்பாக பெண் போராளிகள் நூற்றுக்கணக்கானவர்களின் மரணங்கள் பெரும் சந்தேகத்திற்குரிய முறையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன.

 

மேற்படி பெண்ணின் மரணம் தற்செயலானதாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த மரணத்தை மூடி மறைக்க மருத்துமனை நிர்வாகமும் இனஅழிப்பு அரசின் காவல்துறையும் முற்படுவதுதான் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

 

இயற்கை மரணம் என்ற பெயரில் ஒரு இனஅழிப்பு நடந்து கொண்டிருப்பதை நாம் மறந்தும் மறைத்தும் கொண்டிருக்கிறோம்.

 

ஒரு விடயத்தை திரும்ப திரும்ப பேசுவது அயாச்சி தரும் ஒன்று. ஆனால் நிகழ்வுகள் தொடரும் போது தொடர்ந்து நாமும் பேசவேண்டியதாக இருக்கிறது.

 

புனர்வாழ்வு என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும், இறுதி இனஅழிப்பின் போது வன்னி நிலப்பரப்பில் சுத்தமான குடிநீரில்லாமலும் இராசயான ஆயுதங்களின் பாவனையாலும் தொடர்ந்து உப்புநீரை அருந்தியதாலும் நீண்ட நாள் திட உணவை உண்ணாததன் விளைவாகவும் எமது மக்களும் பல மோசமான உடற் தாக்கங்களை சந்தித்து நோயாளிகளாகி அதன் விளைவாக மரணத்தை தினமும் சந்தித்து வருகிறார்கள்.

 

குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். அத்துடன் இதயநோய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள். அதை விட முக்கியமானது எமது மக்கள் சந்திக்கும் உளவியற் பிரச்சினைகள்.

 

அதிகளவில் ஏதோ ஒரு வகையில் எமது மக்கள் 2009 இற்கு பிறகு பலியாவதற்கான ஒரு சிறிய மருத்துவ விளக்கத்தை இங்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

 

இராசயண ஆயுதங்களின் பாவனைபால் எமது மக்களின் உடலில் மனித உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Q இன் அளவு குறைந்து விட்டது. இது இனஅழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம் ( living genocidal bio makers).என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம்.

 

இதன் அளவு உடலில் குறையும் போது படிப்படியாக மிக ஆபத்தான புற்றுநோயிலிருந்து உளவியற் சிக்கல்கள்வரை தோன்றும் வாய்ப்பிருக்கிறது.இதய பலவீனம் மற்றும் கர்ப்பபை சிக்கல்கள் இதன் குறிப்பிடத்தகுந்த பக்க விளைவுகளாகும்.

 

இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்ல. அதற்கு தொடர் சிகிச்சை அவசியம். அத்தோடு பெரும் பொருளாதார பலம் வேண்டும். நிலத்தையும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் பொருண்மிய சிக்கலிற்குள் தவிக்கும் எமது மக்களுக்கு இது சாத்தியமா?

 

அத்துடன் ஏற்கனவே போரின் வடுக்களினால் உளவியல் சிக்கல்களும், பொருளாதார நெருக்கடிகளும் சூழந்துள்ள வேளையில் சுயபாதுகாப்பு என்பது இயல்பாகவே அவர்களை விட்டு போய்விட்டது. எனவே ஆரம்பத்திலேயே நோய்களை குணப்படுத்த அவர்கள் தயாரில்லை. இறுதியில் நோயும் முற்றி பொருளாதாரமும் நெருக்க தம்மையே அழித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். அதிகளவிலான தற்கொலைகள் எல்லாம் இந்த பின்னணியிலேயே நடக்கின்றன.

 

உடல் நோய் மற்றும் உளவியற் சிக்கல்களுடன் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதராம் சரண்டப்பட்டு பொருண்மிய சிக்கல்களையும் சந்திக்கும் ஒரு வாழ்வை கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை. ஆனால் நமது மக்களின் நிலை இதுவென்பதுதான் இன்றைய யதார்த்தம்.

 

ஒரு இனத்தின் ஆதாரமும்அடிப்படையும் பெண்கள்தான். அதுதான் பெண்களை குறிவைதது தனது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது இனஅழிப்பு அரசு.

 

விதவைகள் மற்றும் அரை விதவைகள் என்ற ஒரு நிலையை நுட்பமாக தொடர்ந்து பேணுதல், கட்டாய கருத்தடை சிகிச்சைகளை மேற்கொள்ளல், இறதி இனஅழிப்பில் இராசாயன ஆயுத பாவனையாலும் குடிநீரில்லாமலும் பாதிக்கப்பட்ட பெண்களை முழுமையான மருத்துவ சிகிச்கைக்கு உட்படுத்தாமை, மற்றும் குறிப்பாக அவர்களுக்கான ஒரு உளவியல் ஆற்றுப்படுத்துகையை மேற்கொள்ளாது தடுத்தல் என்று பெண்களை மையப்படுத்திய கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை பட்டியலிட்டால் இன்று நாள் முழுக்க பட்டியலிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

 

பெண்கள் மரணமடைவதால் குழந்தைகள் அனாதைகளாகிறார்கள், அரை விதவைகள் (Half widows) என்ற நிலை தொடர்வதால் மே 18 ற்கு பிறகான பல பொருளாதார வாழ்வியற் சிக்கல்களுடன் பல உளவியற் சிக்கல்களும் பாலியல் முரண்பாடுகளுமாக எமது இனத்து பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது. இது பல சமூக சீரழிவுகளுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுக்கிறது.

 

அத்துடன் காப்பப்பை, இதய பலவீனம் மற்றும் புற்று நோய்களினால் திருமணம் தடைப்படவோ அல்லது மேலதிக குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போவதால் எமது இனத்தின் கருவளவீதம் பாதிக்கப்படுகிறது.

 

ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னைதக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்தகருவள வீதம் 2.1 இலும் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2.1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவளவீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும் ஒருநிலை என்று கூறமுடியும்.

 

ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் ஒரு சோடி பெற்றோர் 2 பிள்ளைகளுக்கு அதிகமாக பெறுவரெனில் மாத்திரமே இரு பிள்ளைகள் ஆவது இளம்வயதை அடைந்து குடித்தொகையை தக்கவைக்கமுடியும்.

 

ஆனால் தொடரும் சிங்களத்தின் கட்டமைக்கப்ட்ட இனஅழிப்பு இந்த சமநிலையை பேணவிடாது தடுத்து எமது இனப்பரம்பலின் சமநிலையை குலைக்கிறது.

 

அதை விட முக்கியமானது எமது மக்களின் குறிப்பாக பெண்களின் மே 18 இற்கு பிறகான உளவியற் சிக்கல்கள். ஆளுக்கு ஆள் வேறுபடுகிறதேயொழிய எமது பெண்கள் ஒரு கூட்டு உளவியற் சிக்கல்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

 

உளவியல் ஆற்றுப்படுத்துகை அல்லது உளவளத்துளை ஆலோசனை என்பது மிக எளிமையான ஒரு விடயம். அது இந்த மாதிரியான ஒரு அழிவை சந்தித்த இனத்திற்கு – குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஒன்று. ஆனால் அதைக்கூட மனநோய் என்ற கருத்தமைவின் அடிப்படையில் புரிந்து கொள்ளும் போக்கு படித்தவர்கள் சிலரிடம் கூட காணப்படுவது அயர்ச்சியாக இருக்கிறது. இப்படியானவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை இந்த உளவளத்துணை ஆலோசனைக்குட்படுத்துவதை தடுப்பதையும் புரிந்து கொள்ளமுடியவிலலை

 

இதை முன்மொழிந்து எம்போன்றவர்கள் சிலர் தற்போது குற்றவாளிக்கூண்டில் நிற்பது சமகால உண்மை.

 

மரணங்களை வேறு பல சிக்கல்களை நாம் விடுவோம்.

 

ஏன் ஒரு உன்னதமான போராட்டத்தை நடத்திய போராளிகள் இன்று குடும்ப பிணக்குகளிற்குள் சிக்கவும் அதை விரிக்கவம் வளர்க்கவும் செய்து தமது குழந்தைகளையும் அனாதைகளாக்கி தமது வாழ்வையும் தனிமைப்படுத்த நேரிடுகிறது.?

 

இனஅழிப்பு அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியதென்பதற்கும் அப்பால் தோல்வியும் நிச்சயமற்ற எதிர்காலமும் எமது மக்களினதும் போராளிகளினதும் உளவியலை ஊனப்படுத்தி குருரமாகச் சிதைத்து சமூகத்திற்குள் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.

 

விளைவாக உறவுகளை துண்டித்து குடும்ப வாழ்வின் அடிநாதமான விட்டுக்கொடுக்கும் போக்கிலிருந்து விடுபட்டு முரண்பட்டு தனித்து வாழும் முடிவை தூரநோக்கற்று எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

 

இது தனிமனிதர்களாக அவர்களைப் பாதிக்கிறதென்பதற்கப்பால் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிராக பேராடி தன்னை நிறுவ முற்பட்டுகொண்டிருக்கும் ஒரு இனத்தை மோசமாகப் பாதிக்கிறது என்பதுதான் இதன் வெளிப்படை உண்மை.

 

இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக குடும்ப உறவுகளை துண்டிக்கும் போக்கு தொடராமல் இருக்க உளவனத்துணை அவசியம்.

 

உங்களில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பொது மக்களை விடுவோம். மே 18 இற்கு பிறகு உயிர் பிழைத்து தப்பி வந்த பல போராளிகள் குடும்பங்கள் மேற்படி உளவியற் சிக்கல்களுக்குள் தள்ளப்பட்டு குடும்ப பிணக்குகளினால் பரஸ்பரம் நம்பிக்கயற்று பிரிந்திருக்கிறார்கள் இதன் புள்ளிவிபர கணக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது.

 

இது மேலும் எமது பெண்களை தனிமைப்படுத்தவும் எமது குடிப்பரம்பலை தடுக்கவுமே வழி செய்கிறது.

 

அதுதான் நாம் உடனடியாக தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த ஒவ்வொருத்தருக்கும் உளவியல் ஆற்றுப்படுத்துகை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் இது தவறாகப் பார்க்கப்படும் போக்கு இன்றளவும் தொடர்கிறது.

 

தனிப்பட்ட ரீதியில் மேற்படி ஆய்வுத்தன்மைகளின் அடிப்படையில் எனது குடும்ப பெண்களுக்கு சிலருக்கு கூட இதை புரியவைக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல மாறாக அவர்களின் மேற்படி சிக்கல்கலின் விளைவுக்குள் என்னையும் பலியாக்கி தொலைந்து கொண்டிருக்கிறேன்.

 

ஓரளவு இதை புரிந்து கொண்ட எம் போன்றவர்களின் நிலையே இதுவென்றால் சாதாரணமானவர்களின் நிலையை கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

 

இதைத்தான் இன அழிப்பு அரசு எதிர்பார்க்கிறது. ஏனெனில் இது இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது.

 

எனவே பெண்களின் இந்த மரணங்களை நாம் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. வன்னி இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த மக்களுக்கு இனஅழிப்பு அரசு திட்டமிட்ட இனஅழிப்பு நோக்கில் அவர்களுக்கு எந்த பிரத்தியேக சிகிச்சையும் செய்யவில்லை.

 

ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனஅழிப்பின் மிக நுட்பமான உத்தியாகவே இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம். இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்றும் வரையறுக்கிறோம்.

 

அதுதான் கடந்த ஏழு வருடங்களாக தமிழர் தரப்பு நடந்த இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையை கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கை வைக்கப்படவில்லை.

 

அந்த கோரிக்கை வைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால்

 

Doctors Without Borders/ Médecins Sans Frontières (MSF) போன்ற மருத்துவர்கள் எமது மக்களை சுயாதீனமாக மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும்போது இராசாயன ஆயுதங்களின் பாவனை தொடக்கம் இனஅழிப்பு நோக்கில் நடந்த பாலியல் வல்லுறவு குற்றங்கள் வரை மட்டுமல்ல உளவள ஆலோசனை என்ற பெயரில் எமது போராளிகளும் மக்களினதும் உளவியல் இனஅழிப்பு நோக்கில் ஊனப்படுத்தப்பட்டதையும் கண்டறிந்திருப்பார்கள்.

 

அது சிங்களத்தை இனஅழிப்பு குற்றவாளிகளாக்கும் போதிய ஆதாரங்களாக இருந்திருக்கும். எனவேதான் ஏழு ஆண்டுகளாகியும் நடந்த இனஅழிப்பை மறைக்கவும் – தொடர்ந்து இனஅழிப்பை நடத்தவும் எதையுமே “உள்ளக” அளவில் செய்ய முற்படுகிறது இனஅழிப்பு அரசு.

 

எனவே நாம் எமது பெண்களின் இந்த மரணங்களை – அவர்களின் நோய்க்கூறுகளை – உளவியற்சிக்ல்களை சாதாரணமாகக் கடந்து போகக்கூடாது.

 

இனஅழிப்பில் கணவனை இழந்த விதவைகளாக, காணாமல்போனதால் Half widows ஆனவர்களாக, போரில் ஊனமுற்ற குடும்பத்தலைவர்களால் குடும்பத்தை தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவர்களாக, நோயாளிகளாக, உளச்சிக்கல்களுக்குள் தள்ளப்பட்டவர்களாக என்று எமது பெண்களின் நிலை மிகவும் சிக்கலானது.

 

இதிலிருந்து மீள விடாமல் இனஅழிப்பு அரசு நுட்பமாக வலையை பின்னியிருக்கும் சூழலில் இறுதியில் அவர்கள் உடல் நோய்வாய்ப்பட்டோ அல்லது மனநோயாளிகளாவோ தம்மை அழித்துக்கொள்ள நேரிடுகிறது.

 

இதுதான் இத்தகைய மரணங்களுக்கான காரணம். இன அழிப்பிற்கும் இந்த சாவுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நாமே இதை நம்புவது துரதிஸ்டவசமானது.

 

எனவே தமிழ் அரசியல்வாதிகள் அறிவுசார் சமூகத்தையும் சிவில் சமூகத்தையும் இணைத்து உடனடியாக மக்களுக்கு பெண்களை மையப்படுத்திய கட்டமைக்கப்பட்டஇனஅழிப்பு மற்றும் இன பரம்பல் குறித்த புரிதல்களை பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குள் மூலம் தொடர்ச்சியாக தெளிவுபடுத்துவதனூடாகத்தான் இத்தகைய மரணங்களை கட்டுப்படுத்தும் ஒரு செயற்திட்டத்திற்குள் எமது மக்களை கொண்டுவர முடியும்

 

இல்லையேல் நமது அழிவுக்கு நாமே காரணமானவர்களாக இருந்தோம் என்ற வரலாறே எஞ்சும்.

 

சிந்திப்போம்.. செயற்படுவோம்.